“உங்களுக்கு உங்கட நண்பரிலயும் நம்பிக்கை இல்ல, உங்கட தங்கச்சிலயும் நம்பிக்கை இல்ல. அதுதான் இவ்வளவு கதைக்கிறீங்க.” என்று எல்லாளனின் வாயைத்தான் அடைத்திருந்தாள்.
அதுவே, அவளுக்கு ஒன்று என்று வருகையில் அவன் என்ன செய்தான்?
இப்போது சியாமளாவின் மீது கூடக் கோபப்படப் பிடிக்கவில்லை. அவன் சரியாக இருந்திருந்தால் யாரால் என்ன செய்திருக்க முடியும்?
*****
அன்று அஞ்சலியிடம் மனம் திறந்து கதைத்ததன் பிறகு, மிகவும் ஆசுவாசமாக உணர்ந்தாள் தமயந்தி. இப்போதெல்லாம் அவளுக்கு அஞ்சலியிடம் எதையும் பகிர எந்தத் தடைகளும் இல்லை. இருவரும் மனத்தளவில் மிகவும் நெருங்கி இருந்தனர். நம்பிக்கையும் வளர்ந்திருந்தது.
அன்று, தன் வகுப்பு முடிந்து செல்லும் அவர்கள் இருவரையும் கண்ட காண்டீபனின் விழிகள் அஞ்சலியையே நோக்கிற்று. அவளிடம் மெல்லிய தடுமாற்றம். அப்போதும் அவன் பார்வை அசையவில்லை. அதில் இருந்த தீர்க்கமும் தீட்சண்யமும் அவளிடம் என்னவோ சொல்லிற்று.
விசைக்கு இயங்குகிறவளாகத் தன் பையில் இருந்த லொலி ஒன்றை எடுத்துத் தமயந்தியிடம் நீட்டினாள்.
“என்னடி இது?” குழந்தைகள் விரும்பும் லொலியைத் தருகிறாளே என்கிற சிரிப்புடன் வினவினாள் தமயந்தி.
“டேஸ்ட் பார். பிறகு விடமாட்டாய்.” என்றவள் தானும் ஒன்றை எடுத்துக்கொண்டாள்.
*****
அன்று மாலை ஆதினியைச் சந்திக்க அவர்கள் வீட்டுக்கு வந்தான் எல்லாளன்.
அவனை வரவேற்று அமரவைத்தார் சாந்தி.
“என்ன குடிக்கத் தர தம்பி? இல்ல, சாப்பிடவே தரவா?”
“இப்ப ஒண்டும் வேண்டாம் அக்கா. ஒருக்கா ஆதினியக் கீழ வரச் சொல்லுங்க. பிறகு, அவளுக்கும் எனக்கும் தேத்தண்ணியும் கொறிக்க ஏதாவது இருந்தா அதுவும் தாங்க.” என்று சொல்லி அவரை அவளிடம் அனுப்பிவைத்தான் அவன்.
மேலே போன வேகத்திலேயே திரும்பி வந்து அவனைச் சங்கடத்தோடு பார்த்தார் சாந்தி.
“என்னவாம் அக்கா?” என்ன சொல்லியிருப்பாள் என்கிற ஊகம் இருந்ததில் அலட்டிக்கொள்ளாமல் வினவினான்.
“அது… எங்கயோ போகப்போறாவாம். இப்ப நேரம் இல்லையாம்.”
“ஓ!” என்று இழுத்துவிட்டு, “நீங்க தேத்தண்ணியை ஊத்துங்க. நான் என்ன எண்டு பாக்கிறன்.” என்றவன், அரைவாசிப் படிகளை ஏறி நின்று, “ஆதினி, இப்ப நீ கீழ வரோணும். இல்லை எண்டு வை, நான் உன்ர அறைக்க வருவன்.” என்று குரல் கொடுத்தான்.
அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தும் சத்தமில்லை என்றதும் எல்லாளனுக்கு மெல்லிய கோபம் மூண்டது. விறுவிறு என்று மேலே சென்றான்.
அவளின் அறையின் கதவு முழுவதுமாகச் சாற்றப்படாமல் இருந்தபோதிலும் வெளியே நின்று, கதவைத் தட்டினான்.
சத்தமில்லை.
“நான் திறக்கவா?”
“…”
“இப்ப நீ வெளில வராட்டி நான் திறப்பன்!”
அவன் அதைச் சொல்லி முடித்த அடுத்த நொடி கதவை விரியத் திறந்து, “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” என்று சீறினாள் ஆதினி.
அவள் விழிகளில் தெறித்த கோபத்தைக் காட்டிலும் விழி மடல்களில் தெரிந்த தடிப்பைக் கண்டு அவனுக்கு ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. அழுததில் முகம் வேறு வீங்கி இருந்தது. கூப்பிட கூப்பிட வராமல் இருந்த கோபம் தணிந்து விட, “கதைக்கத்தானே கூப்பிடுறன். கொஞ்சம் வெளில வாவன்.” என்றான் தன்மையாக.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மாடி விறாந்தையில் போடப்பட்டிருந்த மேசையின் முன்னே சென்று அமர்ந்தாள் ஆதினி.
இருவருக்குமான தேநீரையும் சிற்றுண்டியும் சாந்தி கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனார்.
எடுத்துப் பருகினான் எல்லாளன். விழிகள் அவளை அளந்தன. உண்மையிலேயே எங்கோ வெளியில் செல்லத்தான் போகிறாள் என்று தெரியவும், “எங்க வெளிக்கிடுறாய்?” என்றான்.
அவள் ஒரு விதப் பிடிவாதத்துடன் ஒன்றுமே சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.
இருவருக்குமிடையிலான பேச்சை இலகுவாக ஆரம்பிக்க எண்ணித்தான் அதை வினவினான். அதற்கு விடமாட்டேன் என்று அவள் மௌனம் சாதிக்கவும் வந்த விடயத்தையே ஆரம்பித்தான்.
“நேற்றுச் சியாமளா உன்னைப் பற்றிக் கதைச்சது பிழை…” எனும்போதே கையை நீட்டித் தடுத்து, “என்னோட என்ன கதைக்கோணும் உங்களுக்கு?” என்றாள் அவன் கண்களை நேராகப் பார்த்து.
அவள் கேட்ட விதத்தில் சற்று அசந்துதான் போனான் எல்லாளன். இந்த ஆதினி புதிதாகத் தெரிந்தாள்.
கூடவே, அவளை உணர்ந்தவனாக, “சரி சரி, நான் நடந்ததப் பற்றிக் கதைக்கேல்ல. நீயும் அதை எல்லாத்தையும் மறந்திடு. எதையும் பெருசா எடுக்காத. சியாமளா இனித் தேவை இல்லாமக் கதைக்க மாட்டாள். அகரனும் மன்னிப்புக் கேட்டுட்டான். நானும் உனக்கு சொறி சொல்லுறன். இதோட அதையெல்லாம் விடு. நீ சொன்ன மாதிரியே இப்ப அகரன் சியாமளா கலியாணம் நடக்கட்டும். உன்ர படிப்பு முடிஞ்ச பிறகு எங்கட கலியாணத்தை வைக்கலாம். சரியா?” என்றான் சமாதானக் குரலில்.
ஆதினியின் முகத்தில் கோபச் சிவப்பு ஏறிற்று. தந்தையிடம் சொன்னதை அகரன் மூலம் அறிந்துகொண்டு பேச வந்திருக்கிறான் என்று ஊகிக்க முடிந்ததில் சினமும் உண்டாயிற்று.
அதையெல்லாம் அடக்கி, “என்னைப் பற்றி என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க நீங்க? உங்களை மாதிரி மனதுக்க ஒண்ட வச்சுக்கொண்டு வெளில வேற ஒண்டக் கதைக்கிற ஆள் எண்டா? எனக்கு நீங்க வேண்டாம் எண்டு சொன்னது சொன்னதுதான். சரியா?” என்றாள் நிதானமாக.
அவளை முறைத்தான் அவன். “அப்பிடி என்னத்த மனதுக்க ஒண்டையும் வெளில இன்னொண்டையும் கதைச்சனான் உனக்கு? நடந்தது எல்லாம் பிழைதான். அதுக்காகக் கலியாணம் வேண்டாம் எண்டு சொல்லுவியா? இன்னும் பத்து வருசம் கழிச்சு எண்டாலும் சரி, உனக்கும் எனக்கும்தான் கலியாணம். இத நல்லா நினைவில வச்சுக்கொள்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.
உதட்டோரம் வளைய, “உங்கட இந்த வாய்க்கே எவனையாவது கூட்டிக்கொண்டு வந்து, அவனைத்தான் பிடிச்சிருக்கு எண்டு அப்பாட்டச் சொல்லுறனா இல்லையா எண்டு பாருங்க!” என்று சவால் விட்டாள் அவள்.
“என்ன வெருட்டிறியா? தைரியம் இருந்தா அப்பிடி ஏதாவது செய்து பார்!” என்றுவிட்டு விருட்டென்று எழுந்து போனவன் திரும்பி வந்து, “இன்னொருத்தனக் கூட்டிக்கொண்டு வந்து, அவனைப் பிடிச்சிருக்கு எண்டு உன்னால சொல்லேலும் எண்டா, உன்னையே தூக்கிக்கொண்டு போக என்னால ஏலும். விளங்கினதா? செய்ய வச்சிடாத! ஒழுங்காப் படிக்கிற வேலைய மட்டும் பார்!” என்றுவிட்டுப் போனான்.
ஆதினிக்குக் கோபத்தில் முகம் சிவந்து தணலெனக் கொதித்தது. மேசையில் அவளின் பழைய கைப்பேசி கிடந்தது.