எல்லாளன், அகரன் இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள். இளம் வயதினர். பதவியும் கிட்டத்தட்ட ஒன்று என்றதில், காவல்துறைக் கூட்டம் ஒன்றில் முதன்முறையாகச் சந்தித்தவர்கள் இலகுவாகவே நண்பர்களாகிப் போயினர்.
ஆதினிக்குத் தன் பிறந்தநாள்களைப் பரிசில்களோடு கொண்டாட மிகமிகப் பிடிக்கும். அப்படி வந்த அவளின் பதினாறாவது பிறந்தநாள் விழாவுக்கு நண்பனைக் குடும்பத்தோடு அழைத்திருந்தான் அகரன்.
எல்லாளனும் தங்கையோடு வந்திருந்தான். அன்று ஆரம்பித்த அகரன், சியாமளா அறிமுகம், பின் வந்த நாள்களில் காதலாக மலர்ந்து போயிற்று. நல்ல, பொறுப்பான பிள்ளைகள் என்று கண்டுகொண்டதில் இளந்திரையனும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர்களின் பெற்றோரின் கொலை வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், அவர்கள் இருவரையும் திருமணம் பேச வரச்சொல்லியிருந்தார்.
இதோ, அண்ணனும் தங்கையும் புறப்பட்டிருந்தனர். சியாமளாவுக்கு மனதெங்கும் சந்தோசப் பரபரப்பு. கூடவே, எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற பயமும் பதட்டமும் சேர்ந்திருந்தன.
“ஆதினி என்ன குட்டையைக் குழப்புவாளோ எண்டு பயமா இருக்கண்ணா.” அவளின் அன்றைய செய்கை உண்டாக்கிய அச்சத்திலிருந்து முற்றிலுமாக வெளியே வந்திராததில் சொன்னாள் சியாமளா.
“அப்பிடி என்ன செய்யப் போறாள்? அண்டைக்கு நானும் கொஞ்சம் கூடத்தான் அவளைப் பேசிப்போட்டன். அந்தக் கோபம்தான் அது. அதவிட, ஒரு போலீஸ்காரனின்ர தங்கச்சி, இன்னொரு போலீஸ்காரனுக்கு வைஃப் ஆகப்போறாய். இதுக்கெல்லாமா பயப்பிடுறது?” என்று கேட்டு அவளுக்குத் தைரியமூட்டினான் எல்லாளன்.
அந்தச் சின்ன வயதிலேயே தாய் தந்தையரின் கோரச்சாவைக் கண் முன்னே கண்டவள் அவள். அதனாலோ என்னவோ தமையனின் தைரியத்தில் நூற்றில் ஒரு மடங்கு கூட அவளிடத்தில் இருப்பதில்லை. இப்போதும் அவன் என்ன சொல்லியும் காரணமறியா அந்த மனப் பயம் அவளை விட்டு அகல மாட்டேன் என்றது.
“மச்சி, வா வா வா!” இவர்களைக் கண்டுவிட்டு வாசலுக்கே வந்து வாய் நிறைய வரவேற்றான் அகரன்.
அவனுக்கும் ஒரு தங்கை இருப்பதாலோ என்னவோ, பொது இடங்களில் வைத்துப் பார்வையில் கூடச் சியாமளாவிடம் நெருக்கத்தைக் காட்டமாட்டான். அவனுடைய நேசம் வெளிப்படுவது அவர்களுக்கான தனிமையில் மாத்திரமே. அதனால், அவளிடமும் மலர்ந்த முகத்துடன், “வா!” என்றான்.
அதற்கான எதிரொலியைக் கொடுக்காமல் சென்று அமர்ந்துகொண்டாள் சியாமளா. அன்றைக்கு ஆதினியைக் கண்டிக்காத அவன் மீது உண்டான மனத்தாங்கல் இன்னுமே தீராமல் இருந்தது.
அதை உணர்ந்திருந்தவனின் பார்வை ஒரு நொடி அவளிடம் தங்கினாலும் வேறு பேசவில்லை.
“சாந்தி அக்கா, எல்லாளன் வந்திருக்கிறான். தேத்தண்ணி தாறீங்களா?” சமையலுக்கு என்று இருக்கும் பெண்ணிடம் குரல் கொடுத்துவிட்டு, “இரு மச்சி, அப்பாவைப் பாத்துக்கொண்டு வாறன். வந்திட்டீங்களோ எண்டு அப்போத கேட்டவர்.” என்றபடி உள்ளே நடந்தான்.
இளந்திரையனின் அலுவலக அறை பெரிதாக இருந்தது. நடுவில் மேசை. அவரைச் சுற்றி இருந்த சுவர்கள் முழுக்க ராக்கைகள் அமைக்கப்பட்டு அத்தனையிலும் சட்டப் புத்தகங்களும் வழக்குகளின் கோப்புகளும் நிறைந்து வழிந்தன. மேசையின் முன்னிருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்து, ஏதோ ஒரு வழக்குப் பற்றிய கோப்பினை வைத்துப் படித்துக்கொண்டிருந்தார்.
ஐம்பத்தி ஒன்பது வயது நிரம்பிய மனிதர். நரைத்தடர்ந்த கேசம். அடர்ந்த மீசை. அவரின் வயதுக்கேயுரிய கண்ணாடி. இடைவிடாத உடற்பயிற்சியின் பயனாக இன்னுமே உடையாத திடகாத்திரமான தேகம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று எதிலிருந்தும் வழுவமாட்டேன் என்று சொல்லும் சீரிய முகம்.
“அப்பா!”
வாசித்துக்கொண்டிருந்த கோப்பிலிருந்து முற்றிலும் விடுபடாத முகத்தோற்றத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தார்.
“எல்லாளன் வந்திட்டான்.”
“ஓ!” அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்துவிட்டு, களைப்புற்றிருந்த கண்களை ஒரு முறை இரண்டு கைகளாலும் அழுத்திக் கொடுத்தார்.
“இருக்கச் சொல்லுங்கோ, வாறன்!” என்று விட்டு, பார்த்துக்கொண்டிருந்த கோப்பில் பேனையை எடுத்து எதையோ குறித்து வைத்தார். அப்படியே அதை மூடி வைத்தவரின் பார்வை, சிறிய சட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, மேசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனைவியில் சில நொடிகள் தங்கிற்று.
மங்களேஸ்வரி அருமையான துணைவி. அகரனுக்குப் பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சரி, ஒரு பிள்ளையே போதும் என்று விட்டுவிட்டனர். ஏழு வருடங்கள் கழித்து ஆதினி உண்டானது, இருவருக்குமே இனிய அதிர்ச்சி. சந்தோசமாகவே பெற்றுக்கொண்டனர்.
என்ன, அவளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, மலேரியாக் காய்ச்சல் வந்து மங்களேஸ்வரி இறந்துபோனார். அவர் இல்லாமல் கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் ஓடியே போயிற்று.
இதோ, இன்று அவர்கள் மகனுக்குத் திருமணம் பேசப்போகிறார்.
பழைய சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவர்களிடம் வந்தார். சற்று நேரம் பொதுவாகப் பேச்சு நகர்ந்தது. சாமந்தியின் கேஸ் பற்றியும் கேட்டுக்கொண்டார்.
“வரவர போதைப்பழக்கம் கூடிக்கொண்டு வருது எல்லாளன். கொஞ்சம் கவனமா கவனிங்கோ.” என்றவர், மெல்லிய சிரிப்புடன், “பிறகு?” என்றார் தன் வருங்கால மருமகளைப் பார்த்து.
“அங்கிள்?” என்றவளுக்கு முகத்தில் மெலிதாகச் செம்மை ஏறிற்று. என்ன சொல்லுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.
அகரனின் விழிகள் குறுகுறுப்புடன் அவள் மீது படிந்தன. அப்போதும் அவள் அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க, “ஆதிய நான் பேசேல்லையாம் எண்டு ஆள் என்னோட கோவமா இருக்கிறா அப்பா.” என்று, வேண்டுமென்றே போட்டுக்கொடுத்தான்.
இப்படிச் செய்வான் என்று எதிர்பாராத சியாமளா அதிர்ந்துபோனாள். அவரின் முன்னே அவனை முறைக்கவும் முடியவில்லை. மருமகளாக வர முதலே மச்சாளை வெறுக்கிறாளே என்று நினைத்துவிடுவாரோ என்று வேறு கலங்கினாள்.