அதன் பிறகெல்லாம் அவர்கள் இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வருவது இயல்பாயிற்று. முட்டிக்கொள்வதும் மோதிக் கொள்வதும் கூட எப்போதும் நடப்பதுதான். ஏன், இவள் அவன் முதுகில் கை வைத்துத் தள்ளி விடுவதோ, அவன் அவள் கை பற்றி இழுத்துச் செல்வதோ, நகர்த்தி நிறுத்துவதோ நடப்பதுதான்.
ஆனால் இன்று?
நடந்தது நொடி நேர நிகழ்வு. அவனும் எதையும் வேண்டுமென்று செய்யவில்லை. பல குற்றவாளிகளைக் கையாண்டு பழகிய இலாவகத்தோடு, நொடியில் அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, மின்னல் விரைவில் துப்பாக்கியைப் பறித்துவிட்டு, அதே வேகத்தோடு விடுவித்தும் இருந்தான்.
அவள்தான் தடுமாறிப் போனாள். அந்த நொடி நேரத்தில் கூட, அவள் உணர்ந்த அவன் கரத்தின் வலிமையும், கழுத்தில் மோதிய மூச்சுக் காற்றின் வேகமும், மிக நெருக்கத்தில் பார்த்த அந்தக் கண்களின் அனலும் அவளை நிலைகுலைய வைத்திருந்தன.
இப்போது வரையில் அதிலிருந்து வெளிவர முடியாமல் நிற்கிறாள். என்னவோ, அவனை முன்பின் பார்த்ததே இல்லை போலவும், அவன் அவளுக்குப் புதியவன் போலவும் நெஞ்சு படபடத்துக்கொண்டே இருந்தது.
இந்த அதிர்வில் தன் கைப்பேசியைக் கூட வாங்க மறந்திருந்தாள்.
*****
கணவனின் தம்பிக்குத் தூக்குத் தண்டனை தீர்ப்பாகி இருக்கிறதாம் என்று அறிந்ததிலிருந்து, முற்றிலுமாகக் கலங்கிப்போயிருந்தாள் தமயந்தி. அவளுக்கும் சத்தியநாதனுக்கும் திருமணம் நடந்த அன்றுதான், அந்தக் கைது நடந்திருந்தது.
அவள் வந்த நேரம்தான் என்று சொல்லிவிடுவார்களோ என அவள் வீட்டினர் மிகவுமே பயந்தனர். அது வீண் என்று சொல்வதுபோல் கணவனோ, அவன் வீட்டினரோ அப்படி ஒரு வார்த்தை சொல்லவே இல்லை.
ஆனால், நடந்த கைதும் அதற்குச் சொல்லப்பட்ட காரணமும் அவளுக்குத் திகிலூட்டின. கணவனிடம் கேட்டபோது, இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்றிருந்தான். புது மனைவியாக அதற்கு மேல் அதைப் பற்றி விசாரிக்கவும் தயங்கினாள்.
கணவன் வீடும் அவள் வீடும் ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவினர்களாம். அது இரு தரப்புக்கும் தெரியாது. இரு வீட்டுக்கும் பொதுவான திருமணம் ஒன்றில் இவளைப் பார்த்துவிட்டு, விசாரித்துப் பார்த்துச் சொந்தம் என்று அறிந்து, அவர்களாகவேதான் பெண் கேட்டு வந்திருந்தார்கள்.
செல்வாக்கு நிறைந்த குடும்பம், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களாகவே பெண் கேட்டு வந்த போது, மிகவும் பெருமையாக உணர்ந்திருந்தாள். அதில், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்தபோது, அரசல் புரசலாகக் காதுக்கு வந்த செய்திகள், பெரும் பாதிப்பை நிகழ்த்த மறுத்தன.
கூடவே, கொஞ்சம் பெரிய இடம் என்கையில் இப்படித்தான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிப் பெயரைக் கெடுப்பார்கள் என்று அவர்கள் சொன்னதும் ஏற்றுக்கொள்ளும் படியாகத்தான் இருந்தது.
இது எல்லாவற்றையும் விட, அவளிடம் கொடுக்கப்பட்ட ஃபோட்டோவில் களையும் கம்பீரமுமாக இருந்த சத்தியநாதன், சிறு புன்னகையிலேயே மனத்தைப் பறித்தான். ‘இவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா?’ என்று நினைத்து நினைத்துப் பூரித்தாள்; அடிக்கடி கண்ணாடி பார்த்தாள்; தன்னை அழகுபடுத்திக்கொண்டாள்.
இதில், திருமணப் பேச்சு ஒரு முடிவுக்கு வர முதலேயே, அவனாகவே அவள் நம்பரை தேடிப்பிடித்து அழைத்து, காதோரமாகக் கதை பேசி விட, மொத்தமாக மயங்கிப் போனாள் தமயந்தி.
அவனை மறுக்கும் இடத்தில் அவன் அவளை நிறுத்தவில்லை. அதுதான் உண்மை. நேரம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அழைத்து, காதலர்களுக்குரித்தான பிரத்தியேகப் பேச்சுகளை நிகழ்த்தி, அவனைத் தாண்டிய அத்தனை சிந்தனைகளையும் அவளிடமிருந்து அகற்றியிருந்தான்.
அது, அவன் மீது சொல்லப்பட்ட கரும் புள்ளிகளை எல்லாம் பெரிதாக எடுக்க விடாமல் செய்திருந்தது; அவன் வார்த்தைகளை மாத்திரமே நம்ப வைத்தது. அதன் பிறகு, எங்கே அறிவைக் கொண்டு அலசி ஆராய்வது? மனத்தின் பாதையிலேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தாள்.
இன்று வரையில் அவள் எடுத்த முடிவு தவறு என்று எண்ணும் வகையில் அவனும் நடந்து கொண்டதில்லை. அன்பான கணவன்; அவள் மீது ஆசையாக இருந்தான்; சின்ன சின்னச் சண்டைகளும் ஊடல்களும் கூட அழகான கூடல்களாகவே நிறைவுற்றன. இப்படி இருக்கையில்தான், அவன் தம்பிக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்திருக்கிறது.
அவனுடைய பெற்றவர்கள் தனியாக இருக்க, அவனும் அவளுமாகத் தனி வீட்டில்தான் வசிக்கிறார்கள். மாமியார் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதலாக இருந்துவிட்டு வந்திருந்தாள். அவள் கணவனுக்கு அவன் வீடு வருகிற போது அவள் இருந்தே ஆக வேண்டும். இல்லையானால் கோபம் வந்துவிடும்.
என்ன மனநிலையில் இருக்கிறானோ, இனி என்னாகுமோ என்று அவள் பயந்துகொண்டு இருக்க, நன்றாக நேரம் செல்ல வந்தவனிடமிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளாகப் பேச வாயெடுத்தபோது கூட, “அத விடு!” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டு, எப்போதும் போல அவளை நெருங்கி, அணைத்து, ஆலிங்கனம் செய்தான் அவன்.
முதன் முதலாக, கணவனின் குணம் என்ன என்று யோசித்துக் கலங்கி நின்றாள் தமயந்தி.
*****
நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது. வீடு, தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டிருந்ததால் சாகித்தியனின் குடும்பம், அதே ஊரிலேயே இருக்கும் அவனின் பெரியம்மா வீட்டிற்கு வந்திருந்தனர்.
அவனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. அப்பாவுக்குத் தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை. அம்மா இல்லத்தரசியாக இருந்தாலும் காணியிலேயே தோட்டம் வைத்து, வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு, தன் கைச் செலவையும் அதிலேயே முடித்துக்கொள்பவர். ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்; நன்றாகப் படிக்கிறவர்கள். அவர்களுக்குக் குறை என்றோ, ஏக்கங்கள் என்றோ பெரிதாக எதுவும் இல்லை. அழகான அமைதியான குடும்பம். எதிர்காலம் கூட, கலங்களற்றுத் தெளிந்த வானமாகத்தான் தெரிந்துகொண்டிருந்தது.
அப்படி இருக்கையில்தான் இடியைப் போன்று தலையில் இறங்கியிருந்தது, சாமந்தியின் தற்கொலை. ஏன், எதற்கு என்று காரண காரியம் புரியாத திகைத்த நிலை.
அப்போது, சாகித்தியனின் கைப்பேசி சத்தமில்லாமல் சிணுங்கிற்று. எடுத்துப் பார்த்தான். காண்டீபன் என்று விழுந்தது. அவனுடைய வரலாற்று விரிவுரையாளன்(Lecturer). அவனுக்கு மிகமிகப் பிடித்த பண்புள்ளம் கொண்ட மனிதன். அவன் பெயரைப் பார்த்ததுமே துக்கம் பெருகித் தெரிய, வேகமாக வீட்டுக்கு வெளியே வந்து அழைப்பை ஏற்றான்.
“சாகித்தியன், என்னென்னவோ எல்லாம் கேள்விப்பட்டன். உண்மையா?” காண்டீபனின் குரலில் தெரிந்த மெய்யான பதட்டம், இவன் கண்களைக் கலங்க வைத்தது.
“ஓம் சேர்.” மேலே பேச வராமல் அடைத்த குரலில் சொன்னான்.
“என்ன சொல்லுறீர்?” என்று அதிர்ந்தவன், அடுத்த பத்தாவது நிமிடம் அவன் முன்னே நின்றான். வீட்டுப் பெரியவர்களுக்குத் தன்னால் முடிந்த ஆறுதலைச் சொன்ன பிறகு, சாகித்தியனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
“உமக்கேதும் டவுட் இருக்கா?” தெருவோர விளக்கின் வெளிச்சத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று வினவினான்.
“இல்லையே சேர். அப்பிடி எந்த டவுட்டும் எங்க மூண்டு பேருக்கும் வரவே இல்லை. அந்தளவுக்கு நாங்க அவளைக் கவனிக்கேல்லையா? இல்ல, அவள் எங்களிட்ட மறைச்சிட்டாளா? ஒண்டும் விளங்குது இல்ல. இனி எப்பிடி அந்த வீட்டுக்குப் போறது? தங்கச்சின்ர அறையப் பாத்துக்கொண்டே எப்பிடி வாழுறது? எல்லாத்தையும் யோசிக்க யோசிக்கப் பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு.” என்றவன் உடைந்து அழுதான்.
அவன் முதுகைத் தடவிக்கொடுத்தான் காண்டீபன். ஒரே வீட்டில் குடும்பமாக வசித்தும் எல்லோரும் தனித்தனித் தீவுகளாக மாறிப் போனதன் விளைவு கண் முன்னே! இல்லாமல், வீட்டில் மற்றவர்கள் இருந்தும் இப்படி ஒரு உயிர் அநியாயமாகப் போயிருக்குமா?
“போலீஸ் என்னவாம்?”
“போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட் ரெண்டு நாளில வந்திடுமாம். அதுக்குப் பிறகு சொல்லுறன் எண்டு சொல்லி இருக்கிறார் ஏஎஸ்பி சேர்.”
“எந்த ஏஎஸ்பி?”
“எல்லாளன் சேர்.”
“ஓ!”
மீண்டும் அவர்களுக்குள் அமைதி.
“திடீரெண்டு பிடிச்சு நடுக் கடலுக்க தள்ளிவிட்ட மாதிரி மூச்சடைக்குது சேர்.” பெரிய மூச்சை இழுத்து விட்டுவிட்டுச் சொன்னான் சாகித்தியன்.
அவன் உள்ளத்து உணர்வுகளை விளங்கிக்கொள்ள முடிந்ததில், “ஒரு ரெண்டு நாளைக்கு அப்பிடித்தான் இருக்கும். ஆனா, நீர் உடையக் கூடாது! இனி காரணத்தைத்தான் கண்டுபிடிக்கலாமே தவிர, போன உயிர் வரப் போறேல்ல. உம்மட அம்மா அப்பாக்கு இருக்கிறது நீர் மட்டும்தான். உம்மையும் தைரியமா வச்சுக்கொண்டு, அவேயையும் பாக்க வேண்டிய பொறுப்பு உமக்கு வந்திருக்கு.” என்று கனிவுடன் சொன்னான் காண்டீபன்.
“இதில இருந்து வெளில வாறது ஈஸி இல்ல எண்டு எனக்குத் தெரியும். ஆனா, நீர் வந்துதான் ஆகோணும். அந்த வீட்டுக்குத் திரும்ப எப்பிடிப் போறது எண்டு கேக்கிறீரே, கொஞ்சக் காலத்துக்கு முதல் எங்கட நிலமே ரெத்தக் காடாத்தானே கிடந்தது. எத்தின சொந்த பந்தங்களைக் கொத்து கொத்தா இழந்தோம்? அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நாங்க வாழேல்லையா? அப்பிடித்தான், எல்லாத்தையும் கடந்து வரோணும். விளங்குதா?”
மெல்லிய தலையசைப்பின் மூலம் அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டான் சாகித்யன்.
“வேற என்ன? இனி நான் வெளிக்கிடோணும். என்ன உதவி எண்டாலும் யோசிக்காமக் கேளும்.”
வீட்டுக்குப் புறப்பட்ட காண்டீபனின் மனம் முழுவதும் பாரம் ஏறிப்போய்க் கிடந்தது. ஒரு குடும்பமே சீர் குழைந்து போயிற்று. அது மீள்வதற்கு எத்தனை காலமெடுக்கும்? முதலில், முழுமையாக மீள முடியுமா?
இன்றைய இளம் சமுதாயத்தின் மீது வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடப்பட்ட வன்மத்தில் இந்தப் போதைப் புழக்கமும் ஒன்று. அதை உணர்ந்து, தவிர்த்து, தாம் யார் என்று உணர்த்தி வாழ்வதை விட்டுவிட்டு, இந்த இளம் சமுதாயமும் நாளுக்கு நாள் அதற்கு அடிமையாகிக்கொண்டே போவதுதான் பெரும் வேதனை!