காண்டீபனின் வீடு ஊருக்குள் சற்று உள்ளே அமைந்திருந்தது. ஆதினியைக் கண்டதும் வளர்ந்த பெரிய நாய் ஒன்று குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. இவள் பயந்து நிற்க, “அது கடிக்காது. நீ வா!” என்று இன்முகமாக வரவேற்றான் காண்டீபன்.
அத்தனை நேரமாக இல்லாத தயக்கம் ஒன்று அவனைக் கண்டதும் அவளைக் கவ்விப் பிடித்தது. அதுவும் இத்தனை நாள்களாக முழுக்கை ஷேர்ட், ஜீன்ஸ் என்று ஒரு விரிவுரையாளனாக மட்டுமே பார்த்துப் பழகியவனை இன்றைக்கு சாதாரண ட்ராக் பாண்ட், டீ ஷேர்ட்டில் பார்க்கையில் சற்றே சங்கடமாக உணர்ந்தாள்.
அப்போதுதான் இங்கே வந்தது சரியா என்கிற கேள்வியும் எழுந்தது. இதில் அவனைத் தவிர்த்து வேறு யாரையும் காணவும் இல்லை என்றதும் முற்றத்திலே நின்றாள்.
சும்மாவே அவளைப் பொறுப்பில்லை, கவனமில்லை, பக்குவமில்லை என்கிறார்கள். இதில் இப்படி இங்கு வந்ததை அறிந்தால் இன்னும் என்ன சொல்லுவார்களோ? வந்திருக்கக் கூடாதோ?
அவள் தயக்கத்திற்கான காரணம் புரியாமல் காண்டீபனின் புருவங்கள் ஒரேயொரு நொடிதான் சுருங்கி மீண்டன. காரணம் பிடிபட்டுவிடவும் உதட்டை முறுவல் ஆக்கிரமித்துக்கொள்ள, சுவாரசியமாக அவளை நோக்கினான்.
“என்ன? இந்த வாத்தியப் பற்றி ஒண்டும் தெரியாது. வா எண்டதும் வெளிக்கிட்டு வந்திட்டமே, என்ன நடக்குமோ எண்டு யோசிக்கிறியோ?” குரலில் மெல்லிய கேலி இழையோட வினவினான்.
அவன் தன்னைக் கண்டுகொண்டதில் அவள் முகம் இலேசாகச் சிவந்தது. ஆனாலும் சமாளித்து, “அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல. உங்கட வைஃப் இல்லையா சேர்?” என்று சாதாரணமாகக் காட்டி விசாரித்தாள்.
“அதென்ன சேர்? அண்ணா எண்டே சொல்லு.” விரிந்த சிரிப்புடன் சொன்னவன், “வைஃப் மட்டும் இல்ல. அப்பா இருக்கிறார். மாமி இருக்கிறா. ஜிம்மி இருக்கு. பயப்பிடாம வா!” என்றான் மீண்டும்.
இப்போது அவனை நேரடியாகவே முறைத்தாள் ஆதினி. “நான் பயப்பிடுறன் எண்டு உங்களுக்கு ஆர் சொன்னது? அண்டைக்குச் சொன்னனீங்கதானே, அதுதான் கேட்டனான்.” என்றாள் வேகமாக.
“ஓ! அப்ப பயமில்லை?” அவன் கண்கள் விடாமல் அவளைச் சீண்டிச் சிரித்தன.
“இல்ல இல்ல இல்ல!” முகம் சிவக்க அழுத்தம் திருத்தமாகச் சொன்னவளுக்குள் தைரியம் மீண்டிருந்தது. அப்படி என்ன செய்துவிடுவான் என்றுதான் பார்ப்போமே! நேராக நிமிர்ந்து நின்று அவனையே பார்த்தாள்.
தவறாக நடந்துதான் பாரேன் என்று சவால்விட்ட அந்த விழிகளைக் கண்டு, அதற்குமேல் அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்தான் காண்டீபன்.
முகம் இரத்தமெனச் சிவக்க, “சேர்!” என்று அதட்டினாள் அவள்.
செல்லமாக அவள் தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு, “மிதிலா! ஆர் வந்திருக்கிறா எண்டு இஞ்ச வந்து பார்.” என்று வீட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.
“வந்திட்டாவா?” என்றபடி வீட்டுக்குள்ளிருந்து விரைந்து வந்தாள், அந்த மிதிலா.
அவளைப் பார்த்ததும் பார்த்தபடி நின்றுவிட்டாள் ஆதினி. அழகென்றால் அழகு அத்தனை அழகு.
“இவாதான் நான் சொன்ன முக்கியமான ஆள். வீட்டுக்க கூப்பிடு. ஆள் என்னைப் பாத்துப் பயப்பிடுது.” என்றான் வேண்டுமென்றே.
“சேர்ர்ர்ர்! நான் பயப்பிடேல்லை எண்டு உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது?” சிரிப்பும் முறைப்புமாக அதட்டினாள் ஆதினி.
மிதிலாவின் முகத்திலும் மெல்லிய சிரிப்பு. “நீர் வாரும். அவர் அப்பிடித்தான், சும்மா விளையாடுவார்.” என்று அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.
அங்கே, அவர்களின் விறாந்தையிலேயே ஒரு கரையாகக் கட்டில் ஒன்று போடப்பட்டிருக்க, அதில் படுத்திருந்தார், ஒரு வயதானவர். இவளைக் கண்டதும், “வாம்மா!” என்றார் கனிந்த முகத்தோடு.
“இவர்தான் என்ர அப்பா.” என்று அறிமுகம் செய்துவிட்டு, “இப்பப் பயம் போயிருக்குமே.” என்றான் காண்டீபன்.
உண்மையிலேயே அப்போதுதான் அவளின் இறுக்கம் தளர்ந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “ஹல்லோ சேர், நான் என்னத்துக்குப் பயப்பிட? நீங்க சேட்டை விட்டீங்க எண்டா ஒரு ஃபோன்கோல் போதும். அடுத்த நிமிசமே போலீஸ் வந்து நிக்கும், தெரியுமா?” என்று மிரட்டினாள்.
“பாத்தீங்களாப்பா, ஆள் எப்பிடி வெருட்டுது எண்டு? எங்கட வீட்டுக்கு வந்திருக்கிறா எண்டதும் ஆளைச் சாதாரணமா நினைச்சிடாதீங்க. நீதிபதி இளந்திரையன் சேரின்ர ஒரேயொரு மகள்.” என்று அவன் சொன்னதும் அவரின் கண்கள், அவனிடம் உண்மையா என்று வினவிற்று. அவனும் ஆம் என்பதாகத் தலையசைத்தான்.
“அது மட்டும் இல்ல. ஏஎஸ்பி எல்லாளனின்ர வருங்காலத் திருமதி.” என்று கூடுதல் தகவலும் தந்தான்.
அவர் முகம் விகசித்துப் போயிற்று. கண்கள் கூட இலேசாகக் கலங்க, “என்ர செல்லம்! இஞ்ச வாங்கோம்மா.” என்று அழைத்து, அவளின் கையைப் பற்றிக்கொண்டார்.
அவர் விழிகள் அவள் முகத்தைச் சொல்லிலடங்காப் பாசத்தைச் சுமந்து மொய்த்தன. “சந்தோசம் ஆச்சி. நல்ல சந்தோசம். ரெண்டு பெரும் எண்டைக்கும் நல்லாருக்கோணும்.” என்றார் பரிதவித்து நெகிழ்ந்த குரலில்.
ஆதினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத பாசவலை ஒன்று, அவளைச் சுற்றிப் படர்வதை உணர்ந்து, நெகிழ்ந்து நின்றாள்.
“அப்பா சுகமா இருக்கிறாராமா? எல்லாளன் என்னவாம்? உங்களுக்கு ஒரு அண்ணாவும் இருக்கோணுமே?”
அந்தக் கேள்விகளில் வீட்டில் நடந்தவை எல்லாம் நினைவில் வந்தன. முகம் கசங்கிப் போக, வலி நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. வேகமாகச் சமாளித்துக் கொண்டு, “எல்லாரும் சுகமா இருக்கினம் அங்கிள்.” என்று முறுவலிக்க முயன்றாள்.
“எப்ப கலியாணம்?”
“அது… அது சும்மா பேச்சு மட்டும்தான் நடந்தது. இப்ப நிப்பாட்டியாச்சு. கலியாணம் அண்ணாக்குத்தான் நடக்கப்போகுது.” அவர் முகம் பார்ப்பதைத் தவிர்த்தவாறு சொன்னாள்.
காண்டீபன் யோசனையோடு அவளைப் பார்த்தான்.
“உன்ர அப்பா என்ன சொன்னவர்?” என்று விசாரித்தான்.
“அப்பாக்கு என்ன எண்டாலும் என்ர விருப்பம்தான்.”
“ஓ! அப்ப உனக்குத்தான் விருப்பம் இல்லை?”
“எனக்கு இஞ்ச இருக்கவே விருப்பம் இல்ல.”
உண்மையில் அப்படித்தான் உணர்ந்துகொண்டிருந்தாள் ஆதினி. அவளால் இனியும் அவர்களின் முகங்களைப் பார்த்துக்கொண்டு, அவர்களோடே இருக்க முடியும் போல் இல்லை. ஒரு விலகல் அவசரமாகத் தேவைப்பட்டது.
அவள் எல்லாளனைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை என்பதைக் குறித்துக்கொண்டான் காண்டீபன்.
அதற்குள் அவர்கள் மூவருக்கும் தோடம்பழ(ஆரஞ்சு) ஜூஸ் கொண்டுவந்தாள் மிதிலா. தட்டைப் பற்றியிருந்த அவள் கைகளில் மெல்லிய நடுக்கம். வேகமாக எழுந்து சென்று, தட்டினைத் தான் வாங்கிக்கொண்ட காண்டீபன், ஒன்றை எடுத்து ஆதினிக்குக் கொடுத்தான். மற்றையதை மிதிலாவுக்கு நீட்டினான்.
“அது உங்களுக்கு.”
“நான் இப்பதானே சாப்பிட்டனான். நீ குடி.”
“இல்ல. எனக்கும்…” என்று ஆரம்பித்தவள், அவன் பார்வையில் சொல்ல வந்ததைச் சொல்லாமல் விட்டுவிட்டு, ஜூஸை எடுத்துக்கொண்டாள்.
அடுத்த கிளாஸை எடுத்து, கையெட்டும் தூரத்தில் இருந்த மேசையில் வைத்துவிட்டு, தந்தையின் அருகில் அமர்ந்து, அவரை எழுப்பித் தன் தோளில் சாய்த்துக்கொண்டு, ஜூஸை எட்டி எடுத்து அவருக்கு அருந்தக் கொடுத்தான்.