நீ தந்த கனவு 13 – 1

எல்லாளனுக்குக் காவல் நிலையத்துக்குப் போக வேண்டும். அந்த மாணவர்களை விசாரிக்க வேண்டும். இந்தத் தனியார் கல்வி நிறுவனத்தையும்(டியூசன் செண்டர்) கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றோடு சேர்த்துப் புதுப் பிரச்சனை ஒன்றை ஆரம்பித்துவைத்திருக்கிறாள் சியாமளா.

எல்லாவற்றையும் தீர்த்துத்தான் ஆக வேண்டும். ஒரு தடவை ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டுவிட்டு அகரனுக்கு அழைத்தான். அவன் ஏற்கவில்லை. திரும்ப திரும்ப அழைத்தும் பிரயோசனம் இல்லை. எல்லாளனுக்குக் கோபம் வந்தது. முசுட்டுப் பிடிவாதம் ஒன்றுடன் விடாமல் அழைத்துக்கொண்டேயிருந்தான்.

ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அழைப்பை ஏற்றுவிட்டுப் பேசாமல் இருந்தான்.

“டேய்!”

“…”

“இருக்கிற பிரச்சினைகள் காணாது எண்டு நீயும் எரிச்சலக் கிளப்பாத அகரன்.”

“…”

“அகரா!” பல்லைக் கடித்தான் எல்லாளன்.

அப்போதும் அவன் அசையவில்லை என்றதும், “நீ வை! நான் நேராவே வந்து கதைக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டிக்கப் போக, “நீ இஞ்ச வர வேண்டாம்!” என்றான் அகரன் வேகமாக.

“ஏன் வரக் கூடாது? நான் வருவன்!”

“இப்ப என்னத்துக்கு இந்த நல்லவன் வேசம் எல்லாளன்? எல்லாம் முடிஞ்சுது. சோ நீ இனி நிம்மதியா உன்ர வேலையைப் பார்! உனக்குப் பொருத்தமான ஒருத்தியாப் பாத்துக் கட்டு!” என்றதும் கொதித்துப்போனான் எல்லாளன்.

“வித்தியாசமாக் கதைக்காத அகரா! என்ர பக்கமும் பிழை இருக்கிறதாலதான் பொறுமையாய்ப் போறன். அதுக்காக என்னவும் கதைக்கலாம் எண்டு நினைக்காத!” என்று எச்சரித்தான்.

அதற்குமேல் அகரானால் முடியவில்லை. “அவள் சின்ன பிள்ளையடா. விருப்பம் இல்லாட்டி வேண்டாம் எண்டு சொல்லியிருக்கலாம். உன்ன நான் பிழையா நினைச்சிருக்கவே மாட்டன். அப்பாக்கும் விளங்கியிருக்கும். அத விட்டுப்போட்டு… உன்னட்ட நான் இத எதிர்பாக்கேல்ல மச்சி.” அதுவரையில் யாரோ போன்று பேசிக்கொண்டிருந்த அகரன், மிகுந்த வருத்தத்தோடு சொன்னான்.

அவனுடைய கோபத்தை எதிர்கொண்ட எல்லாளனால் இந்த வருத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் போனது.

“இப்ப எங்க அவள்?”

“மேல. அவளின்ர அறைல.”

“அங்கிளும் வீட்டிலதானே நிக்கிறார்? நான் இப்ப வாறன் கதைக்க.” அப்போதே அனைத்தையும் பேசி முடித்துவிட நினைத்தான் எல்லாளன்.

“இல்ல மச்சான். இண்டைக்கு வேண்டாம். நாங்க மூண்டு பேருமே ஏதோ ஒரு விதத்தில மனதளவில உடஞ்சுபோய் இருக்கிறம். இப்ப என்ன கதச்சாலும் அது பிழையாத்தான் போகும்.” அவசரமாக அவனைத் தடுத்தான் அகரன்.

எல்லாளனுக்கும் அகரன் சொல்வது சரியாகத்தான் பட்டது. சியாமளா அவசரப்பட்டதினால் உண்டானதுதான் இத்தனையும். அவனும் அதே தவறைச் செய்யக் கூடாது.

ஆனால், நண்பனிடமாவது மனம் விட்டுப் பேச விரும்பினான். யாரில் சரியோ பிழையோ, இன்றைக்கு அவர்கள் மூவரும் இப்படி உடைந்துபோய் இருப்பதற்கு அவன்தான் முக்கிய காரணம்.

“அப்ப, நாங்க வழமையா போற டீக்கடைக்கு வா. எனக்கு உன்னோட கதைக்கோணும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அகரன் அங்கே போனபோது, இருவருக்கும் தேநீருக்குச் சொல்லிவிட்டு, இவனை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் எல்லாளன்.

“முறைக்க வேண்டியவன் நான்!” என்றபடி அவன் முன்னே அமர்ந்தான் அகரன்.

“இங்க பார் மச்சான். அண்டைக்கு அப்பிடி அங்கிள் கேப்பார் எண்டு நான் எதிர்பாக்கேல்ல. அது அதிர்ச்சியா இருந்தது உண்மை. அது வரைக்கும் அவளை நான் அப்பிடி யோசிச்சதும் இல்லை. ஆனா, அவர் கேட்ட பிறகு மறுக்கேலாமப் போச்சு. எப்பிடியோ ஒருத்தியக் கட்டத்தான் போறன். அது ஆதினியா இருந்தா உங்க எல்லாரோடயும் காலத்துக்கும் ஒண்டாவே இருக்கலாம் எண்டு நினைச்சன். இனி எனக்கு அவள்தான் எண்டு முடிவு செய்த பிறகுதான் ஓம் எண்டு சொன்னனான்.” என்றவன் ஒரு கணம் நிறுத்தித் தலையைக் கோதிவிட்டுத் தொடர்ந்தான்.

“அதே நேரம், யோசிக்காம நடக்கிற அவளின்ர குணம் எனக்குப் பிடிக்காது. அது உனக்கும் தெரியும். முந்தி அதையெல்லாம் சாதாரணமா ஒதுக்கிப்போட்டுப் போகக் கூடிய மாதிரி இருந்தது. அதுக்குக் காரணம், அப்ப அவள் எனக்கு உன்ர தங்கச்சி மட்டும்தான். இனி எதிர்காலத்தில நானும் அவளும் ஒரு வாழ்க்கையை வாழப்போறம் எண்டு முடிவான பிறகு, அவளின்ர குணம் எனக்குச் சரியா வருமா எண்டு யோசிச்சது உண்மைதான். இல்லை எண்டு சொல்லேல்ல. அவள் கொஞ்சம் மாறி, சேட்டைக் குணத்தை எல்லாம் விட்டா நல்லாருக்கும் எண்டு நினைச்சதும் உண்மைதான். அதுக்காக என்ர முடிவை மாத்துவமா எண்டு இப்ப வரைக்கும் நான் நினைச்சதே இல்ல. இனியும் நினைக்க மாட்டன்.” என்று தன் நிலையைத் தெளிவாக உரைத்தான்.

ஆனால், எந்த இடத்திலும் அவளைப் பிடித்திருப்பதாகச் சொல்லவில்லை. எப்படியோ ஒருத்தி வரப்போகிறாள், அதற்கு இவள் இருக்கட்டும் என்கிறான். அந்த இடத்திலா அவன் தங்கை இருக்கிறாள்?

ஆக, நேற்று அவள் கேட்ட கேள்விகளில் தவறில்லை! தேநீர்க் கோப்பையின் விளிம்பை ஒற்றை விரலினால் வருடிக் கொண்டிருந்த அகரனிடம் மிகுந்த இறுக்கம்.

“டேய் என்னடா? ஏதாவது சொல்லு!” பதிலற்ற அவன் மௌனத்தைப் பொறுக்க முடியாமல் கேட்டான் எல்லாளன்.

“என்ன சொல்லச் சொல்லுறாய்? அவள் ஒண்டும் புதுசா இப்பிடி இல்ல. எப்பவுமே இப்பிடித்தான். அது பிடிக்காட்டி வேண்டாம் எண்டு நீ தாராளமாச் சொல்லியிருக்கலாம். இல்லையா, கட்டுறன் எண்டு சொன்னபிறகு, நீயும் உன்ர தங்கச்சியும் வாய மூடிக்கொண்டு இருந்திருக்கோணும். இதுல, உன்ர தங்கச்சியும் நல்ல நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறாள். அவளைக் கண்டிக்காம நீ எனக்கு வந்து விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கிறாய்.” கசப்புடன் சொன்னான் ஆதினியின் தமையன்.

“அவளை நான் கண்டிக்கேல்லை எண்டு கண்டியா நீ? உன்ர தங்கச்சியக் கூப்பிட்டுக் கேள். ஒட்டுக் கேட்டவள் நான் கண்டிச்சதையும் கேக்காமையா இருந்திருப்பாள்.” என்று எரிந்து விழுந்தான் எல்லாளன்.

“அண்ணனும் தங்கச்சியுமாச் சேர்ந்து கண்டதையும் கதைச்சுப்போட்டு, அவளைக் குறை சொல்லுறியா நீ? அவள் என்ன, உன்ர தங்கச்சிய மாதிரித் திட்டம் போட்டு ஒட்டுக் கேக்கிறதுக்கு எண்டு மினக்கெட்டு வந்தவளா?” என்று பதிலுக்குத் தானும் சீறினான் அகரன்.

“டேய்! எங்கட வீட்டில வச்சு, நானும் அவளும் மட்டும்தான் எண்டுற நினைப்பில அவள் கதைச்சதடா. அத, ஆதினி கேப்பாள் எண்டு ஆரடா நினைச்சது?”

கசப்புடன் சிரித்தான் அகரன். “அவள் கேட்டதாலதானே உங்க ரெண்டு பேரின்ர மனதிலயும் என்ன இருக்கு எண்டுறது தெரிய வந்திருக்கு. இல்லாட்டி எல்லாத்தையும் மறச்சு, ஒரு பொய்யான வாழ்க்கையத்தானே அவளுக்கு நீ குடுத்திருப்பாய். இதே வேலைய உன்ர தங்கச்சிக்கு நான் செய்தா உனக்கு எப்பிடி இருக்கும்?”

“அகரன், திரும்பவும் எனக்கு எரிச்சலக் கிளப்பாத!” என்றான் எல்லாளன் சுள்ளென்று. “அப்பிடி ஒரு பொய்யான வாழ்க்கையை அவளோட வாழ்ந்துதான் ஆகோணும் எண்டு எனக்கு என்னடா கட்டாயம்? வேண்டாம் எண்டா வேண்டாம் எண்டு சொல்லத் தெரியாத அளவுக்குக் கோழை எண்டு நினைச்சியா என்னை?”

இடமும் வலமுமாகத் தலையை அசைத்தான் அகரன். “உனக்கு விளங்கேல்ல மச்சான். இங்க பிரச்சினை அது இல்ல. இப்ப சொன்னியே, எவளையோ கட்டுறதுக்கு அவளைக் கட்டிப்போட்டுப் போறன் எண்டு. அது! அது அவளுக்கு எவ்வளவு பெரிய அடியா இருந்திருக்கும் எண்டு உனக்கு விளங்கேல்லையா? உன்ர தங்கச்சி, தனக்காகவும் அப்பாக்காகவும்தான் நீ ஓம் எண்டு சொல்லியிருக்கிறாய் எண்டு சொல்லியிருக்கிறாள். அது அவளை எந்தளவுக்குப் பாதிச்சிருக்கும் எண்டு யோசி. எவனும் கட்டி வாழமாட்டான் எண்டு சொல்லுற அளவுக்கு என்ர தங்கச்சி எந்தப் பக்கத்தால குறைஞ்சு போய்ட்டாள் எண்டு எனக்கே கோபம் வருதடா. அப்ப அவளுக்கு?”

அது உண்மைதான். சியாமளா பேசிய விதம் குறித்து அவனுக்கே கோபம் வந்ததே! இதில், அதை ஆதினியே கேட்டாள் எனும்போது எப்படி இருந்திருக்கும்?

அவளின் சுயமரியாதை மொத்தமாக அடி வாங்கியிருக்கும். சிறு புறக்கணிப்பைக் கூட அறியாமல் வளர்ந்தவள். மொத்தமாக உடைந்து போயிருப்பாள். இதனால்தான் நிச்சய மோதிரம் எடுப்பதற்குக் கூட வராமல் இருந்திருக்கிறாள்.

மனத்தில் கனமேற, “நீயும் சியாமி சொன்னதை மனதில வச்சிருந்து, நேரம் பாத்து, ஆதினிக்குப் புத்தி சொல்லியிருக்கோணும். அதைச் செய்யாமம கோபப்பட்டு, கைய நீட்டிப் பிரச்சினையைப் பெருசாக்கி வச்சிருக்கிறாய்!” என்று கடிந்தான் எல்லாளன்.

“உண்மதான். நான் செய்ததும் பெரிய பிழைதான். என்ன, உன்ர தங்கச்சி ஓதின எல்லாத்தையும் கேட்டு, அவளுக்கு அண்ணன் எண்டுறதை மறந்து, உனக்கு நண்பனா நிண்டு யோசிச்சிட்டன். அதால வந்ததுதான் இவ்வளவும். அதை அவளுக்கு அடிச்ச அந்த நிமிசமே உணந்திட்டன். ஆனா, அவள் உடைஞ்சிட்டாளேடா. எல்லாருமாச் சேந்து அவளை உடைச்சிட்டோம். அம்மா இருந்திருந்தா இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா எண்டு கேட்டவள். அப்பா நொருங்கியே போய்ட்டார்.” என்றவனுக்கு மேலே பேச்சு வரவேயில்லை.

பார்வையை அகற்றி, எங்கோ வெறித்துத் தன்னைச் சமாளிக்க முயன்றான்.

தலையில் வைத்துக் கொண்டாடியவளைத் தரையில் போட்டால் எப்படி நொருங்கிப்போவாள் என்பதைத்தான் கண்ணால் பார்த்தானே! யார் என்ன சொல்லியிருந்தாலும் அவன், அவன் தங்கைக்காக நின்றிருக்க வேண்டாமா?

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock