ஜெயன் சொன்னது போலவே, அன்றே அவளை டொச் வகுப்புக்கு அழைத்துச் சென்றான். அந்த மரத்தடியைப் பார்க்கவே கூடாது என்கிற பிடிவாதத்துடன், முகத்தை நேராக வைத்துக்கொண்டு நடந்தவளை, வகுப்பு முடியும் வரை ஒன்றுமே சொல்லவில்லை அவன்.
வகுப்பு முடிந்து மற்றவர்கள் எல்லோரும் போகும்வரை காத்திருந்து, வெளியே வந்தவன், அவள் சொன்னதை வைத்து, அங்கிருந்த மரத்தையும், அதன் கீழே இருந்த இருக்கையையும் கண்டு, அங்கே நடந்தான்.
ஜெயனை தொடராமல், தொடரமுடியாமல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா.
தன்னோடு உடன் வராதவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவளின் கலங்கிய முகத்தைக் கண்டதும், ஒருவித பிடிவாதம் தோன்றியது. திரும்பி வந்தவன், அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
“வேண்டாம்.. நான் வரவில்லை..” என்று அவள் சொன்னதை, அவன் காதிலேயே விழுத்தவில்லை.
அந்த இருக்கையைக் கண்டதும், அவள் கால்கள் அப்படியே நின்றன. அன்று சூர்யாவைக் கண்டுவிட்டு ஆவலோடு அவள் ஓடிவந்தது, அவனை அண்டி அமர்ந்தது, அவன் பேச்சை ஆரம்பித்தது, வார்த்தைகளை அமிலமாகக் கொட்டியது, கடைசியாக அவன் சொன்ன ஜெயனுடனான திருமணத்துக்கான வாழ்த்து முதல் அத்தனையும் படமாக ஓட, உள்ளம் துடிக்க விழிகள் கலங்கியபோதும், அழக்கூடாது என்கிற பிடிவாதத்துடன் அந்த இருக்கையையே வெறித்தாள்.
அவள் விழிகளில் கண்ணீரின் பளபளப்பு!
ஒருவித ஆவேசம் வந்தது. சூர்யாவின் சட்டையைப் பிடித்து ‘அந்தளவுக்கு நான் தரம் தாழ்ந்து போனேனாடா..?’ என்று கேட்க வேண்டும் போல் வேகம் எழுந்தது.
மனதில் கொழுந்துவிட்ட கோபத்தின் அக்கினி, அவள் முகத்தில் ஜுவாலையாக எரிய, கண்களில் திரண்ட கண்ணீரை சுண்டி எறிந்தாள் வெறுப்போடு.
“அவன் அப்படிச் சொல்லியும் இந்த அழுகையை நீ விடுவதாக இல்லையா சனா?” என்று ஆத்திரத்தோடு கேட்ட ஜெயனை, திகைப்போடு நிமிர்ந்து பார்த்தாள்.
கூர்மையான அவன் விழிகள் இன்னும் கோழையாக இருகிறாயே என்று அவளைக் குற்றம் சாட்டியது. இவ்வளவு அன்பைப் பொழியும் ஒரு பெண்ணைத் தூக்கி எறிய ஒருவனால் எப்படி முடிந்தது என்கிற கோபம் ஜெயனுக்கு.
“யாருக்குமே அழுவது பிடிப்பதில்லைதான். அப்படியிருந்தும் கண்களில் கண்ணீர் வருகிறது என்றால், அவர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அர்த்தம்.” என்றாள் சனா, ஒருவித வெறுமையான குரலில்.
“ஆனால், உன் கண்ணீருக்கு அவன் தகுதியானவன் இல்லையே? அதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாய்?”
“அவருக்கு அந்தத் தகுதி இல்லாமல் இருக்கலாம். அவரின் அன்பு கூடப் பொய்யாக இருக்கலாம். ஆனால்..” என்றவள், தன் நெஞ்சில் கைவைத்து, “நான்.. என் காதல் உண்மையானது. என் மனதில் இருக்கும் நேசம் ஆழமானது. அதை அவர் புரிந்துகொள்ளாத போதும், எனக்குத் தெரியுமே, எந்தளவுக்கு நான் அவரை நேசிக்கிறேன் என்று. அப்படியிருக்க, என் நேசத்துக்குப் பலன் இல்லாமல் போனது எனக்கு வேதனையாக இருக்காதா?” என்று கேட்டவளின் குரல் அடைத்தது.
“அப்படி என்றால் அவனிடம் ஒருதடவை பேசிப்பார். உன் அன்பைப் புரியவைக்க முயற்சி செய்.” என்று ஜெயன் சொன்னதுதான் தாமதம், லட்சனாவின் முகம் கோபத்தில் ஜொலித்தது.
“நான் எதற்கு அவரிடம் பேசவேண்டும்? புரிய வைப்பதற்கு அன்பு என்ன புதிரா? அந்தளவுக்கு நானும் என் அன்பும் தாழ்ந்து போகவில்லை. என்னை வேண்டாம் என்றவர் எனக்கும் வேண்டாம்!” என்றாள் கோபத்தில் மூச்சிரைக்க.
காதல் என்று இருக்கும் வரை அவனே என்று சரணாகதியில் கிடந்தவள், அவன் அவளைத் தூக்கிப் போட்ட பிறகு, நீயென்ன என்னைத் தூக்கிப் போடுவது, நான் போடுகிறேன் உன்னைத் தூக்கி! நீ வேண்டாம் எனக்கு என்று நின்றாள்.
விழிகள் அவளைத் துளைக்க, “அவனை மறந்துவிட்டாயா நீ…?” என்று ஜெயன் கேட்டபோது, அவளின் அத்தனை ஆக்ரோஷமும் அந்த நொடியில் மடிந்தது.
அது முடியுமா அவளால்? தொண்டை அடைத்தது. இந்த ஜென்மத்தில் அல்ல, எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அது நடக்காது என்றுதான் தோன்றியது.
சூர்யா மீது அளவுகடந்த ஆத்திரமும் கோபமும் இருக்கிறதுதான். அதற்காக அவனை மறந்துவிட முடியுமா அவளால்?
அவளின் மௌனமே அவனுக்கு பதிலை உரைக்க, “பிறகேன் இந்த வீண் பிடிவாதம்?” என்று கேட்டான் ஜெயன்.
“இது பிடிவாதம் அல்ல. தன்மானம்! என் தன்மானத்தை இழந்து அவரிடம் கெஞ்ச இயலாது..” என்றாள் நிமிர்ந்து. அன்று என்னைத் தருகிறேன் என்று சொல்லியும் அவளை மறுத்தானே என்று எண்ணி ஆத்திரம் கொண்டது அவள் மனது.
இதுவரை வலியாக இருந்தவைகள் வேதனையாக மாறி, அந்த வேதனை வெறுப்பாகி, வெறுப்பு சூர்யாவின் மேல் ஆத்திரமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது அவள் மனதில்!
ஆனால், அவள் ஒன்றை மறந்துபோனாள். அன்பு உள்ள இடத்தில் தான் ஆத்திரமும் வரும் என்பதை!
“பிறகு என்ன! அப்படியே அவன் நினைவுகளையும் தூக்கி எறி. எறிந்துவிட்டு உன் மனதைத் திறந்து வை. இன்னொரு காதல் உன் மனதுக்குள் நுழையட்டும்.” என்றான் ஜெயன்.
அதைக் கேட்டு அவள் இதழ்களில் ஒரு புன்னகை கசந்து வழிந்தது. “சூர்யாவின் நினைவுகளை தூக்கி எறிவதா? என் இதயம் தன் துடிப்பை நிறுத்தினால் மட்டுமே அது சாத்தியம்! இதில் இன்னொரு காதலா? சூர்யா உண்டாக்கிவிட்ட காயங்களே போதுமானது.” என்றாள் விரக்தியின் பிடியில் சிக்கியவளாக.
அவள் நிலையை அவனால் உணர முடிந்தது. சூர்யா மேல் வைத்துவிட்ட காதலுக்கும், அவனின் புறக்கணிப்பால் உண்டான கோபத்துக்கும் இடையில் அவள் தள்ளாடுவதைப் புரிந்துகொண்டான்.
அதிலிருந்து அவளை வெளியே கொணர நினைத்தவன், “எல்லோருமே நம் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கித்தான் எப்போதும் செல்கிறோம் சனா. அப்படியே நம் எதிர்காலத் துணையையும் தேடுகிறோம். அந்தத் துணை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை விட்டுப் போகலாம். அதற்கு எது வேடுமானாலும் காரணமாக இருக்கட்டும். அதற்காக நாம் அப்படியே முடங்க முடியுமா? வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டாமா? உன்னை உதறியவன் முன் நீ நிமிர்ந்து நிற்க வேண்டாமா?” என்று அவன் கேட்டது அவளை உசுப்பியது.
“என்ன.. என்ன சொல்கிறீர்கள்?” புரிந்தும் புரியாமலும் அவள் கேட்க, “நீ இன்னொரு காதல், கல்யாணம் என்று சந்தோசமாக வாழ்ந்து காட்டு. அதைப் பார்த்து, அரிய பொக்கிசத்தை இழந்துவிட்டோமே என்று அவன்தான் வருந்த வேண்டும்..” என்றான் ஜெயன்.
அவனை சந்தேகமாகப் பார்த்தாள் லட்சன.
‘இவன் தன்னை மணம் புரிந்துகொள்ளச் சொல்லி, மறைமுகமாகச் சொல்கிறானோ..’ என்று ஓடிய சிந்தனையை, “நீ அப்படிச் செய்தாலும் தப்பில்லை..” என்ற, அவன் கூற்று அவளைத் திகைக்க வைத்து.
அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்து, “சந்தர்ப்பம் கிடைத்தால், அதைத் தவற விட நான் தயாரில்லை. ஒரு முறை இழந்துவிட்டேன். இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால், நிச்சயம் விடமாட்டேன்..” என்றான் உறுதியான குரலில்.
அவளுக்குக் கோபம் வந்தது. “என்னால் அது நிச்சயம் முடியாது.” என்றாள் உறுதியான குரலில், கோபத்தை அடக்க முயன்றபடி.
“ஏன்? அவனை நினைத்து காலம் முழுக்க இப்படியே இருக்கப் போகிறாயா? அல்லது, அவன் காலடியில் விழுந்து, என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிச்சை கேட்கப் போகிறாயா?” என்று நக்கலாகக் கேட்டான் ஜெயன்.
அதில் உண்டான கோபத்தில், “அந்தளவுக்கு ரோசம் கேட்டுப் போகவில்லை என்று சொன்னேனே..” என்று சிடுசிடுத்தாள் ரோசத்தோடு.
“அது.. சும்மா என்னை ஏமாற்றவோ என்னவோ.. எனக்கென்ன தெரியும்?” என்று சந்தேகக் குரலில் கேட்டவனை முறைத்தாள் லட்சனா.
“பிறகு?” என்று அவன் கேட்க, அதன் பொருள் புரியாமல், “என்ன பிறகு..?” என்று எரிச்சலுடன் திருப்பிக் கேட்டாள்.
“பிறகு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன்.” என்று அவன் விளக்கமாகக் கேட்க, “என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இன்னொருவரை, அது யாராக இருந்தாலும் என்னால் ஏற்க முடியாது.” என்று நிறுத்தி நிதானமாக, அந்த ‘யாராக இருந்தாலும்’ வில் அழுத்தம் கொடுத்துச் சொன்னாள். அப்போதாவது கேட்டுக் கொண்டிருப்பவனின் மரமண்டையில் நன்றாக உறைக்கட்டுமே என்று!
அவனுக்கும் அது புரிய, சின்னச் சிரிப்பொன்று அவன் முகத்தில் தோன்றி மறைந்தது.
“ஆகா! என்னே காதல் உன் காதல்! இங்கே பார், எனக்கு உடல் முழுவதும் மெய் சிலிர்கிறது.” என்று அவளை எள்ளி நகையாடியவன், “அவன் கல்யாணம், குழந்தை குட்டி என்று சந்தோசமாக இருப்பான். நீ அவனையே நினைத்துக்கொண்டு காலம் முழுக்க கன்னியாகவே இருப்பாயா?” என்று குத்தலாகக் கேட்டான்.