நீ தந்த கனவு 28 – 1

அன்று, எல்லாளனைத் தன் அலுவலகத்துக்குத் தனியாக அழைத்த எஸ்பி, ஒரு கோப்பினை அவனிடம் நீட்டினார். அந்தக் கோப்பின் பெயர், ‘தமயந்தி சத்தியநாதன்’. புருவங்கள் சுருங்க கோப்பினுள் வேகமாக விழிகளை ஓட்டிவிட்டு நிமிர்ந்து, அவரைக் கேள்வியாக ஏறிட்டான் எல்லாளன்.

“இந்த கேஸ் பற்றின விபரம், என்னையும் உங்களையும் தாண்டி வெளில போகக் கூடாது எல்லாளன். எஸ்எஸ்பி(Senior Superintendent of Police) நேரடியா என்னட்டத் தந்தது. அத நான் உங்களிட்டத் தந்திருக்கிறன். நீங்க எனக்கு ரிப்போர்ட் பண்ணினாப் போதும்.” என்றார் அவர்.

“எல்லாம் ஓகே சேர். சத்தியநாதன் ஏன் எங்களிட்ட வந்திருக்கிறார்? அவரால இத என்ன எண்டு பாக்கேலாமப் போனதாமா?” சத்தியநாதனைப் பற்றி நன்றாக அறிந்திருந்தவனுக்கு என்னவோ இடறியது.

“என்ன கேள்வி இது எல்லாளன்? அவர் ஒரு பிரச்சினையை முறையா அணுக நினைச்சிருக்கிறார். அதால எங்களிட்டத் தந்திருக்கிறார். அதைப் பிழை எண்டு சொல்லுறீங்களா?”

அப்படியன்று என்பதாகத் தலையை அசைத்துவிட்டு, “இது சத்தியநாதன்ர ஸ்டைல் இல்லை எண்டு சொல்லுறன் சேர். ஏன் எண்டு என்னால சரியா கெஸ் பண்ணேலாம இருந்தாலும் என்னவோ இருக்கு. கெதியில(விரைவில்) கண்டு பிடிக்கிறன்.” என்று சொன்னான்.

அவன் மனைவிக்கு யாரோ போதையைப் பழக்கி இருக்கிறார்கள். இன்று, அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வது மிக மிகச் சிரமம் எனும் நிலை. இதற்கெல்லாம் காரணமானவர்களைக் கண்டுபிடித்து, சத்தமே இல்லாமல் தூக்கி இருந்தான் என்றால், அதுதான் சத்தியநாதன். இது அவனன்று! அவனை எதிலும் சிக்க வைக்க முயல்கிறானோ? அப்படி எதில்?

“எதுவா இருந்தாலும் போன முறை மாதிரி எதுவும் செய்றேல்ல எல்லாளன். உங்களிட்டக் குடுக்க வேண்டாம் எண்டு எஸ்எஸ்பி சொன்னவர். அதையும் மீறித் தந்திருக்கிறன். அதுக்குக் காரணம் உங்களில இருக்கிற நம்பிக்கை. அத நீங்க காப்பாத்தோணும்.”

சத்தியநாதனைப் பற்றி இன்னும் ஏதாவது துப்புக் கிடைக்கலாம் என்று எண்ணியவனுக்கும் அந்த கேஸை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை.

அதில், “ஓகே சேர்! ஆனா, இது கரண்ட்ல நடக்கிற பிரச்சினை இல்ல. ஏற்கனவே நடந்தது. அதவிட, தமயந்தி செக்கண்ட் இயர்லதான் இஞ்ச வந்திருக்கிறா. அதுக்கு முதல் கொழும்பில இருந்திருக்கிறதா. சோ, நான் கொழும்பில இருந்து தொடங்கோணும். அதுக்கு டைம் வேணும்.” என்றான் நேராகவே.

இத்தனை வேகமாக, அத்தனை தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டவனைத் தனக்குள் மெச்சிக்கொண்டார். அவன் புஜத்தில் தட்டிக்கொடுத்து, “உங்கட கப்பாசிட்டி என்ன எண்டு எனக்குத் தெரியும் எல்லாளன். உங்களிட்ட இருந்து நல்ல பதில, கெதியா எதிர்பாக்கிறன். ஒரு சின்ன விசயம் கூட வெளில கசியக் கூடாது. வலு கவனம்!” என்று எச்சரித்துவிட்டுப் போனார் அவர்.

அன்றிலிருந்தே எல்லாளனுக்கு மனது சரியில்லை. கண்ணுக்குள் விழுந்த துரும்பாகச் சத்தியநாதன் உறுத்திக்கொண்டே இருந்தான். யாருக்கு என்ன செய்யப் போகிறான் என்கிற கேள்வி குடைந்துகொண்டிருந்தாலும் தமயந்தி பற்றிய விசாரணையைக் கொழும்பு, யாழ்ப்பாணம் என்று இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் ஆரம்பித்திருந்தான்.

இப்படி இருக்கையில்தான் அவனுக்கு அழைத்தான் கதிரவன்.

“சேர், எட்டு வயசுப் பிள்ளை மயங்கி விழுந்திட்டா எண்டு ஆஸ்பத்திரில சேர்த்திருக்கினம். செக் பண்ணின டொக்டர் போதை மருந்து உட்கொண்டு இருக்கிறா எண்டு சொல்லுறார்.”

“என்ன சொல்லுறீங்க கதிரவன்? எட்டு வயசுப் பிள்ளைக்கு எப்பிடி இது கைல கிடைச்சது? அம்மா அப்பாவை விசாரிங்க. லொக்கேஷன எனக்கு அனுப்பிவிடுங்க.” என்று உத்தரவிட்டுவிட்டு அடுத்த நிமிடமே தன் ஜீப்பை அங்கு விரட்டினான்.

அங்கு, அந்தச் சிறுமிக்கு என்னாயிற்றோ என்கிற கலக்கத்துடன் அயலட்டையினர் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

“என்ன நடந்தது? நடந்ததைப் பாத்த ஆராவது இருந்தா மட்டும் வந்து சொல்லுங்க!” சிறுமியின் வீடிருந்த சுற்று வட்டாரத்தை வெகு கவனத்துடன் விழிகளால் அலசியபடி வினவினான்.

அப்போது ஒரு பெண், மகளைக் கையில் பற்றியபடி தயக்கத்துடன் அவன் முன்னே வந்து நின்றார்.

“இவா என்ர மகள் சேர். பக்கத்து வீடுதான் எங்கட வீடு. இவாவும் அவாவும்தான் விளையாடிக்கொண்டு இருந்தவே. திடீர் எண்டு இந்துஜா மயங்கி விழுந்திட்டா எண்டு இவாதான் ஓடிவந்து சொன்னவா. பதறியடிச்சுக்கொண்டு வந்து பாத்தா ஆளுக்குப் பேச்சும் இல்ல, மூச்சும் இல்ல. தண்ணி தெளிச்சு, தட்டிப்பாத்து என்ன செய்தும் எழும்பேல்ல சேர். வச்சிருக்க வச்சிருக்க ஏதும் நடக்கக்கூடாதது நடந்திடுமோ எண்டுற பயத்தில இவரும் சேர்ந்துதான் ஆட்டோ பிடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய்ட்டினம். என்ன நடந்தது எண்டு மகளை விசாரிச்சனான் சேர். பூக்கண்டுக்குத் தண்ணி விட்டு விளையாடி இருக்கினம். பிறகு, சிரிஞ்ச் வச்சு விளையாடினவையாம். வேற ஒண்டும் செய்யேல்லையாம் எண்டு சொல்லுறா.” என்று தயங்கி தயங்கிச் சொன்னார்.

“சிரிஞ்ச்சா? மருந்து ஏத்துற ஊசியா?” இவர்களின் கைக்குக் கிடைக்கிற அளவுக்கு எப்படி அது வந்தது என்கிற கேள்வியுடன் அந்தச் சிறுமியைப் பார்த்தான்.

அழுது சிவந்த முகத்தோடு, கண்களில் அப்பட்டமான பயத்தைத் தேக்கி நின்றவள் அவன் பார்க்கவும் அன்னையின் பின்னே மறைந்தாள்.

“பிள்ளைக்கு என்ன பெயர்?” அவள் முகம் பார்த்துக் கனிவுடன் வினவினான்.

“விதுரா.”

“விதுரா வடிவான பெயர். எந்த வகுப்புப் படிக்கிறீங்க?”

“மூண்டாம் வகுப்பு.”

“இந்துஜாவும் மூண்டாம் வகுப்பா?”

ஆம் என்று தலையை ஆட்டினாள் அவள்.

“ரெண்டு பேரும் ஒண்டாவா பள்ளிக்கூடம் போறனீங்க?”

“ஓம்.”

“இந்துவுக்கு ஒண்டும் இல்ல. ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்திடுவா. நீங்க பயப்பிட வேண்டாம், சரியா?” என்று, அவளின் பயத்தை முதலில் தெளிய வைத்தான்.

அவளும் தலையை ஆட்டினாள். அப்படியே என்ன விளையாடுவார்கள், என்ன பிடிக்கும் என்று அவளுக்கு ஏற்பக் கேள்விகளைக் கேட்டு அவளை இயல்பாகக்கிவிட்டு, “அந்த சிரிஞ்ச் எங்க? இருக்கா?” என்றான் அவளின் அன்னையிடம்.

அங்கிருந்த மரத்தின் இரண்டு கிளைகளுக்கு நடுவில் செருகி வைத்திருந்த ஊசியை எடுத்துக் கொடுத்தார் அவர்.

“இந்துஜா இத எங்க இருந்து எடுத்தவாமா?”

“வேலில செருகி இருந்தது.”

“ஓ!” என்றவன் பார்வை, வேலியின் புறம் திரும்பிற்று. தென்னோலை வேலி. அந்த வீதியால் போகிற யார் வேண்டுமானாலும் போகிற போக்கில் ஊசியைச் செருகிவிட்டுப் போகலாம்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock