காரிருள் சூழ்ந்த நடு இரவுப் பொழுது. ஆனால் இரவுதானா என்று சந்தேகம் கொள்ளும் வகையில் வண்ண விளக்குகள் ரைன் நதிக்கரையை நிறைத்திருக்க, போதாக்குறைக்கு நதியில் மிதந்து விளையாடிக்கொண்டிருந்த கப்பல்கள் வேறு ஒளியைப் பாய்ச்சின.
ஜெர்மனியின் நீளமான நதி என்கிற பெருமையைத் தாங்கி, பல கோட்டைகளை தனக்கு அரணாக்கி, அயல் நாடுகளுக்குள்ளும் செருக்கோடு ஓடிக்கொண்டிருக்கும் இது, ஐரோப்பாவின் நீளமான நதிகளில் ஒன்று என்றும் பெயர் பெற்றது. அதனாலேயே இங்கு வைன் திருவிழா இன்னும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
மேனியை வந்து தழுவிய குளிர் காற்றில் சனாவுக்குள் ஒருவித இனிய சிலிர்ப்பு ஓடி மறைய, அதைக் கவனித்த சூர்யா, “குளிருதா லட்டு…” என்று கேட்டுக்கொண்டே அவளை அணைத்துக் கொண்டான்.
அவளின் செய்கைகள் அவனுக்குச் சினத்தை உண்டாக்கினாலும், தன் அன்பால் அந்தச் சினத்தை துடைத்தும் எறிந்தாள் சனா.
நேற்று, கோபத்தோடுதான் அவளோடு பேசாமல் இருந்தான். ஆனால் காலையில் எழுந்ததும் அவன் மனமும் அவளைத்தான் நாடியது. அதேபோல அவளின் செய்திகளைத் தாங்கி வந்த பல மெசேஜ்களைப் பார்க்கையில் இதழ்களில் இளநகை தன்பாட்டில் துலங்கியது.
தன் அணைப்பில் வாகாக அடங்கி, விழிகளை ஓரிடத்தில் அன்றி வியப்போடு நாலாபுறமும் சுழற்றியவளைப் பார்க்க, இப்போதும் அவன் இதழ்களில் முறுவல்.
அவன் எண்ணங்களை அறியாமல், அந்த நதிக்கரையோரம் முழுவதும் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தை, அதுவும் ஜோடி ஜோடியாக, ஆட்டம் பாட்டம் என்று களைகட்டி நின்ற அந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் லட்சனா.
சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாட்டுக் கச்சேரிகள், அதை ரசித்துக்கொண்டே ஆடுவதற்காக அமைக்கப்பட்ட மேடை, அந்த இடத்தைச் சுற்றி ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் போன்ற தற்காலிகக் கடைகளில் நிரம்பி வழிந்த பலவகை வைன்கள், பியர்கள் என்று அந்த இடமே பார்க்க ரம்யமாக இருந்தது.
கைகளில் வைன் கோப்பைகளோடு ஆணும் பெண்ணுமாய் நின்றவர்களைப் பார்க்க, இவர்கள் எல்லோரும் கணவன் மனைவிகள் தானா என்கிற சந்தேகம் வந்தது அவளுக்கு.
அதை அவனிடமே கேட்க, பெரும் நகைச்சுவையைக் கேட்டவன் போல் வாய்விட்டுச் சிரித்தான் அவன்.
“நாமென்ன கணவன் மனைவியா..?” என்று சிரிப்பினூடே அவன் கேட்க, அதுதானே என்று தோன்றியது அவளுக்கு.
அவன் கேலிச்சிரிப்பில் சிலிர்த்து, “சிரிக்காதீர்கள் சூர்யா. யாரைப் பார்த்தாலும் ஆணும் பெண்ணுமாய் கையைக் கோர்த்துக் கொண்டு, அவ்வளவு நெருக்கமாகச் சுற்றுகிறார்களே என்று கேட்டேன்..” என்றாள் சிணுங்கலாக.
“இங்கே இதெல்லாம் ஒரு விசயமா லட்டு. கணவன் மனைவியும் இருப்பார்கள். அதிகமாக காதலர்கள், அங்கே பார் வயதான தம்பதியர்..” என்று காட்டியவன், “இன்றைக்கு மட்டும் என்று ஒரு ஜோடியை பிடித்துக்கொண்டு வந்தவர்களும் இருப்பார்கள்..” என்றபோது அதிர்ந்துபோனாள் சனா.
“என்னது? இன்றைக்கு மட்டுமா?” நம்ப முடியாமல் அவள் கேட்க,
“ம்.. ஆனாலும் பார் எல்லோரும் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள் என்று..” என்றான் அவன்.
அன்றைக்கு மட்டும் ஒரு ஜோடி என்பதில் மனம் அதிர்ந்தாலும், அவன் சொல்வதும் உண்மைதான் என்று தோன்றியது. அவர்கள் இருவரும் மாலையே அங்கு வந்துவிட்டார்கள். அப்போதிலிருந்து அவளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். நடு இரவுப் பொழுதாகிவிட்ட இப்போதுவரை மக்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எல்லோர் கையிலும் வைன். பலர் நடக்கமுடியாத அளவுக்கு போதை ஏறித் தள்ளாடித் தள்ளாடி நடந்தபோதும் அந்த இடத்தில் ஒரு அடிபாடு, வாய்ச்சண்டை இப்படி எதுவுமே வரவில்லை.
இதுவே நம்மூர் கோவில் திருவிழாவாக இருந்திருக்க, இதற்குள் எத்தனை சண்டை வந்திருக்கும் என்று மனம் ஒப்பிட்டுப் பார்த்தது.
அதோடு பல ஜோடிகள் அணைப்பதும், முத்தமிடுவதும் என்று தங்களை மறந்து நின்றபோதும், யாருமே அவர்களை வித்தியாசமாகவோ அல்லது வெறுப்பாகவோ பார்க்கவே இல்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்த்தனர்.
“அங்கே பார், அந்த ஜோடியை. நீயானால் வீட்டுக்குள் கூட முத்தமிட விடமாட்டாய்…” என்றான் சூர்யா, சற்று அதிகமாகவே தங்களுக்குள் லயித்துவிட்ட ஒரு ஜோடியைக் காட்டி.
அதைப் பார்த்தவளின் முகம் செங்கொழுந்தாகிப் போனது. வெட்கத்தில் அல்ல அருவருப்பில்!
“கருமம்! அதையெல்லாம் பார்க்காதீர்கள் சூர்யா..” என்றாள் முகத்தை வேறுபக்கம் திருப்பி.
“ஏன் இப்படியெல்லாம் நடக்கிறார்கள் சூர்யா. இது தப்பில்லையா? உணர்வுகளை அடக்க முடியாவிட்டால், நமக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்?” என்று அவள் கேட்க,
“நாமும் மிருகங்கள் தான் லட்டு. என்ன பேசத்தெரிந்த மிருகங்கள்..” என்றான் அவன்.
‘இவன் ஒருத்தன்’ என்று நினைத்தாள் அவள். அந்த ஜோடி அங்கேயே நிற்க, அதைப் பார்க்க முடியாமல், “வாருங்கள். நாம் இன்னுமொரு முறை சுற்றி வரலாம்..” என்றாள்.
அவளோடு நடந்துகொண்டிருந்த சூர்யாவின் நடை, அங்கே இருந்த வைன் கடையைக் கண்டதும் நின்றது. அவள் கேள்வியாகப் பார்க்க, “ஒரே ஒரு கிளாஸ்..” என்றான் அவன்.
“விளையாடாதீர்கள் சூர்யா. பிறகு எப்படிக் கார் ஓடுவீர்கள்?”
“வரும்போது நீதானே ஓடிவந்தாய். போகும்போதும் நீயே ஓடு.”
“என்னால் முடியாது.” என்று அவள் மறுக்க, “இங்கு வந்துவிட்டு வைன் குடிக்காமல் போவதே தப்பு..” என்றான் அவன்.
“லைசென்ஸ் இல்லாமல் நான் அப்போது ஓடியதே தப்பு சூர்யா. வேக வீதியில் ஓடினால் தான் பயம் போகுமென்று, வற்புறுத்தி ஓடவைத்தது நீங்கள். இதைக் குடித்தீர்கள் என்றால், உங்களுக்கு நிதானம் இருக்காது. எனக்கு அதுவே பயமாக இருக்கும். பிறகு எங்கே நான் ஒழுங்காக ஓட்டுவது…”
“வைன் பெரிதாக வெறிக்காது லட்டு. அதோடு ஒரு கிளாஸ் தானே..” என்று எப்படியோ அவளைக் கரைத்து, ஒன்றல்ல இரண்டு கிளாசே அருந்திவிட்டான்.
எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையே என்று கோபம் அவளுக்குள் கனன்ற போதும், அங்கு வைத்து எதுவும் கதைக்க விருப்பம் இல்லாததில் பேசாமல் இருந்தாள்.
நடந்துகொண்டிருந்த ‘ரைன் நதியில் வைன் திருவிழா’வின் கடைசிக் கட்டமாக நதியில் மிதக்கும் கப்பல்களில் இருந்து பல வண்ணப் பட்டாசுகள் சீறப் போவதை அறிவிக்கவும், எல்லோரும் நதிக்கரையோரத்துக்கு நடந்தனர்.
சூர்யாவும் சனாவும் ஒரு மரத்துக்கு கீழே நின்றுகொண்டனர். மெல்ல மெல்ல மக்கள் கூட்டம் அந்த இடத்தை நெருக்க நெருக்க அவளை முன்னிறுத்தி தான் பின்னே நின்று கொண்டவன், அவளைச் சுற்றி கைகளை முன்னே கொணர்ந்து அவள் வயிற்ரோடு சேர்த்துக் கோர்த்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.
தன்னை நெருக்கி நின்ற மக்களிடம் இருந்து ஒதுங்க நினைத்தவளும் அவனோடு ஒட்டிக்கொண்டாள். அவளிடமிருந்து வந்த வாசனை நாசியைத் தாக்க, இடையோரத்து வாளிப்பை கைகள் உணர, அவனோடு ஒட்டி நின்றவளின் மேனி ஆசையைக் கிளப்ப, அவள் கழுத்தோரமாய் உதடுகளைப் பதித்தான் சூர்யா.
நின்ற நிலை உண்டாக்கிய மாற்றமா, அல்லது அங்கு நின்றவர்களின் எல்லை மீறிய செயல்களா, ஏதோ ஒன்று அவளும் தன்னை மறந்து இசைந்தாள்.
எப்போதும் தடுப்பவளிடம் இருந்து வந்த ஆதரவில் அவன் கைகளும் இதழ்களும் சுதந்திரம் பெற்று உலாவத் தொடங்கியது.