இத்தனையையும் கேட்ட பிறகும் என் அண்ணா எனக்காக நிற்பான் என்று நம்பியிருக்கிறாள். அவள் மனத்தை உணராமல், அதிலிருந்த காயத்தை அறியாமல், என்ன வேலை பார்த்துவிட்டான்?
விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தான். அவனையே பார்த்திருந்த எல்லாளனுக்கும் கதைக்க முடியாமல் போனது. மேசையில் இருந்த நண்பனின் கரத்தை அழுத்திக்கொடுத்தான்.
பார்வை இவனிடம் திரும்ப, “தெரிஞ்சோ தெரியாமலோ எல்லாருமாச் சேந்து பெரிய பிழை செய்திட்டம் மச்சான்.” என்றான் உடைந்துபோன குரலில்.
எல்லாளனுக்கும் புரிந்தது. அன்றைக்கு அவன் கையை ஓங்கிய போதும் கலங்கி நின்றாளே. கண்ணீர் கூட வந்ததாக நினைவு. திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டு, கையை ஓங்கிக் கொண்டு வருகிறானே என்றெண்ணிக் கவலைப்பட்டிருப்பாளோ? தம்மை அறியாமலேயே அடுத்தடுத்து அவளைக் காயப்படுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் மொத்தமாக உடைந்து விட்டாளோ?
“நான் ஒருக்கா அவளோட கதைக்கப் போறன்.” என்றான் எல்லாளன்.
அகரன் மறுத்துத் தலையசைத்தான். “இல்ல மச்சி, வேண்டாம். அதுக்கு நானே விடமாட்டன். உனக்கு அவளைப் பிடிக்கேல்ல. அவளும் உன்ன வேண்டாம் எண்டு சொல்லிட்டாள். இது இப்பிடியே முடியட்டும், விடு.” என்றான் முடிவாக.
சுர் என்று சிறு கோபம் மூண்டது எல்லாளனுக்கு. “அப்பிடியெல்லாம் விடேலாது. எனக்கு அவளோட கதைக்கோணும். நான் கதைப்பன். ஆரம்ப காலம் நீ சியாமியோட கதைக்கேக்க நானும் உனக்கு இதையேதான் சொன்னனான். அப்ப நீ கேட்டியா?” ஒருவிதப் பிடிவாதத்துடன் நியாயம் கேட்டான் அவன்.
“தூவும் இதுவும் ஒண்டில்ல எல்லாளன். எனக்கு அவளைப் பிடிச்சிருந்தது. அவளுக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. அதாலதான் நீ சொல்லியும் நான் கேக்கேல்லை. அது வேற. சரி, நீ சொல்லு, உனக்கு என்ர தங்கச்சியப் பிடிச்சிருக்கா? அவள்ல விருப்பம் இருக்கா? அப்பிடி இருந்தாச் சொல்லு, நான் கதைக்க விடுறன்.”
முகத்திற்கு நேராகக் கேட்ட நண்பனிடம் பொய்யுரைக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் எல்லாளன்.
அகரனுக்கு வலித்தது. பிடிக்காதவனைப் பிடித்து வைக்கவும் பிடிக்கவில்லை.
“யோசிக்காமச் சொன்ன சம்மதத்துக்காக அதையே பிடிச்சுக்கொண்டு நிக்க நினைக்காத. அது இன்னுமின்னும் பிரச்சினையைப் பெருசாக்குமே தவிரக் குறைக்காது. அதால, இது இதோடயே முடியட்டும்!” என்றான் மீண்டும்.
திரும்ப திரும்ப அவன் அதையே சொல்லவும் எல்லாளனுக்கு எரிச்சலாயிற்று.
“இங்கப் பார்! இனி என்ன நடந்தாலும் எனக்கு அவள்தான். அவளுக்கு நான்தான். இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் இருக்கா எண்டா இல்லதான். அதுக்கு இப்ப அவசரமும் இல்ல. கலியாணம் பேசியாச்சு எண்டதும் காதலிக்க நான் என்ன மெஷினா? இல்ல, சின்ன பிள்ளையா கனவில மிதக்க? பிடிப்பு, காதல் எல்லாம் போகிற போக்கில வந்து சேரும். விளங்கினதா உனக்கு? அந்த விசரிக்கும் வயசு இருக்கு. முதல் அவளைப் படிச்சு முடிக்கச் சொல்லு. அதுக்குப் பிறகு அவளை மூச்சு முட்டக் காதலிக்கிறன். வந்திட்டினம் அண்ணனும் தங்கச்சியும் ஆளுக்கொரு கேஸ் ஃபைலை தூக்கிக்கொண்டு!” என்றுவிட்டு எழுந்து போனான் அவன்.
*****
வைத்தியசாலை நோக்கித் தன் ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் எல்லாளன். அதிக போதையில் இருந்த மாணவனின் நிலை மோசமாக இருந்ததில் அவர்கள் இருவரையும் வைத்தியசாலையில் சேர்த்திருப்பதாகத் தெரிவித்திருந்தான் கதிரவன்.
அங்கே, அவனை மூன்று ஆண் செவிலியர்கள் தடுத்துப் பிடித்தபடி நின்றிருந்தனர்.
“ஒரு இடத்தில இருக்கிறார் இல்ல சேர். ஓடப் பாக்கிறார்.” இவனைக் கண்டதும் செவிலியர்களில் ஒருவர் சொன்னார்.
அப்போதுதான் அவனை நன்றாகக் கவனித்தான் எல்லாளன். வைத்தியசாலையின் கட்டிலில் அமர்ந்திருந்தான். யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. இடப்புறம் வலப்புறம் என்று முகத்தை மாற்றி மாற்றித் திருப்பிக்கொண்டிருந்தான்.
கண்கள் ஓரிடத்தில் நில்லாமல் அலைபாய்ந்தது. தேகம் முழுவதிலும் ஒரு நடுக்கம். கை விரல்கள் ஒவ்வொன்றும் அதுபாட்டுக்குக் காற்றில் அலைந்துகொண்டிருந்தன. முகத்தில் அளவுக்கதிகமான பதட்டம். அவன் எந்தளவு தூரத்துக்குப் போதைக்கு அடிமையாகி இருக்கிறான் என்று, எல்லாளனுக்கே அப்போதுதான் புரிந்தது.
“இவனுக்கு என்ன பெயர்?” என்றான் மற்றவனிடம்.
“அருள் சேர்.”
“அருள்!” சற்றுச் சத்தமாக அழைத்தான்.
விழுக்கென்று நிமிர்ந்து இவனைக் கூர்ந்து பார்த்தான். யார் என்று இனம் கண்டு கொண்டதும் வேகமாக எழுந்தான். “எனக்கு இப்ப மருந்து வேணும். ஊசியாவது இருக்கா? ஆரக் கேட்டாலும் நீங்க வந்தாத்தான் தருவம் எண்டு சொல்லினம். கொண்டு வந்தனீங்களா?” என்று படபடத்தான்.
“நீ முதல் அமைதியா இரு. உனக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?”
“நான் எங்க பதட்டப்படுறன்? நல்லாத்தான் இருக்கிறன். எங்க மருந்து? எத்தின நாளா அலையிறது? எனக்கு இப்ப வேணும். இல்லையோ, என்ன செய்வன் எண்டு தெரியாது.” என்று மிரட்டினான்.
இதற்குள் அங்கே வைத்தியர் வந்தார். அருளை விட்டுவிட்டு அவரோடு தனியாகச் சென்று கதைத்தான் எல்லாளன்.
“கிட்டத்தட்ட இருபத்திநாலு மணித்தியாலமும் போதைலயே இருந்து பழகி இருக்கிறான். இப்ப அது இல்லாம அவனால இருக்கவே ஏலாது. ஆள் நிதானத்திலேயே இல்ல. இனியும் இப்பிடியே விட்டா ஆபத்திலதான் முடியும்.” என்று வைத்தியர் சொல்லி முடிக்க முதலே, அறைக்குள் களேபரம்.
அங்கிருந்த செவிலியர்களை எல்லாம் தள்ளி விழுத்திவிட்டு ஓடி வந்தான் அருள்.
“இப்ப எனக்கு ஊசி ஏத்தப் போறீங்களா இல்லையா?” எல்லாளனைப் பார்த்துக் கத்திவிட்டு, வேகமாக அவன் இடையில் இருந்த துப்பாக்கியினை உருவ முயன்றான்.
அடுத்த நொடியே அவனைத் தன் கைகளுக்குள் சுருட்டி மடக்கியிருந்தான் எல்லாளன்.
அவனின் கிடுக்குப் பிடியைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதான் அருள். “எனக்கு வேணும் சேர். அது இல்லாம என்னால இருக்கேலாது. தொண்ட வரளுது. வயிறெல்லாம் எரியுது.” என்று கெஞ்சினான்.
அதற்குப் பதில் சொல்லாது, “இவ்வளவு நாளும் இதெல்லாம் உங்களுக்கு எங்க இருந்து கிடைச்சது?” என்று தன் விசாரணையை ஆரம்பித்தான்.
“அது… அது தெரியாது சேர்.” நிதானத்தில் இருந்தவன் சொன்னான்.
“ஓ! தெரியாது. ஓகே! போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு போய் விசாரிச்சாத் தெரியவரும்தானே?” எல்லாளன் இலகுவாகச் சொல்ல, அவனுக்கு நடுங்கியது.
“சத்தியமா சேர், ஆர் என்ன எண்டு தெரியாது. கறுப்பு பைக்ல கறுப்பு ஹெல்மெட்டால முகம் மறைச்சு, ஒரு ஆள் வரும். அவர் சொல்லுற காசக் குடுத்தா, லொலி, டேப்லெட்ஸ், ஊசி எது எண்டாலும் தருவார். அதுவும் எப்ப எப்பிடி எண்டெல்லாம் தெரியாது. அந்தச் சந்தில நிப்பம். வந்தா வாங்குவம். இல்லாட்டி இல்ல. குரலை வச்சுத்தான் ஆம்பிளை எண்டே தெரியும் சேர். இப்ப கொஞ்ச நாளா ஆள் வரேல்ல சேர். அதுதான்…” என்று இழுத்து நிறுத்தினான் மற்றவன்.
யார் அந்தக் கறுப்பாடு? கண்டுபிடித்தே ஆக வேண்டும்! அருளைப் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்து கதிரவனுக்கு அழைத்தான்.
“நான் நினைக்கிறது சரியா இருந்தா, சாமந்திக்கு போதை மருந்து வித்தவன் இடத்தை மாத்திட்டான். இல்ல, ஒரு குரூப்பா டியூஷன் செண்டர்ஸை குறி வச்சிருக்கிறாங்கள். நாங்க அந்த டியூஷன மட்டுமே காவல் காத்தாக் காணாது. முடிஞ்சவரைக்கும் எல்லா டியூஷன் செண்டர்ஸுக்கும் ஆள் போடுங்க. அதச் சுத்தி இருக்கிற சந்தி, பெட்டிக்கடை, பிள்ளைகள் கூடுற மரத்தடியா இருந்தாக் கூட விடாமக் கண்காணிங்க. வொலண்டியரா வேர்க் பண்ணுற ஆக்கள் எல்லாரையும் ரெடி பண்ணுங்க. இது ஒரு அண்டர்கிரவுண்ட் ஒப்பரேஷன் மாதிரி இருக்கட்டும். பதினொண்டு, பன்னிரண்டு வகுப்புகளுக்கு கிளாஸ் எடுக்கிற டீச்சர்ஸ கவனிச்சு, அவேன்ர வீட்ட செக் பண்ணோணும். அது, ஒரே நாள்ல ஒரே நேரத்தில நடக்கோணும் கதிரவன். அவன் உசாராக முதல் நீங்க வேலைய முடிக்கோணும்!” என்று உத்தரவிட்டான்.
அவன் சொன்ன வேகத்திலேயே அதன் தீவிரத்தை உணர்ந்து, “ஓகே சேர்! இப்பவே எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்றன். வேலைய முடிச்சிட்டுச் சொல்லுறன்!” என்றான் கதிரவன்.
*****
இங்கே, ஆதினியின் மெயிலைப் பார்த்திருந்தான் காண்டீபன். புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, ‘ஹாய் மா, நாளைக்குப் பின்னேரம் வீட்டுக்கு வா.’ என்று எழுதி, கூடவே தன் வீட்டு விலாசத்தையும் கைப்பேசி இலக்கத்தையும் சேர்த்து அவளுக்கு அனுப்பிவிட்டான்.