நீ தந்த கனவு 25 – 1

மீண்டும் காலவோட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது. இப்போது ஆதினி இரண்டாம் வருடத்தை முடித்து, கடைசி வருடத்தில் காலடி எடுத்துவைத்திருந்தாள். அதுவரை யாழ்ப்பாணம் வந்து போவதற்குச் சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

குணசேகரனிடம் வேலை பார்ப்பது ஒரு காரணமென்றால், கற்பதும் மிக மிகச் சிரமமாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரையில் கல்வியை ஒரு பொழுது போக்காகக் கற்றவள் அவள். விளிம்பு நிலையில் ஒவ்வொரு செமஸ்டரையும் தாண்டியவள். ஆனால் இப்போது, மெய்யான முனைப்புடன் கற்க ஆரம்பித்திருந்தாள்.

அவள்தான் வரவில்லையே தவிர, முடிகிற போதெல்லாம் அகரன் சியாமளாவோடு வந்து போனான். இப்போதெல்லாம் கோபம் போய், தன்னைச் சமாதானம் செய்துவிடத் துடிக்கும் தமையனின் செய்கைகளில் அவளுக்குச் சிரிப்புத்தான் வந்துகொண்டிருந்தது. ஆனாலும் காட்டிக்கொள்வதில்லை. விறைப்பாகவே இருந்து, இன்னுமே அவனைக் கலங்கடித்துக்கொண்டிருந்தாள்.

அடித்தான்தானே அனுபவிக்கட்டும் என்பது அவள் வாதமாயிற்று!

நேரம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் இளந்திரையனும் வந்து வந்து பார்த்துவிட்டுப் போனார். அப்படி ஒருமுறை கொழும்பு வந்தவர், மகளறியாமல் நண்பனிடம் அவளைப் பற்றி விசாரித்தார்.

“டேய் நண்பா, புலிக்குப் பிறந்தது பூனையாகுமாடா? செல்லம் குடுத்து நீதான் பிள்ளையக் கெடுத்து வச்சிருந்திருக்கிறாய். அவா கெட்டிக்காரி. கொஞ்சம் பட்டை தீட்டினாக் காணும். நட்சத்திரமா ஜொலிப்பா. அதால நீ எதுக்கும் கவலைப்படாத! பிடிச்ச வரைக்கும் இஞ்சயே இருக்கட்டும், விடு!” என்றவரின் பேச்சில் அவர் மனம் நிறைந்து போனது.

இப்போதெல்லாம் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது அவள் குரலைக் கேட்பதை வழக்கமாக்கியிருந்தான் எல்லாளன். அது, அவன் வாழ்வின் அத்தியாவசியம் ஆகியிருந்தது.

இதற்குள் அகரன் சியாமளா தம்பதி ஒரு பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆகியிருந்தனர். குழந்தை மகிழினியைப் பார்க்க, வைத்தியசாலைக்கே ஓடி வந்திருந்தாள் ஆதினி.

குட்டி குட்டிக் கைகளும் கால்களுமாகத் தமையனின் வார்ப்பில் இருந்தவளைக் கண்டு, “உங்கள மாதிரியே இருக்கிறாள் அண்ணா.” என்றாள் பூரிப்புடன்.

ஆனந்தமாக அதிர்ந்து நின்றுவிட்டான் அகரன். அவனாகத் தேடிப்போகும் நாள்களில் கூட அளந்துவைத்துக் கதைத்தவள், எல்லாவற்றையும் மறந்து இயல்பாக உரையாடியது இன்றுதான். அது, அவன் அப்பாவானதற்கு ஒப்பான மகிழ்வைத் தந்தது.

இருந்தும் பழையபடி விலகிவிடுவாளோ என்கிற பயத்தில், தன் மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல், “எனக்கு என்னவோ உன்ன மாதிரித்தான் தெரியிறா!” என்றான் மெதுவாக அவளருகில் வந்து நின்றபடி.

“நானும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே சாயல்தானே?” சின்னவளோடு விளையாடியபடி சொன்னவள், தமையனின் கை தலையை வருடவும்தான் திரும்பி அவனைப் பார்த்தாள்.

கண்ணீரும் சிரிப்பும் ஒருங்கே முகத்தில் துலங்க அவளையே பார்த்திருந்தான் அவன். அப்போதுதான் என்ன செய்தோம் என்று புரிந்தது. அவளுக்கும் தொண்டை அடைத்துக்கொண்டது.

வேகமாகக் குழந்தையைப் பார்ப்பது போல் திரும்பிக்கொண்டவளின் விழிகள், கண்ணீரால் நிறைந்து போயின.

அப்போதுதான் அங்கு வந்தான் எல்லாளன். அவன் பார்வையும் அவளில்தான் குவிந்தது. தங்கையை நலன் விசாரித்தவன், குழந்தையை வந்து பார்த்தான். குழந்தையின் அருகில் நின்ற குமரியை இன்னும் அதிகமாகப் பார்த்தான்.

அவன் பார்வையை ஆதினி உணராமல் இல்லை. இருந்தும் கலங்கியிருந்த விழிகளை அவனுக்குக் காட்ட விருப்பமற்று அவள் நிமிரவில்லை. அது, எல்லாளனுக்குக் கோபத்தைக் கிளப்பிற்று.

குழந்தை பிறக்கையில் அவனும் இங்கேதான் நின்றான். இன்னுமொருமுறை ஓடி வந்ததே அவளைக் காணும் ஆசையில்தான். அவளானால் ஒரு பார்வை கூடப் பார்க்க மறுக்கிறாள். அதுவும் அகரன் சியாமளா இருவரும் இருக்கையில்.

ஒருவிதக் கோபம் கனன்று கொண்டு வர ஆரம்பிக்க, உடனேயே அங்கிருந்து வெளியேறினான்.

இருவரையும் கவனித்துக்கொண்டிருந்த அகரனுக்குக் கவலையாயிற்று. நண்பனின் மாற்றம் அவனுக்குத் தெரியாமல் இல்லையே! எல்லாளனின் பின்னால் தானும் வந்து, “என்னடா? அவளோட கதைக்காமப் போறாய்?” என்று தடுத்தான்.

நடந்துகொண்டிருந்த எல்லாளன் நின்று திரும்பி முறைத்தான்.

“ஏன், உன்ர தொங்கச்சி கதச்சவளா என்னோட?”

“கட்டினா அவளைத்தான் கட்டுவன் எண்டு ஒற்றைக் கால்ல நிண்டது நீ. அப்ப நீதான் கதைக்கோணும். இப்பிடியெல்லாம் ரோசப்பட்டுக்கொண்டு போகேலாது!” விளையாட்டாகச் சொன்னாலும் உண்மையைத்தான் சொன்னான் அகரன்.

“அவளில இருக்கிற விசர் எல்லாத்தையும் உன்னில இறக்கி விட்டுடுவன்! ஓடிப் போயிடு!” என்றுவிட்டுப் போனான் எல்லாளன்.

*****

ஆதினி, யாழ்ப்பாணம் வந்து இரண்டு நாள்களாயிற்று. இந்த இரண்டு நாள்களும் எல்லாளன் இந்தப் பக்கம் வரவேயில்லை. வைத்தியசாலையில் வைத்து அவனோடு கதைக்காததால் உண்டான கோபம் என்று புரிந்தது. அவளும் வேண்டும் என்று செய்யவில்லையே!

அவளாக அவனைத் தேடிப் போகவும் தயங்கினாள். இருவர் மனமும் மற்றவரின்பால் ஈடுபட்டிருந்த போதிலும், அந்தளவில் அவர்களுக்குள் இணக்கமான உறவு இல்லையே! அதுவும் அவளுக்கு இன்னும் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத தடை இருந்தது.

இன்றைக்கு அவள் புறப்பட வேண்டும். இனிப் போனால் எப்போது பார்க்கக் கிடைக்குமோ தெரியாது. சரியில்லாத மனநிலையோடே தயாராகிக்கொண்டிருந்தாள்.

அப்போது, பாதியாகத் திறந்திருந்த அவள் அறையின் கதவு தட்டப்பட்டது. அதிலேயே வந்திருப்பது யார் என்று தெரிய, வேகமாகத் திரும்பிப் பார்த்தாள். அவன்தான் நின்றிருந்தான்.

முகத்தில் சிரிப்பும் இல்லை. பார்வையில் மிகுந்த கடினம்.

அதுவே அவன் கோபத்தைச் சொல்ல, நெஞ்சில் ஒரு பயப் பந்து உருண்டது. “நீங்க கீழ போங்க. பத்து நிமிசத்தில வந்திடுவன்.” அவர்களுக்குள் ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல் காட்டி, அவனை அனுப்ப முயன்றாள்.

அவள் சொன்னதற்கு மாறாகக் கதவை அடித்துச் சாற்றி விட்டு உள்ளே வந்தான் அவன். திகைப்புடன் பார்த்தவளை நெருங்கி, “என்ன பார்வை?” என்றான் அதட்டலாக.

“இல்ல! ஒண்டுமில்ல! நேரமாயிற்று, வாங்க போவம்!” அங்கிருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயல, அவள் கையைப் பற்றி இழுத்து, சுவரோடு சுவராகச் சாற்றினான் அவன்.

“என்ன செய்றீங்க?” பதறிக் கேட்டாள் ஆதினி.

“உனக்கேன் இவ்வளவு பதட்டம்? அப்பிடி நான் என்ன செய்யிடுவன் எண்டு நினைக்கிறாய்?” என்றவனின் விழிகள், முதன் முறையாக எல்லை மீறி, அவள் இதழ்களில் படிந்தன.

“கிஸ் பண்ணிடுவன் எண்டா? இல்ல…” என்று திரும்பவும் பார்வையை அவள் விழிகளுக்கு உயர்த்தினான்.

நம்ப முடியாத அதிர்வில் விரிந்தன ஆதினியின் விழிகள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அலைகிறவன் இப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்கவே இல்லை. நொடி நேரம் சொல்வதறியாது திகைத்தாலும் அடுத்தக் கணமே அனிச்சையாக அவனை விட்டு விலகியபடி, “என்ன கத இது? முதல் வெளில போங்க நீங்க!” என்று அதட்டினாள்.

அவன் அசையவில்லை. மீண்டும் அவளைச் சுவரோடு சாற்றி, “நீ முதல், கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லு! கிஸ் பண்ணவா?” என்றான், அவளை இன்னும் நெருங்கி.

கேள்வியையே மாற்றிவிட்டானே! நெஞ்சு தடதடக்க ஆரம்பிக்க, “இல்ல!” என்றாள் அவனைப் பாராமல்.

“ஏன்?”

என்ன கேள்வி இது? அவள் தடுமாறினாள்.

“உனக்கு இப்ப 22 வயசாகப் போகுது. தந்தா என்ன?”

“இல்ல, 25 வயசாகட்டும்.” பதற்றத்தில் வாய்க்கு வந்ததைச் சொன்னாள்.

“அப்ப எங்களுக்குப் பிள்ளையே இருக்குமடி. பிறகேன் நான் உனக்குத் தாறன்?” என்றான் அவன்.

என்ன எல்லாம் கதைக்கிறான்? ஆதினிக்கு காது மடல்கள் சூடாகின. “வெளில போங்க, ப்ளீஸ். எனக்கு நேரமாகுது.” என்றாள் தன் படபடப்பை மறைக்க முயன்றபடி.

அவன் முகத்தில் கோபத்தின் சாயல் கூடிப்போனது. “எப்ப பாத்தாலும் என்னத் தவிர்க்கிறதிலேயே குறியா இருப்பியா நீ? இந்த ரெண்டு நாளில ஒரு நாளாவது என்னை வந்து பாத்தியாடி? ஒரு கோலாவது செய்தியா? அவ்வளவு திமிர்! அந்தத் திமிர் ஏன் வந்தது எண்டு சொல்லு பாப்பம்?” என்றவன், அதற்குப் பதில் போன்று, அவள் இதழ்களைச் சிறை செய்தான்.

முதலில் அதிர்ந்து விடுபடப் போராடினாள் ஆதினி. அவன் விடவில்லை. அதற்கென்று கடுமையையும் காட்டவில்லை. உதடுகளின் வழி அவளை வசியம் செய்தான். மெல்ல மெல்ல அவள் திமிறல் அடங்கிற்று. அழுத்தமாய் ஆழமாய் அவன் தந்த முத்தத்தின் தாக்கத்தில் தள்ளாடி, அவனையே பற்றித் தன்னை நிலைநிறுத்த முயன்றாள்.

இதுவரையில் அவனும் அவளும் என்று இருந்தவர்கள் அவர்களான நொடிகள் அவை! இத்தனை நாள் பிரிவை, அவளை அவன் தேடிய தேடலை, அவள் மீதான தன் பிரியத்தை அவளுக்குச் சொல்லாமல் சொன்னான். இருவரின் உணர்வுகளையும் ஒன்றாகக் கோர்த்தான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock