நீ தந்த கனவு 21 – 2

“ஆரா இருந்தாலும் நல்லாருக்கோணும் எண்டுதான் ஆசைப்படுறன். அதுவும், நீங்க எல்லாருமே இளம் பிள்ளைகள். நேர் வழில படிச்சு, செய்த பிழைகளைத் திருத்தி, முன்னுக்கு வரோணும் எண்டு நினைக்கிறது பிழையா?” என்று பதில் கேள்வி கேட்டான் காண்டீபன்.

“அந்தளவுக்கு அவன் நல்லவனா சேர்?”

“கை பிடிச்சுத் தூக்கி விடவே கூடாத அளவுக்குக் கெட்டவனும் இல்ல.”

“அந்தளவுக்குக் கெட்டவன் இல்லை எண்டா அவன் செய்தது பெரிய விசயம் இல்ல எண்டு சொல்லுறீங்களா?” உண்மையில் சாகித்தியனால் இவர்கள் சொல்கிற நியாயத்தை விளங்கிக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. மனம் அந்தளவில் கொந்தளித்தது.

“இங்க பாரும், அவனுக்கு அவாவைப் பிடிச்சிருந்திருக்கு. அதக் கூடச் சொல்லாம, அவா படிச்சு முடிக்கட்டும் எண்டு இருந்திருக்கிறான். எல்லை மீறிப் போனது பெரும் பிழைதான். அதை அவன் திட்டம் போட்டோ, கெட்ட எண்ணத்தோடயோ செய்யேல்ல. பிறகு அதைத் தொடரவும் இல்ல. அத வச்சு உம்மட தங்கச்சிய அவன் வேற எதுக்கும் மிரட்டவும் இல்ல. அதேமாதிரி அவா செத்ததுக்கு அவன் காரணம் இல்லை சாகித்தியன். அவா பழகின போதையும் அதால வந்த டிப்ரஷனும்தான் காரணம். அத விளங்கிக்கொள்ளும் முதல்!” என்று ஆசிரியனாக அழுத்திச் சொன்னான் காண்டீபன்.

ஆக, எல்லோருமே அவன் தங்கையின் மீதுதான் தவறு என்கிறார்கள். மனம் வெறுத்துவிட, “ஓகே சேர். நான் போகவா?” என்றான் சாகித்தியன்.

“எனக்கு நீரும் அவனும் ஒண்டுதான் சாகித்தியன். இது எல்லாத்துலயும் இருந்து வெளில வந்து, நீர் நல்லாருக்கோணும் எண்டு எப்பிடி நினைக்கிறேனோ அப்பிடித்தான், அவனையும் நினைக்கிறன். இங்க அவனால படிக்கேலாது. அவனைத் தினமும் பாத்துக்கொண்டு உம்மாலயும் நிம்மதியாப் படிக்கேலாது. உமக்கு இருக்கிற கோவத்துக்கு நீர் அவனோட சண்டை சச்சரவுக்குப் போய், உம்மட வாழ்க்கையும் பாத மாறிப் போயிடக் கூடாது எண்டு, உம்மப் பற்றியும் யோசிச்சிட்டுத்தான் அவனை மாத்திவிட்டனான்.” என்றான் கடைசியாக.

“ஆர் என்ன சொன்னாலும் நம்பின எல்லாருமே கைய விட்டுடீங்க சேர்!” என்றான் அவன், மனம் விட்டுப் போன குரலில்.

“என்ன கதைக்கிறீர் நீர்? அப்பிடிச் செய்வமா? நீர் முதல், இந்தப் பிரச்சினைகளுக்க இருந்து கொஞ்சம் வெளில வந்து யோசியும். அப்ப எல்லாம் விளங்கும். அதைவிட, படிப்பில கவனத்தைச் செலுத்தும். முடிஞ்சதையே பிடிச்சுக்கொண்டு தொங்கி, தயவு செய்து உம்மட எதிர்காலத்தைப் பாழாக்கிப் போடாதயும்.” இதையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளும் அளவு நிதானத்தில் அவன் இல்லை என்று தெரிந்தாலும், தன்னால் முடிந்ததாக அவனுக்குப் புத்தி சொன்னான் காண்டீபன்.

*****

பல்கலைக்கழகத்தில் என்றும் போல் அன்றும் ஆதினியைத் தேடிக்கொண்டு வந்தான் காண்டீபன். புருவம் சுருக்கிக் கேள்வியாகப் பார்த்தாள் ஆதினி.

“என்ன, பார்வை எல்லாம் பலமா இருக்கு?”

“உங்கட டிப்பார்ட்மெண்ட்ல உங்களுக்கு வேலையே இருக்காதா?”

“இருக்காதே!” சின்ன சிரிப்புடன் சொன்னவன் அவள் மடியில் இருந்த, ‘டிபன் பொக்ஸை’ இயல்பாக எடுத்து, என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தான்.

புட்டுக்கு நல்லெண்ணையில் பொரித்த முட்டைப் பொரியலும் இரண்டு பொரித்த மிளகாய்களும் இருந்தன. “வாவ்! பாக்கவே வாயூறுதே!” என்றபடி அதை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

அவள் அவனையே பார்த்துக்கொண்டிருக்க,
“நான் என்ன உன்ர மிதிலா அக்காவ விட வடிவாவா இருக்கிறன்? இந்தப் பார்வை பாக்கிறாய்?” என்றான் சிரிப்புடன்.

“நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குமாம்!” என்று தலையைச் சிலுப்பிவிட்டு, “ஒவ்வொரு நாளும் என்னைத் தேடிக்கொண்டு வாறீங்க. என்ன விசயம்?” என்றாள் அவள்.

“இதத்தான் இவ்வளவு நேரமா யோசிச்சியா?” என்று கேட்டுச் சிரித்தான் அவன்.

“சிரிச்சுச் சமாளிக்காம உண்மையைச் சொல்லுங்க அண்ணா!”

அதற்கான பதில் போன்று அவர்கள் அமர்ந்திருந்த வாங்கிலில் இருவருக்கும் நடுவில் இருந்த சில பேப்பர்களை கண்ணால் காட்டினான் காண்டீபன்.

எடுத்துப் பார்த்தாள். அவை, கொழும்பு சட்டக் கல்லூரியில் அனுமதி கோருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் என்றதும் அவள் விழிகள் வியப்பில் விரிந்து போயின.

அவளே கவனமில்லாமல் விட்டிருந்த ஒன்றை அவன் மறக்காமல் செய்திருக்கிறான். அவள் உள்ளம் நெகிழ்ந்து போயிற்று.

இதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தான் அவன். அவளின் தண்ணீர் போத்தலையே எடுத்து, கையையும் டிஃபன் பொக்ஸையும் கழுவிவிட்டு, அண்ணாந்து கடகட என்று தண்ணீரைப் பருகினான். கழுவிய டிஃபன் பொக்ஸை மூடி அவளிடம் கொடுத்துவிட்டு,

“கொழும்பில இருக்கிற பல்கலைக்கழகம் போகாத. அங்க போனா நீ லோயரா வெளில வாறதுக்குக் குறைஞ்சது நாலு தொடக்கம் அஞ்சு வருசம் ஆகும். அதே, இலங்கை சட்டக் கல்லூரில சேர்ந்தா மூண்டு மூண்டரை வருசத்தில லோயர் ஆகிடலாம். அதுக்கான என்ட்ரென்ஸ் எக்ஸாம் வரப்போகுது. அந்த போர்ம்தான் இது. டேட் முடிய முதல் நிரப்பி அனுப்பு. இப்ப நீ இங்க ஒரு வருசம் முடிச்சிருக்கிறாய். அங்க நேரா செக்கண்ட் இயர் போகலாமா, இல்ல, அதுக்கு ஏதாவது எக்ஸாம் எழுதோணுமா எண்டு உன்ர அப்பாவைக் கேள். ஓம் எண்டுதான் கொழும்பில இருக்கிற என்ர பிரெண்ட் விசாரிச்சுச் சொன்னவன். எண்டாலும், உன்ர அப்பாக்கு அது இன்னும் வடிவாத் தெரிஞ்சிருக்கும். சோ, அவரிட்ட மறக்காமக் கேட்டு, ஓம் எண்டு சொன்னா, அதுக்கும் ரெடியாகு. மூண்டு வருசப் படிப்பை முடிச்சு, ஃபைனல் எக்ஸாம் எழுதிப்போட்டு, ஒரு ஆறு மாதம் பயிற்சிச் சட்டத்தரணியா ஒரு லோயரிட்ட வேலை பார். பிறகு என்ன, உயர் நீதிமன்றத்தில சட்டத்தரணியா சத்தியப் பிரமாணம் செய்ததும் சட்டப்படியான லோயர் ஆகிடுவாய்!” பெருமிதத்துடன் சொன்னவனை உள்ளம் நெகிழப் பார்த்தாள் ஆதினி.

“யோசிச்சுப் பார், இன்னும் மூண்டு, மூண்டரை வருசத்தில, கறுப்புக் கோட்ட மாட்டிக்கொண்டு, யுவர் ஓனர் எண்டு உன்ர அப்பாக்கு முன்னால நிண்டா எப்பிடி இருக்கும்?” அவள் குறித்தான பெரும் கனவைத் தன் விழிகளில் சுமந்தபடி சொன்னான் அவன்.

சில கணங்களுக்கு இமைக்காது அவனையே பார்த்தவள் அவன் கையைக் கட்டிக்கொண்டு, அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவளுக்கு அழ வேண்டும் போலிருந்தது. ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தாள்.

“டோய், என்ன?” உதட்டில் தரித்த மென் சிரிப்புடன் வினவினான் அவன்.

“தெரியா அண்ணா. உங்கள்ள இன்னுமின்னும் பாசம் வருது.” என்றாள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து.

“நல்ல விசயம்தானே!” என்றவன், “முக்கியமான விசயம், கொழும்பில எங்க தங்குறது, எப்பிடிப் போய் வாறது எண்டுறதைப் பற்றி அப்பாட்டக் கதை. அதே மாதிரி, அங்க இருக்கிற நல்ல லோயர் ஆரிட்டையாவது சும்மா ஹெல்ப்புக்கு இப்பவே போ. அது உனக்கு இன்னும் ஹெல்ப்பா இருக்கும். நிறைய அனுபவம் கிடைக்கும். கொழும்பில இருந்து திரும்பி வாற ஆதினி, சாதாரண ஆதினியா வரக் கூடாது. வழக்கறிஞர் ஆதினியாத்தான் உன்ன நான் பாக்க ஆசைப்படுறன், சரியா?” என்றான்.

“கட்டாயம் நடக்கும் அண்ணா. அந்த எள்ளுவயலின்ர வாய்க்காகவே நான் ஒரு லோயர் ஆகியே ஆகோணும்!” என்று சூளுரைத்தாள்.

“அவன் என்ன செய்தவன் உனக்கு?”

“என்ன செய்தவனா? வண்டு முருகனாக் கூட வரமாட்டேனாம் எண்டு சொன்னவன். அவனையெல்லாம்…”

“இதென்ன அவன் இவன் எண்டு? மரியாதையாக் கதைக்கப் பழகு!” சட்டென்று அதட்டினான் அவன்.

முகம் சுருங்க, “நீங்களும் அவரை மாதிரியே சொல்லுறீங்க.” என்றாள் ஆதினி.

“சொல்லாம? அவன் நல்ல பதவில இருக்கிறவன் எல்லா? இப்பிடிக் கதைச்சா நாளைக்கு அவனை ஆராவது மதிப்பீனமா?” என்றான் அப்போதும் மெல்லிய அதட்டலோடு.

அப்படி, அவனும் தன்னிடம் கோபப்படுவது பிடிக்காமல் அவள் முகம் திருப்ப, “ஒரு லோயர் எந்த இடத்திலையும் நிதானம் இழக்கக் கூடாது. கோபத்தையோ குமுறலையோ காட்டக் கூடாது. நீ என்ன நினைக்கிறாய், உனக்குள்ள என்ன ஓடுது எண்டு எதிராளிக்குத் தெரியவே கூடாது. அத விட்டுப்போட்டு நீ இப்பிடி இருந்தா அவன் சொன்ன மாதிரி…” என்றவன் மிகுதியைச் சொல்லாமல் சிரிக்க, “உங்களை…” என்றவளுக்கு அவன் கழுத்தை நெரிக்கும் கோபம்.

வாய்விட்டுச் சிரித்தான் காண்டீபன். “அதெல்லாம் சும்மா. உன்ர அப்பான்ர வாரிசு நீ. விறைப்பான லோயரா வருவாய், சரியா? இப்ப எழும்பி வகுப்புக்கு நட. நேரமாச்சு!” என்றுவிட்டுப் புறப்பட்டான் காண்டீபன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock