அதுவரையில் ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல், உண்பதில் மாத்திரம் கவனம் செலுத்திய எல்லாளன் மீது, எல்லோர் பார்வையும் குவிந்தது. அவனோ, “அந்தப் பருப்பில கொஞ்சம் போடு.” என்று தங்கையிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான்.
அகரன், தன் பார்வையாலேயே அவனை எரித்தான். அவனோ உணவை முடித்துக்கொண்டு, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
மகனையே கவனித்துக்கொண்டிருந்த இளந்திரையன், “தம்பி, இஞ்ச பாரப்பு! ஏதோ ஒரு விதத்தில அவாக்கு மனம் விட்டுப் போயிற்று. எங்க எல்லாரிட்டை இருந்தும் விலகி இருக்க ஆசைப்படுறா. வலுக்கட்டாயமாப் பிடிச்சு நிப்பாட்டி, இன்னுமின்னும் வெறுப்பை வளக்கிறத விட, இப்பிடி விட்டுப் பாசத்தை வளக்கலாம். கொழும்பு ஒண்டும் பெரிய தூரமில்ல. நாங்களும் போகலாம். அவாவும் வரலாம். அதால ஒண்டும் கதைக்காதீங்கோ!” என்றுவிட்டுத் தானும் உணவை முடித்துக்கொண்டு எழுந்தார்.
இப்போது, கணவனும் மனைவியும் மட்டுமே எஞ்சியிருக்க, “உண்மையா சொறி அகரன். இந்தளவுக்கு இதெல்லாம் வரும் எண்டு நான் யோசிக்கவே இல்ல.” என்று கண்ணீருடன் சொன்னவளை, “ப்ச் விடு! நீயும் இன்னும் எத்தின தரம்தான் மன்னிப்புக் கேப்பாய்!” என்றுவிட்டு எழுந்து போய்க் கையைக் கழுவினான் அவன்.
எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுச் சியாமளா அவர்களின் அறைக்கு வந்த போது, “நான் அவளத்தான் கட்டுவன் கிழிப்பன் எண்டெல்லாம் சொல்லிப்போட்டு, அவள் கொழும்புக்குப் போறன் எண்டு சொல்லுறாள், உனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை எண்டுற மாதிரி போற நீ. நீயெல்லாம் என்னடா மனுசன்?” என்று அகரன் சீறிக்கொண்டிருந்தான்.
அங்கே எல்லாளனோ, “இதை அவள் உன்ர கலியாணத்தில வச்சே எனக்குச் சொன்னவள் மச்சான். நான்தான் இந்தளவுக்கு யோசிக்கேல்ல. அங்கிளும் ஓம் எண்டு சொல்லியிருக்கிறார் எண்டா யோசிக்காமச் சொல்லியிருக்க மாட்டார். மூண்டு வருசம்தானே. விடு பாப்பம்.” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு வைத்தான்.
“என்னடியப்பா இவன்? எனக்கு இருக்கிற கோவம் கூட இல்லாம இருக்கிறான்.” என்று புலம்பினான் அகரன். அவனுக்கு எப்படியாவது அவளைத் தடுத்துவிட முடியாதா என்கிற ஆதங்கம்.
ஆனால் அங்கே, இவன் எண்ணியது போலல்லாமல் கொதித்துப்போயிருந்தான் எல்லாளன். இப்படி விலகிச் செல்கிற அளவுக்குப் போவாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. எல்லோரையும் வைத்துக்கொண்டு, அவளிடம் கோபப்பட வேண்டாம் என்றுதான் அமைதியாக இருந்துவிட்டு வந்திருந்தான்.
மெய்யாகவே அவனை அவளுக்குப் பிடிக்காமல் போயிற்றோ? அந்தளவில் வெறுப்பாளாக இருந்தால், அவன் பிடிவாதமாக நிற்பது சரியாக வராது. இன்றைக்கு இதற்கு ஒரு முடிவைக் கண்டே ஆக வேண்டும் என்று மனம் சொல்லிவிட, அவளுக்கு அழைத்தான்.
அவள் ஏற்கவில்லை.
“ஆதினி எடு! எனக்கு உன்னோட கதைக்கோணும்!” என்று ‘வொயிஸ் மெசேஜ்’ அனுப்பிவிட்டு மீண்டும் அழைத்தான்.
“என்ன வேணும் இப்ப உங்களுக்கு?” என்றுதான் அழைப்பையே ஏற்றாள் அவள்.
“உண்மை வேணும்.”
“என்ன உண்மை?”
“உண்மையாவே உனக்கு நான் வேண்டாமா?”
“இல்ல! வேண்டாம்!”
“ஓ! ஒரு செக்கன்ட் கூட யோசிக்காமப் பதில் சொல்லுற அளவுக்குத் தெளிவா இருக்கிறியா நீ? அப்ப, அங்கிள் சத்தியமா என்னை உனக்குப் பிடிக்கேல்ல எண்டு சொல்லு!”
இதை எதிர்பாராதவள் ஒரு கணம் பதிலற்று நின்றுவிட்டாள். அடுத்த நொடியே, “என்ன விசர்க் கதை கதைக்கிறீங்க? அப்பிடியெல்லாம் சத்தியம் செய்யேலாது!” என்று சீறினாள். மனம் பதற்றத்தில் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
“இங்க பார், இவ்வளவு நாளும் கோவத்துல முறுக்கிக்கொண்டு திரியிறாய், கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியா வரும் எண்டுதான் நினைச்சிருந்தனான். இப்ப பாத்தா, பிடிக்கவே பிடிக்காத ஒருத்திய வற்புறுத்திற மாதிரி இருக்கு. அப்பிடி, உனக்கு உண்மையாவே என்னைப் பிடிக்கேல்லை எண்டா, நான் விலகிப் போறன். அதுக்கு நீ எனக்கு உண்மையச் சொல்லோணும். எனக்குத் தெளிவான பதில் வேணும். அதாலதான் கேக்கிறன்.அங்கிள் சத்தியமா உனக்கு என்னைப் பிடிக்காது எண்டு சொல்லு, இதைப் பற்றி உன்னோட நான் கதைக்கிறது இதுதான் கடைசித் தரமா இருக்கும்.” என்றான் அவன் தெளிவாக.
“எனக்கு உங்களப் பிடிக்காது பிடிக்காது பிடிக்காது! போதுமா? இதுக்காக எல்லாம் சத்தியம் பண்ணேலாது! எனக்கு என்ர அப்பா முக்கியம்.” என்று வெடித்தாள் அவள்.
“சரி, என்னில சத்தியம் செய்!”
“உங்களுக்கு என்ன விசரா? சத்தியம் சத்தியம் எண்டு சாகிறீங்க. என்னால ஏலாது.” என்று அதற்கும் எரிந்து விழுந்தவளுக்குப் பதட்டத்தில் குரல் நடுங்கியது.
இதுதானே அவனுக்கு வேண்டியது! அவள் பிடிவாதக்காரி. தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறவள். அப்படியானவளின் கட்டுப்பாட்டை உடைத்தால் மாத்திரமே உண்மை வரும் என்று தெரிந்ததால், “ஏன் ஏலாது? உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே. அதோட, உண்மையைத்தான் சொல்லப் போறாய். பிறகும் என்னில சத்தியம் செய்றதுக்கு என்ன?” என்று நின்றான்.
அவன் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு வந்த ஆத்திரத்தை அடக்கி, “உங்களுக்குத் தேவையான பதில நான் சொல்லிட்டன். திரும்ப திரும்பக் கேட்டுக்கொண்டு இருக்காதீங்க. வைங்க ஃபோன!” என்று அழைப்பைத் துண்டிக்கப் போனவளை, “வச்சியோ அங்கேயே வந்து நிப்பன்!” என்றவனின் கூற்று, சினத்தின் உச்சிக்கே கொண்டுபோனது.
“என்ன, வெருட்டுறீங்களா?” என்று சீறினாள்.
“இல்ல. எனக்குத் தேவை உண்மையான பதில். அது கிடைக்கிற வரைக்கும் உன்ன விடமாட்டன் எண்டு சொல்லுறன்.”
“அதுதான் சொல்லீட்டனே. பிறகு என்ன?”
“அதத்தான் உறுதியாச் சத்தியம் பண்ணிச் சொல்லு எண்டு சொல்லுறன். அதுக்கு என்னத்துக்கு இவ்வளவு மல்லுக்கட்டுறாய்? நீ பொய்ச் சத்தியம் செய்து, எனக்கு ஏதும் நடந்திடுமோ எண்டு பயப்பிடுறியா?”
“பயமா? எனக்கா? உங்களுக்கு என்ன நடந்தாத்தான் எனக்கென்ன?” என்று அலட்சியம் காட்டிச் சொன்னாலும் அவள் குரல் இலேசாக நடுங்கிற்று.
“ஓ! நாளைக்கு எனக்கு என்ன நடந்தாலும் உனக்கு ஒண்டும் இல்ல. இந்த உலகத்தில நான் இல்லாமப் போனாலும் பரவாயில்ல. அந்தளவுக்கு உனக்கு என்னப் பிடிக்காது. அப்பிடியா?”
அதற்குமேல் ஆதினியால் முடியவில்லை. தேகமெல்லாம் நடுங்கியது. கைகால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தன.
அவன் விடவில்லை. “சொல்லு ஆதினி. எனக்கு என்ன நடந்தாலும் உனக்குக் கவலை இல்லையா? என்னை உனக்குப் பிடிக்காதா? பிடிக்காமத்தான் கலியாணத்துக்கு ஓம் எண்டு சொன்னியா? அப்பிடி, உனக்குப் பிடிக்காத எதையாவது இதுக்கு முதல் நீ செய்து இருக்கிறியா?”
அவனுடைய விடாத கேள்விகளில் மொத்தமாக உடைந்தாள் ஆதினி.
“பிடிக்கும்! எனக்கு உங்களைப் பிடிக்கும். நிறைய நிறையப் பிடிக்கும். இது எப்ப, எப்பிடி நடந்தது எண்டு எனக்குத் தெரியாது. ஆனாலும் நீங்க எனக்கு வேண்டாம். என்னை இந்தளவுக்கு நோகடிச்ச, என்னை அழவச்ச நீங்க எனக்கு வேண்டவே வேண்டாம். என்னை மதிக்காத, என்னைக் கேவலமா நினைக்கிற நீங்க எனக்கு எண்டைக்கும் வேண்டாம்!” ஆவேசமாகக் கத்தியவள், “நான் எங்கயடி…” என்றவனின் பேச்சைக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
என்ன வார்த்தையெல்லாம் கேட்டுவிட்டான்? அவனுக்கு என்ன நடந்தாலும் அவளுக்கு ஒன்றுமே இல்லையா? அழக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு அமர்ந்திருந்தாலும் கண்களிலிருந்து கண்ணீர் அது பாட்டுக்கு வழிந்தது.
உடனேயே திருப்பி அழைத்தான். அவள் ஏற்கவில்லை. திருப்பி திருப்பி முயன்றும் பலன் சுழியமே! கிட்டத்தட்ட அவன் உயிரைக் காட்டி மிரட்டி, அவள் வாயிலிருந்து உண்மையைப் பிடுங்கி இருக்கிறான்.
நிச்சயம் அந்தக் கோபத்தில் இருப்பாள். ஆனபோதிலும் அவள் வாயிலிருந்தே அவள் மனத்தை அறிந்து கொண்டதில் மெல்லிய ஆசுவாசம். கூடவே, தன்னை அந்தளவு தூரத்துக்குப் பிடித்தும் வேண்டாம் என்று நிற்கிறவளின் அந்த மறுப்பு, அவனை மிரட்டித்தான் பார்த்தது.