நீ தந்த கனவு 40 – 2

அடுத்த நொடியே அவரைச் சுவரோடு சுவராகச் சாய்த்தவனின் துப்பாக்கி, அவர் தொண்டைக் குழிக்குள் இறங்கி இருந்தது. “இப்ப என்னையும் எவனாலயும் தடுக்கேலாது. அப்ப நான் இறக்கவா குண்ட? சொல்லுங்க! இறக்கவா? இறக்கிப்போட்டுத் தவறு நடந்திட்டுது எண்டு சொல்லவா?” நெற்றி நரம்புகள் அத்தனையும் புடைக்கக் கத்தியவனைக் கண்டு, உயிரே போனது அவருக்கு.

“சே…ர் ப்…ளீஸ்ஸ்…”

“போனது ஒரு உயிர். கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாம இருந்திட்டுத் தவறி நடந்திட்டுதா? இதுல கோபம் வேற வருது உனக்கு?”

எல்லாளன் இருக்கும் மனநிலைக்குக் குண்டை இறக்கினாலும் இறக்கிவிடுவான் என்கிற பயத்தில், “சேர், கொன்ட்ரோல் சேர். அவரை விடுங்க.” என்று அவனை அவரிடமிருந்து பிரித்து நிறுத்துவதற்குள் பெரும் பாடுபட்டுப் போனான் கதிரவன்.

சிறைக்காவல் அதிகாரியால் சுவாசிக்கக் கூட முடியவில்லை. கழுத்தைத் தடவி, இருமிச் செருமித் தொண்டையைச் சீர் செய்ய முயன்றார். கண்முன்னே மரணத்தை அவன் காட்டியதில் தொண்டையெல்லாம் உலர்ந்துபோனது.

எப்போது துப்பாக்கியின் லொக்கை ரிலீஸ் செய்தான், எப்போது லோட் செய்தான் என்று அவராலேயே கணிக்க முடியாத வேகத்தில் தொண்டைக்குள் துப்பாக்கியைத் திணித்துவிட்டிருந்தவனின் ஆக்ரோசம் கண்டு, அவர் நெஞ்சுக்கூடு நடுங்கியது.

ஆனாலும் தன் பதவிக்கான அதிகாரம் சீண்டப்பட்டுவிட்ட சீற்றத்தோடு, “இத நான் சும்மா விடமாட்டன் சேர். கொம்ளைண்ட் குடுப்பன்.” என்றவரிடம், “என்ன …. எண்டாலும் குடு!” என்றான் எல்லாளன், தன் தலையின் மயிரை இழுத்துக் காட்டி.

அவர் முகம் கன்றிப்போனது.

எல்லாளனை வெளியே அழைத்து வந்தான் கதிரவன்.

“சேர் பிளீஸ், கொஞ்சம் நிதானத்துக்கு வாங்க. ஜெயிலுக்க துவக்கு வந்திருக்கு. கமரா ஒண்டு கூட வேல செய்யேல்ல. காண்டீபன் சேர சுட்டவன் போன மாதம்தான் ஜெயிலுக்கு வந்திருக்கிறான். காண்டீபன் சேர் வந்த அடுத்த நாளே அவரைச் சுட்டிருக்கிறான். இதையெல்லாம் யோசிச்சுப் பாத்தா, இது ஒரு நாளில போட்ட பிளான் இல்ல சேர். இங்க எல்லாத்தையும் செட் பண்ணிட்டுத்தான் காண்டீபன் சேர இங்க வரவழைச்சு இருக்கிறாங்கள். கச்சிதமாக் காரியத்தை முடிச்சும் இருக்கிறாங்கள்.”

ஆக, அவன் பயந்தது சரிதான். அவனைக் கொண்டே கைது செய்து, அவனைக் கொண்டே காரியம் சாதித்திருக்கிறான் அந்தச் சத்தியநாதன். இதில், அவன் உள்ளுக்குள் இருப்பதுதான் பாதுகாப்பு என்று நினைத்த தன் முட்டாள் தனத்தை எண்ணி, நெற்றியில் அறைந்து கொண்டான் எல்லாளன்.

‘நீ இருக்கிறாய் மச்சான் எண்டு சொன்னியேடா… இண்டைக்கு நீ சாகிறதுக்கு நானே காரணமாயிட்டேனேடா!’ அவன் மனம் பெரிதாக ஓலமிட்டது.

நினைக்க நினைக்க நெஞ்சு கொதித்தது. நீதி, நியாயம், நேர்மை, சட்டம் அத்தனையையும் தூக்கிப் போட்டுவிட்டு வேட்டையாடத் துடிக்கும் மிருகத்தின் நிலையில் இருந்தான் எல்லாளன்.

“இதுக்குக் காரணமான சத்தியநாதன் எனக்குப் பதில் சொல்லியே ஆகோணும் கதிரவன். என்ன எண்டாலும் அவன் என்னில கை வச்சிருக்கலாம். காண்டீபனத் தொட்டிருக்கக் கூடாது. தொட்டே இருக்கக் கூடாது! இனி அவனை விடமாட்டன்!” அமைதியாக ஒலித்த அவன் குரலின் பின்னே, மிகுந்த பயங்கரம் ஒன்று ஒளிந்து கிடப்பதை, அவனோடே பயணிக்கும் கதிரவனால் உணர முடிந்தது.

“நிச்சயமா சேர். விடுறேல்ல! நானும் விடமாட்டன்!” அவனுக்கிணையான உறுதியுடன் சொன்னான்.

*****

அடுத்த இரண்டு நாள்களும் மரண ஓலத்திலேயே கழிந்தது. காண்டீபனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, தாம் கேட்டதையும் பார்த்ததையும் பொய் என்று சொல்லிவிட மாட்டார்களா என்கிற அனைவரின் நம்பிக்கையையும் பொய்யாக்கிக்கொண்டு, அவன் உடல் அவன் வீட்டு விறாந்தையில் கிடத்தப்பட்டிருந்தது.

ஊரே குழுமியிருந்தது. மாதவன், அஞ்சலி, சாகித்தியன், அஜய், பல்கலைக்கழக மாணவர்கள் என்று நிரம்பியிருந்தது வீடு. கண்ணுக்குத் தெரியாத மிகுந்த பாதுகாப்புடன் இளந்திரையன் கூட வந்துவிட்டுப் போனார். அழுதழுது முடியாமல் போயிருந்த ஆதினி, சியாமளாவின் கவனிப்பில் இருந்தாள்.

காண்டீபனின் தலைமாட்டில், தரையில் சரிந்து கிடந்தாள் மிதிலா. இந்த இரண்டு நாள்களிலேயே எலும்புக்கூடாகத் தேய்ந்திருந்தாள். கதறித் தீர்த்தத்தில் உடலின் வலு மொத்தமாகத் தீர்ந்திருந்தது.

வைத்தியசாலையில் வைத்துப் பார்த்தும் அவள் மனதோ உடம்போ தேறுவதாக இல்லை. காண்டீபனின் இறுதி அடக்கத்திற்காக தாதி ஒருவரும் அவளோடு வந்திருந்தார். உறக்கமா மயக்கமா என்று தெரியாத நிலை. கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

திரும்பி வருவேன் என்று அவ்வளவு உறுதியாகச் சொன்னானே! அவள் கணவன் சொன்ன சொல் தவறுகிறவன் இல்லையே! பிறகு எப்படி இது மட்டும் தவறிப் போனது? வயிற்றைத் தடவிப் பார்த்தாள். அவன் தந்த பரிசு, பக்குவமாக இன்னும் அங்கேதான் இருந்தது. கொண்டாட அவன்தான் இல்லை. இனி இல்லவே இல்லையாம்! நாசி விடைத்துக் கண்ணீர் பெருகியது.

‘இண்டைக்கு ஆதினி வந்திடுவாள்’ என்று சந்தோசச் சிரிப்புடன் சொல்லிவிட்டுப் பல்கலைக்குப் புறப்பட்டுப் போனவனைத் தூக்கிக்கொண்டு வந்து கிடத்தியிருக்கிறார்கள். கொழுகொம்பைச் சுற்றியே படரும் கொடி போன்று, அவள் உலகம் சுழன்றதே அவனைச் சுற்றித்தான். இனி?

‘தீபன்…’ அவள் உயிர் ஓலமிட்டது. வலுவான கரங்களைக் கொண்டு அவன் அணைக்கும் அணைப்புக்கு மனமும் உடலும் ஏங்கிற்று. அவன் பேச்சு, அவன் சிரிப்பு, அவன் சீண்டல் எதுவுமே இனி இல்லை. எப்படி அது முடியும்?

இதே வீட்டில்தானே அத்தனை இனிமையான நினைவுகளையும் தளும்பத் தளும்பத் தந்திருந்தான். இனி?

விழிகளை இறுக்கி மூடியவளின் உடல் அழுகையில் குலுங்கிற்று. அருகில் இருந்த தாதிப் பெண்ணும் விழிகள் கலங்க, அவளைத் தடவிக்கொடுத்தார்.

சடங்குகள் அதுபாட்டுக்கு நடக்க ஆரம்பித்தன. எல்லாளன் மொட்டை அடித்து, மீசை வழித்து, நெற்றி, நெஞ்சு, முதுகு, கைகளில் எல்லாம் பட்டை போட்டு, கொள்ளி வைக்கத் தயாராக நின்றான். கொவ்வைப் பழமாகச் சிவந்த கண்களும், கற்பாறை போன்று இறுகிப்போன முகமுமாக நின்றவனை யாராலும் நெருங்க முடியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரத்தில் மகனின் உடலும் இங்கிருந்து போய்விடும் என்று நினைக்க நினைக்க, சம்மந்தனின் நெஞ்சில் தீரா வலி. அவருக்கு இழப்பொன்றும் புதிதில்லை. நாட்டுப் போருக்குக் கொஞ்சம், தன் நேர்மைக்குக் கொஞ்சம் என்று வாழ்ந்த ஊர், பார்த்த தொழில், மனைவி, மற்றொரு மகன், கால்கள் என்று, அவர் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல! இன்றோ, கடைசியாக எஞ்சியிருந்தவனைக் கூடக் கொடுத்துவிட்டாரே!

சுயமாக இயங்க முடியாமல் போனபோது கூட மகன் இருக்கிறான் என்று நம்பிக்கை கொண்டவர், இனி எப்படி வாழ்வார்? யாருக்காகத்தான் வாழ்வார்?

துக்கம் பெருகியது. நெஞ்சை அடைத்தது. இதயம் வெடிக்கும் போலிருந்தது. அவர் மகனைத் தழுவிய அந்த மரணம் மட்டும் தள்ளி நின்று இன்னும் அனுபவி என்றது.

காண்டீபன் தன் இறுதிப் பயணத்தை ஆரம்பிக்கப்போகிறான் என்றதும், அவரையும் அழைத்துச் சென்று அருகில் அமர்த்தினான் எல்லாளன். அவர் விழுந்துவிடாதபடிக்கு இருவர் பிடித்துக்கொண்டனர்.

மகனை ஆரத்தழுவி அழுதுவிட முடியாமல் நின்ற அந்த நிலையில்தான், தான் முடமாகிப் போனோம் என்பதை முதன் முதலாக உணர்ந்தார். தளர்ந்து போன தேகம் தீப்பற்றிக்கொண்டது போன்று எரிந்தது. இதற்குக் காரணமானவர்களை மண்ணோடு மண்ணாக்கிவிட ஆவேசம் கொண்டது. விழிகளில் பெரும் சீற்றம். அருகில் நின்ற எல்லாளனின் கையைப் பற்றி இழுத்தார். அவன் திரும்பிப் பார்த்தான்.

“என்ர மகன் உன்ன நினைச்சு நினைச்சே வாழ்ந்தவன். ஒரு நாள் கூட அவன் உன்ன மறந்ததே இல்ல. அவனுக்கு நீ ஏதாவது செய்ய நினைச்சா, அவன்ர சாவுக்கு நீதி வாங்கித் தா. காலையும் இழந்து, பெத்த பிள்ளையையும் பறி குடுத்திட்டு நிக்கிறன் நான். எனக்கு நீதி வேணும். என்ர பிள்ளையை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்கள நீ விடக் கூடாது! அதப் பாக்காம நான் சாகமாட்டன்.” ஆவேசம் மிகுந்து கத்தியவர், “உன்ர அம்மா அப்பாவை, என்ர மகனை எல்லாம் காவு வாங்கினவங்களை சும்மா விட்டுடாத தம்பி, விட்டுடாத!” என்றபடி அவனைக் கட்டிக்கொண்டு கதறித் தீர்த்தார்.

நிலைகுலைந்துபோனான் எல்லாளன். அவன் விழிகளில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

அவரைத் தன் இரு கைகளாலும் அரவணைத்துக்கொண்டான். கோரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்த பெற்றோரின் நினைவு வந்தது. நெற்றிப் பொட்டைக் குண்டு துளைத்திருக்க மல்லாந்து கிடந்த நண்பன் கண்களுக்குள் வந்தான். முகம் மிக மிகப் பயங்கரமாக மாறியது. இதற்கெல்லாம் காரணமானவனின் அத்தனை எலும்புகளையும் எண்ணிவிடும் ஆவேசத்தில் கை நரம்புகள் புடைத்தன.

திரும்பிக் காண்டீபனின் முகத்தைப் பார்த்தான். சில நொடிகளுக்குப் பார்த்துக்கொண்டே இருந்தான். பின் திரும்பி, “நீங்க கேட்டது நடக்கும் மாமா. அது வரைக்கும் அழாதீங்க!” என்றவன் அவர் கண்களைத் துடைத்துவிட்டான்.

கடைசியில் அந்த வீடு தன் சோபையை இழக்க, சொந்தமும் பந்தமும் கதறிக் கண்ணீர் வடிக்க, ஒப்பாரி ஓலத்துடன் விடைபெற்ற அந்த ஆறடி ஆண்மகன், ஒரு பிடிச் சாம்பலாக எஞ்சிப் போனான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock