நீ தந்த கனவு 4 – 1

அவளோடு வந்த கூட்டத்தினர் புறப்பட்ட பிறகுதான் ஜீப்பை எடுத்தான் எல்லாளன். அவன் முகத்தில் மிகுந்த இறுக்கம். கண்களில் அனல் தெறிக்கும் கோபம். அதைக் கண்டாலும், ‘போடா டேய்!’ என்று எண்ணிக்கொண்டு, தன் தோழிகளுக்குக் கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்ப ஆரம்பித்தாள் ஆதினி.

எல்லாளனுக்கு அவளின் இந்தப் பொறுப்பற்ற தனத்தின் மீது மிகுந்த சினம் உண்டாயிற்று. “படிக்கிற பிள்ளை தற்கொலை செய்திருக்கிறாள். அதுக்கு உன்னோட வந்தவனில எவனாவது கூடக் காரணமா இருக்கலாம். இதையெல்லாம் யோசிக்காம, துக்கம் விசாரிக்கக் கூட்டம் சேர்த்துக்கொண்டு வந்து நிக்கிறாய். அறிவில்லையா உனக்கு?” என்று சீறினான்.

விசுக்கென்று நிமிர்ந்தாள் ஆதினி. “ஆருக்கு அறிவில்ல? உங்களுக்குத்தான் அறிவில்ல. மண்டைக்கையும் ஒண்டும் இல்ல. எங்க எப்பிடி நடக்கோணும் எண்டுற நாகரீகமும் இல்ல. இல்லாட்டி, என்ர ஃபிரெண்ட்ஸுக்கு முன்னால என்னைக் கேவலப்படுத்தி இருப்பீங்களா?” என்று தானும் பாய்ந்தாள்.

“பெரிய ஃபிரெண்ட்ஸ். எல்லாம் ஒண்டுக்கும் உதவாததுகள். இதுக்க சோகம் விசாரிக்கிறாளாம்!”

“ஏன் விசாரிச்சா என்ன? சாகி அண்ணாக்கு ஏதும் ஹெல்ப் தேவைப்படலாம். அவரின்ர அம்மா அப்பாவைத் தனியா விட்டுட்டுப் போக ஏலாம இருக்கலாம். நாங்க போனா ஏதாவது செய்யலாம் எண்டு நினைச்சுத்தான் வந்தனாங்க. அதவிட, என்னோட வந்த எல்லாரும் ஆரோ இல்ல. சாகி அண்ணான்ர ஃபிரண்ட்ஸ்.”

“அதாலதான் சந்தேகமே!” என்றான் அவன். “நடக்கிற இப்பிடியான விசயங்களுக்குப் பின்னால, எங்களுக்கு நெருக்கமான ஒருத்தன்தான் நிச்சயம் காரணமா இருப்பான். இல்லையோ, அவனை வச்சு எவனோ ஒருத்தன் செய்திருப்பான். நல்லாப் பழகின மனுசரத்தான் நம்புவம். அந்த நம்பிக்கைய வச்சுத்தான் அவங்கள் தங்கட வேலையக் காட்டுறது. சாதாரணமா ஒரு இறப்பு நடந்த வீட்டுக்குப் போய் விசாரிக்கிறதில அர்த்தம் இருக்கு. நடந்தது தற்கொலை. அதுவும் குமர்ப்பிள்ளை. போதைப் பழக்கம் வேற இருந்திருக்குப் போல. நாலு பக்கத்தாலயும் யோசிச்சு நடக்கிறத விட்டுட்டு நீயெல்லாம் என்ன சட்டம் படிக்கிறாய்?” என்று வறுத்து எடுத்தான்.

“போதைப் பழக்கமா?” அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் ஆதினி. அவளுக்கு இது தெரியாதே!

அவனுக்கு அது இன்னும் கோபத்தைக் கிளப்பியது.

“அதுதான்! என்ன நடக்குது எண்டே தெரியாது. ஆனா, கும்பலக் கூட்டிக்கொண்டு வந்திடுவா! முதல், சும்மா தெரிஞ்ச முகத்தையெல்லாம் என்ன நம்பிக்கையில கூட்டிக்கொண்டு திரியிறாய்? நாளைக்கு உனக்கு ஒண்டு நடந்தா என்ன செய்வாய்? இல்ல, உன்னோட வந்தவங்கள் எப்பிடியானவங்கள் எண்டு உனக்கு என்ன தெரியும்?”

அவனுடைய அர்ச்சனையில் அவளுக்குத் தலைவலி வரும் போல் இருந்தது. “அப்பிடியெல்லாம் இருக்காது!” என்றாள் எரிச்சலுடன்.

“அப்ப நீயே சொல்லன், ஏன் அவள் தூக்குல தொங்கினவள் எண்டு. நீதான் பெரிய அறிவு வாளியாச்சே!”

“ஹல்லோ! என்ன நக்கலா? நான் லோயராகி, நீங்க எடுக்கிற கேஸுக்கு எதிர் வக்கீலா நிண்டு, உங்கள நாக்குத் தள்ள வைக்கேல்ல, நான் ஆதினி இளந்திரையன் இல்ல!” பொங்கி எழுந்து சூளுரைத்தாள்.

அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஆரு? நீ? எனக்கெதிரா? கிழிப்பாய்! முதல் படிப்பை முடிக்கிறியா எண்டு பார். எப்ப பார், ஊர் சுத்துறதும் எவனோடயாவது சண்டைக்குப் போறதும். இதுல வக்கீலாகப் போறாவாம் வக்கீல்! வண்டு முருகனாக் கூட ஆக மாட்டாய்!”

எவ்வளவு பெரிய அவமானம். விழிகளாலேயே அவனை எரித்தாள் ஆதினி. அவனைப் பிடித்து ஜீப்பிலிருந்து தள்ளிவிடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. அதைச் செய்ய முடியாத இயலாமையில், “டேய் எள்ளுவய! ஆகத்தான் கேவலமாக் கதைக்காத! பிறகு என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

அந்த விரலிலேயே பட்டென்று ஒரு அடியைப் போட்டான், அவன். “உனக்கு எத்தின தரம் சொல்லுறது, மரியாதையாக் கதைச்சுப் பழகு எண்டு. நான் என்ன உன்னோட சுத்துற அரை லூசு எண்டு நினைச்சியா?”

“ஓ! துரைக்கு மரியாத வேணுமோ மரியாதை? தர மாட்டன்! என்னடா செய்வாய்?” அவன் தன்னை அளவுக்கதிகமாக மட்டம் தட்டிய கோபத்தில் சீறினாள்.

“இப்ப கைல போட்டத வாயிலையே போடுவன். பிறகு பல்லில்லாமத் திரிவாய். என்ன போடவா?”

“எங்க, தைரியம் இருந்தாப் போடுங்க பாப்பம். என்ர அண்ணாவும் அப்பாவும் உங்களைச் சும்மா விடுவினமா?”

“அந்தத் திமிர்தானே இவ்வளவு கதைக்க வைக்கிறது?” வாகனத்தைச் செலுத்திக்கொண்டே திரும்பிப் பார்த்தான். அவள் கையில் இருந்த கைப்பேசி கண்ணில் பட்டது. எட்டிப் பறித்து பொக்கெட்டில் போட்டுக்கொண்டான். “ஃபோன காணேல்ல எண்டு உன்ர அண்ணாட்ட கேஸ் குடுத்து, உன்ர அப்பாட்டத் தீர்ப்பை வாங்கிக்கொண்டு வா. தாறன்!” என்றான் எள்ளலாக.

இதை அவள் எதிர்பார்க்கவில்லை. கைப்பேசி இல்லாமல் இருப்பதா? அதை விடக் கொடுமை வேறு எதுவுமில்லையே!

“விளையாடாமத் தாங்க!” மிரட்டும் தொனியில் சொல்ல நினைத்தாலும் முடியாமல் குரல் தாழ்ந்து வந்தது.

அவன் உதட்டோரம் மெல்லிய சிரிப்பு. “என்னது? கேக்கேல்லை?” காதை இவள் பக்கமாகச் சரித்தபடி கேட்டான்.

ஆதினிக்கு அவன் முகத்திலேயே குத்த வேண்டும் போலிருந்தது. அதை அடக்கி, “எனக்கு ஃபோன் இல்லாம இருக்கேலாது. தாங்க! இல்ல, அப்பாட்டச் சொல்லுவன்.” என்றவளுக்கு ஒரு அளவுக்கு மேல் அவனிடம் பணிந்து போகவும் முடியவில்லை.

“சொல்லு எண்டுதானே நானும் சொல்லுறன்!”

இதற்குள் அவர்களின் வீடு வந்திருந்தது. வாசலில் ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தான் எல்லாளன்.

ஆதினிக்கு எரிச்சலும் சினமும் பொங்கின. “என்ர ஃபோன தந்திட்டுப் போங்க!” என்று அவனை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

“தரேலாது போடி!”

அவனுக்கு அவளின் இந்த மரியாதையற்ற நடத்தையும் பேச்சும் பிடிக்கவே பிடிக்காது. இதுவே, வேறு யாராகவும் இருந்திருக்கச் செவிட்டிலேயே போட்டு விடுவான். அவனுடைய மரியாதைக்குரிய இளந்திரையன் அங்கிளின் மகள் என்பதும், உற்ற நண்பனின் தங்கை என்பதும்தான் இவளின் சேட்டைகளை எல்லாம் பொறுத்துப் போக வைப்பன.

அவளுக்கும் அது தெரியும். கூடவே, இயல்பான துடுக்குத் தனமும் அவனைக் கோபமேற்றிப் பார்ப்பதில் கிடைக்கிற இன்பமும் அவளையும் அமைதியாகப் போக விடுவதில்லை.

எல்லாளன் வீட்டுக்குள் வந்து சோஃபாவில் அமரக் கூட இல்லை. அதற்குள், “நில்லுங்க பபா!(Baba – Baby) துவக்கத் தாங்க, பபா!” என்று அவர்களின் வீட்டுப் பாதுகாப்புக்கு நிற்கும் காவலாளி சமனல நாயக்கவின் பதட்டக் குரல் கேட்டது.

எல்லாளன், அகரன், சியாமளா மூவரும் வேகமாகத் திரும்பிப் பார்த்தனர். அவரின் துப்பாக்கியோடு எல்லாளனை நோக்கி வந்துகொண்டிருந்தாள் ஆதினி. அனைவருக்குமே ஒரு முறை திக் என்றது.

அவள் மட்டும் எந்தப் பதட்டமும் இல்லாமல் எல்லாளனைக் குறி வைத்தபடி, அவன் முன்னே வந்து நின்றாள்.

“என்ர ஃபோன தாங்க!”

“தராட்டி?” நிதானமாக வினவினான் எல்லாளன்.

அகரனுக்குத் தங்கையையும் தெரியும், நண்பனையும் தெரியும். அதில், “ஆதிக்குட்டி, இது என்ன பழக்கம்? அவன் தருவான். நீ கையக் கீழ இறக்கு.” என்றான் நயமாக.

“அவர முதல் ஃபோன தரச் சொல்லு. என்ர ஃபிரெண்ட்ஸ்க்கு முன்னால வச்சு எவ்வளவு கேவலப்படுத்தினவர் தெரியுமா? கேஸ நீ நடத்தப் போறியா எண்டு கேக்கிறார். துக்கம் நடந்த வீடாப் போச்சே எண்டு வாய மூடிக்கொண்டு வந்தா, ஜீப்ல ரெத்தம் வாற அளவுக்கு அட்வைஸ். சரி, எதையாவது சொல்லிப்போட்டுப் போகட்டும் எண்டு பாத்தா, ஃபோனை பறிச்சு வச்சுக்கொண்டு, உன்னட்ட கேஸ் குடுத்து, அப்பாட்டத் தீர்ப்பு வாங்கிக்கொண்டு வரட்டாம் எண்டு சொல்லுறார். எவ்வளவு திமிர்? மரியாதையா மன்னிப்புக் கேக்கச் சொல்லு. இல்லையோ, என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” சொன்னவளின் விழிகளில் பயமும் இல்லை, துப்பாக்கியைப் பற்றியிருக்கிறோமே என்கிற பதட்டமும் இல்லை.

ஆனால், சியாமளாவுக்கு நெஞ்சுக்கூடே நடுங்கியது. அவள் கண்ட கோரக் காட்சிகள் போதாதா? அனுபவித்த துன்பங்கள்தான் கொஞ்சமா? இது என்ன கொடுமை?

நெஞ்சு பதற, ஓடி வந்து தமயனுக்கும் அவளுக்குமிடையில் நின்று, “அண்ணா கதைச்சது பிழைதான். அவருக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். நீ கையக் கீழ இறக்கு!” என்று கெஞ்சினாள்.

“இவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு! நீ தள்ளு! அவள் எப்பிடிச் சுடுறாள் எண்டு நானும் பாக்கிறன்!” என்று தங்கையை நகர்த்தி விட்டுவிட்டு, “ஷூட் பண்ணு!” என்றபடி அவள் முன்னே வந்து நின்றான் எல்லாளன்.

அவளும் பயப்படவில்லை. “சும்மா வெருட்டுறன் எண்டு நினைக்காதீங்க! ஃபோன் தராட்டிக் கட்டாயம் ஷூட் பண்ணுவன்!” அசையாமல் நின்றபடி சொன்னாள்.

“சுடு எண்டுதானே நானும் சொல்லுறன்!” என்று சொல்லி முடிக்கும் முன்னேயே, அவளைச் சுழற்றித் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, அவள் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கினான் எல்லாளன்.

அத்தனையும் மின்னல் விரைவில் நடந்து முடிந்திருந்தது. இதை மருந்துக்கும் எதிர்பாராத ஆதினி, அவனுடைய இறுக்கமான பிடிக்குள் அசையக் கூட மறந்தவளாக நின்றிருந்தாள்.

*****

பொழுது இரவைத் தொட்டிருந்தது. கட்டிலில் படுத்திருந்தாள் ஆதினி. அவள் சிந்தனை முழுவதும் அன்றைய மாலைப் பொழுதினில் தொலைந்து போயிருந்தது.

ஆரம்ப நாள்களில் நீதிபதி இளந்திரையனின் பெண் என்று மிகுந்த மரியாதையோடும் அளவோடும்தான் பழகுவான் எல்லாளன். அவளுக்குத்தான் அது பிடிப்பதில்லை. நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று கேட்டு, அவள் விட்ட சேட்டைகள்தான் இப்படி அதட்டி உருட்டும் அளவுக்குக் கொண்டு வந்தது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock