நீ தந்த கனவு 32- 1

எல்லாளன் மனத்துக்குள் நிறையக் கேள்விகள் முட்டி மோதின. காண்டீபனின் தற்சமய மனநிலை தெரியாது எப்படிக் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் கேட்கும் அவசியமற்றுத் தானாகவே மனம் திறக்க ஆரம்பித்தான் காண்டீபன்.

“வயசு இப்பதான் முப்பதைத் தாண்டுது. ஆனா, ஓடி ஓடிக் களைச்சிட்டன் மச்சான். நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்காதா எண்டு இருக்கு.”

“அதுக்கு நீ இதெல்லாம் செய்யாம இருந்திருக்க வேணும்.” சீறிவிழுந்தான் எல்லாளன்.

உடனே பதில் சொல்லவில்லை காண்டீபன். கொஞ்ச நேரம் விழிகளை மூடியபடியே இருந்தான்.

பின் திரும்பி, “அப்பிடி இருந்திருந்தா அது இன்னும் என்ர நெஞ்சப் போட்டு அறுத்திருக்குமடா! இப்பயாவது எங்க எல்லாரையும் துரத்தி துரத்தி அடிச்சவனுக்குக் கொஞ்சமாவது திருப்பி அடிச்சனே எண்டுற சந்தோசம் இருக்கு. அதையும் செய்யாட்டி என்னை நானே புழு மாதிரி உணர்ந்திருப்பன் மச்சான். யோசிச்சுப் பார், ஆருமே அடிக்கிறவனுக்கு உடனேயே திருப்பி அடிக்கிறேல்லயடா. விலகிப் போகத்தான் நினைப்பாங்கள். அடிக்கு மேல அடி விழுந்துகொண்டு இருக்கேக்க, அதைத் தாங்கேலாத அளவுக்கு வலிக்கேக்கதான் திருப்பி அடிப்பம். அடி வாங்கிச் சாகிறதுக்குப் பதிலா, திருப்பி அடிச்சுப்போட்டுச் சாகலாம் எண்டுற கோபம்தான்டா இது!”

“அதுக்கு நீ சட்டப்படி போயிருக்கோணும்!”

“பெரிய சட்டம்!” என்றான் காண்டீபன் அலட்சியமாகக் கையை விசுக்கி.

எல்லாளன் முறைக்க, “மாமா மாமியக் கொன்றவங்களை உன்ர சட்டத்தால என்ன செய்ய முடிஞ்சது? ஏஎஸ்பியா இருந்தும் அவங்களைப் பிடிக்க எத்தின வருசமானது? அப்பவும் ஒருத்தனுக்குத்தானே தண்டனை வாங்கிக் குடுத்தாய். மற்றவனுக்குக் கூட நீதான் தண்டனை குடுத்தியே தவிர, உன்ர சட்டம் இல்ல. என்ர அப்பா ஒரு போலீஸ். அவருக்கு நீதி கிடைச்சதா? குடிச்சிட்டு, எங்கயோ போய்ச் சண்டை பிடிச்சு, இப்பிடி ஆகிட்டுதாம் எண்டு கேஸ முடிச்சிட்டாங்கள். நீ சொல்லு, அவர் குடிக்கிறவரா?” என்றவனின் கேள்வியில் தாடை இறுக அவனைப் பார்த்தான் எல்லாளன்.

“போதையப் பாவிக்கிற பிள்ளைகளைப் பிடிச்ச, சரி. டீலர்ஸ பிடிச்ச, ஓகே! ஆனா, இது எல்லாத்துக்கும் தலையா இருக்கிறவனை உன்னால என்ன செய்ய முடிஞ்சது? இல்ல, உனக்கும் உன்ர டிப்பார்ட்மெண்ட்டுக்கும் இதுக்கெல்லாம் காரணம் ஆர் எண்டு தெரியாது எண்டு சொல்லுறியா?” என்றவனின் கேள்விகளில் முகம் கறுக்க முகத்தைத் திருப்பிக்கொண்டான் எல்லாளன்.

“அண்டைக்கு அண்ணண் தம்பி மூண்டு பேரும் மட்டும் சேந்து செய்த கொலை கொள்ளையை, இண்டைக்கு ஒரு கும்பலாச் சேந்து செய்றாங்களடா. சட்டத்துறை, நீதித்துறை எண்டு எல்லாத்துக்கையும் அவங்களுக்கு ஆக்கள் இருக்கு. சதீஸ்வரனை கோர்ட்டுக்கு கொண்டுபோகாம நீ சுட்டதுக்குக் காரணம் என்ன எண்டு நீயே யோசி! உன்னால முடிஞ்சா, இப்ப நீ போடுற உன்ர யூனிபோர்மால முடிஞ்சா, உன்ர சட்டத்தால முடிஞ்சா எல்லாத்துக்கும் தலையா இருக்கிறானே ஒருத்தன், அவனுக்குத் தண்டனையை வாங்கிக் குடுத்துக் காட்டு! அதுக்குப் பிறகு வந்து நான் செய்தது எல்லாம் பிழை எண்டு சொல்லு, நானே உன்னட்ட மன்னிப்புக் கேக்கிறன்.” என்றான் அவன்.

“ஆயிரம்தான் நீ சொன்னாலும் நீ செய்தது சரியே இல்ல காண்டீபா!” என்றான் எல்லாளன்.

“அது எனக்கும் தெரியும் மச்சான்!” என்றபடி, எல்லாளனின் மடியில் தலை வைத்துச் சாய்ந்துகொண்டான் காண்டீபன்.

உச்சி வெய்யிலில், தார் வீதியில், செருப்பே இல்லாமல் நடந்தவனுக்கு மர நிழல் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது நண்பனின் மடி! சுகமாக விழிகளை மூடிக்கொண்டான்.

வலது காலை மடித்து வைத்து, மற்றக் காலைத் தரையில் நீட்டி இருந்தான். அந்தக் காலில்தான் கம்பி வைத்திருக்க வேண்டும் என்று கணித்தான் எல்லாளன்.

“எனக்கும் உனக்கு முன்னால குற்றவாளியா நிக்க ஆசை இல்லயடா. உன்ன இறுக்கிக் கட்டிப்பிடிக்கோணும் மாதிரி இருக்கு. பழைய மாதிரி உரிமையோட பழக ஆசையா இருக்கு. ஆனா, என்னால முடியேல்ல. ‘உன்ர கை ரெண்டும் கறை பட்ட கையடா’ எண்டு, என்ர மனமே என்னட்டச் சொல்லுது. அதால, நீ எனக்குத் தண்டனையை வாங்கித் தா. ரெண்டு வருசமோ, மூண்டு வருசமோ அனுபவிச்சுப்போட்டு வந்து, உன்னக் கட்டிப்பிடிக்கிறன்.” என்றான் அவன்.

நெஞ்சில் பாரமேற அப்படியே அமர்ந்திருந்தான் எல்லாளன். என்ன நடக்கும் என்று தெரிந்தே அனைத்தையும் செய்தேன் என்பவனை என்ன செய்வது?

“நீ எந்த மனநிலைல அந்த ஊர விட்டு வந்தியோ, அதே மனநிலைலதான் நானும் வந்தனான். நீயில்லாம, மாமா மாமி இல்லாம, அந்த ஊரே சுடுகாடா ஆன மாதிரி ஒரு உணர்வு! நீங்க இருந்த வீட்டுப் பக்கம் போகவே பயம். மிதிலாவும் ஒதுங்கிட்டாள். அப்ப, நானும் அதப் பெருசா யோசிக்கிற நிலைமைலையோ, அவளைக் கவனிக்கிற நிலையிலையோ இருக்கேல்ல மச்சான்.” என்றவன் இழுத்து மூச்சை விட்டான்.

“ஊர விட்டு வந்து அப்பாக்கு ஆங்கில வைத்தியம், சித்த மருத்துவம் எண்டு எல்லாம் பாத்து, இனி அவருக்கு இடுப்புக்குக் கீழ இயங்கவே இயங்காது எண்டு முடிவாகிறதுக்கே மூண்டு வருசமாச்சு. இதுல, என்ர கையையும் காலையும் பாக்கோணும். படிப்பு ஒரு பக்கம், பார்ட் டைம் வேல இன்னொரு பக்கம் எண்டு நரகமடா கொஞ்சக் காலம்.”

ஆரம்ப நாள்களில் எல்லாளன் அனுபவித்த அதே சிரமங்கள். இவனுக்காவது கைகால்கள் வலுவாக இருந்தன. வீட்டுக்கு வந்தால் சமைத்துத் தந்து, அவனைப் பார்த்துக்கொள்ளச் சியாமளா இருந்தாள். நிச்சயம் அது எதுவும் இல்லாது, இவனை விடவும் சிரம வாழ்க்கையைத்தான் அவன் அனுபவித்திருப்பான்.

மனத்தில் கனமேற மடியில் கிடந்தவனின் முகம் பார்த்தான்.

“ஆனாலும் மனம் கேக்கேல்ல. ஒரளவுக்கு எல்லாம் சரியானதும் ஊருக்குப் போனனான். நீ வந்தியா, உன்னைப் பற்றி ஏதும் தெரிஞ்சதா எண்டு கேக்க, மிதிலா வீட்டுக்குப் போனா…” என்றவனுக்கு மேலே பேச்சு வரமாட்டேன் என்றது.

என்னவோ அவன் விரும்பத் தகாத ஒன்று வரப்போவதை மனம் சொல்ல, தன்னை இறுக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தான் எல்லாளன்.

“மாமி… மிதிலான்ர அம்மா என்னடா பிழை செய்தவா? இளம் வயசில இருந்தே மனுசனும் இல்லாம, மகள்ல உயிரா இருந்த மனுசி, தன்னைச் சுத்தி என்ன நடக்குது எண்டு தெரியாத நிலைல இருந்தாடா. மிதிலா… அந்த நேரம் அவளை நீ பாக்கேல்லை. பாத்திருந்தாத் தெரிஞ்சிருக்கும். இன்னுமே அவளுக்குக் கைகால் நடுக்கம் முழுசாப் போகேல்ல. இனி நானும் இல்லாம, என்ன செய்யப் போறாளோ தெரியாது. முந்தி எப்பிடி இருந்தவள் சொல்லு? அவளுக்குப் போதையப் பழக்கி…” கனத்த குரலில் சொல்லிக்கொண்டு வந்தவன் பேச்சை நிறுத்திவிட, அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தான் எல்லாளன்.

காவல் அதிகாரியாக நின்று, அவ்வளவு மிரட்டிக் கேட்டும் சொல்லாதவன், நண்பனின் காலடியில் தன் மனத்தைத் திறந்துகொண்டிருந்தான்; தன்னை அறியாமலேயே! அதைவிட, அவன் சொல்லிக்கொண்டிருக்கும் விடயம்? நெஞ்சில் ஈட்டி ஒண்டு பாய்வது போலிருந்தது.

“அஞ்சலி ஆர் எண்டு தெரியுமா?” விழிகளைத் திறந்து வினவினான் காண்டீபன்.

வார்த்தைகள் மீது நம்பிக்கையற்றுத் தலையை இல்லை என்று அசைத்தான் எல்லாளன்.

“அவளும் எங்கட ஊர்தான். போஸ்ட் மேன் தாத்தாவ உனக்குத் தெரியும் எல்லா? அவரின்ர பேத்தி. அவள்தான் காசுக்குப் பதிலா மிதிலாக்குப் பழக்கி இருக்கிறாள். இவளும் நாங்க ரெண்டு பேரும் இல்லாமப்போனதில, அவளோட சேர்ந்திருக்கிறாள். மிதிலாக்குச் சும்மாவே திடம் இல்லாத உடம்பு. சின்னதாக் காய்ச்சல், சளி வந்தாலே தாங்கமாட்டாள். போதையத் தாங்குவாளாடா? அவளுக்கு அது ஒத்துக்கொள்ளவே இல்லை. அது இல்லாமையும் இருக்க முடியேல்ல. ஒரு கட்டத்தில பைத்தியம் மாதிரி ஆகி, மாமிக்கு அடிச்சு மண்டைய உடைச்சிட்டாள். அதிலதான் மாமிக்கு மூளை பிசகிப் போயிற்றுது. இப்பவும் நிதானமா இருந்தா அமைதியா இருப்பா. மனநிலை குழம்பிட்டா மிதிலாவப் பக்கத்திலேயே விடமாட்டா.” என்றுவிட்டுப் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தான் எல்லாளன். சத்தியசீலனின் குடலை உருவும் வெறியே உண்டாயிற்று.

“இதையெல்லாம் கண்ணால பாத்த பிறகு எப்பிடியடா அவளை அப்பிடியே விட்டுட்டு வாறது? ஊர்ச் சனம் எல்லாம் சேர்ந்து, ரெண்டு பேரையும் ஏதாவது ஒரு ஹோம்ல சேர்க்க இருந்தவே. வேண்டாம் எண்டு சொல்லி என்னோட கூட்டிக்கொண்டு வந்திட்டன். ஆனா… ” என்றவன், பேச்சை நிறுத்திவிட்டு எல்லாளனைப் பார்த்தான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock