நீ தந்த கனவு 32 – 2

“அவளுக்கு அந்த நேரம் வாய்க்க புண், வயித்துக்க புண், கைகால் நடுக்கம், ஒருவிதப் பயம் எண்டு அவள் சுயத்திலேயே இல்ல மச்சான். தன்னில கூடக் கவனம் இல்ல. சின்ன வயசில இருந்து தெரிஞ்ச ஒரு நண்பனா மட்டுமே இருந்து, அவளை என்னால கையாள ஏலாம இருந்தது. எல்லாரும் ஒரு வீட்டிலேயே இருக்கிறதுக்கும் எங்களுக்க ஒரு முறையான உறவு தேவையா இருந்தது. அப்பாவும் சொன்னார். அப்ப எனக்கு நீ எங்க இருக்கிறாய் எண்டு தெரியாது. உன்னைத் தேடுற அளவுக்கு என்ர நிலமையும் இல்ல. மூண்டு பேருக்குமே என்ர உதவி தேவ. இதுல நான் வேலையும் செய்யோணும். அதுதான் அவளைக் கட்டிட்டன்.” என்றவனின் விழிகளில் என்னைப் புரிந்துகொள் என்கிற பெரும் தவிப்பு.

“லூசாடா நீ!” என்றான் எல்லாளன்.

அவன் செய்திருக்க வேண்டியவற்றை அவன் இடத்திலிருந்து செய்திருக்கிறான். சிதைந்து போயிருந்தவர்களைத் திருத்தி எடுத்திருக்கிறான். அதற்கு அவன் கோபப்படுவானா?

அதைவிட, இது இப்படித்தான் ஆக வேண்டும் என்று இருந்திருக்கிறது போலும். கூடவே, அவனின் ஈர்ப்புக்கு வலிமை இருந்திருந்தால், காண்டீபன் தேடிப் போனது போல அவனும் தேடிப் போயிருப்பானே. அப்படி அவன் செய்யவில்லையே. பிறகென்ன?

“அதுக்குப் பிறகான என்ர நெருக்கம், உரிமையான கவனிப்புத்தான் அவள் தனி இல்ல, அவளைப் பாதுகாக்க ஆரோ இருக்கினம் எண்டு விளங்கி இருக்கோணும். மெல்ல மெல்லத் தேறி வந்திட்டாள். ஆனா என்ன, அவள் நிதானத்துக்கு வந்த பிறகு, நடந்த கலியாணத்தால அவளுக்கும் ஒரு விதமான சங்கடம். உங்க ரெண்டு பேரைப் பற்றி எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் எண்டுறது அவளுக்கும் தெரியும். அது வேற, அடுத்தச் சிக்கலா எங்களுக்க வந்து நிண்டது. அதுல இருந்து அவளை வெளில கொண்டு வந்து, நான் அவளோட வாழுறதுக்கே பெரும் போராட்டமா இருந்தது. அந்த நேரத்தில உன்னக் கண்டு பிடிச்சிட்டன்தான். ஆனா எனக்கு உனக்கு முன்னால வந்து நிக்க விருப்பம் இல்ல. அது திரும்பவும் எல்லாருக்கும் சங்கடத்தைத் தரும் எண்டு நினைச்சன். விரும்பியோ விரும்பாமலோ நடந்த கலியாணம் நடந்ததுதான். அதை நல்ல முறைல கொண்டு போகத்தான் ஆசைப்பட்டனான்.” அதோடு தன் பேச்சை நிறுத்தியிருந்தான் காண்டீபன்.

இருவரிடையேயும் அழுத்தமான அமைதி. எல்லாளனுக்கு நண்பன் கடந்து வந்த பாதையை எண்ணி நெஞ்சு கனத்தது.

“தமயந்தியப் பற்றி அஞ்சலிதான் சொன்னவள். அவ்வளவு காலமும் கொழும்பில இருந்தவள், சத்தியநாதனக் கட்டி இஞ்ச வந்திருக்கிறாள். வீட்டில இருக்கிற ஒவ்வொருத்தரையும் பாக்க பாக்க, அவளைச் சும்மா விட மனமே இல்ல. யோசிச்சுப் பார், காவல்துறையாலேயே லேசுல அவனைத் தொடேலாது. ஆனா, சிம்பிளா தட்ட எனக்கு ஒரு சான்ஸ் கிடச்சிருக்கு. அத விடச் சொல்லுறியா? அதுதான் துணிஞ்சு இறங்கிட்டன்.”

“அதுக்காகத் தமயந்திக்கு நீ செய்தது சரி எண்டுறியா? அவள் உனக்கு என்ன பாவம் செய்தவள்?”

“அவனைக் கட்டினதே அவள் செய்த பெரும் பாவம்தானடா! லொலிதான் குடுத்தனான். மக்சிமம் அவளுக்கான பாதிப்பு, குழந்தை பிறக்காது. பரவாயில்ல, அவனை மாதிரி ஒருத்தனுக்குப் பிள்ளை தேவையே இல்ல! என்ர மிது ஒரு பிள்ளைக்காக என்னவெல்லாம் பாடு பட்டவள் எண்டு எனக்குத்தான் தெரியும். அவனும் அனுபவிக்கட்டும்!” என்றான் ஒருவிதத் திருப்தியோடு.

“எருமை! அதுக்காக நீ எந்த நிலமைல வந்து நிக்கிறாய் எண்டு விளங்குதா உனக்கு!” என்று அவன் தோளிலேயே ஒன்று போட்டான் எல்லாளன்.

அதைப் பற்றி ஒன்றுமில்லை என்பதுபோல் அலட்சியமாகக் கையை விசுக்கினான் காண்டீபன். எல்லாளனுக்கு கடும் சினம் உண்டாயிற்று. தன்னை அழித்துச் சத்தியசீலனுக்குத் தண்டனை கொடுக்க முயன்றவனை என்ன செய்ய என்று விளங்கவேயில்லை.

“ஆயிரம் காரணம் சொன்னாலும் தமயந்திக்கு நீ செய்தது சரியே இல்ல காண்டீபன்!” என்றான் அப்போதும்.

“அதாலதான் மச்சான், தண்டனை அனுபவிக்கத் தயாரா இருக்கிறன் எண்டு சொல்லுறன்.”

“அப்ப உன்ர குடும்பம்?”

“நீ இருக்கிறாய்தானே?”

“எனக்கு வாற ஆத்திரத்துக்கு உன்னத் தூக்கிப்போட்டு மிதிக்கோணும் மாதிரி இருக்கு!” என்று பல்லைக் கடித்தான் எல்லாளன். “அஞ்சலியை நீ இதுக்குப் பயன் படுத்தலாமாடா? சத்தியநாதன் அவளை விட்டு வச்சிருக்கிறது பெரிய விசயம். இனியும் அவளுக்கு எப்ப, என்ன நடக்கும் எண்டு தெரியாது.”

“உனக்குத் தெரியா மச்சான். அவள் சாகிறதுக்குத் துணிஞ்சிட்டாள். அவளின்ர வீட்டுக்குத் தெரிஞ்சு ஒருக்கா. தெரியாம ரெண்டு தரம். மிதிலாக்குப் பழக்கி, மாமிக்கு இப்பிடியாகி, மாதவனையும் அவங்கள் தங்கட கட்டுப்பாட்டுக்க கொண்டுவந்தது எல்லாம் தன்னால எண்டு, அவளுக்குக் குற்ற உணர்ச்சி. வாழவே விருப்பம் இல்லை எண்டு சொல்லி அழுவாள். அங்க ஊர்லையே விட்டா என்னாவாளோ எண்டு பயந்து, நான்தான் குடும்பத்தோட இஞ்ச கூட்டிக்கொண்டு வந்தனான். அந்தப் பழக்கத்தில இருந்து வெளில வந்து, படிப்பு, எதிர்காலம் எண்டு வாழ்க்கை ஓடினாலும் அவளுக்குள்ளயும் ஒரு கோபம். ஒருவித மன அழுத்தம். அதுவும், மாதவன் ஜெயிலுக்குப் போனதும் தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல, இவங்களை விடக் கூடாது எண்டுற அளவுக்குத் துணிஞ்சிட்டாள். அந்த அழுத்தத்தைக் குறைக்கத்தான் அவளும் ஹெல்ப் பண்ணினவள். அவளின்ர கோபத்தைத் தீர்க்க இதுவும் ஒரு வழி. பழிக்கு பழி வாங்கிறது மாதிரி. அதுவும் இப்ப எதுவும் இல்லையடா.”

எல்லாளன் அமைதியாக இருக்கவும் எழுந்து அவனைப் பார்ப்பதுபோல் அமர்ந்தான் காண்டீபன். அப்போதும் ஒரு கால் நீண்டு தான் இருந்தது.

“மச்சான் இஞ்ச பார், இதெல்லாம் இவ்வளவு காலமும் என்ர நெஞ்சுக்க அடச்சுக்கொண்டு இருந்த விசயங்கள். அதையெல்லாம் ஒரு ஆறுதலுக்கு உன்னட்ட இறக்கி வச்சிருக்கிறன். நல்லா நினைவில வை, ஏஎஸ்பிட்ட இங்க ஒண்டும் நான் கிழிக்க இல்ல. அந்த ஏஎஸ்பியாலயும் என்னைக் கிழிக்கேலாது. ஆனா, என்ர நண்பனிட்ட மறைக்கிறதுக்கு என்னட்ட ஒண்டும் இல்ல. விளங்கினதா?” என்றதும் அவனை முறைத்தான் எல்லாளன்.

“ஏஎஸ்பின்ர கவனிப்பை முழுசா நீ அனுபவிக்க இல்லையே! அதுதான்ரா இந்த வாய்!” என்றான் கடுப்புடன்.

காண்டீபனின் முகத்தில் முறுவல் விரிந்தது. “ஒரு அடியிலயே ஏழு உலகமும் தெரிஞ்சது மச்சான்!” என்றான் கன்னத்தைத் தடவிச் சிரித்தபடி.

எல்லாளனால் கூடச் சேர்ந்து சிரிக்க முடியவில்லை. அவன் பார்வை, அறை விழுந்த கன்னத்தில் படிந்தது.

அதை உணர்ந்து, “அதெல்லாம் ஒண்டும் இல்ல. என்னை யோசிச்சு நீ கவலைப் படாத! அதே மாதிரி, பிறகும் உன்னட்ட நான் வராததுக்குக் காரணம், என்ர பாவங்கள் உன்னில் படர வேண்டாம் எண்டுதான். நீ எப்பவுமே இப்பிடியே இருக்கோணும் மச்சான். சிங்கம் மாதிரி கர்ஜனையோட, கம்பீரமா. தைரியமா அவனைச் சுட்டியே, அப்பிடி! அத நான் தூர நிண்டு காலத்துக்கும் பாக்கோணும். என்ன செய்தாலும் இந்த உடுப்பக் கழட்டுற மாதிரி எதுவும் செய்திடாத! நான் போட ஆசைப்பட்ட உடுப்பு. உனக்குத்தான்டா பொருந்தி இருக்கு!” என்றான் பெருமிதத்தோடு.

ஒரு கணம் அவன் விழிகளை ஊடுருவிய எல்லாளன் வேகமாகத் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டான். இந்த உடையை அணிய அவன் எத்தனை கனவுகள் கண்டான் என்று அவனைத் தாண்டி இன்னொருவருக்குத் தெரியுமா என்ன?

“பிறகு? ஆதினி என்னவாம்?” அவனைத் திசை திருப்பச் சிரிப்புடன் வினவினான் காண்டீபன்.

வேகமாகத் திரும்பி, “அவளை உனக்கு எப்பிடித் தெரியும்?” என்றான் வியப்புடன்.

“அனைத்தையும் யாமறிவோம் நண்பனே!” என்றவனின் கூற்றில் எல்லாளனுக்கு மெல்லிய சிரிப்பு அரும்பியது. “அவளும் அதே கம்பஸ்தானே?” என்றான் பதிலைத் தானே கண்டு பிடித்தவனாக.

மறுத்துத் தலையசைத்தான் காண்டீபன். “இல்ல, அப்ப தெரியாது.” என்று சாமந்தியின் இறப்பு வீட்டில் அறிமுகமான கதையைச் சொல்லவும், பல்லைக் கடித்தான்.

“பாத்தியாடா அவளை. ஆர், என்ன எண்டு தெரியாமலேயே உன்னோட பழகி இருக்கிறாள். வரட்டும், அவளுக்கு இருக்கு!”

“ஆக, இனியும் அவளோட மல்லுக் கட்டுற ஐடியாலதான் இருக்கிறாய் நீ.”

“பின்ன, அவள் பாக்கிற வேலைகளுக்குக் கொஞ்சச் சொல்லுறியா?”

“கொஞ்சு மச்சான். வாழ்க்கை எவ்வளவு இனிப்பா இருக்கும் எண்டு அப்பதான் விளங்கும்!”

அவன் சிலுக்குடன் அவனும் கொஞ்சாமலா இருக்கிறான். உள்ளூர உண்டான சிரிப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், “அனுபவம் பேசுது!” என்றான் நக்கலாக.

“பின்ன? மனுசி ஆறு மாசம் எல்லாடா!” முகம் முழுக்க விரிந்த சிரிப்புடன் சொன்னான் காண்டீபன்.

“பெரிய சாதனைதான்.”

“டேய்! அதெல்லாம் கடின உழைப்படா! எந்தளவுக்கு வேர்வை சிந்தி உழைச்சனான் எண்டு எனக்குத்தான் தெரியும்.” என்றவனின் தலையைப் பற்றிக் குனிய வைத்து, அவன் முதுகிலே ஒன்று போட்டான் எல்லாளன்.

“கேடு கெட்டவனே! நீ ஒரு வாத்தி எல்லாடா!”

“அது பிள்ளைகளுக்கு. உனக்கு இல்ல.” சத்தமாக நகைத்தபடி சொன்னான் காண்டீபன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock