“அப்படிச் சொல்லக் கூடாது லச்சு. நீயும் அங்கு போனபிறகு, அக்காவும் நீயுமாகச் சேர்ந்து அண்ணாவைக் கூப்பிடுங்கள். அண்ணா வந்து எங்களை அங்கு கூப்பிடுவான்..” என்று என்னென்னவோ விளக்கங்கள் கொடுத்து, முடிந்தவரை அவளுக்குப் புரியவைத்து, அவளிடம் சம்மதம் வாங்கினார்கள் பெற்றவர்கள்.
அவ்வளவு நேரமும் திருமணம் இப்போது வேண்டாம், உங்களை விட்டுப் போகமாட்டேன், எனக்கு இப்போதுதானே பத்தொன்பது வயது என்றெல்லாம் சொன்னாளே தவிர, ஜெயனைப் பற்றியோ, அவனைப் பிடிக்கும் பிடிக்காது என்றோ அவள் எதுவும் சொல்லவும் இல்லை. கேட்கவும் இல்லை.
அது அவளுக்கு ஒரு முக்கியமான விசயமாகப் படவில்லை என்பதுதான் உண்மை. அவளுக்கு எது சிறந்தது என்று அவளை விட அவர்களுக்குத்தான் தெரியும். அதுவும் அவள் அண்ணன், அவளுக்குச் சிறு குறையும் வர விடமாட்டான்.
அதனால் தனக்குக் கணவனாக வரப் போகிறவனைப் பற்றிய எண்ணம் அவளிடம் இருக்கவில்லை.
அடுத்த நாள் காலை வேலைக்குச் செல்லத் தயாராகி வந்த இனியவன், என்றைக்கும் இல்லாத அமைதியோடு சோபாவில் முடங்கிக் கிடந்த தங்கையைப் பார்த்துப் புருவங்களை உயர்த்தினான்.
தன் முன்னால் நின்றவனை அவள் விழியுயர்த்திப் பார்க்க, அவள் மனதின் எண்ணவோட்டம் அவனுக்குப் புரிந்தது.
அவள் அருகில் சென்றவன், “என்னம்மா..?” என்று கேட்டான் பாசத்தோடு.
“ஒன்றுமில்லை அண்ணா…” என்றவளின் விழிகளில் கலக்கம் சூழ்ந்தது.
முகம் கனிய, “திருமணத்தை நினைத்துப் பயப்படுகிறாயா…?” என்று அன்போடு கேட்டான்.
ஆம் என்பதாகத் தலையை முதலில் ஆட்டியவள், வேகமாக இல்லை என்பதாகவும் ஆட்டினாள். அந்தப் பூ முகத்திலோ கலக்கம், குழப்பம், கவலை என்று கலவையான உணர்வுகள்.
அதைப் பார்த்தவன் முகத்தில் மெல்லிய புன்னகை. “என்னோடு வா..” என்று அவளையும் அழைத்துக்கொண்டு, அவர்களின் வீட்டுத் தோட்டம் இருக்கும் பக்கமாக நடந்தான்.
அந்தக் குடும்பத்தின் ஓய்வு நேரத்துப் பொழுது போக்கே அந்த வீட்டுத் தோட்டம் என்பதால், செழிப்போடு மிளிர்ந்தது அது. ஒரு பக்கம் மரவெள்ளியும், மற்றைய பக்கங்கள் கத்தரி, வெண்டி என்று மரக்கறி வகைகள் செழிப்போடு நிற்க, மாமரம், வாழை மரம், தென்னை மரங்களும் காணியைச் சுற்றி நின்றது.
அந்த அதிகாலையிலேயே சூரியன் தன் வெப்பத்தைக் கக்கத் தொடங்கி விட்டதில், ஒரு மாமரத்தின் அடியில் சென்று நின்றவன், அருகில் நின்ற தங்கையை பார்த்து, “எதற்கு இந்தக் குழப்பம் தங்கா?” என்று கேட்டான்.
“உங்களை எல்லாம் விட்டுவிட்டு எப்படி அண்ணா…” என்று குரலடைக்க அவள் சொல்ல, “அசடு! அண்ணாவோடு அந்த வாயடிப்பாய். இப்போது இப்படிப் பயப்படுகிறாயே…” என்றான் மென்மையாகப் புன்னகைத்து.
“அது, நீங்கள் என் அண்ணா. உங்களைப் போல யார் வருவார்கள்…?” என்றாள் அப்போதும் அடைத்த குரலில்.
“திருமணம் ஆகும்வரை எல்லாப் பெண்களும் இப்படித்தான் சொல்வார்கள். பிறகு தங்கள் கணவனைப் போல் யார் இருக்கிறார்கள் என்று சண்டைக்கு வருவார்கள்..” என்றவனை, “அது மற்றவர்கள். நானில்லை..” என்று வேகமாக இடைமறித்தாள் அவள்.
தங்கையின் நெற்றியில் புரண்ட கேசத்தை மெல்ல ஒதுக்கியவன், “சரி. அப்படியே இருக்கட்டும். அதற்காக திருமணமே செய்யாமல் இருப்பாயா..” என்று கேட்டான்.
“இப்போதைக்கு வேண்டாம் என்றுதானே சொல்கிறேன் அண்ணா….”
“ஆனால்.. எப்போது திருமணம் நடந்தாலும் நீ கணவன் வீடு செல்லத்தானே வேண்டும்…”
அதைக் கேட்டவளின் கண்கள் கலங்க, “எதற்கு இந்தத் தேவையற்ற கலக்கம்.” என்று கடிந்தான் இனியவன்.
எதுவும் சொல்லாது அமைதியாக நின்றவளைப் பார்த்து, “அதுதான் அப்பா சொன்னாரே, நீயும் ஜெர்மனி போன பிறகு, பெரிய தங்காவும் நீயுமாகச் சேர்ந்து என்னைக் கூப்பிடுங்கள். நான் வந்து அம்மா அப்பாவை கூப்பிட்டால் எல்லோரும் அங்கே ஒன்றாக இருக்கலாமே. உன் அக்காவும் அப்போது நம்மோடு இருப்பாள். அதை யோசித்துப்பார்…” என்று இதமாக அவளுக்குப் புரிய வைத்தான் அவன்.
அவள் முகம் மெல்லிய தெளிவைக் காட்டவும், “அல்லது… காசு செலவழித்து அண்ணாவை ஜெர்மனிக்குக் கூப்பிட்டு விட்ட பிறகு, அண்ணா காசைத் திருப்பித் தருவானோ மாட்டானோ என்று யோசிக்கிறாயா?” என்று அவளைச் சீண்டினான்.
அவள் முறைக்கவும், “அப்படித்தானா? ஆனால் அண்ணா அங்கு வந்ததும் வட்டியோடு உங்கள் இருவரதும் காசைத் திருப்பித் தருவேன். அதனால் பயப்படாதே..” என்று மீண்டும் அவளை வம்புக்கு இழுத்தான்.
“உங்களை!! என்ன செய்கிறேன் பாருங்கள்..” என்றவள், இதுவரை இருந்த குழப்பங்களை மறந்து, சிறிய மாமரக் கொப்பொன்றை முறித்துக்கொண்டு அவனைத் துரத்தினாள்.
“அண்ணாவை அடிக்கக் கூடாது. உனக்கு இருப்பது ஒரேயொரு செல்ல, நல்ல அண்ணா…” என்றபடி, அவளிடம் பிடிபடாமல் ஓடினான் அவன்.
“நீங்களா நல்லவர்? பொல்லாத அண்ணா.” என்றவளுக்கு அவனைப் பிடிக்க முடியாமல் போகவே, “என் ‘ஷர்ட்’டை அயர்ன் பண்ணித் தருகிறாயா என்றபடி பின்னேரம் வருவீர்கள் தானே. அப்போது இருக்கு உங்களுக்கு. ‘ஷர்ட்’டைப் பிடித்து எரித்துவிடுகிறேன்..” என்று வீட்டுக்குள் புகுந்துவிட்ட அண்ணனிடம் மூச்சு வாங்கச் சூளுரைத்தாள் அவள்.
“என்ன இனியா, உன் தங்கை இன்று காலையிலேயே காளி அவதாரம் எடுத்துவிட்டாள் போலவே…” என்று வீட்டுக்குள் ஓடிவந்த மகனிடம் கேட்டார் சரஸ்வதி.
சிரித்தபடி, “அவளைச் சீண்டினாள் சும்மா இருப்பாளா அம்மா..” என்றவன், “திருமணத்துக்குப் பிறகு அவள் இல்லாமல் எப்படி இருப்போமோ தெரியவில்லை…” என்றான் கவலையோடு.
சரஸ்வதிக்கும் அதை நினைக்கும் போதே கஷ்டமாக இருந்தது. ஆனால் பெண் பிள்ளை என்பவள் பிறந்த வீட்டுக்குச் சொந்தமானவள் இல்லையே! அவள் ராணியாக கோலோச்ச வேண்டியது புகுந்தவீட்டில் அல்லவா!
தன் துக்கத்தை மகனுக்குக் காட்டாது, “அதற்காக அவளுக்குத் திருமணம் செய்யாமல் இருக்க முடியாதே தம்பி. எதையும் ஏற்றுக்கொள்ளப் பழகத்தான் வேண்டும். சுலோ போனபோது எவ்வளவு கஷ்டப் பட்டோம். இன்று அது பழகிவிடவில்லையா? அப்படித்தான் எல்லாம். இவளைக் கட்டிக் கொடுத்ததும், உனக்கும் உடனடியாகச் செய்யவேண்டும். இவள் இல்லாத குறையை உன் மனைவி தீர்க்கட்டும்…” என்றார் தன்னைத் தானே தேற்றும் குரலில்.
“முதல் தங்காவின் திருமணம் முடியட்டும்மா. பிறகு மற்றதைப் பார்க்கலாம். எனக்கு நேரமாகிவிட்டது. அப்பாவும் வேலைக்குப் போய்விட்டார் தானே.” என்று கேட்டான்.
“ம்.. அவர் காலையிலேயே போய்விட்டார். நீயும் கவனமாகப் போய்வா..” என்ற தாயிடம் தலையாட்டிவிட்டு வெளியே வந்தவனின் கண்களில், மாமரத்தில் மாங்காயைப் பறித்து, அதை அந்த மரத்திலேயே குத்திக்கொண்டிருந்த தங்கை கண்ணில் பட்டாள்.
“இந்தக் காலையிலேயே எதற்கு மாங்காயைச் சாப்பிடுகிறாய் தங்கா. அதுவும் கழுவாமல். வயிற்றுக்குக் கூடாது..” என்றவனிடம்,
“கழுவினால் ருசி குறைந்துவிடும் அண்ணா..” என்றவள்
மரத்தில் குத்தியதில் வெடித்த மாங்காயை ஒரு கடி கடித்தாள்.
அதன் புளிப்பில் கண்களை மூடி உதட்டைச் சுழித்துச் சப்புக் கொட்டிவிட்டு, “மாங்காய் சாப்பிடவேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், என் பேச்சை நானே கேட்க மாட்டேன். இதில் உங்கள் பேச்சைக் கேட்பேனா…” என்றாள் அதை மென்றபடி.
அவளின் செய்கையும் பேச்சும் அவனுக்குப் பெரும் சிரிப்பை வரவழைத்தது.
“அட! அட! என் தங்கை ஒரு கொள்கைச் செம்மல் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே..” என்றான் முற்றுப் பெறாத சிரிப்போடு.
“முழு மாங்காயையும் சாப்பிடாதே தங்கா.” என்றபடி தன் மோட்டார் வாகனத்தை உதைத்தான்.
அவனருகில் ஓடிவந்து, “அண்ணா, இன்று வரும்போது மிக்சர் வாங்கி வாருங்கள்…” என்று மாலையில் கொறிப்பதற்கும் வழி வகுத்தாள் அவள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு, இவ்வளவு நேரமும் உலகமே அழிந்த மாதிரி சோகத்தில் இருந்தவள் இப்போது நிமிடத்தில் மாறிவிட்டாளே என்று தோன்றியது. உள்ளமோ தங்கையை நினைத்து நெகிழ்ந்தது.
அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளாது, “சரி தங்கா.” என்றபடி அவன் மோட்டார் வாகனத்தில் மெதுவாக நகரவும் ஓடிச்சென்று கேட்டைத் திறந்துவிட்டாள் லட்சனா.
“பாய்மா…”
“பாய்ண்ணா.. மிக்சரை மறந்துவிடாதீர்கள்..” என்று தன் அதிதேவையை அவனுக்கு மீண்டும் நினைவுபடுத்தி, அவனை அனுப்பி வைத்தாள் லட்சனா.