நீ தந்த கனவு 9

தலைமைக் காவல் நிலையத்திலிருந்து எல்லாளன் வெளியே வந்தபோது அவனுக்காகக் காத்திருந்தான் கதிரவன்.

“சேர், ஆதினி சொன்ன மாதிரி அஜய் கொழும்புக்குத்தான் போயிருக்கிறான். அவன்ர பெயர்லதான் டிக்கட்டும் எடுத்திருக்கிறான். அங்க கொழும்புல இறங்கிப் போறதும் சிசிடிவில விழுந்திருக்கு. அதுக்கு மேல ஒண்டும் கண்டு பிடிக்கேலாம இருக்கு. அடுத்த மூவ் என்ன?” தன் ஜீப்பை நோக்கி நடந்த எல்லாளனோடு கூட நடந்தபடி, சேகரித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டான் கதிரவன்.

“நீங்க பாத்த வீடியோ ஃபுட்டேஜ்ல அவன் பாக் ஏதும் கைல வச்சிருந்தவனா?”

“இல்ல சேர். வெறும் கையாத்தான் போறான்.”

“ஆக, அவன் எதையும் திட்டம் போட்டுச் செய்யேல்ல. நீங்க பின்னால வரவும் பயத்தில ஓடி இருக்கிறான். அந்தப் பயம் ஏன் வந்தது? போலீஸ், விசாரணை எண்டு வந்த பயமா? இல்ல, அவன் செய்த ஏதாவது பிழையால வந்த பயமா? எது எப்பிடி எண்டாலும் சாமந்தின்ர சாவுக்கு அவன் மட்டுமே காரணமா இருக்கச் சாத்தியங்கள் குறைவு. அதே மாதிரி, நிறைய நாளைக்கு அவனால ஒளிச்சு இருக்கவும் ஏலாது. அவன்ர படிப்பு, குடும்பம் எல்லாம் இஞ்சதான் இருக்கு. கைல காசு இருக்காது. மிஞ்சிமிஞ்சிப் போனா ஒரு கிழமை தலைமறைவா இருக்கலாம். பிறகு? எப்பிடியும் மாட்டுவான். கொழும்புக்கு அவன்ர ஃபோட்டோ, டீடெயில்ஸ் அனுப்பிவிடுங்க. அவன்ர வீட்டு ஆக்களின்ர ஃபோன் கோல்ஸ கவனிங்க. அவனுக்கு நெருக்கமான நண்பர்களும் உங்கட பார்வைலயே இருக்கட்டும்.”

“அதுக்கெல்லாம் அண்டைக்கே ஏற்பாடு செய்திட்டன் சேர்.”

“ஓகே! இப்ப நாங்க யோசிக்க வேண்டியது, சாமந்திக்கு எங்க இருந்து இந்தப் போதைப் பொருட்கள் கிடைச்சது எண்டுறதைத்தான். இன்னும் மூண்டு மாதத்தில ஏஎல் ஃபைனல் எக்ஸாம் எழுதப்போற பிள்ளை, வீடு, ஸ்கூல், டியூஷன் செண்டர், லைப்ரரி, ஃபிரெண்ட்ஸ் எண்டுதான் இருந்திருக்கிறா. இதுல எந்த இடம்?”

“வீடு டவுட் இல்ல சேர். லைப்ரரிக்கு சாமந்தி போறேல்ல. நெருங்கின ஃபிரெண்ட்ஸ் ரெண்டே ரெண்டு பேர்தான். அந்த ரெண்டு பிள்ளைகளும் இருக்கிற ஊரும் வேற, போற டியூஷன் செண்டரும் வேற. மூண்டு பேரும் ஸ்கூல்ல மட்டும்தான் சந்திக்கிறது, கதைக்கிறது எல்லாம். அவே ரெண்டு பேரின்ர முழு விவரமும் எடுத்திட்டன். அவேயும் இல்ல. ஆக, ஸ்கூல் அல்லது டியூஷன் செண்டர் இந்த ரெண்டுல ஏதோ ஒண்டில இருந்துதான் போதைப் பொருட்கள் கிடைச்சிருக்கோணும். ஸ்கூல் நான் நினைக்கேல்ல சேர். டியூஷன் செண்டர்தான்.”

அதற்கான சாத்தியமே அதிகம் என்று எல்லாளனும் எண்ணினான்.

“இந்த கேஸ கெதியா முடிக்கோணும் கதிரவன். டியூஷன் செண்டர் எண்டா டீச்சரஸ் ஆரும் டீலரா இருக்க சான்ஸ் இருக்கு. இல்ல, அந்த டியூஷன் செண்டருக்கு கிட்ட இருக்கிற ஏதும் கடை, போய்ஸ் கூடுற இடம் இப்பிடி ஏதாவது இருக்கும். அங்க படிக்கிற மற்றப் பிள்ளைகளையும் கவனிங்க. அந்த ஆள் எப்பிடியும் சாமந்திக்கு மட்டுமே வித்திருக்கப் போறேல்ல. மற்றப் பிள்ளைகளின்ர நடவடிக்கைகளைக் கவனிச்சாலும் கண்டு பிடிக்கலாம்.”

“ஓகே சேர்! ரெண்டு நாளைக்கிடைல அப்டேட் தாறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டான் கதிரவன்.

“வேற என்ன எண்டாலும் கோல் பண்ணுங்க. எனக்குக் கொஞ்சம் வெளில வேல இருக்கு.” என்றுவிட்டு எல்லாளனும் புறப்பட்டான்.

*****

அஞ்சலியும் தமயந்தியும் யாழ் பல்கலைக்கு முன்னால் இருந்த தேநீர்க் கடையில் அமர்ந்திருந்தனர். ஆவி பறக்கும் தேநீரும் வடையும் அவர்கள் முன்னே வீற்றிருந்தன. அஞ்சலி ரசித்து ருசித்துச் சாப்பிட, எங்கோ சிந்தனையைத் தொலைத்துவிட்டுத் தேநீரை மட்டும் பருகிக்கொண்டிருந்தாள் தமயந்தி.

இந்தக் கொஞ்ச நாள்களாகவே அவள் இப்படித்தான் இருக்கிறாள். கலைப்பிரிவு இரண்டாவது வருட ஆரம்பத்தில்தான் இங்கு வந்து சேர்ந்தாள். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் நல்லதொரு நட்பு இழையோடிக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் அது ஒரு விதமான வரையறைக்கு உட்பட்ட நட்பாக இருப்பதாகவே அஞ்சலி நினைப்பாள். இனிமையான பெண்; நன்றாகப் பழகுவாள்; விளங்காதது எது கேட்டாலும் சொல்லித்தருவாள். அத்தனையும் இந்தப் பல்கலை வளாகத்துக்குள் மட்டுமே!

வெளியே எங்கும் வரமாட்டாள். அஞ்சலி தன் வீட்டுக்கு அழைத்தும் இதுவரையில் வந்ததில்லை. அதேபோல், இவளை அவள் வீட்டுக்கு அழைத்ததும் இல்லை. அதிகபட்சமாக இதோ பல்கலைக்கு எதிரில் இருக்கும் இந்தத் தேநீர்க் கடைக்கு மட்டுமே வருவாள். வீடு, குடும்பம், உறவினர் என்று பேச்சு வந்தாலே தவிர்ப்பது தெரியாமல் தவிர்த்து விடுவாள். ஒரு முறை நோட்ஸ் வாங்குவதற்கு உன் வீட்டுக்கு வரவா என்று கேட்டபோது கூட, தான் வீட்டில் இல்லை என்று சொல்லித் தடுத்திருந்தாள்.

அன்றுதான் பல்கலை தாண்டிய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, தன்னைப் பற்றியோ அவள் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்று தெளிவாக அறிந்துகொண்டிருந்தாள் அஞ்சலி. அதன்பிறகு தன் எல்லையிலேயே நின்றுகொள்வாள்.

இன்றும் தன்னைச் சுற்றி நடப்பதில் கவனமற்று இருப்பவளை நீயாயிற்று உன் பிரச்சனையாயிற்று என்று விட மனம் வராமல், கொண்டுவிட்ட நட்பு என்னவென்று கேட்கச் சொல்லி உந்திற்று.

ஆனாலும் தன்னையடக்கி அவளைக் கலகலப்பாக மாற்ற முயன்றாள். ஒரு கட்டத்தில் அதுவும் முடியாமல் போக, “என்னடி?” என்றாள் பொறுமை இழந்த குரலில்.

“என்ன என்ன?” திகைத்து விழித்து வினவினாள் தமயந்தி.

“உனக்கு என்ன பிரச்சினை? ஒண்டில் ஒழுங்கா எப்பவும் போல இரு. இல்லை, என்ன எண்டாவது சொல்லு! நானும் கேக்கக் கூடாது, உன்ர தனிப்பட்ட விசயங்கள்ல மூக்கை நுழைக்கக் கூடாது எண்டு எவ்வளவு நாளைக்குத்தான் பொறுத்துப் போறது?” மெல்லிய கோபத்துடன் சலித்தாள் அஞ்சலி.

“அது…” அவளை யார் என்று வெளிப்படுத்தக் கூடாது என்பதும், வீட்டில் நடப்பவை பற்றி வெளியே சொல்லக் கூடாது என்பதும் கணவனின் உத்தரவு. அவன் நன்றாக இருக்கிற வரையில் அதைக் கடைப்பிடிப்பது அவளுக்கும் சிரமமாக இருந்ததில்லை.

ஆனால், இந்தக் கொஞ்ச நாள்களாக அவனே குழப்பமானவனாகத் தெரிந்தபோது, யாரிடமாவது பகிர வேண்டும் போல் இருந்தது. அவன் பெற்றவர்களிடம் எல்லாம் தயக்கமற்றுப் பேசும் அளவுக்குத் தைரியமில்லை.

தன் வீட்டினரிடம் சொல்லி, அவர்களைக் கவலைக்குள்ளாக்க விருப்பம் இல்லை. முதலில் எதை எப்படிச் சொல்வது என்கிற குழப்பம் வேறு. இப்போது, அஞ்சலியிடம் சொன்னால் ஆறுதலாக இருக்குமோ என்று நினைத்தாலும் சொல்லப் பயந்தாள்.

“தமயந்தி, இங்க பார்! உனக்கு உன்னைப் பற்றிச் சொல்ல விருப்பம் இல்லை எண்டு எனக்குத் தெரியும். நானும் விடுப்புக்கு இதக் கேக்கேல்லை. மனதில இருக்கிறதைச் சொன்னா, உனக்குக் கொஞ்சம் நல்லா இருக்கும் எண்டுதான் கேக்கிறன். என்னட்டச் சொன்னா வெளில போயிடுமோ எண்டு நீ யோசிச்சா, அந்தப் பயம் உனக்குத் தேவை இல்ல. கடைசி வரைக்கும் உன்னையும் என்னையும் தாண்டி நீ சொல்லுறது போகாது.” என்று உறுதி கொடுத்தாள் அஞ்சலி.

தன்னை அறிந்து வைத்திருக்கிறாள் என்று கண்டு முகம் கன்றினாலும் தமயந்தியின் விழிகள் கலங்கிப் போயின. அப்போதும் மேசையில் இருந்த அவள் கையைப் பற்றிக்கொண்டு தன்னைச் சமாளிக்கத்தான் முயன்றாள்.

அதுவே, அவள் மனத்தைச் சொல்ல, “சரி விடு. நீ ஒண்டுமே சொல்ல வேண்டாம். கொஞ்ச நாள் போக எல்லாமே சரியாகும், சரியா?” என்றாள் அவள் கையில் தட்டிக் கொடுத்து.

“இல்ல, எனக்கும் சொல்லோணும் மாதிரித்தான் இருக்கு. ஆனா, பயமா இருக்கு.” என்று குரல் அடைக்கச் சொன்னவள், “நான் ஆர் எண்டு தெரியுமா?” என்று மெல்லிய குரலில் வினவினாள்.

பதிலையும் அவளே சொல்லட்டும் என்று அவளையே பார்த்தாள் அஞ்சலி.

“நான் நான்… தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சித் தலைவரின்ர மகன் சத்தியநாதன்ர வைஃப்.”

அஞ்சலிக்கு அப்பட்டமான அதிர்ச்சி. அவளிடம் சிக்கியிருந்த தன் கையைச் சரக்கென்று இழுத்துக்கொண்டாள். பல்கலை முடியும் நேரத்துக்கு நொடி நேரம் கூடப் பிந்தாமல் வந்து நிற்கும் கார், அதன் பெறுமதி, ஓட்டுநர் அவளுக்குக் கொடுக்கும் மரியாதை, அவள் அணியும் ஆடை முதற்கொண்டு வைத்திருக்கும் கைப்பேசி வரை தெரியும் பணச்செழுமை என்று, அனைத்தையும் வைத்துப் பெரிய இடம் என்று கணித்திருந்தாளே தவிர, இப்படி என்று யோசிக்கவே இல்லை.

“அப்ப தமயந்தி பரமேஸ்வரன் எண்டுறது?” திகைப்பு விலகாமலே வினவினாள்.

“அது என்ர அப்பான்ர பெயர். நான் இன்னும் எதுலயும் என்ர பெயர மாத்தேல்ல. படிப்பு முடியட்டும் எண்டு…”

பல்கலையில் படிக்கிற சிலர் திருமணமானதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லைதான். என்றாலும்… விளங்குகிறது என்பதுபோல் சிரமப்பட்டுத் தலையை அசைத்தாள் அஞ்சலி.

அதன் பிறகு அவ்வளவு நேரமாக இருந்த நிலை மாறிப்போனது. தன்னைப் பற்றி, தன் திருமணம் பற்றி, கணவனின் தம்பிக்குக் கிடைத்த தூக்குத் தண்டனை பற்றி, கணவனின் வித்தியாசமான நடவடிக்கை பற்றி என்று எல்லாவற்றையும் தமயந்தி கண்ணீருடன் சொல்ல, அஞ்சலி முற்றிலும் அமைதியாகிப் போனாள்.

இப்போது தமயந்தியின் மனப்பாரம் குறைந்திருக்க, அஞ்சலியின் மனதில் புயலடிக்க ஆரம்பித்திருந்தது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock