நீ தந்த கனவு 24 – 1

அன்று ஆதினிக்குப் பிறந்தநாள். இருபத்தியோராவது வயதைப் பூர்த்தி செய்திருந்தாள். எல்லாளனைத் தவிர்த்து எல்லோரும் அழைத்து வாழ்த்தினார்கள். அவன் எங்கே என்று அவளாகக் கேட்கவில்லையே தவிர, வாழ்த்தாமல் விடமாட்டானே, என்ன செய்கிறான் என்கிற யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.

அந்த யோசனையோடே பல்கலை சென்று திரும்பியவளைக் குணசேகரன் வீட்டு விறாந்தையில் அமர்ந்திருந்த எல்லாளன், வரவேற்றான்.

இதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஆனந்தமா, அதிர்ச்சியா என்று தெரியாத ஒரு உணர்வில் அப்படியே நின்றாள். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு காண்கிறாள். களையும் கம்பீரமும் கூடித் தெரிந்தான்.

அவன் பார்வையும் காந்தமாய் அவளில்தான் கவ்வி நின்றது. மெல்லத் தலையசைத்து வா என்று அழைத்தான்.

“உங்களப் பாக்கத்தான்மா வந்திருக்கிறார்.” என்றார் குணசேகரன்.

அவளுக்கும் புரிந்தது. ஆனால் ஏன்? ஒரு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதற்கு அங்கிருந்து இங்கு வந்தானா? அல்லது, ஏதும் அலுவலாக வந்த இடத்தில் அவளையும் பார்த்துக்கொண்டு போக எண்ணினானா? குணசேகரன் வீட்டினரின் முன்னே எதையும் கேட்க விரும்பாமல் அமைதி காத்தாள்.

பகல் பொழுதே வந்து, சாப்பிட்டு, இளைப்பாறியும் முடித்துவிட்டான் என்று அவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது.

“வெளிக்கிட்டுக்கொண்டு வாறியா, வெளில போயிட்டு வருவம்?” என்று அழைத்தான் எல்லாளன்.

சரி என்று தலையை அசைத்துவிட்டு போய், முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.

இருவரும் வீதியோரமாக நடந்துகொண்டிருந்தனர். இருவரிடமும் ஒருவித அமைதி. திரும்பி அவளைப் பார்த்தான். ஒரு ஜீன்ஸ் டொப்பில் இருந்தாள். கொழும்புத் தண்ணீருக்குப் போலும், இன்னுமே பளபளப்பாக மாறியிருந்தாள்.

அதைவிடவும் அவளிடம் தென்படும் இந்த மௌனம்தான் புதிது. அது நீண்டு கொண்டே போகவும், “என்னடியப்பா கதைக்கிறாயே இல்ல. வந்தது பிடிக்கேல்லையா?” என்று, அவனே அவர்களுக்கிடையிலான மௌனத்தை உடைத்தான்.

“இல்ல. அப்பிடி இல்ல. எதிர்பாக்கேல்ல. அதான்.” திடீர் என்று அவனைக் கண்டதில், இல்லாத பழைய கோபத்தை இழுத்துப் பிடிக்கவும் முடியாமல், இயல்பாகக் கதைக்கவும் இயலாமல் துண்டு துண்டாகப் பதில் சொன்னாள்.

பார்வை ஒருமுறை அவளிடம் சென்று வர, “கொஞ்ச நாளாவே பாக்கோணும் மாதிரித்தான் இருந்தது. அதுதான் பிறந்தநாளச் சாட்டா வச்சு வந்திட்டன்.” என்றான்.

ஓ! அப்போ, அவளைப் பார்க்க என்றே வந்திருக்கிறான். அந்தளவுக்கு என்ன? மனம் குழம்பிற்று.

“எங்க போவம்?”

அந்த நொடியில் அவளுக்கு எதுவுமே தோன்ற மாட்டேன் என்றது.

“கோல் பேசுக்கு(காலி முகத்திடல்) போவமா?” அவனே திரும்பவும் கேட்டான்.

அவள் சம்மதிக்க, எதிரில் வந்த ஆட்டோவை மறித்து அவளோடு ஏறிக்கொண்டான். அப்படி ஏறும் போதும், ஆட்டோவிலிருந்து இறங்கும் போதும், நடக்கும் போதும் அவளைத் தன் கைப்பிடியிலேயே வைத்துக்கொண்டான்.

அப்படி, நீண்ட நாள்களுக்குப் பிறகு, அவனுடைய பாதுகாப்பின் கீழ் இருப்பது, ஒரு விதத் தைரியத்தைத் தந்தது. கவனமாக இருக்க வேண்டும், பொறுப்பாக நடக்க வேண்டும் என்றிருந்த நினைப்பெல்லாம் போய், என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ள அவன் இருக்கிறான் என்கிற பெரும் நம்பிக்கை. மனமும் உடலும் தளர்ந்தாற்போல் ஒரு ஆறுதல். எந்தப் பயமுமற்றுச் சுற்றுப்புறத்தைப் பராக்குப் பார்த்தாள்.

கடற்கரை அந்தப் பக்கம். இவர்கள் இந்தப் பக்கத்திலிருந்து வீதியைக் குறுக்கிடுவதற்காக நின்றிருந்தார்கள். அவன் கவனம் முழுக்க முழுக்க அங்குமிங்கும் சரக் சரக்கென்று விரைந்துகொண்டிருந்த வாகனங்களின் மீது மட்டுமே இருந்தது.

வேண்டுமென்றே அவன் கையை விட்டுச் சற்றே விலகினாள். அனிச்சைச் செயலாக அவளை இழுத்துத் தன்னருகிலேயே வைத்துக்கொண்டது, அவன் கரம். திரும்பி அவனைப் பார்த்தாள். அவனுக்குத் தான் என்ன செய்தோம் என்பது கவனத்திலேயே இல்லை. இப்போதும் அவன் பார்வை வீதியில்தான் இருந்தது.

அவளுடைய பாதுகாப்பு அவனுடைய இரத்தத்திலேயே ஊறிப் போன ஒன்றோ? மெல்லிய சிரிப்பு ஒன்று கிளுக் என்று மலர்ந்து விட, வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

மாலைப்பொழுதாகிவிட்டதில் கடற்கரை நிறைந்திருந்தது. ஓரிடத்தில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.

“பிறகு?” அவன் பேச்சை ஆரம்பித்தான்.

“என்ன பிறகு?”

“எப்பிடி இருக்கிறாய்?”

“நல்லாருக்கிறன்.”

“படிப்பு?

“அதுவும் நல்லாத்தான் போகுது.”

இளமுறுவல் ஒன்று முகத்தில் மலர, “கொழும்புக்கு வந்து மாறிட்டியா? இல்ல, திடீர் எண்டு நான் வந்ததால இப்பிடி இருக்கிறியா?” என்று வினவினான் அவன்.

தன் அமைதியை மனத்தில் வைத்துக் கேட்கிறான் என்று விளங்கிற்று. இருந்தும், “எப்பவும் மாதிரித்தான் இருக்கிறன்.” என்று சொன்னாள்.

“இல்லையே! இந்த அமைதியான நல்ல பிள்ளை புதுசாத் தெரியிறாளே.

இப்படி அவளோடு சிரித்துக் கதைக்கும் அவன் கூடத்தான் புதிதாகத் தெரிகிறான். அவள் என்ன அதைக் கேட்டுக்கொண்டா இருக்கிறாள்?

“இப்ப என்ன செய்யோணும் எண்டு சொல்லுறீங்க? கத்திக் கூச்சல் போடோணுமா?” கோபம் போல் காட்டி அதட்டினாள்.

அதற்குப் பதில் சொல்லாமல், “சரி, கையத் தா!” என்று கேட்டு, அவள் மடியிலிருந்த கரத்தைத் தானே பற்றிக் குலுக்கி, “இருபத்தொரு வயசுக் குமரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்றான் அவன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock