நீ தந்த கனவு 5 – 1

எல்லாளனுக்கு அடுத்த இரண்டு நாள்களும் சாமந்தியின் தற்கொலைக்கான துப்புத் துலக்குவதிலேயே கழிந்தன. அவள் படித்த கல்லூரி, சென்று வந்த டியூஷன் செண்டர், நண்பர்கள், அயலட்டை வீடுகள் என்று ஒன்று விடாமல் ஆராய்ந்துவிட்டான்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்கு இடமாக யாருமே சிக்கவில்லை. அவளின் லாப்டாப், ஃபோன் எதிலும் தவறான அழைப்பு, மெசேஜ், வீடியோ என்று ஒன்று கூட இல்லை. பின்னே?

தடயவியலாளர்கள் கூட அவள் வீட்டிலோ, பொருட்களிலோ சந்தேகத்திற்கு இடமாக எதுவுமே இல்லை என்று கையை விரித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்து சேர்ந்தது. போதைப் பழக்கம் இருந்திருப்பதை உறுதி செய்ததோடு, அவள் கன்னிப்பெண் அல்லள் என்று இருந்ததுதான் அவனை அதிர வைத்தது. கூடவே, வன்புணர்வு நடந்ததற்கான தடயங்களும் இல்லை என்றது அறிக்கை.

அவனுடைய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவள் வெளியே எந்த இடத்திலும் வழி தவறியதாகத் தெரியவில்லை. அப்படியானால் வீட்டிற்குள்ளா? அடுத்த நிமிடமே சாகித்தியன் விசாரணைக்கு அழைக்கப்பட்டான்.

*****

இருண்ட அறை. எங்கோ ஒரு மூலையிலிருந்து மெதுவாகக் கசியும் வெளிச்சம். நட்ட நடுவில் ஒரு மேசை. எதிரெதிரில் இரண்டு நாற்காலிகள். அதில் ஒன்றில் சாகித்தியன் அமர வைக்கப்பட்டிருந்தான்.

பூட்டிய கதவும் சத்தமே இல்லாத மயான அமைதியும் திகிலூட்டின. நெஞ்சுத் தண்ணீர் வற்றிப்போகும் அளவிலான அந்தக் கொடிய அச்சுறுத்தலைத் தாங்கும் சக்தியற்று அவன் நடுங்கிக்கொண்டிருக்கையில் கதவைத் திறந்துகொண்டு வந்தான் எல்லாளன்.

அன்று, நிதானமாக, மெல்லிய அனுதாபத்தோடு அவனை விசாரித்தவன் அல்லன் அவன்! கடுமை ஏறிய விழிகளும், நீதானே குற்றவாளி என்று நெஞ்சையே ஊடுருவும் பார்வையும், இளக்கம் மருந்துக்கும் இல்லாத உடல் மொழியும் அவனை வேறு ஒரு எல்லாளனாகக் காட்டின.

சாகித்தியனுக்குத் தொண்டைக் குழி ஏறி இறங்கிற்று.

“எனக்குத் தேவை உண்மை. அத மட்டும் சொல்லிட்டா அஞ்சு நிமிசத்தில இந்த விசாரணை முடிஞ்சிடும். இல்லையோ?” என்றவன் கையில் இருந்த கோப்பினைத் தூக்கி அவன் முன்னே வைத்தான்.

“உங்கட தங்கச்சி போற பள்ளிக்கூடம், படிக்கிற டியூஷன் செண்டர், பழகிற ஃபிரெண்ட்ஸ், தினமும் போய் வாற ரோட்டு எண்டு ஒண்டையும் விடேல்ல. அக்கு வேர் ஆணிவேரா விசாரிச்சாச்சு. வெளில எங்கயும் அவவுக்கு எந்தப் பிரச்சினையும் வரேல்ல. வீட்டுல தான்…” என்று நிறுத்திவிட்டுத் திரும்பவும் பார்வையால் அவனை ஊடுருவினான்.

என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்தும் புரியாத நிலையில் நடுங்கினான் சாகித்தியன்.

“போதை மட்டுமில்ல. உங்கட தங்கச்சி சாகேக்க கன்னிப் பெண்ணும் இல்ல.”

அவன் சொன்னதைப் புரிந்து கொள்வதற்கே சாகித்தியனுக்குச் சில நொடிகள் எடுத்தன. புரிந்ததும், “சேர்…” என்றான் ஈனக்குரலில். அவன் தங்கையா? நம்ப முடியாமல் மனம் ஊமையாகக் கதறிற்று!

“சொல்லும்! இதுக்கெல்லாம் ஆர் காரணம்? நீரா?”

“நானா?” அவன் நெஞ்சு பதறிப் போனது. காதுகள் இரண்டும் கூசிப் போயின. “என்ன சேர் இப்பிடிக் கேக்கிறீங்க? அவள் என்ர தங்கச்சி.” கோபப்படக் கூட வலிமையற்றவனாகத் தழுதழுத்தான்.

“வேற ஆர் உங்கட வீட்டில ஆம்பிள?” என்றதும் பதறி நிமிர்ந்த சாகித்தியன், அவன் எங்கே வருகிறான் என்று புரிந்து மொத்தமாக உடைந்து போனான்.

“இல்ல இல்ல! நாங்க அப்பிடியான ஆக்கள் இல்ல. ஏற்கனவே ஒரு உயிரை இழந்திட்டு நிக்கிறோம். அதுல இருந்து எப்பிடி வெளில வாறது எண்டே தெரியேல்ல. இதுல இந்தப் பழியையும் தூக்கி எங்கட தலைல போடாதீங்க சேர்!”

“அப்ப வேற ஆர்? உங்கட வீட்டுக்கு வந்து போற ஆம்பிளைகள்? சித்தப்பா, பெரியப்பா, மாமா, மச்சான் எண்டு… இல்ல உங்கட நண்பர்கள்?”

“பெரியப்பா குடும்பம் மட்டும்தான் பக்கத்தில இருக்கினம் சேர். ஆனா, பெரியப்பாக்கு நல்ல வயசு. வேற என்ர ஃபிரெண்ட்ஸ் மட்டும்தான். அதுவும் எப்பயாவதுதான் வந்து போறவங்கள்.”

“ஆரு? அண்டைக்கு வந்திட்டுப் போனாங்களே. அந்த மூண்டு பேருமா?”

ஆம் என்று தலையை ஆட்டினான் சாகித்யன்.

அவர்கள் பற்றிய மொத்த விபரத்தையும் பெற்றுக்கொண்டு விட்டு, “எங்கயும் ஓடி ஒளியக் கூடாது. எப்ப கூப்பிட்டாலும் வர வேணும். விளங்கினதா? இல்லையோ, பிறகு நான் விசாரிக்கிற விதமே வேறயா இருக்கும்!” என்கிற அதட்டலோடு அனுப்பிவைத்தான்.

வெளியே வந்தவன் வியர்வையில் குளித்திருந்தான். மனம் முழுக்கப் புண்ணாகிப் போயிருந்தது. கூடப்பிறந்த தங்கையைப் போய்… மேலே நினைக்கக் கூட முடியாமல் வீதியில் நின்று வெடித்து அழுதான்.

அந்த மூவரையும் அன்றே விசாரணைக்கு எடுத்தான் எல்லாளன். எந்தப் பிரயோசனமும் இல்லை. அவனுடைய கிடுக்கிப்பிடிக் கேள்விகளுக்கு அணிந்திருந்த காற்சட்டை நனைந்துவிடுகிற அளவுக்குப் பயந்து நடுங்கினார்களே தவிர, வேறு எந்தச் சிறு துப்பும் கிடைக்கவில்லை. அவனுடைய சந்தேகம் கூட முகாந்திரம் அற்றது என்பதில், வாய் மிரட்டலோடு ஊர் தாண்டிப் போகக் கூடாது என்று உத்தரவிட்டு அவர்களையும் அனுப்பிவைத்தான்.

*****

தன் சிலுக்கின் மீது கொலை வெறியில் இருந்தாள் ஆதினி. சமீப நாட்களாக அவள் மனநிலையே சரியில்லை. இதில், அது வேறு அடிக்கடி வேலை நிறுத்தம் செய்துகொண்டிருந்தது. இன்றும் நண்பியின் வீட்டுக்கு வந்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இடையில் நின்றுவிட்டது. யாரையாவது அழைத்து உதவி கேட்கக் கையில் கைப்பேசியும் இல்லை.

‘எல்லாம் அவனால! அண்டைக்கு ஷூட் பண்ணியிருக்கோணும். விட்டுட்டன்!’ அவனை வாய்க்குள் போட்டு மென்றபடி ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு நடந்தவளுக்கு மூச்சு வாங்கியது.

உச்சி வெய்யில் அடித்துக் கொளுத்தியதில் முகமெல்லாம் வியர்த்து வழிந்தது. வீதியோரமாக நின்ற மர நிழலின் கீழ் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, வியர்வையைத் துடைத்தாள். மிகுதித் தூரத்திற்குத் தள்ளுவதை நினைக்கவே நாக்கு வறண்டது.

‘எளியவன்! ஃபோன தந்திட்டுப் போயிருக்கலாம்.’ அழைத்து யாரிடமும் உதவி கேட்க முடியாமல் செய்துவிட்டானே!

ஆட்டோ ஏதாவது வந்தால் மறித்து உதவி கேட்போமா என்று எண்ணிக்கொண்டு நிற்கையில், அவள் முன்னே ஜீப்பை கொண்டு வந்து நிறுத்தினான் எல்லாளன்.

அவனுக்கென்று டிரைவர் இருந்தாலும் கூடப் பெரும்பான்மைப் பொழுதுகளில் அவனேதான் ஓட்டுவான். அப்போதுதான் தன் சிந்தனையின் வேகத்திற்கு ஏற்ப, வாகனத்தின் வேகமும் இருக்கும் என்று நினைப்பான்.

அப்படி ஒரு கேஸ் விசயமாகச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் ஆதினியைக் கண்டான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock