இதயத் துடிப்பாய்க் காதல் 25 – 1

“இதுவரை நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் பொறுமையாகத்தான் கேட்டிருக்கிறேன்..” என்றாள் சனா. அதைக் கோபமாகத்தான் சொல்ல நினைத்தாள். அது முடியாமல் குரல் அடைத்தது. எவ்வளவு முயன்றும், அன்று அவன் பேசியவைகளையும், அதனால் உண்டான வலியையும் இன்றும் அவளால் மறக்க முடியவில்லை.

“அதேபோல, இன்றும் கேள் என்றுதான் சொல்கிறேன்.” என்றவன், அவளருகில் வந்து, அவளைப் போலவே கையைக் கட்டிக்கொண்டு காரில் சாய்ந்து நின்றான்.

சட்டென்று தள்ளி நின்றாள் சனா. அதைப் பார்த்தவனுக்கு மனதில் வலித்தது. முன்னரும் அவனை தள்ளி நிற்கச் சொல்வாளே தவிர, என்றும் அவள் தள்ளி நின்றதில்லை. இன்றோ எல்லாம் தலைகீழ் மாற்றம். அதை உண்டாக்கியவன் அவனே!

ஒன்றும் சொல்லாது, தானும் கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டான் சூர்யா.

பிறகும் சட்டென்று அவன் பேச்சை ஆரம்பித்து விடவில்லை. எதையோ யோசித்தபடி நின்றான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவளுக்கு பொறுமை பறந்தது. இவன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான். எவ்வளவு நேரம்தான் இப்படியே நிற்பது என்று சினத்தோடு அவன் புறமாக திரும்பியவளின் விழிகளில், நெரித்த புருவங்களும், இறுகிய தாடையுமாக சிந்தனையில் ஆழ்ந்தவனின் முகம் பட்டது.

அடர்ந்த கேசம் இன்னும் கருப்பாகவே இருக்க, மீசை அடர்த்தியாக வளர்ந்திருந்தது. சிவந்த அவன் நிறம் மங்கித்தெரிந்தது. மிக மிகச் சோர்ந்து தெரிந்தான்.

இதுவரை அவனை அவள் இப்படிப் பார்த்ததில்லை. கடைசியாக அவர்கள் சந்தித்துக்கொண்ட அன்றுகூட அவன் முகம் உணர்ச்சிகள் அற்று இருந்ததே தவிர இப்படி இருண்டு, இறுகி இருந்ததில்லை. எப்போதும் பளிச்சென்று இருப்பான். மலர்ந்த முகத்தோடு நினைத்ததைச் செய்து, நினைத்தபடி வாழ்ந்து வந்தவன். அவன் வாழ்வில் அவள் வந்தது தவறோ..

அவளின் பார்வையை உணர்ந்தோ என்னவோ, அவன் அவள் புறமாகத் திரும்ப, வேகமாகத் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள் சனா.

“இந்த மூன்று மாதங்கள்.. நீயில்லாமல் நான் வாழ்ந்த கொடிய நாட்கள் லட்.. சனா.” என்றான் ஆழ்ந்த குரலில்!

அதைக் கேட்டவளுக்கு, அதுவரை அவன் தோற்றத்தைப் பார்த்ததில் உண்டான நெருடல் மறைய, ஆத்திரம்தான் வந்தது.

“இப்படிப் பேசிப் பேசித்தானே என்னை நம்ப வைத்துக் கழுத்தறுத்தீர்கள். திரும்பவும் எதற்கு இந்த நடிப்பு..?” என்று வெடித்தாள்.

“இல்லை. இது நடிப்பில்லை. இதுமட்டுமல்ல எதையுமே நான் பொய்யாகச் சொன்னதில்லை..” என்றவனின் பேச்சில், அவளுக்கு வலித்தது.

ஆக, அன்று சொன்னதும் பொய்யில்லை என்கிறான். அவள் விழிகள் வலியில் கலங்கியது.

அவனைக் குற்றம் சாட்டிய அந்த விழிகளைப் பார்க்கமுடியாமல், பார்வையைத் திருப்பிக் கொண்டான் சூர்யா. அவளிடம் தன்னை எப்படிப் புரிய வைக்கப் போகிறோம் என்று நினைத்தவனுக்கு, நெஞ்சில் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது.

“உன்னைப் பிரிந்து, நீயில்லாமல் நான் நானாகவே இல்லை சனா. நானே வெறுமை ஆனது போல்.. உள்ளத்தின் வெற்றிடம் என்னைக் கொன்றுகொண்டே இருக்கிறது. நீ வேண்டும். நீ மட்டும்தான் வேண்டும் என்றுதான் தவிக்கிறேன்..” என்று உள்ளார்ந்த குரலில் அவன் சொல்ல, அவளுக்கு உள்ளம் கொதித்தது.

“மிக நன்றாக வசனம் பேசுகிறீர்கள். பேசாமல் நடிக்கப் போய்விடுங்கள். உங்களை மிஞ்ச ஒருவருமே இருக்கமாட்டார்கள் நடிப்புலகில்…” என்றாள் ஏளனமாக!

“என் மனதில் பட்டதைத் தான் நான் என்றுமே பேசியிருக்கிறேன். அன்று.. அன்று நான் பேசியவைகள் அனைத்தும் சரியென்றுதான் அன்று தோன்றியது. அதனால்தான் உன்னிடமும் சொன்னேன். ஆனால், உன்னைப் பிரிந்தபிறகுதான் நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதையே உணர்ந்தேன்.” என்று அவன் ஆரம்பிக்க, இவளுக்கு நெஞ்சடைத்தது.

“நான் சுதந்திரமாக வாழ்ந்து பழகியவன். உன்னைக் காதலிக்கத் தொடங்கியபிறகு, அந்த சுதந்திரத்துக்குப் பெரும் தடையாக இருந்தாய் நீ…” என்றவனின் பேச்சைக் கேட்டு அவள் உள்ளம் மீண்டும் அடிவாங்கியது. கண்கள் கலங்க அவனை வெறித்தாள்.

அவள் முகத்தைப் பார்த்தவனுக்கும் பெரும் வேதனையாக இருந்தது. கொட்டிவிட்ட வார்த்தைகளை மறுபடியும் அள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அது முடியாதே! தான் கொடுத்த காயத்துக்கு தானே மருந்திட முயன்று, “அன்றைய என் பேச்சுக்காக என்னை மன்னித்துக்கொள்.” என்றான் அவள் முகம் பார்த்து, உள்ளார்ந்த குரலில்!

முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சனா. அவன் வேதனையோடு தொடர்ந்தான்.

“அப்படித்தான் அன்று நினைத்தேன். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, அண்ணா அண்ணி, நண்பர்கள், வேலை என்று நான் உடுத்தும் உடை முதற்கொண்டு என்னுடைய அனைத்து விசயங்களிலும் நீ இடை புகுந்தாய். உன்னை என் மனம் விரும்பினாலும், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ” என்றான் தன்மையாக.

“எதையும் முகத்துக்கு நேரே சொல்லும் எனக்கு இதை ஏனோ உன்னிடம் சொல்லவும் முடியவில்லை. அதுவும் நீ அன்று உன் பெற்றோர்களைப் பற்றிக் சொல்லி அழுத பிறகு, உன் மனதை நோகடிக்க முடியவில்லை. என்னால் முடிந்தவரைக்கும் பொறுத்துத்தான் போனேன்.” என்று அவன் சொன்னபோது, அவமானமாக உணர்ந்தாள் சனா.

தான் தன்னைப் பற்றிச் சொல்லி அழுது, அவனிடம் அனுதாபத்தைத் தேடி, அவனைத் தன் கைக்குள் போட்டுக்கொள்ளப் பார்த்தது போலல்லவா இருக்கிறது அவன் பேச்சு!

“என் மனதை நோகடிக்க முடியாமல் தான் ஒரேடியாக சாகடித்து விட்டீர்கள் போல…” என்று, தன் மீதிருந்த கோபத்தையும் அவனிடம் காட்டினாள்.

“அப்படிச் சொல்லாதே!” என்றான் சூர்யா, ஒருவித பரிதவிப்புடன்.

“நல்லவன் போல் வேஷம் போடாதீர்கள்!” என்று சீறியவள், அவனை முறைத்துவிட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள், அலட்சியமாக!

“நான் சொல்வதை நம்பு சனா. அன்று உன்னிடம் சொல்வது எனக்கும் இலகுவாக இருக்கவில்லை. ஆனால் இந்த உறுத்தலோடு, வெளியே தெரியாத மனவேறுபாடோடு எத்தனை நாட்களுக்கு நாம் சந்தோசமாக இருக்கமுடியும்? என்றாவது ஒருநாள் அது நிச்சயம் வெடிக்கும் என்று தெரியும். அன்று நான் சொன்னது போலவே, திருமணத்திற்குப் பிறகு அது நடப்பதற்குப் பதில், திருமணத்திற்கு முதல் நடந்தால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்று தோன்றியது. வேதனையாக இருக்கும் என்றும் தெரியும். ஆனால், காலப்போக்கில் அது மறைந்துவிடும் என்றுதான் நினைத்தேன்..” என்றவனிடம்,

“அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே.. காலப்போக்கில் எல்லாம் மறைந்துவிடும் என்று. நானும் இந்த வாழ்க்கைக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். பிறகு எதற்கு இந்தச் சந்திப்பு, விளக்கம் எல்லாம்? நான் கேட்டேனா உங்களிடம்?” என்று கேட்டாள் சனா.

“இல்லை! எதுவுமே மறையவில்லை. நீ, உன்னோடு பழகிய நாட்கள், நாம் சந்தோசமாகக் கழித்த நிமிடங்கள் எதுவுமே என் மனதை விட்டு மறையவே இல்லை. இன்று மட்டுமல்ல என்றுமே மறையாது! நீ என் காலம் முழுமைக்கும் வேண்டும் என்றுதான் என் உள்ளம் கிடந்தது தவிக்கிறது.” என்றவனின் பேச்சைக் கேட்டு, அவளிதயம் ஒரு நொடி துள்ளிக் குதித்தது.

அவள் தோற்றுவிடவில்லை. அவள் காதலும் தோற்கவில்லை. அவனும் அவளைப் போலவே தவித்திருகிறான். இன்னும் தவிக்கிறான். ஆனால் இந்தத் தவிப்பு எத்தனை நாட்களுக்கு?

ஒருவரின் இயல்பு மாறப்போவதில்லை. இதோ இன்றுவரை வெளி வேஷம் போட்டாலும், அவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகத்தான் அவள் இருக்கிறாள். ஆக, அந்த அன்பு, அவன் சொன்னதுபோல் இனியும் அவனை மூச்சு முட்டத்தான் வைக்கும். விலங்காகத்தான் இருக்கும்.

அவர்கள் திரும்ப இணைந்தாலும், மீண்டும் ஒரு பிரிவு நிச்சயம். அந்தக் காயத்ததைத் தாங்கும் வலு அவளிடம் இனி இல்லை.

அவள் சிந்தனைகளை, தொடர்ந்த அவன் பேச்சுத் தடுத்தது.

“அன்று, பிரிவை உன்னிடம் சொல்லிவிட்டுப் போன அன்றே என்னால் உன்னை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை. அதுநாள் வரை, இந்தக் கட்டிலிருந்து வெளிவந்துவிட வேண்டும் என்று துடித்த மனது, ஏன் அப்படி வெளியே வந்தோம் என்று தவிக்கத் தொடங்கிவிட்டது. இங்கேயே இருந்தால் உன்னை மறக்கமுடியாது என்றுதான், தாத்தா பாட்டியையும் இழுத்துக்கொண்டு இலங்கைக்குச் சென்றுவிட்டேன்.” என்றான் அவளைப் பார்த்து.

அவள் முகத்தில் பலவித உணர்வுகளின் கலவைகள். அது கோபமா, ஆத்திரமா, வேதனையா, வலியா, அல்லது இயலாமையா.. அல்லது எல்லாமா.. அவள் மனம் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

அவள் எதுவும் சொல்வாளோ என்று அவன் பார்க்க, அவளோ அவனைத் திரும்பியும் பாராமல் நின்றாள்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “ஒருமாத லீவில் தான் போனேன். ஆனால், உன்னை மறக்கமுடியாமல், மறந்துதான் ஆகவேண்டும் என்கிற பிடிவாதத்தில் மூன்று மாதங்கள் அங்கேயே சுற்றினேன். என் முடிவில் நானே உறுதியாக நிற்க வேண்டாமா என்கிற பிடிவாதம் ஒருபுறம். ஆனால் எவ்வளவு முயன்றும் என்னால் உன்னை மறக்க முடியவே இல்லை. உன்னை மறக்கவேண்டும் என்று நினைத்து நான் செய்த அத்தனை காரியங்களிலும் நீதான் இருந்தாய். எந்தளவுக்கு என்னில் நீ இரண்டறக் கலந்துவிட்டாய் என்பதை நானே உணர்ந்துகொண்ட நாட்கள் அவை.” என்றவனின் விழிகள், ஆசையோடு அவளைத் தழுவியது.

அவன் உயிரில் உறைந்துவிட்டவளை, நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டவனின் கண்கள் அவளைக் களவாடியது.

அதை உணராமல், அசையாமல், கல்லாக சமைந்து நின்றாள் சனா. அவளை மறக்க முயன்றானே என்று எண்ணித் துயர் கொள்வாளா? அல்லது அதில் தோற்றுவிட்டான் என்று எண்ணி ஆனந்தம் கொள்வாளா? இனம் காணமுடியா உணர்வுகளின் தாக்கங்கள் அவள் மனதில்!

அவனுடைய தன்னிலை விளக்கம் தொடர்ந்தது.

“எதிலும் உறுதியாக நிற்பவன் நான். முதன்முதலாக என்னைத் தடுமாற வைத்தவள் நீதான். எனக்கே என்னைப் பிடிக்காமல் போனது. மறுபடியும் உன்னிடமே வந்து உன்னை என்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்று உள் மனம் துடித்துக்கொண்டே இருந்தது. என் மனதோடு நான் போராடிக்கொண்டு இருந்தபோதுதான், ஒரு சம்பவம் என் கண்ணில் பட்டது. அன்றுதான் எனக்குப் பெரும் கண்திறப்பு என்று கூடச் சொல்லலாம்…” என்றான்.

அப்படி என்ன பெரிய கண்திறப்பு என்கிற கேள்வியோடு அவள் அவனை விழியுயர்த்திப் பார்க்க, அவன் முகத்தில் சின்னப் புன்னகை ஒன்று தோன்றியது.

அதில் அவள் மனம் பலகீனப் படுவதை உணர்ந்தவள், வேகமாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். எவ்வளவு பட்டும் இந்த பாழாப் போன மனது அவனிடமே மயங்குகிறதே!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock