இதயத் துடிப்பாய்க் காதல் 17 – 2

அப்போதும், “கட்டாயம் வரவேண்டும் சூர்யா…” என்று சொல்ல மறக்கவில்லை அவள்.

அவன் எப்படியும் வருவான் என்று நினைத்து மகிழ்ந்தவள், அவனுக்குப் பிடித்த இளம் நீலத்தில் ரோஜாக்கள் பூத்தது போல் அமைந்த சுடிதாரை எடுத்துவைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

மின்னலெனக் குளித்து, நேரமெடுத்துத் தன்னை அலங்கரித்து, அழகிய ஓவியமாக அவனுக்காகக் காத்திருந்தாள். இதற்குள் பல தடவைகள் அவன் அழைக்கிறானா என்று கைபேசியைப் பார்க்கவும் தவறவில்லை.

அவன் வருகிறானா என்று ஜன்னலால் பார்ப்பதும், அவன் கார் நிற்கிறதா என்று வீட்டுக் கதவைத் திறந்து பார்ப்பதும், பால்கனியால் எட்டிப் பின்பக்கமாக அவன் கார் தென்படுகிறதா என்று பார்ப்பதுமாக அந்த வீட்டுக்குள்ளேயே அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டிருந்தாள் லட்சனா.

அவனைக் காணவில்லை என்றதும், மீண்டும் அவனுக்கு அழைத்தாள்.

முதல் இரண்டு தடவைகள் அவன் எடுக்கவில்லை. அப்போதும் விடாது மீண்டும் அழைத்தாள்.

இப்போது எடுத்தவன், “எடுக்காவிட்டால் ஏதோ முக்கியமான வேலை என்று புரிந்துகொள்ள மாட்டாயா நீ?” என்றான் சுள்ளென்று.

“வருகிறேன் என்றவர் இன்னும் வரவில்லையே என்று அழைத்தேன் சூர்யா…” அளவு கடந்த அன்பை அவன் மேல் வைத்துவிட்டதில் அவனின் சுடு பேச்சு அவளைத் தாக்கவில்லை போலும்! அவள் குரல் சாதரணமாகவே இருந்தது.

“நானெங்கே வருகிறேன் என்றேன். அம்மாவோடு கதைத்துவிட்டுச் சொல்கிறேன் என்றுதானே சொன்னேன். இன்று வரமுடியுமா என்று தெரியவில்லை…” என்றவனை இடைமறித்தாள் அவள்.

“என்ன சூர்யா இப்படிச் சொல்கிறீர்கள். நீங்கள் வருவீர்கள் என்று நான் தயாராகியும் விட்டேன். ப்ளீஸ் சூர்யா, வாருங்கள். எனக்கு உங்களைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது..”

“இதென்ன எப்போது பார்த்தாலும் அடம் பிடிக்கிறாய் நீ. வர முடிந்தால் வரமாட்டேனா. ஏதோ வருடக் கணக்காக பார்க்காததுபோல் சொல்கிறாயே. நேற்று மாலை முழுவதும் உன்னோடுதானே இருந்தேன். இங்கேயானால் அம்மா, இப்போதெல்லாம் நான் வீட்டிலேயே இருப்பதில்லை என்கிறார்கள்…”என்றான் அவன் எரிச்சலோடு.

தன் வீட்டில் சொல்லும்வரை உங்கள் அம்மா அப்பாவிடம் நம்மைப்பற்றி சொல்லவேண்டாம் என்று அவள்தான் அவனை தடுத்திருந்தாள். உன் அப்பாவோடு கதைக்கப்போகிறேன் என்ற தாத்தாவையும் வேறுவழியின்றி அவன் தடுத்ததில், அவனின் அம்மா அப்பாவுக்கு அவன் காதல் விஷயம் தெரியாது.

அதனால்தான் இப்போதெல்லாம் நீ அதிகமாக வெளியே சுற்றுகிறாய் என்று அவன் தாய் சத்தம் போட்டபோதும் அவனால் வாயைத் திறக்கமுடியவில்லை. அது அவனுக்குப் பழக்கம் இல்லாத ஒன்று. அதுவேறு சினமாக மனதில் இருந்ததில், இப்போது அவளின் செயலில் சட்டென்று எரிச்சல் வந்துவிட்டது அவனுக்கு.

இப்போதெல்லாம் அவள் அவனை ஆட்டிவைப்பது போன்று உணர்ந்தான். மெல்ல மெல்ல தன் சுதந்திரம் பறிபோவது போல் இருந்தது அவனுக்கு.

அவன் குரலில் எதை உணர்ந்தாளோ, “அப்போ வரமாட்டீர்களா சூர்யா..?” என்று, ஏமாற்றம் நிறைந்த குரலில் தொண்டை அடைக்கக் கேட்டாள்.

இப்போது மாட்டேன் என்று உறுதியாக மறுக்க மறுத்தது அவன் மனம். என்ன செய்வது என்றே விளங்காமல் நின்றான். இதுகூட அவன் அறிந்திராத நிலை.

வீட்டில் அம்மா அப்பா, அண்ணா அண்ணி, தாத்தா பாட்டி என்று ஒன்றுகூடி இருக்கிறார்கள். தாத்தா பாட்டியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வேலைக்குச் செல்லும் அவர்கள் குடும்பத்தில், இப்படி எல்லோரும் ஒன்றாகக் கூடும் நாள் எளிதாக அமைவதில்லை. இன்று அமைந்திருந்தது.

இப்போது போய் ‘நான் வெளியே போகப்போகிறேன்’ என்றாள் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதைவிட கணைபோல் பாயும், எங்கே, ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு பொய்யாகப் பதில் சொல்வதும் அவனுக்குச் சிரமம்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அவனிடம் பதில் இல்லாமல் போகவே, “சரி சூர்யா. பரவாயில்லை. நான் வைக்கிறேன்..” என்றாள் அவள் சோர்ந்த குரலில்.

அவளின் சோர்வு மனதைத் தாக்கியபோதும், என்ன சொல்வது என்று தெரியாமல் முதலில், “ம்..ம்..” கொட்டியவன், பிறகு என்ன நினைத்தானோ, “நீ வை, வர முடியுமா என்று பார்கிறேன். அதற்காக திரும்பவும் எடுத்துத் தொல்லை செய்யாதே..” என்றுவிட்டு வைத்தான்.

பெற்றவர்களுக்கு நடந்ததைச் சொல்லிக் கதறிய அன்று, ‘என் மனதுக்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். நீங்களும் எனக்குக் கிடைத்திருக்கா விட்டால் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியாது சூர்யா’ என்று அவள் அழுதபோது, அவன் மனமும் அவள்பால் கரைந்துதான் போனது.

அதனால், அவனால் முன்னர் போல சிலவிசயங்களில் நான் இப்படித்தான் என்று உறுதியாக நிற்க முடிந்ததில்லை. அதற்காக அவளின் இழுப்புக்கு இழுபடவும் முடியவில்லை.

தன் சுயவிருப்பத்துக்கு நடக்கவும் முடியாமல், அவளின் விருப்பத்துக்கு முற்றாக இணங்கவும் முடியாமல், திண்டாடினான்.

அவன் தலை முடியை வேறு, “இந்த செம்பட்டை நிறம் உங்களுக்கு நன்றாகவே இல்லை சூர்யா…” என்று அவனை இருக்க நிற்க விடாமல் அடம் பிடித்து, சலூன் அழைத்துச்சென்றவள், அந்த நிறத்தை மறைக்க கருப்பு நிற டை அடிக்க வைத்தாள்.

“இப்போதுதான் அழகாக இருக்கிறீர்கள்..” என்று அவனை ரசித்துக்கொண்டே அவள் சொன்னபோது, தன் முகத்தைப் பார்த்தவனுக்கு தான் அசிங்கமாக இருப்பதுபோல் தோன்றியது.

மீசை வேறு வளர்ந்து, உதட்டுக்கு மேலே என்னவோ ஊர்வது போன்ற ஒருவித அசௌகரியத்தை கொடுத்தது. அவள் காட்டும் அன்பில் நனையும் அதேவேளை, அவனைத் திக்குமுக்காடவும் வைத்துக்கொண்டிருந்தாள் அவன் காதலி.

இங்கே லட்சனாவுக்கோ, வரமுடியுமா என்று பார்க்கிறேன் என்று அவன் சொன்னதில், சுணங்கிவிட்ட முகத்தோடு நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தாள்.

சொன்னதைச் செய்கிறவன் என்பதால், அவன் வருவான் என்கிற நம்பிக்கை போய்விட, உடையை மாற்றவும் பிடிக்காமல், எதுவுமே செய்யத் தோன்றாமல், சோபாவில் ஒருபக்கமாகச் சரிந்து கைகள் இரண்டையும் கன்னத்துக்கு அடியில் கொடுத்துப் படுத்துக்கொண்டாள். காரணமின்றிக் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

அதைக் கண்டதும், ஏன் இப்படிப் பலகீனப் பட்டு நிற்கிறோம் என்று அதுவேறு இன்னும் அழுகை வந்தது.. எதற்கெடுத்தாலும் அழுகை என்று அவனும் பலமுறை அவளைக் கடிந்துவிட்டான். அவன் விசயத்தில், அவளால் அந்தக் கண்ணீரை அடக்க முடிந்ததே இல்லை.

வழிந்த கண்ணீரைத் துடைக்கத் தோன்றாமல் கிடந்தவளின் புத்தி, ‘அவனுக்கு என்ன வேலையோ.. இல்லாவிட்டால் நிச்சயம் வந்திருப்பான்..’ என்று உரைத்தாலும், மனம் முரண்டிக்கொண்டே இருந்தது.

எதையெதையோ நினைத்தபடி கிடந்தவளுக்கு, குளித்ததாலோ என்னவோ தூக்கம் கண்ணைச் சுழற்ற தன்னை அறியாமலேயே அப்படியே உறங்கிப்போனாள்.

எங்கேயோ ஏதோ மணியடிக்கும் ஓசை கேட்டபோதும், கண்ணைத் திறக்க விருப்பம் இன்றி அப்படியே கிடந்தாள். சற்று நேரத்தில் மீண்டும் அதே சத்தம் கேட்க, இது எங்கள் வீட்டு அழைப்புமணியே என்று தோன்ற, வேகமாக எழுந்துசென்று ஜன்னல் வழியாக யார் என்று பார்த்தாள்.

பார்த்த நொடியில் அவள் முகம் பூத்தது. உள்ளம் மலர, “சூர்யா..!” என்று கூவிக்கொண்டே ஓடிவந்து வேகமாகக் கதவைத் திறந்தாள்.

“வாங்க.. வாங்க.. உள்ளே வாங்க சூர்யா…” என்று உற்சாகமாக வரவேற்றவள், அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். சோர்ந்திருந்த அவள் உள்ளம், எதிர்பாராமல் அவனைக் கண்டதும் தாம் தூம் என்று துள்ளியது!

அவளின் இழுவைக்கு இசைந்துகொண்டே, “ஹே.. இதென்ன இவ்வளவு சந்தோசமாக வரவேற்கிறாய்…?” என்று கேட்டான் புன்னகையோடு.

அவள் படுத்திருந்த சோபாவிலேயே அவனை இருத்தியவள், அவனோடு உரசிக்கொண்டு அமர்ந்தாள். அதைப்பார்த்தவனுக்கு இன்னும் சிரிப்பு.

பின்னே, கிட்ட வராதே என்று அவனுக்குச் சட்டம் போட்டவள், அவனை ஒட்டிக்கொண்டு அமர்ந்தாள், வேறு என்னதான் வரும்? ஆனால் ஒன்று புரிந்தது அவனுக்கு. அவனை எல்லை மீறாதே என்பவள், என்றுமே அவனிடமிருந்து தள்ளி நின்றதே இல்லை.

அவன் அணைப்பே சொர்க்கம் என்பதாக அமைதி கொள்பவள் அவள். அவனோ அனைத்தையும் மீற நினைப்பவன். அதனால்தான் அவனுக்கு அந்த உத்தரவு. அதைப் புரிந்துகொண்டவனின் முகத்தில் புன்னகை விரிந்தது.

“முதன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் சூர்யா. என்ன தரட்டும் குடிக்க..? சாப்பிட எதுவும் கேட்டுவிடாதீர்கள். நான் சமைக்கவில்லை..” அவனின் எண்ணப்போக்குத் தெரியாமல் அவள் உற்சாகமாகக் கேட்டாள்.

“இன்னும் சாப்பிடவில்லையா? என்ன லட்டு நீ? வா, ரெஸ்டாரென்ட் போகலாம்..” என்று அவளைக் கடிந்தபடி அவன் எழ, மீண்டும் அவன் கையைப் பிடித்துத் தன்னருகிலேயே அமர்த்திக்கொண்டவள்,

“போகலாம் சூர்யா. அதற்கு முதலில் நீங்கள் ஏதாவது குடிக்கவேண்டும்..” என்றாள்.

“சரி. இருப்பதைக் கொண்டுவா.” என்று அவன் சொன்னதும், துள்ளிக்கொண்டு உள்ளே சென்றவள், கையில் குளிர்பானத்துடன் விரைந்து வந்தாள்.

அவனிடம் அதைக் கொடுத்தவள், அவன் அவர்கள் வீட்டை பார்ப்பதைக் கண்டு, “வாருங்கள். என் அறையைக் காட்டுகிறேன்…” என்றாள்.

குளிர்பானத்தை ஒரே மூச்சில் அருந்தி முடித்து, க்ளாசை மேசையில் வைத்தவனை தன் அறைக்குக் கூட்டிச்சென்றாள் லட்சனா.

உள்ளே சென்றதும், “அவர்கள் தான் என் அம்மா, அப்பா, அண்ணா சூர்யா…” என்று அவர்களின் படங்களைக் கையால் காட்டிச் சொன்னவளின் குரலில் மறைக்க முயன்ற வேதனை மறைந்திருந்தது.

அதை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாது, அவளைத் தன் கை வளைவுக்குள் வாகாக இழுத்துக்கொண்டான். அவர்களைப் பார்த்தவனின் விழிகள், தொடர்ந்து அந்த அறையை வலம் வந்தது.

அங்கிருந்த ஒற்றைப் படுக்கைக் கட்டிலைக் கண்டதும், கண்களைச் சிமிட்டி, “கச்சேரியை ஆரம்பிக்கலாமா..?” என்று கேட்டான் குறும்புடன்.

“கச்சேரியா..?” விளங்காது அவனை விழி உயர்த்திப் பார்த்தவளிடம் கண்ணால் கட்டிலைக் காட்டினான் சூர்யா, அவனுக்கே சொந்தமான மாயப் புன்னகையுடன்.

“சூர்யா..!” பொய்க் கோபம் காட்டி அவனை முறைத்தவளின் விழிகளும் சிரித்தது. அவள் முகமோ செஞ்சாந்தைப் பூசிக்கொள்ள மறக்கவில்லை!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock