நீ தந்த கனவு 5 – 2

“ஏன் இங்க நிக்கிறாய்?” ஜீப்பிலிருந்து இறங்காமலேயே அவன் கேட்க, ‘எல்லாம் உன்னாலதான்டா!’ என்று அவனை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி.

ஸ்கூட்டி ஓரமாக நிற்பதிலேயே அதற்குத்தான் கோளாறு என்று விளங்கியது. இறங்கி வந்து அதை ஆராய்ந்தான். பெட்ரோல் இருந்தும் ஸ்டார்ட் ஆக மறுத்தது. அவனுக்குத் தெரிந்த வரையில் பார்த்தும் சரி வரவில்லை.

“கராஜுக்குத்தான் விடோணும். நீ ஜீப்பில ஏறு!” ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து கைப்பேசியை எடுத்தபடி சொன்னான்.

“எனக்கு ஆட்டோல போகத் தெரியும்! நீங்க போய் உங்கட வேலையப் பாருங்க!” வெடுக்கென்று சொன்னாள் ஆதினி.

உச்சி வெய்யிலில் அவள் கருவாடாகிப் போனதற்குக் காரணமே அவன்தான். இதில், பெரிய அக்கறை காட்ட வந்துவிட்டான்!

கைப்பேசியில் அழைப்பை ஏற்படுத்தப் போனவன் அதைச் செய்யாமல் நிறுத்திவிட்டு, “உன்ன ஏறச் சொன்னனான்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவ்வளவு அதிகாரமா? அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆட்டோ ஏதும் வருகிறதா என்று வீதியைக் கவனித்தாள். நல்ல நேரமாக ஒன்று வந்துகொண்டிருந்தது. மறிப்பதற்காக நீட்ட முயன்ற கையையே பற்றி இழுத்து வந்து, ஜீப்பின் கதவைத் திறந்து, “ஏறு!” என்றான் அவன்.

சொல்லாமல் கொள்ளாமல் அன்றைய நாள் கண் முன் வந்து நிற்க, ஆதினிக்குள் மெல்லிய பதட்டம். “கைய விடுங்க!” என்றாள் அவசரமாக.

“நீ முதல் ஏறு!”

“நீங்க விடுங்க!” தன் முழுப் பலத்தையும் திரட்டி, அவனிடமிருந்து கையை விடுவிக்க முயன்றாள்.

என்ன இது புதிதாக என்று யோசனையாகப் பார்த்தாலும் கையை விலக்கிக்கொண்டு, “சரி ஏறு!” என்றான் அப்போதும்.

அதற்குமேல் வாயாட முடியாமல் ஏறி அமர்ந்துகொண்டாள் ஆதினி. அதன் பிறகுதான் இயல்புக்குத் திரும்பினாள். அவன் கராஜ்காரனுக்கு அழைத்துச் சொல்வது காதில் விழுந்தது.

பத்து நிமிடத்தில் இருவர் வந்து, ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போக, ஜீப்பை எடுத்தான் எல்லாளன்.

“ஒரு பிரச்சினை எண்டா கூப்பிட்டுச் சொல்லோணும் எண்டு தெரியாதா உனக்கு? உச்சி வெயிலில நடு ரோட்டில நிக்கிற. எத்தின நாள் சொல்லி இருக்கிறன், இப்பிடித் தனியாத் திரியிறது பாதுகாப்பு இல்லை எண்டு. கேக்கிறியா நீ? எதேற்சையா நான் வந்ததால பாத்தன். இல்லாட்டி?”

“இல்லாட்டி ஆட்டோவில நிம்மதியா வந்திருப்பன்.” என்று எரிந்து விழுந்தாள் அவள்.

“அதென்ன நிம்மதியா? இப்ப உன்ர நிம்மதிக்கு என்ன கேடு? நீ ஒண்டும் சாதாரண வீட்டுப் பிள்ளை இல்ல, இப்பிடி நடு ரோட்டில நிக்க. இதுல முன்னப்பின்னத் தெரியாத ஆட்டோல ஏறப் போறாளாம்!”

இப்படி அவன் வறுத்து எடுக்கையில் தப்பிக்க வழியே இல்லாமல் போய்விடும் என்றுதான் அவனுடைய ஜீப்பில் ஆதினி ஏறவே மாட்டாள். விதியானால் ஒவ்வொரு முறையும் அவனிடமே மாட்டி விடுகிறது. தன்னையே நொந்தபடி விதியே என்று அமர்ந்திருந்தாள்.

அவனுக்குக் கோபம் போகவே இல்லை. வழி நெடுக வறுத்து எடுத்துக்கொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கே போதும் என்று தோன்றிவிட்டது போலும். திரும்பி அவளைப் பார்த்தான். முகம் வாடிப்போயிருந்தது. உடல் நிலை ஏதும் சரி இல்லையோ?

“ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” தன் கோபத்தை விடுத்துத் தணிந்த குரலில் விசாரித்தான்.

“…”

“நீ இப்பிடித் தனியா வாற ஆள் இல்லையே. எங்க உன்னோடயே திரியிற அந்த நாலஞ்சு அர டிக்கட்டுகள்?”

‘ஆரம்பிச்சிட்டான்! இவனும் இவன்ர விசாரணையும்! இதில அர டிக்கட்டாம்!’ எரிச்சல் உண்டாகப் பதில் சொல்லக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு, முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஆரோடயும் சண்டையா?”

“…”

“என்ன எண்டு சொல்லு ஆதினி. எனக்குச் சொல்லாட்டியும் அங்கிளுக்கோ அகரனுக்கோ எடுத்துச் சொல்லி…” எனும்போதுதான் அவளின் கைப்பேசி தன்னிடம் இருப்பது நினைவு வந்தது. கூடவே, இத்தனை நாள்களாக அதைப் பற்றி அவனிடம் அவள் கேட்கவில்லை என்பதும்.

அவனாகத் தரட்டும் என்று காத்திருக்கிறாளோ? அதுதான் கோபமோ? கோபமா? நிச்சயம் கொலை வெறியில் இருப்பாள். உதட்டோரம் மெல்லிய முறுவல் விரிய, “ஏதாவது வேணுமா?” என்று வினவினான்.

“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு? எனக்கு ஏதாவது வேணுமெண்டால் அப்பாட்டக் கேப்பன். இல்ல, அண்ணாட்டக் கேப்பன். நீங்க ஒண்டும் கேக்கத் தேவேல்ல. வாய மூடிக்…” அவனுடைய விடாத விசாரணை கொடுத்த சினத்தில் சிடுசிடுத்தபடி திரும்பியவளின் பேச்சு, சிரிக்கும் அவன் விழிகளைக் கண்டு அப்படியே நின்று போனது.

ஒரு கணம் அந்த விழிகளின் வசீகரத்தில் தடுமாறிப்போனவள் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். இதென்ன புதிதாக அவன் கண்களை எல்லாம் கவனிக்கிறாள்? என்ன நடக்கிறது அவளுக்குள்? பேச்சு வேறு தடுமாறுகிறதே!

மூட்டப்படும் தீ, ஏதோ ஒரு கணத்தில் பற்றிக்கொள்வதைப் போல, அன்று அந்தக் கணத்தில் அவளுக்குள் நிகழ்ந்த மன நடுக்கம், அவளைப் பிரட்டிப்போட்டிருந்தது. அவளைத் தடுமாற வைக்கும் அந்த உணர்வு, அவன் அருகண்மையில் இன்னுமே வளர்வதாகப் பட்டது.

அதன் பிறகு அவன் விழிகளைச் சந்திப்பதைத் தவிர்த்தாள். ஏன், பேசுவதையே முற்றிலுமாக நிறுத்தியிருந்தாள்.

எல்லாளனுக்கு அவளின் நடவடிக்கைகள் அத்தனையும் வித்தியாசமாகத் தென்பட்டன. பேச்சை ஏன் இடையில் நிறுத்தினாள்? அவனைப் பார்ப்பதை ஏன் தவிர்க்கிறாள்? ஒரு நிமிடம் கூடக் கைப்பேசி இல்லாமல் இருக்க முடியாதவள், அவன் கொடுக்காததனால் துவக்கைத் தூக்கிக்கொண்டு வந்தவள், இவ்வளவு நேரமாகியும் அதைப் பற்றிக் கேட்கவே இல்லையே! அவ்வளவு கோபம் போலும். அன்றைக்கு அவனும் சற்றுக் கடுமையாகத்தானே நடந்தான்.

சற்று நேரத்தில் அவள் எப்போதும் வரும் கூல்பார் முன்னே ஜீப்பை நிறுத்தினான். “வா!” என்று அழைத்துச் சென்று, அவளுக்குப் பிடித்த ஐஸ் சேலட் வாங்கிக்கொடுத்தான்.

அன்றைய நாளுக்கான மறைமுக சமாதான நடவடிக்கை. இருந்தாலும், “ஒரு பவுல்தான்!” என்றான் அவளை அறிந்தவனாக.

அவள் என்றைக்கு அவன் சொன்னதைக் கேட்டு நடந்திருக்கிறாள்? அந்த பவுலை முடித்துவிட்டு, “இன்னுமொண்டு வேணும்!” என்று அறிவித்தாள்.

“உன்னப் பாவம் பாத்துக் கூட்டிக்கொண்டு வந்தது பிழையாப் போச்சு!” கடிந்துகொண்டாலும் இன்னுமொன்று வரவழைத்துக் கொடுக்கத் தவறவில்லை அவன்.

“வெயிலுக்க வேற நிண்டிருக்கிறாய். வருத்தம் வரப்போகுது.”

திரும்பவும் பேச்சுக்கொடுத்தான். ஒற்றைச் சொல் பதில்கள் அல்லது, முறைப்பு மட்டுமே கிடைத்தது. வேடிக்கையாக இருந்தது அவனுக்கு.

“உனக்கு என்னவோ பிடிச்சிட்டுது!”

சின்ன சிரிப்புடன் சொன்னவனை முறைக்க நிமிர்ந்தவளின் பார்வையில் சிரிக்கும் உதடுகளின் மேலே இருந்த மீசை பட்டது.

ஒரு கணம் கருத்தடர்ந்த கம்பீரமான அந்த மீசையில் அவள் பார்வை நிலைத்துவிட்டது. அடுத்த கணமே பதறிப்போய்த் தலையை ஐஸ் பவுலுக்குள் கவிழ்த்துக்கொண்டாள்.

“என்ன? மீசைல ஏதும் பிரண்டிருக்கா?” இந்த முறை இருவரும் எதிரெதிரில் அமர்ந்திருந்ததில் அவள் பார்வையை அவனும் கவனித்திருந்தான். இயல்பாகக் கேட்டபடி அவன் மீசையை நீவி விட, அவளுக்கு மூச்சடைத்தது.

அதற்குமேல் முடியாமல், “போதும், போவம்.” என்று எழுந்து வெளியே வந்திருந்தாள்.

விழுந்தடித்துக்கொண்டு ஓடியவளின் செய்கை ஒவ்வொன்றும் வித்தியாசமாகப் பட்டாலும் பணத்தைச் செலுத்திவிட்டு வந்தான் எல்லாளன்.

ஜீப்பிலும் அமைதிதான். அவன் பார்வை யோசனையோடு அவளில் படிந்து படிந்து மீண்டது.

“வேற ஏதும் வேணுமா?”

பிடிவாதமாக வெளியே பார்வையைப் பதித்திருந்தவளின் தலை மட்டும் இல்லை என்பதாக அசைந்தது.

தன் மன உணர்வுகளை மறைப்பதிலேயே கவனமாக இருந்தவள், அவன் கேள்வியின் பின்னிருந்த காரணத்தை யோசிக்க மறந்தாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock