“உனக்கு என்ன வேணும் எண்டு நானும் கேட்டனான்.” என்றான் அவனும்.
அவள் அவனிடமிருந்து பார்வையை அகற்றாமல் நிற்கவும் சின்ன முறுவல் ஒன்று அவன் உதட்டினில் அரும்பிற்று. “நில்லு, வாறன்.” என்று சொல்லிவிட்டு கண்டீனுக்கு நடந்தான்.
விழிகளை ஒருமுறை மூடித் திறந்தாள் ஆதினி. இப்படி, திடீர் என்று அவன் காட்டும் அணுக்கத்தை அறவே வெறுத்தபடி, அங்கிருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டாள்.
அவள் மனத்தை முதன் முதலாகச் சலனப்படுத்தியவன் அவன்தான். இருந்தாலும் அவனை விட்டு விலகி நிற்கவே விரும்பினாள். சிறிது நேரத்தில் தனக்கு ஒரு பால் தேநீரும், அவளுக்குத் தேநீரோடு ரோல்சும் வாங்கி வந்தான் அவன்.
“சாப்பிடு!” அந்த வாங்கிலில் தானும் அமர்ந்துகொண்டு, இருவருக்கும் நடுவில் தட்டை வைத்துவிட்டுச் சொன்னான்.
அப்போதும் அவள் அமைதியாகவே இருக்க, “அஜய் திரும்ப எடுத்தவனா?” என்று தன் தேநீரை உறிஞ்சியபடி வினவினான்.
‘ஓ! இதற்குத் தானா?’ என்று உள்ளே ஓட, “இல்ல.” என்றாள்.
“அவனைப் பற்றி என்னட்டச் சொல்லியிருக்கலாமே? என்னத்துக்குக் கதிரவனைத் தேடிப்போய்ச் சொன்னனீ?”
“உங்களப் பாக்கவோ, உங்களோட கதைக்கவோ விருப்பம் இல்ல. அதாலதான். போதுமா?” இனியாவது எழுந்து செல் என்பது போல் இருந்தது அவள் பதில்.
அது அவனுக்கு விளங்காமல் போகுமா? இருந்தும், “கதிரவனிட்ட ஏன் சொறி சொன்னனீ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.
“அது உங்களுக்குத் தேவை இல்லாத விசயம்!”
“அதுதான் எனக்கு முக்கியமான விசயமே! செய்தது பிழை எண்டு உணர்ந்து நீ கேக்கிற மன்னிப்பை மற்றவே ஏற்கிற மாதிரி, அவே கேக்கிற மன்னிப்பை நீயும் ஏற்கலாம்!” என்றான் அவன்.
அதாவது அவன் தங்கையும் அவள் தமையனும் செய்தவற்றை மன்னிக்கட்டுமாம். அதுவரை அவள் காத்துவந்த பொறுமை பறக்க, “நான் என்ன செய்யோணும் எண்டு நீங்க சொல்லாதீங்க. வந்த வேல முடிஞ்சுது எண்டா நடவுங்க!” என்றாள் எரிச்சலோடு.
அப்போதும் அவன் அசையவில்லை. “என்னை எவ்வளவு மோசமா எல்லாம் கதைச்சிருக்கிறாய்? என்னோட பிடிக்காத சண்டையையா கதிரவனோட பிடிச்சனி? அப்ப என்னட்டயும்தானே நீ மன்னிப்புக் கேக்கோணும்? அதுதான், அந்த மன்னிப்பையும் கேட்டு வாங்கிக்கொண்டு போவம் எண்டு வந்தனான்.” என்று சீண்டினான்.
அந்தச் சீண்டல் ஆதினிக்கு இரசிக்கவில்லை. மாறாக எரிச்சல்தான் மண்டியது. அவன் தன் இயல்பை மீறி இப்படி அவளோடு நல்ல முறையில் கதைக்க முயல்வது, ஒருவித நடிப்போ என்று தோன்றிவிட, விருட்டென்று எழுந்து நடக்க முனைந்தாள்.
அதற்கு விடாமல் அவள் கையைப் பற்றித் தடுத்து, “வாங்கின ரோல்ஸை சாப்பிட்டுப் போ!” என்றான்.
“நீங்க விடுங்க என்னை!” அவ்வளவு நேரமாக இருந்த நிதானத்தைத் தொலைத்துவிட்டு அவனிடமிருந்து கையை இழுத்துக்கொண்டாள் ஆதினி.
அவனும் அவளோடு மல்லுக்கட்டப் போகவில்லை. “சரி, நீ சாப்பிடு!” என்றான் தன்மையாக.
“உன்ர முகமே சரியில்லையாம் எண்டு கதிரவன் சொன்னான். அதுதான் பாத்துக்கொண்டு போவம் எண்டு வந்தனான். இனி அஜயும் உனக்கு கோல் பண்ண மாட்டான். ஒண்டுக்கும் யோசிக்காத!” என்றான் இதமான குரலில்.
“அதே மாதிரி என்னில என்ன கோவம் இருந்தாலும் உனக்கு ஒரு பிரச்சினை வந்தா, எனக்குச் சொல்லவோ, என்னக் கூப்பிடவோ யோசிக்காத, சரியா?” சொல்லிக்கொண்டே எழுந்து, ஒரு ரோலை எடுத்து அவள் வாயருகில் நீட்டினான்.
அஜய் பற்றிய யோசனையில் இருந்தவள் நடப்பதை உணராமல், வாயைத் திறந்து வாங்கினாள். அதன் மிகுதியைத் தான் உண்டபடி, ஒரு தலையசைப்போடு அவளிடம் விடைபெற்றுப் போனான் அவன்.
நடப்பதை நம்ப முடியாமல் ஆதினியின் விழிகள் விரிந்து போயின.
*****
காவல் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த எல்லாளன் மனத்தில் ஆதினியைக் குறித்த யோசனைதான்.
காவல் நிலையத்திற்கே வந்து மன்னிப்புக் கேட்டாள் என்று கதிரவன் சொன்னதை, அவனால் நம்பவே முடியவில்லை. அந்தளவுக்கு என்னாயிற்று என்றுதான் பார்க்க ஓடி வந்திருந்தான்.
இறுக்கம் என்பது அவன் இயல்பு. கூடவே, கண்டிப்பையும் கடுமையையும் இயல்பாகவே கொண்டவன். அவனோடு காவல்துறையில் பணி புரிகிறவர்களுக்கே அவனிடம் பயம் கலந்த மரியாதை இருக்கும்.
அவளிடம் மட்டும் அவனுடைய எந்த அதட்டல், அதிகாரங்களும் செல்லுபடியாகாது. அவன் பதவிக்கான மதிப்போ, பார்க்கும் தொழிலுக்கான மரியாதையோ கிடைக்கவே கிடைக்காது. பிறத்தி ஆண் என்று கூடப் பார்க்கமாட்டாள். ஒற்றைக்கு ஒற்றை வாடா என்பதுபோல் மல்லுக்கட்டி, கோபப்பட்டு அவனை உண்டு இல்லை என்றாக்குவாள்.
அப்படியானவள் இன்றும் கோபப்பட்டாள்தான். அதில் முன்பிருந்த காரம் இல்லை. அவனை யாரோவாகத் தள்ளி நிறுத்தும் தொனிதான் தெரிந்தது.
அது அவனையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தது.
*****
அஜய்க்கு அனுராதபுரம் சென்று சேரும் வரைக்கும் நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டே இருந்தது. அவனை வரவேற்ற சித்தியின் முகத்திலும் பதட்டம். அவனால் தங்களுக்கும் ஏதும் பிரச்சனை வந்துவிடும் என்று நினைக்கிறாரோ? யாராக இருந்தாலும் அப்படித்தானே நினைப்பார்கள். அதிலொன்றும் தவறில்லையே!
முகக் கன்றலை மறைத்து அவரோடு பேசச் சிரமப்பட்டான். குளித்து, உடை மாற்றி, அவன் மாலை உணவை முடித்தபோது, யாரோ வீட்டின் கதவைத் தட்டினார்கள்.
விழுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தவனின் நெஞ்சு படபட என்று அடித்துக்கொண்டது. கதவைத் திறக்கப் போன சித்தியையே மிகுந்த பதட்டத்துடன் பார்த்திருந்தான்.
பொறியில் இரை வைத்துக் காத்திருந்த எல்லாளன், வீட்டின் உள்ளே நுழைந்து, அலுங்காமல் குலுங்காமல் அவனை அப்படியே அள்ளிக்கொண்டான்.
அஜய் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்பாவுமா இவர்களுக்கு உடந்தை? அதனால்தான் அவனிடம் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லையோ?
யாழ்ப்பாணம் வந்தடைந்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட கணமே அவனுக்கான விசாரணையும் ஆரம்பித்தது.
நடந்தவற்றைப் பார்த்த சாட்சி யாருமில்லை. சாமந்தி எழுந்து வந்து சொல்லப் போவதில்லை. அவனாக வாயைத் திறக்காத வரைக்கும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்கிற குருட்டு நம்பிக்கையில், சும்மாதான் கொழும்பு சென்றேன் என்றுதான் ஆரம்பத்த்தில் சாதித்தான்.
அதன் பிறகு எல்லாளன் கவனித்த கவனிப்பில், ஆலைக்குள் சென்ற கரும்பு சக்கையாக வெளிவருவது போல், உடல் முழுவதும் உயிர் வலியைத் தரும் காயங்களைச் சுமந்து வன்ஹான். தன் முன்னே நிற்பவனை நிமிர்ந்து பார்க்கவே நடுங்கினான்.
“சொல்லு!”
அதற்குமேல் எதையும் மறைக்கும் தெம்பு அஜய்க்கு இல்லை.
“எனக்கு அவளைப் பிடிக்கும் சேர். சொல்லப் பயம். படிக்கிற பிள்ளையைக் குழப்பக் கூடாது, எக்ஸாம் முடியட்டும் எண்டு நினைச்சிருந்தன். ஒரு நாள்… ஒரு நாள்…” என்றவனுக்கு மேலே சொல்ல முடியாமல் அழுகை வந்தது.
எதையும் அவன் திட்டமிட்டு நிகழ்த்தவில்லை. நடந்ததை அன்று அவனுமே எதிர்பார்க்கவில்லை. அதுவே, இன்றைக்கு அவனை எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறது என்று துடித்தான்.
“ஒரு நாள் சாகித்தியனத் தேடி அவேன்ர வீட்ட போனனான். பெல் அடிக்க, வந்து திறந்தது சாமந்தி. பாக்கவே வித்தியாசமா இருந்தாள். என்னைப் பாத்துக் கோணலாச் சிரிச்சாள். எனக்கு ஒண்டும் விளங்கேல்ல. ஒரு நாளும் அவள் அப்பிடி இல்ல. என்னோட கதைச்சதே இல்ல. ஆனா அண்டைக்கு, சாகித்தியன் எங்க எண்டு கேக்க, வா எண்டு கையைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு அவளின்ர அறைக்க கூட்டிக்கொண்டு போனவள். பிறகு… பிறகு… சத்தியமா நான் அத எதிர்பாக்கவும் இல்ல, பிளான் பண்ணவும் இல்ல. அவள்… அவள்தான் சேர்… அது… பிழை நடந்திட்டுது சேர். அவள் சுய நினைவிலேயே இல்ல. பயத்தில அங்க இருந்து ஓடி வந்திட்டன் சேர்.” அவனுக்கு எல்லாளனின் முகம் பார்க்கவே வெட்கமாக இருந்தது.
“அதுக்குப் பிறகு அதைப் பற்றி அவள் உன்னோட கதைக்கேல்லையா?”
“அதுதான் சேர் எனக்கும் குழப்பம். சாகித்தியனிட்டச் சொல்லி, பிரச்சினை பெருசாகப் போகுது எண்டு நான் பயந்துகொண்டு இருக்க, அப்பிடி ஒண்டும் நடக்கவே இல்ல. ஒரு கிழமைக்குப் பிறகு சாகித்தியனோட அவேன்ர வீட்டைப் போனனான். அவளும் என்னைப் பாத்தவள். ஆனா ஒண்டும் கதைக்கேல்ல.”
“இது எப்ப நடந்தது?”
அவன் சொன்ன திகதி, அவள் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முதலாக இருந்தது.
“போதைய அவளுக்கு நீயா பழக்கினது?”
“இல்ல சேர். கடவுள் சத்தியமா இல்ல சேர். எனக்கு அவள் போதை மருந்து எடுத்திருக்கிறாள் எண்டுறதே, நீங்க எல்லாரும் சொல்லித்தான் தெரியும். அப்பிடி ஒரு சந்தேகம் வந்திருந்தா, எங்களுக்க நடந்தத மறைச்சாலும் அத சாகித்தியனிட்டச் சொல்லியிருப்பன் சேர். செத்த வீட்டில அவளை உயிர் இல்லாத உடம்பாப் பாக்கவே ஏலாம இருந்தது. அழுகை வந்தது. அதைப் போலீஸ் கவனிச்சிட்டினம். பிடிபட்டா போதையப் பழக்கி, அவள் சாகிறதுக்கும் நான்தான் காரணம் எண்டு சொல்லிப்போடுவினமோ எண்டு பயந்துதான் ஓடி ஒளிஞ்சனான். நான் செய்தது பிழைதான். ஆனா, வேணுமெண்டு செய்யேல்ல சேர்.”
“நீ ஏன் அவள் வித்தியாசமா நடந்ததைச் சாகித்தியனுக்குச் சொல்லேல்ல?”
“எப்பிடி உனக்குத் தெரியும் எண்டு கேட்டா, என்ன சொல்லுறது எண்டுற பயம். அதைவிட, அவளே ஒண்டும் சொல்லாம இருக்கிறாள். நானாச் சொல்லிப் பிரச்சினையப் பெருசாக்க வேண்டாம் எண்டு நினைச்சன். முதல் அத எப்பிடி… அவனிட்டச் சொல்லுறது எண்டு… அதைவிட, அவளுக்கு எல்லாம் போதைப் பழக்கம் இருக்கும் எண்டு நான் யோசிக்கவே இல்ல சேர். அவ்வளவு நல்ல பிள்ளை. கெட்டிக்காரி. அவள் அவள்…” என்றவனுக்கு மேலே வார்த்தைகள் வர மறுத்தன.
முகத்தை மூடிக்கொண்டு அழுதான். என்ன இருந்தாலும் ஆசையாக நேசித்த பெண்ணாயிற்றே!
“இன்னும் ஏதாவது மறைக்கிறியா?” விழிகள் இரண்டும் கூர் ஈட்டியாக அவன் நெஞ்சைத் துளைக்க வினவினான் எல்லாளன்.
“இல்ல சேர். உண்மையா இல்ல. இதத் தவிர வேற ஒண்டும் நான் செய்யேல்ல சேர். பயத்திலதான் கொழும்புக்கு ஓடினான்.”
“இன்னும் எதையாவது மறைச்சியோ, அதுக்குப் பிறகு காலம் முழுக்கக் கவலைப் படுற மாதிரிப் போயிடும்!” என்று அவனை எச்சரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் எல்லாளன்.