நீ தந்த கனவு 27 – 1

பொழுது புலரும் முன்னேயே கரைக்கு வந்தாயிற்று. பொருட்களையும் காரில் ஏற்றியாயிற்று என்றதும் அவனுக்குள் பெரும் மமதை! தம் இடம் நோக்கி வாகனத்தைச் சீறவிட்டபடி விழுந்து விழுந்து சிரித்தான்.

“இதுக்காடா அண்ணா அவ்வளவு பயந்தவர்?” அவன் பேச்சில் மிகுந்த எள்ளலும் துள்ளலும்.

அவன் கூட்டாளிகளுக்கும் கொண்டாட்டமே. “அவனெல்லாம் சம்பளத்துக்கு வேல பாக்கிறவன். நேர்மையா கடமையைச் செய்றவன் மாதிரி நடிப்பானா இருக்கும் அண்ணா.” என்றவர்களின் பேச்சு, நட்டநடு வீதியில் ஹெட்லைட்டை ஒளிர நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பின் மேல் அமர்ந்திருந்த எல்லாளனைக் கண்டதும் அப்படியே நின்று போயிற்று.

எல்லோர் முகத்திலும் பெரும் கிலி. யோசிக்கக் கூட நேரமில்லை. “ஒரே பக்கமா ஓடாம ஆளுக்கு ஒரு பக்கமாத் தப்பி ஓடுங்கடா!” என்ற சதீஸ்வரன், வாகனத்திலிருந்து குதித்து ஓடினான்.

நூறு மீற்றர்கள் கூட ஓடியிருக்க மாட்டான். எல்லாளனின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த குண்டு, அவன் பின் மண்டையைத் துளைத்தது.

கூடவே, மரங்களின் மேலேயும் மறைவுகளிலும் ஏற்கனவே தயாராக நின்ற காவல் படை, மொத்தக் கூட்டத்தையும் அப்படியே வளைத்துப் பிடித்தது.

அன்றைய நாளின் கிழக்கு வெளுத்ததே, ‘தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சித் தலைவரின் மகன் சதீஸ்வரன், பெரும் தொகைப் போதைப் பொருட்களோடு தப்பியோட முயன்றதில் போலீஸ் சுட்டுக்கொலை!’ எனும் தலைப்புச் செய்தியோடுதான்.

இதை அறிந்த சத்தியநாதன் கொதித்து எழுந்தான். “எல்லாளா! இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகோணும்!” என்று, அந்த இடமே அதிரும் வண்ணம் ஆங்காரமாகக் கத்தினான்.

“ஏனடா அவனை விட்டீங்க? ஏன் என்னட்ட இதுக்குத்தான் போறான் எண்டு சொல்லேல்ல? இருந்த ஒருத்தனையும் கொன்றுட்டீங்களேடா!” சுற்றி நின்ற அத்தனை பேரையும் வெறி கொண்டு தாக்கினான்.

ஒன்றுக்கு இரண்டு தம்பிகளோடு சிங்கமெனச் சுற்றி வந்தவன், இன்றைக்கு இருவரையும் பறி கொடுத்துவிட்டான். காரணம் அந்த எல்லாளன்!

“எல்லாளாஆஆஆ !” அடித் தொண்டையிலிருந்து கத்தினான். எவ்வளவு கத்தியும் ஆத்திரம் அடங்கேன் என்றது.

செய்தி அறிந்த தமயந்திக்கு இதயம் துடிப்பதையே நிறுத்திவிட்டதோ எனுமளவில் அச்சமாயிற்று. அவர்கள் குடும்பத்தில் இப்படி ஒவ்வொருவராகக் குறைந்துகொண்டு வருகிறார்களே. அடுத்தது யார்? அவளா, கணவனா? பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

இவ்வளவு காலமும் கணவனோடு தனியாகத்தான் வசித்துவந்தாள். அந்தத் தனிமை இனிமையாய் இருந்தது போய், அடிவயிற்றைக் கலக்கச் செய்தது. அவள் கணவன் வீட்டினர் அப்படி என்னதான் செய்கிறார்கள்? இதைக் கேட்டாலும் உனக்குத் தேவை இல்லை, என்னை மட்டும் பார் என்று சொல்லுகிறவனிடம் இன்னும் எதை, எப்படிக் கேட்பது என்று தெரியவும் இல்லை.

பெற்றவர்களோடு எடுத்துக் கதைத்தாள். அவர்கள் அவளுக்கு மேலால் பயந்து நடுங்கினர். ஒற்றைப் பெண்ணை அல்லவா நம்பிக் கொடுத்துவிட்டார்கள். அவளைக் கொழும்புக்கு அழைத்துக்கொள்ளலாமா என்று கேட்க எண்ணி, சத்தியநாதனுக்கு அழைத்தனர்.

“என்ன?” அவன் உறுமிய விதமே வாயைக் கட்டிப்போட்டது.

அதற்கென்று பின்வாங்கவா முடியும்? மாட்டிக்கொண்டிருப்பது மகளாயிற்றே!

“இல்ல… கொஞ்ச நாளைக்குப் பிள்ளையை இஞ்ச கூட்டிக்கொண்டு வந்து வச்சிருக்கட்டுமோ தம்பி?” நயமாகக் கேட்டார் அவள் தந்தை.

“அவள் என்ர மனுசி. அவளை அங்க அனுப்பிப்போட்டு இஞ்ச நான் என்ன செய்றது?” என்றவனின் கேள்வியில் கூசிப்போனார் மனிதர்.

மேலே என்ன பேசுவது என்று தெரியாது சங்கடப்பட்டு நின்றவரிடம், “வைங்க ஃபோன!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

செய்தி கேள்விப்பட்டதும் பயந்துபோய் எல்லாளனுக்கு அழைத்தாள் ஆதினி. வியப்பில் புருவங்கள் உயர உடனேயே அழைப்பை ஏற்றான் அவன். “என்னடியப்பா, அதிசயமாத் தேடி எல்லாம் எடுக்கிறாய்?” என்றான் நம்ப முடியாத ஆனந்தத்தோடு.

அவனுக்கு எதிரான மனநிலையில் இருந்தவள், “உங்களுக்குக் கையையும் காலையும் வச்சுக்கொண்டு சும்மா இருக்கவே ஏலதா?” என்று படபடத்தாள்.

அந்தக் கேள்வியில் என்னென்னவோ பதில்கள் எல்லாம் மனதுக்குள் ஓட, அவன் உதட்டோரம் விசமச் சிரிப்பொன்று உதயமாயிற்று. இருந்தும் அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில், “என்ன நடந்தது? ஏன் இவ்வளவு கோபம்?” என்றான், மெய்யாகவே காரணம் அறிய விரும்பும் குரலில்.

“என்ன நடந்ததா? சும்மாவே அவன் அப்பாவக் கொல்லப் பாத்தவன். இதில நீங்க அவன்ர மற்றத் தம்பியையும் சுட்டு இருக்கிறீங்க. இனி அவன் விடுவானா? ஏன் இந்த வேல பாத்தனீங்க?”

அதற்கே அவன் முகம் மாறிப் போனது. ஆனாலும், கோபப்படாமல், “அதுக்கு என்ன செய்யச் சொல்லுறாய்? அவனுக்குப் பயந்து, அவன் செய்றதை எல்லாம் பாத்துக்கொண்டு சும்மா இருக்கச் சொல்லுறியா?” என்றான் பொறுமையாகவே.

“அதுக்கெண்டு சுடுவீங்களா? நீங்க நினைச்சிருந்தா அவனை உயிரோட பிடிச்சு, ஜெயிலுக்க போட்டிருக்கலாம். மிச்சத்தை கோர்ட் பாத்திருக்கும். அதுதான் முறையும். ஆனா, நீங்க முறையா பிளான் பண்ணி முடிச்சு இருக்கிறீங்க. இனி, அவன்ர டேர்ன். எங்கட பக்கம் ஆருக்கு என்ன நடக்குமோ எண்டு நான் பயந்து சாகோணும்.”

அதோடு அவன் பொறுமை பறந்து போயிருந்தது. “ஏய் வையடி ஃபோன! வந்திட்டா கேள்வி கேட்டுக்கொண்டு! நானும் என்னவோ ஒரு நாளும் இல்லாத அதிசயமாத் தேடி எடுக்கிறாளே எண்டு சந்தோசப்பட்டா, எனக்கே ஓடர் போடுவியா நீ? அப்ப, எங்கட குடும்பம் மட்டும் பாதுகாப்பா இருந்தாக் காணும் உனக்கு. ஊர்ச் சனத்துக்கு என்ன நடந்தாலும் பரவாயில்ல. அப்பிடித்தானே? நீயெல்லாம்… இஞ்ச பார், என்ர வேலைல மூக்கை நுழைக்கிறது இதுதான் முதலும் கடைசியா இருக்கோணும். இல்லையோ தெரியும் உனக்கு!” என்றவன் பட்டென்று அழைப்பைத் துண்டித்தான்.

உண்மையிலேயே அவனுக்கு அத்தனை இடத்திலிருந்தும் பெரும் அழுத்தம். யாழ்ப்பாணம் முழுவதும் தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சி பெரும் போராட்டம் நடத்தியது. ஆங்காங்கே அடிதடி சண்டைகள் கூட வெடித்தது.

பைக்குகளை, ஆட்டோக்களை அடித்து உடைத்தனர். மொத்த யாழ்ப்பாணமும் தன் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்து நின்றது. அவனுடைய மேலதிகாரிகள் வேறு அவனை ஒரு கை பார்த்தனர். விசாரணை எனும் பெயரில் கேள்விகளாகக் கேட்டுக் குடைந்து எடுத்தனர். இன்னொரு பக்கம் பேப்பர் ரிப்போர்ட்டர்ஸ்.

இத்தனையையும் ஒற்றை ஆளாக நின்று சமாளித்துக்கொண்டிருக்கிறான். இளந்திரையன் கூட, “அவசரப்பட்டிட்டீங்களோ எண்டு இருக்கு எல்லாளன். கோர்ட்ல நிப்பாட்டி இருக்க, காலத்துக்கும் வெளில வரேலாத அளவுக்குத் தண்டனை கிடைச்சிருக்கும்.” என்று சொல்லியிருந்தார்.

அது அவனுக்கும் தெரியும். பெரும் தொகைப் போதைப் பொருட்களோடுதான் சதீஸ்வரனைப் பிடித்தான். மரண தண்டனை கிடைப்பதற்கான சாத்தியம்தான் அதிகம். ஆனால், அவனுக்குத்தான் விட மனமில்லை. பெற்றவர்களின் வழக்கில் அவன் தப்பிவிட்ட கறல் இருந்ததில் தன் கையாலேயே பழி தீர்த்துக்கொண்டான்.

இதனால் இன்னும் எவ்வளவு இடர்கள் வந்தாலும் தாங்குவான்.

இப்படி இருக்கையில்தான் அவள் அழைத்தாள். அந்த நிமிடம் அவள் ஆதரவை, தட்டிக்கொடுக்கும் வார்த்தைகளை அவன் மனம் வெகுவாக எதிர்பார்த்தது. கவனமாக இரு என்றிருக்கலாம். எப்படி இருக்கிறாய் என்று கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு இன்னொரு அதிகாரியாக மாறிக் கேள்விகளாகக் கேட்கிறாள்.

இன்னுமே எரிச்சல் மேலோங்கிற்று. எந்த வேலையையும் பார்க்க முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான். தன் கோபம் ஒரு பக்கம், அவளிடம் கத்தியிருக்க வேண்டாமோ எனும் எண்ணம் இன்னொரு பக்கம் என்று சலிப்பாயிற்று.

அப்போது ஒரு கோப்பைத் தேநீரோடு வந்தான் கதிரவன். “இதெல்லாம் நீங்க பாக்காததா சேர். எல்லாம் வெல்லலாம்.” என்று நீட்டினான்.

“உங்களுக்கு?” வாங்கியபடி வினவினான்.

“வெளில இருக்கு சேர்.”

“இஞ்சயே கொண்டு வாங்க.”

அவனும் தன்னுடையதோடு வர, இருக்கையைக் காட்டினான். இருவரும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தலைவலிக்கு இதமாக இரண்டு மூன்று மிடறுகளைப் பருகிவிட்டு நிமிர்ந்த எல்லாளன், உதட்டோரம் மின்னும் சின்ன சிரிப்புடன் தன்னையே பார்த்த கதிரவனைக் கண்டு, “என்ன?” என்றான்.

“ஒண்டுமில்ல சேர்.” என்றவனின் முறுவல் பெரிதாயிற்று.

இப்போது, எல்லாளன் முகத்திலும் அது தொற்றிற்று. இருவர் மனத்திலும் சதீஸ்வரனைச் சுற்றிவளைத்துப் பிடித்த காட்சியே மின்னி மறைந்தது. அவ்வளவு நேரமாக அழுத்திய அழுத்தமெல்லாம் நொடியில் மறைந்து போக, வாய் விட்டுச் சிரித்தபடி ஒரு கையை முன்னே நீட்டினான் எல்லாளன்.

விழிகளில் மெல்லிய வியப்பொன்று வந்து போக, கதிரவனும் முன்னே வந்து, ‘ஹைஃபை’ கொடுத்தான்.

*****

அன்று இரவு, அகரன் வீட்டுக்கு எல்லாளன் வந்தபோது, வீடியோ கோலில் மகிழினியோடு கதைத்துக்கொண்டிருந்தாள் ஆதினி. அப்போதுதான் காலையில் அவளிடம் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தது அவனுக்குத் திரும்பவும் நினைவில் வந்தது.

மகிழினியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தவனின் பார்வை, திரையில் தெரிந்தவளைத் தீண்டியது.

வேண்டுமென்றே அவனைப் பாராது, “மகிழ் குட்டி, அத்த வச்சிட்டுப் பிறகு எடுக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டிக்கப்போனாள் அவள்.

“ஏன், உங்கட அத்த மாமாவோட கதைக்க மாட்டாளாமா? என்ன எண்டு கேளுங்கோ செல்லம்.” என்று தடுத்தான் எல்லாளன்.

“சிடுமூஞ்சிகளோட எல்லாம் நாங்க கதைக்கிறேல்ல எண்டு சொல்லுங்க செல்லம்.”

யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, “அத்த இஞ்ச வந்தா, மாமா மற்ற முகங்களையும் காட்டுவாராம் எண்டு சொல்லுங்க குட்டி.” என்று குரலைத் தணித்துச் சொன்னவனிடத்தில் மிகுந்த நகைப்பு.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock