பைத்தியத்துக்கு ஒப்பிடுகிறான் என்று புரிந்தாலும், அவளுக்குக் கோபம் வரவில்லை.
அது உண்மைதானே! சூர்யாவின் மேல் பைத்தியமாகத் தானே இருக்கிறாள். இதோ, இந்த நிமிடம் வரை.
உள்ளம் கசந்தபோதும், “இல்லை.. அப்படி.. எதுவுமில்லை..” என்றாள், அவன் முகம் பாராது திடமற்ற குரலில்.
“நீ சொல்வது உண்மையானால், என் கண்களைப் பார்த்துச் சொல்வதில் என்ன தயக்கம்?” என்று அவளையே கூர்ந்தபடி அவன் கேட்க, அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை.
“ஆக, நாங்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை என்று நீ உன் முடிவில் உறுதியாக இருக்கிறாய். அப்படித்தானே! சரி சொல்லு, அடுத்த முயற்சி என்ன? மாடியில் இருந்து குதிக்கப் போகிறாயா அல்லது காரில் நடக்கவில்லை என்று பஸ் முன்னால் பாயப் போகிறாயா..?” என்று கோபமும் நக்கலும் கலந்து அவளைப் பந்தாடினான் அவன்.
“என் வலி தெரியாமல் பேசாதீர்கள்.. அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் வேதனை தெரியும்.” என்றாள் கோபத்தோடு. கொஞ்சமும் குறையாமல், இன்னும் முணுக் முணுக் என்று வலிக்கும் இந்த வேதனையை விளங்கிக் கொள்கிறான் இல்லையே என்கிற கோபம் அவளுக்கு.
“அதைத் தெரிந்து நான் என்ன செய்ய? ஆனால், அதைவிட வலிகள் வந்தாலும், தாண்டித்தான் போவேனே தவிர, உன்னை மாதிரி தற்கொலை முயற்சி செய்ய, என்னை என்ன மூளையே இல்லாத கோழை என்று நினைத்தாயா..?” என்று கேட்டான் குத்தலாக.
அவளுக்கோ அவமானமாக இருந்தது. “நான் ஒன்றும் கோழை இல்லை. சாவதற்கும் துணிவு வேண்டும்.” என்றாள் ரோசத்தோடு.
“அந்தத் துணிவை வாழ்வதில் காட்டு. இல்லாவிட்டால், எவ்வளவு சொன்னாலும் நீ கோழை கோழைதான்.” என்று அடித்துச் சொன்னான் அவன்.
அவளுக்கோ அவன் பேச்சில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அம்மா, அப்பா, அண்ணா என்று மூவரையும் ஒன்றாகப் பறிகொடுத்த போதே சமாளித்தவள், இப்போது சமாளிக்க மாட்டாளா.. என்று தோன்ற, “வாழ்ந்து காட்டுகிறேன்.” என்றாள் உறுதியான குரலில்.
“உண்மையாகத்தானா? நம்பலாமா?” என்று அப்போதும் அவன் சந்தேகமாகக் கேட்க, “என் அண்ணா மேல் சத்தியமாக.” என்றாள் ஒரு வேகத்தில்.
“அது!” என்றவனின் முகத்தில் புன்முறுவல் வந்தது, தன் குழப்பங்களையும் தாண்டி!
அப்போதுதான் அவளுக்கே புரிந்தது. அவளைச் சீண்டிவிட்டு, அவள் வாயாலேயே இப்படிச் சொல்ல வைத்திருக்கிறான் என்று. விழிகள் கலங்க அவனைப் பார்த்தாள் லட்சனா.
சைந்துவை அழைத்துக்கொண்டு சிவபாலனும் சுலோவும் வந்துவிட, அத்தோடு அவர்கள் பேச்சும் நின்றது.
அவளுக்கு உடல் காயத்தை விட மன அழுத்தம் தான் அதிகமாகத் தாக்குகிறது என்று டாக்டர் சொன்னதில், அது எதனால் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த சிவபாலனுக்கும் சுலோவுக்கும், ஜெயனைக் கண்டபிறகு சனாவின் முகத்தில் இருந்த மெல்லிய தெளிவு நிறைவைக் கொடுத்தது.
சைந்துவுக்கோ சித்தப்பாவைக் கண்ட மகிழ்ச்சி.
அவர்கள் மூவரினதும் சந்தோசம் குறையாத வகையில் ஜெயன் பார்த்துக்கொண்டான். உள்ளே வேதனை அரித்தாலும், அமைதியின் போர்வையில் ஒதுங்கிக் கொண்டாள் சனா.
இரண்டு நாட்களின் பின்னர், வீட்டுக்கு வந்தவளை சுலோ மிக நன்றாகவே கவனித்துக் கொண்டாள். அதோடு சிவபாலனின் கரிசனை, ஜெயனின் கனிவு என்று அவர்களின் அன்பில் திக்கு முக்காடித்தான் போனாள் லட்சனா.
அதுவும் சைந்து, சனாவின் முகத்தில் சோர்வைக் கண்டால், “ஜூஸ் குடிக்கப் போகிறீர்களா சித்தி?” என்று கேட்பதும், அவள் நெற்றியைப் பெரிய மனுஷி போல் தடவி விடுவதும், அவளைக் குன்றிக் குறுக வைத்தது.
அதுவும், வைத்தியசாலையில் இருந்து இவள் வீட்டுக்கு வந்த அன்று, “இனிமேல் சிக்னலை நன்றாகப் பார்த்து நட சனா. ஊருக்குள் என்றபடியால் கார் வேகமாக வரவில்லை. நீ அடிபட்டதைப் பார்த்த, அங்கிருந்த யாரோ தான் ஆம்புலன்ஸ்க்கு சொல்லியிருக்கிறார்கள். ஹாஸ்பிட்டலில் இருந்து அவர்கள் சொன்னபோது, நான் பட்ட பாடு இருக்கே. அதுவும் நீ அங்கு கிடந்த கோலம்..” என்ற சொன்ன சுலோவின் மேனி நடுங்கிச் சிலிர்த்தது. அந்த நொடிகளை மீண்டும் ஒருதடவை மனக்கண்ணில் கண்டாளோ!
“ஏற்கனவே, அம்மா, அப்பா, அண்ணா என்று எல்லோரையும் பறிகொடுத்துவிட்டோம். உனக்கும் ஒன்று என்றால் என்னால் தாங்கவே முடியாது. காலம் முழுக்க தவித்திருப்பேன். உனக்கொரு திருமணத்தை நடத்தி, நீ சந்தோசமாக வாழ்வதை நான் பார்க்கவேண்டும் சனா..” என்றாள் சுலோ, கண்கள் கலங்க.
அதைக் கேட்டவளின் விழிகளும் கலங்க, தமக்கையின் மடியைத் தாய் மடியாக்கிக் கொண்டாள் லட்சனா.
இவ்வளவு நாட்களும் இவர்களின் அன்பைப் புரிந்துகொள்ளாமல் போனாளே! கண்ணிருந்தும் குருடியாக அல்லவா இருந்துவிட்டாள். அதனால்தான் அவனும் அவளைப் புறக்கணித்தானோ? எவ்வளவு தவறு செய்துவிட்டோம் என்று நினைக்க நினைக்க குற்ற உணர்ச்சி அவளைத் தாக்கிக் கொண்டே இருந்தது.
ஆனால், அவர்களையும் அவர்களின் அன்பையும் புரிந்துகொண்ட அந்த நொடியிலும் கூட, சூர்யாவின் அருகாமை வேண்டும் என்றுதான் அவளின் வெட்கம் கெட்ட மனது கிடந்து தவித்தது.
அதிலிருந்து அவளால் மீளவே முடியவில்லை.
நாட்கள் நகர, அவளும் மெல்ல மெல்ல நடமாடத் தொடங்கினாள். அதில் உயிர்ப்பு மருந்துக்கும் இல்லை.
தங்கையைப் பார்த்துக்கொள்ள என்று சுலோ வீட்டில் இருந்ததில், ஜெயனாலும் ஒரு அளவுக்கு மேல் அவளோடு தனியாக கதைக்க முடியவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் அமைய மறுத்தது.
அவனும், விசா பதிய, அங்கேயே இனி நிரந்தரமாக இருப்பதற்கு ஆக வேண்டிய வேலைகளைப் பார்க்க, வேலை ஒன்றைத் தேட என்று சிவபாலனுடன் அலைந்து கொண்டிருந்தான்.
சனாவோ தன்னுடைய அறையிலேயே முடங்கிக் கிடந்தாள். சூர்யா பேசிச் சென்ற வார்த்தைகளின் தாக்கத்தை அவளால் தகர்க்கவே முடியவில்லை. நினைத்து நினைத்து உள்ளம் கொந்தளித்துக் கொண்டே இருந்தது.
என்ன, அதை வெளியில் காட்டாமல் மறைத்துக் கொண்டாள். அந்தளவில் அவளுக்கு வெற்றிதான். அந்தளவில் மட்டும் தான் வெற்றி!
அவனை மறக்கவோ, அவன் நினைவுகள் வேண்டாம் என்று ஒதுக்கவோ, அவன் அவளைத் தூக்கி எறிந்ததைப் போல, அவளால் அவனைத் தூக்கி எறியவோ முடியவில்லை.
யாரிடம் எதை மறைத்தாலும், ஜெயனின் பார்வையை மட்டும் அவளால் சந்திக்க முடியவில்லை. வெளியே சாதரணமாக இருப்பது போல் நடிப்பவளின் மனதை அவன் அறிவானே!
அன்று, “சனாவோடு நானும் டொச் வகுப்புக்கு போகிறேன் அண்ணா..” என்று சொல்லி, அவளை மீண்டும் வெளியே இழுத்தான் ஜெயன்.
அவளுக்கோ உள்ளம் பதறத் தொடங்கியது. பள்ளியில் இருக்கும் அந்த மரத்தடியை பார்க்கும் துணிவு தனக்கில்லை என்று நினைத்தவளின் கண்களில் இருந்த கலக்கத்தைக் கண்ட ஜெயன், அண்ணனும் அண்ணியும் கவனிக்காத வேளையில், “என்ன..?” என்று கேட்டான்.
“அங்கே என்னால் வரமுடியாது..” என்றாள் மொட்டையாக.
“ஏன்? அது உங்கள் காதல் சின்னமோ?”
அவனை முறைத்துவிட்டு, “அப்படி என்று உங்களிடம் சொன்னேனா? நீங்களாக ஒன்றைக் கற்பனை பண்ணிப் பேசாதீர்கள்..” என்றாள் கோபமாக.
“ஓ.. அப்படியானால் அது உங்கள் பிரிவின் சின்னமோ?” மீண்டும் குத்தலாக அவன் கேட்க, எப்படிக் குத்துகிறான் பார் என்று அவளுக்குக் கோபம் வந்தது.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.” என்றாள் இப்போதும் கோபமாகவே.
“அது உண்மை என்றால், அங்கே வருவதில் உனக்கென்ன பிரச்சினை?” அவனும் விடுவதாக இல்லை.
“எனக்குப் பிடிக்கவில்லை என்றால் விடுங்களேன். எதற்கு இப்படி விருப்பம் இல்லாதவளிடம் வா வா என்கிறீர்கள்?” என்று எரிந்து விழுந்தாள்.
“எனக்குக் காரணம் தெரிந்தாக வேண்டும். தெரியாமல் விடமாட்டேன்.” என்றான் அவனும் பிடிவாதமாக.
வாயைத் திறந்தாள், கோபத்தில் எதையாவது சத்தமாகச் சொல்லிவிடுவோமோ என்கிற பயத்தில், வாயை அழுந்த மூடிக்கொண்டு அவனை முறைத்தாள்.
அவளைப் பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருந்ததோ, “என்ன, எந்த நொண்டிச் சாட்டைச் சொல்லலாம் என்று யோசிக்கிறாயா?” என்று அவளைச் சீண்ட,
“அடுத்தவரின் வேதனை உங்களுக்கு வேடிக்கை போலும்.” என்று அவனைக் குத்தியவள், “நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது எங்கள் காதல் சின்னம் தான். ஆனாலும் எனக்கு அந்த இடத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை..” என்றாள் ஒருவித வெறுப்போடு!