அதை உணர்ந்தபோதும், நடந்த சோகத்தினால் ஒதுங்குகிறாள் என்று நினைத்தவன் அவளின் விலகலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் மீதான அக்கறையும் நேசமுமே வெளிப்பட்டது. தன் அண்ணியின் தங்கை என்பதால் தன் மீது அக்கறை காட்டுகிறான் என்று நினைத்தாளே தவிர அவளும் அவன் நேசத்தை உணர்ந்துகொள்ளவில்லை. அவர்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு, தேடி வந்து கதைக்கும் அவனை ஒதுக்கவும் முடியாமல் பொறுத்துப் போனாள்.
எப்போதும் கடற்கரைக்கே அவர்கள் செல்வதைக் கவனித்துவிட்டு, “ஏன்டா எப்போது பார்த்தாலும் அங்கேயே போகிறாய். ஏதாவது கலை நிகழ்ச்சிக்கு அவளைக் கூட்டிக்கொண்டு போயேன்.” என்ற தாயிடம், “போய்ப் பார்த்தால் தானே தெரியும், அது கலை நிகழ்ச்சியா இல்லை கொலை நிகழ்ச்சியா என்று…” என்று சொன்னவனின் கேலியில் சனாவின் முகத்தில் மிகமிக மெல்லிய சிரிப்பொன்று அரும்பியது.
நிறைய நாட்களுக்குப் பிறகு சிரிக்கிறாள் என்று மனம் துள்ளியபோதும், அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை அவன். முற்றிலுமாக அவளைப் பழையபடிக்கு மீட்கவேண்டும் என்கிற வெறிதான் இன்னும் அதிகரித்தது.
மனதை அரிக்கும் வேதனைகளை ஒதுக்குவதற்கு யோகா நல்லது என்று யாரோ சொல்ல, அதற்கும் அவளைச் சேர்த்துவிட்டான். தனியே செல்லத் தயங்கியவளோடு தானும் சேர்ந்து சென்றான்.
தன் நலன் அவன் பேணிய போதும், அத்தானின் தம்பி என்பதைத் தாண்டிய ஒரு எண்ணம் அவளில் எழவே இல்லை.
இரண்டு வருடங்கள் காற்றாய் மறைந்துபோக, கிட்டத்தட்ட அவளின் காவலனாக அவன் மாறியபோதும், அவன்பால் அவள் மனம் துளியளவும் சாயவில்லை.
அந்த நாட்களில் நடந்துவிட்ட இழப்புக்களைத் தாங்கி வாழக் கற்றுக்கொண்டாள். ஆனால் அது வெளித் தோற்றத்துக்கு மட்டுமே என்பது அவள் மட்டுமே உணர்ந்த ஒன்று!
மனதளவில் அவளால் பழையபடி மாறவே முடியவில்லை. ‘இனி எனக்கு யார் இருக்கிறார்கள்..’ என்கிற கேள்வி அவளைத் துண்டு துண்டாக உடைத்துக்கொண்டே இருந்தது.
அவளைக் காத்தபடி அவளைச் சுற்றி ஒரு குடும்பமே இருந்தபோதும், தன் குடும்பத்துக்காய் தவித்தது அவள் உள்ளம். ஏனோ ஜெயன் வீட்டோடு அவளால் முற்றிலுமாக ஒன்ற முடியவில்லை. ஜெயனிடமும் விலகல் இருந்துகொண்டே இருந்தது.
அவர்கள் வீட்டுக்கு வந்ததால் தான் இப்படி நடந்தது என்று நினைத்தாளா அல்லது இந்தத் திருமணம் வேண்டாம் என்று அசையாத பிடிவாதத்தோடு தான் இருந்திருக்க எல்லோரும் தப்பி இருப்பார்கள் என்று நினைத்தாளா, ஏதோ ஒன்று அந்த வீட்டில் இருந்து அவளைத் தள்ளியே வைத்தது மனதளவில்.
ஆனால் அதை அவளால் அவர்களிடம் காட்டமுடியவுமில்லை. காட்டிக்கொள்ளவுமில்லை!
ஜெயனை நல்ல நண்பனாக மட்டும் நினைத்தாள். அவ்வளவுதான் அவன் அவளுக்கு!
ஆனால், நட்பையும் தாண்டிப்போனது அவனின் அவள் மீதான எண்ணம்! அதைப் புரிந்துகொள்ளும் நிலையில் அவள் இல்லை.
இதற்கிடையில், அவளை ஜெர்மனிக்கு அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் சிவா மற்றும் சுலோ தம்பதியினர்.
அதை அறிந்து ஏனோ விடுதலையாகவே உணர்ந்தாள்.
விசா கிடைத்து டிக்கெட் எடுத்து, பயணத்துக்கான நாள் நெருங்கியபோது அவள் முகத்தில் தோன்றிய மெல்லிய ஒளியில் நேசம் கொண்ட ஜெயனின் நெஞ்சம் துவண்டது.
‘என்னோடு இருக்கையில் இல்லாத மலர்ச்சி, என்னை விட்டுப் போகும்போது வருகிறதே..’ என்று சுணங்கிய மனதை, ‘அக்காவிடம் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் இருக்கிறாள் போலும்..’ என்று அவனே தேற்றிக்கொண்டான்.
விமானநிலையத்தில் சேதுராமனிடமும் மங்கையிடமும், “போய்வருகிறேன் மாமா, மாமி..” என்று விடைபெற்றவளின் அருகே வந்து, “சந்தோசமாகப் போய்வா.. நானும் முடிந்தவரை விரைவாக அங்கு வந்துவிடுவேன்..” என்று தானும் விடைகொடுத்தான் ஜெயன்.
அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்று புரியாமலேயே தலையை ஆட்டினாள் லட்சனா. அவனுக்குத்தான் அவள் பிரிவை நினைக்கையில் பெரும் கஷ்டமாக இருந்தது.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக பெரும்பாலான பொழுதுகளைக் அவளோடு கழித்தவனுக்கு, இனி அவளின்றி எப்படி இருக்கப் போகிறோம் என்று நினைக்கவே நெஞ்சு கனத்தது.
வெகு விரைவாக நானும் ஜெர்மனி போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
அவனின் மனவோட்டங்களை அறியாத சனா, எல்லோருக்கும் பொதுவாக தலையை அசைத்துவிட்டு, விமான நிலையத்தில் செய்யவேண்டியவைகளைச் செய்து, விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.
பக்கத்தில் வெறுமையாக இருந்த இருக்கையைப் பார்த்ததும், அன்று ரயிலில் வருகையில் தன்னருகில் அமர்ந்திருந்த அம்மா, தனக்கு முன்னால் இருந்தபடி தன்னைச் சீண்டிய அண்ணா, மென்னகையோடு தங்களையே பாத்திருந்த அப்பா என்று எண்ணங்கள் ஓட சூடான கண்ணீர்த்துளிகள் இரண்டு அவள் மடியில் விழுந்து சிதறியது.
‘அண்ணா…’ என்று நெஞ்சம் பரிதவிக்க, பக்கத்து இருக்கையைத் தடவிப் பார்த்தவள், உள்ளத்து வலியைத் தாங்க முடியாது கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
‘ஏன்.. ஏன்.. ஏன் இப்படி நடந்தது?’ நெஞ்சம் விடைதெரியாக் கேள்விகளைச் சுமந்து துடிதுடித்தது. அன்று அவர்களைப் பிரிந்து ஜெர்மனிக்குப் போகமாட்டேன் என்று சொன்னவள், இன்று அவர்களை இழந்தல்லவா செல்கிறாள்!
இப்படி ஒரு பயணம் அமையும் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லையே.. இது எதனால்?
மனதில் போராட்டத்தோடு ‘பிரன்க்புவட்’ விமானநிலையம் வந்திறங்கியவளைக் கண்ணீரோடு கட்டிக்கொண்டாள் சுலக்சனா.
ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுத சகோதரிகளை, ஏதேதோ சொல்லிச் சமாளித்து, வீட்டுக்கு அழைத்துவந்தார் சிவபாலன்.
அங்கும் நாட்கள் மெல்ல நகர, அவளால் அவர்களோடும் ஏனோ ஒன்றமுடியவில்லை.
தான் தனிமைப் பட்டு நிற்பதாகவே உணர்ந்தாள். வெறுமை ஒன்று அவளிடம் நிரந்தரமாக குடிகொண்டிருந்தது.
அக்காவாகட்டும் அத்தானாகட்டும், ஏன் சித்தி சித்தி என்று அவள் பின்னாலேயே திரியும் சைந்தவி ஆகட்டும், அவளை அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகப் பார்த்துக்கொண்டார்கள். ஆமாம்! அவளை அவர்களுள் ஒருத்தியாகத்தான் பார்த்தார்கள்.
ஆனால் அவள் வீட்டிலோ அவளுடைய அம்மா, அப்பா, அண்ணா மூவருக்குமே அவள் அல்லவா உயிர்! அவள் தானே அந்த வீட்டின் நாயகி! மொத்தக் குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வாழ்ந்தவளுக்கு, இன்னொரு குடும்பத்தில், அது சொந்த அக்காவின் குடும்பமாக இருந்தாலும் கூட, அவர்களில் ஒருத்தியாகப் பொருந்த முடியவில்லை.
தன் உள்ளத்தோடு நெருங்கி உறவாடும் உறவொன்றுக்காய் ஏங்கிக் கிடந்தாள். தன்னையே உயிராக நினைத்துத் தாங்கும் இன்னோர் உயிருக்காய் அவள் உள்ளம் தவம் கிடந்தது. அதை யாரிடமும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் மனதோடு மருகிக் கொண்டிருந்தாள்.
ஆனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னைக் கொண்டாடும் உறவாக ஜெயனை அவளால் நினைக்க முடிந்ததில்லை. ஏன், அந்தக் கோணத்திலேயே சிந்திக்க முடிந்ததும் இல்லை! சிந்தித்ததும் இல்லை!
அவனை நினைத்தால் அவளுக்குத் தோன்றுவது, ‘அத்தானின் தம்பி’, ‘நல்ல நண்பன்’ அவ்வளவே! அதோடு ஓரளவுக்கு தன்னைத் தேற்றிக்கொண்ட பிறகு, தான் இந்தளவுக்காவது மீண்டது அவனால் என்று புரிந்ததனால் உண்டான நன்றியுணர்ச்சி!
இப்படி மனதளவில் ஒடுங்கி, உறவுக்காய் ஏங்கி, அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்தவளின் வாழ்க்கையில் சூரிய உதயமாய் வந்தவனே சூர்யபிரகாஷ்!
காதல், அது யார் மீது யாருக்கு எப்போது வருமென்று யாராலும் சொல்லமுடியுமா என்ன?
அவளை உயிராய் நினைக்கும் ஒருவன், கண்ணுக்கு முன்னால் எந்தக் குறையும் இன்றி இருந்தபோதும், அவளிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட குணாதிசயங்களை உடைய ஒருவனான சூர்யாவின் மேல் எதற்காக அவள் மனம் மையம் கொள்ள வேண்டும்?
அவனிடம் என்ன இருக்கிறது? அவனை ஏன் அவளுக்குப் பிடித்தது? அவனிடம் ஏன் இப்படி உயிராக இருக்கிறாள்? இப்படி எந்தக் கேள்விக்கும் அவளிடம் பதிலில்லை!
எந்தக் குறையும் இல்லாத ஜெயனைத் தவிர்த்து அவள் மனம் எதற்காக சூர்யாவிடம் வீழ்ந்தது. அவளே அறியாள்!
ஆனால்.. அவளின் உயிர் தேடும் உறவாய் அவள் கண்களுக்கு அவன்தான் தெரிந்தான்.
அவனே அவள் உயிர்! இந்த உலகத்தின் மொத்த உறவும் அவனே!
அவனும் அவன் காதலும் மட்டும்தான் அவள் வாழ்க்கை!
மொத்தத்தில் துடிக்கும் அவள் இதயத்தின் துடிப்பு அவனே!
அவன் இல்லையெனில் அது அடங்கிவிடும்!
அப்படி அவனையே தன் உலகமாக, வாழ்க்கையாக நினைக்கும் அவளைப் பார்த்து,”என்னோடு நீ எதற்கு சுத்துகிறாய்..?” என்று அவன் கேட்கலாமா என்று துடித்துப்போனாள் லட்சனா!
வேகமாகச் சுழன்ற நினைவுகளின் தாக்கத்திலும், அவன் வார்த்தைகளின் வீரியத்திலும் நெஞ்சம் கலங்கிவிட, கண்ணீர் வழியும் விழிகளால் அவனையே பாத்திருந்தாள் லட்சனா.