“இதுதான் என்ர ஆதினி. எதுக்கும் வளஞ்சு குடுக்காத ஒரு நீதிபத்தின்ர மகள் நீ. ஒரு போலீஸ்காரன்ர தங்கச்சி மட்டுமில்ல இன்னொரு போலீஸ்காரனுக்கு மனுசியாகப் போறவள். சும்மா சிங்கம் மாதிரி நிக்க வேண்டாமா?” என்று கேட்டு, அவளைத் தட்டிக்கொடுத்துப் புறப்பட வைத்தான் எல்லாளன்.
அகரன், சியாமளா, சாந்தி, குணசேகரன் என்று எல்லோரின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டு, குணசேகரனோடு நீதிமன்றுக்குப் புறப்பட்டுப் போனாள்.
மிதிலாவையும் சம்மந்தனையும் அழைத்து வரும் பொறுப்பை அகரன் ஏற்றிருந்தான்.
எல்லாளனுக்கு இருக்க நிற்க நேரமே இல்லை. அந்தக் கொலை வழக்கை விசாரித்தவன் என்கிற முறையில், குற்றவாளியை அழைத்து வருவதிலிருந்து, சாட்சிகளை நீதிமன்றில் நிறுத்துவது வரை பலத்த பாதுகாப்புடன் அவனே முன்னின்று செய்ய வேண்டியிருந்தது.
நீதிமன்றில் நெஞ்சில் தாங்கவே முடியாத பாரத்தைச் சுமந்தபடி அமர்ந்திருந்தார் சம்மந்தன். எல்லாவற்றையும் இழந்தாயிற்று. மகனுக்கான நீதியாவது கிடைத்துவிடாதா என்கிற கடைசி எதிர்பார்ப்பு மட்டுமே அவரிடம் எஞ்சிக் கிடந்தது.
அவர் அருகில் மிதிலா. அவள் நெஞ்சுக்குள் பெரும் புயல் ஒன்று அடித்துக்கொண்டிருந்தது. அதற்கு மருந்தாய் மடியில் மகன் கிடந்தான்.
அவன் பிறந்த கணத்தில் கணவன் இல்லாமல் போய்விட்டானே என்று அழுதாலும், பிறகு பிறகு அவனே தன் கைகளுக்குள் தவழ்வது போலொரு உணர்வில், கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மீட்க ஆரம்பித்திருந்தாள்.
அந்தப் பிஞ்சின் முகத்தில் கணவனின் சாயலைக் கண்டு மகிழ்ந்தாள். கூடவே, தன் தைரியமும் திடமும் மட்டுமே தன் குடும்பத்தைக் கொண்டு செல்ல உதவும் என்கிற நிதர்சனமும் மெல்ல மெல்ல விளங்க ஆரம்பித்திருந்தது.
மனத்தளவில் தன்னைத் திடமானவளாக மாற்றிக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள். ஒரு குறையும் இல்லாமல் கணவன் பார்த்துக்கொண்ட குடும்பத்தை அவன் இடத்திலிருந்து தானும் பார்க்க வேண்டும் என்கிற வைராக்கியமும் உருவாக ஆரம்பித்திருந்தது.
வழக்கு நீதிமன்றில் ஆரம்பமானது. குற்றவியல் நீதிமன்றின் நீதிபதியாக நீதிபதி இளந்திரையன் வந்து அமர்ந்தார். அவருக்கான மரியாதையை நீதிமன்றமே எழுந்து நின்று வழங்கியபோது, தன் முதல் வழக்கு என்கிற பதற்றத்தையும் தாண்டிக்கொண்டு, ஆதினிக்குத் தேகமெல்லாம் சிலிர்த்தது.
மேடையில் தெரிந்த மனிதர் அவளின் அப்பாவாக அல்லாமல், நீதிபதியாகப் பிரமாண்டமாகத் தெரிந்தார். அவரின் பதவியும், தோற்றமும், அந்த நீதிமன்றத்தில் அவருக்கான இடமும் அப்படி உணர வைத்தது.
அவரிடம் எந்தச் சலனமும் இல்லை. எல்லோரையுமே பொதுவாக நோக்கினார். அவர்களில் ஒருத்தியாகத்தான் ஆதினியையும் பார்த்தார். அவர்களின் வழக்கு எண் வாசிக்கப் பட்டது. குற்றவாளி கூண்டுக்கு அழைத்து வரப்பட்டான். சத்தியப் பிரமாணம் பெறப்பட்ட பின், ஆதினியின் விசாரணை ஆரம்பமாயிற்று.
அவள் துணிவானவள்தான். தைரியசாலிதான். என்றாலும் அடிவயிற்றில் ஒருவிதப் பயப்பந்து உருண்டது. கை கால்களில் மெல்லிய நடுக்கம். திரும்பித் தன் ஆசானைப் பார்த்தாள்.
கண்களாலேயே தைரியம் தந்து, ஆரம்பி என்றார் அவர். கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவளாகக் குற்றவாளிக் கூண்டை நோக்கினாள்.
அங்கே நிற்பவன்தான் அவளின் காண்டீபன் அண்ணாவைச் சாய்த்தவன். வேரறுந்த மரமாக விழுந்துகிடந்தவனை வீழ்த்தியவன் அவன். பயம், பதற்றம் என்று அர்த்தமற்றுக் கலங்கி, அவனை அவள் சும்மா விடுவதா? அதற்கா படி படி என்று அவளைப் படிக்க வைத்தான், காண்டீபன்?
தோளில் தொங்கிய கறுப்பு அங்கியை ஒரு முறை இழுத்துச் சரி செய்துகொண்டு நேராகச் சென்று அவன் முன்னே நின்றாள்.
“உங்கட பெயர் என்ன?”
“வைரவன்.”
“வயது?”
“47”
“சிறைக்கு ஏன் வந்தனீங்க?”
“அது… ஒரு திருட்டு கேஸ்…”
“திருட்டு கேஸா, இல்ல, கொலை கேசா?” என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னேயே,
“இந்த வழக்குக்குச் சம்மந்தம் இல்லாத கேள்விகள் தேவை இல்லை யுவர் ஓனர்!” என்று எழுந்து நின்று இடையிட்டார் எதிர்த்தரப்பு வக்கீல்.
“இந்த வழக்குக்குத் தேவை இல்லை எண்டு எப்பிடிச் சொல்லுறீங்க? அவர் யார், அவரின்ர பின்னணி என்ன, இதுக்கு முதல் அவர் செய்த குற்றங்கள் என்ன எண்டு தெரிய வந்தாத்தானே அவர் எப்பிடியானவர் எண்டும் தெரிய வரும்.” மெல்லிய படபடப்பு இன்னும் மிச்சமாய் இருந்த போதும், எதையும் எதிர்த்து நிற்கும் அவளின் இயல்பான குணம் தலைதூக்க, தைரியமாகவே வினவினாள்.
“இப்ப வரைக்கும் அவரின்ர பெயரில எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படேல்ல. விசாரணைக்காக ரிமாண்டில இருக்கிறதாலேயே அவரை ஒரு குற்றவாளியாப் பாக்கேலாது! அப்பிடியிருக்க, இதுக்கு முதல் செய்த குற்றங்கள் எண்டு கேக்கிறதும், அதைப் பற்றி விசாரணை நடத்திறதும் அர்த்தம் இல்லாதது.”
“குற்றம் நிரூபிக்கப்படாததாலேயே அவர் குற்றவாளி இல்லை…” என்று அவள் பதில் பேசும் போதே இடையிட்டு, “ஆதினி, இந்த வழக்குக்குச் சம்மந்தமான கேள்விகளை மட்டும் கேட்டு, விசாரணையைத் தொடருங்க!” என்று உத்தரவிட்டார் நீதிபதி.
ஆரம்பித்ததுமே மிகப்பெரிய மூக்குடைப்பு! முகக் கன்றலை வெளியே காட்டக் கூடாது என்று நினைத்தாலும் முடியாது அவள் முகம் கன்றிப் போயிற்று.
ஆயினும் கூட, முடிந்தவரையில் நிமிர்ந்து நின்று, “சொறி யுவர் ஓனர்!” என்றுவிட்டுத் தன் விசாரணையை மீண்டும் தொடர்ந்தாள்.
“சொல்லுங்க, அண்டைக்கு என்ன நடந்தது?”
“எப்பவும் போல அண்டைக்குக் காலம ஆறு மணிபோல வெளில விட்டவே. நாங்க எல்லாரும் எங்கட பாட்டுக்கு பாத்ரூம் போயிற்று வந்து, முகம் கழுவுறதுக்காக தண்ணி டாங்க்கு போனனாங்க. அப்ப ஆரோ ஒரு ஆள் ஓடி வந்து என்னை எட்டி உதைச்சது. திரும்பிப் பாத்தா, மூண்டு பேர் எங்களுக்குப் பின்னால நிண்டவே. ‘நீ சத்தியநாதன்ர ஆள் எல்லாடா, அவன்ர தம்பியாலதான் என்ர நண்பன்ர அம்மாவும் அப்பாவும் செத்தவே, உன்ன விடமாட்டனடா’ எண்டு சொல்லி சொல்லி காண்டீபன் என்னை அடிச்சவன். எனக்கு முதல் ஒண்டுமே விளங்கேல்ல. தப்பி ஓடப்பாத்தனான். அதுக்கும் விடேல்ல. பக்கத்தில இருந்த மரக்கொம்பைப் பிடுங்கி அடிக்க ஆரம்பிச்சவங்கள். இங்க பாருங்க, இதெல்லாம் அடிச்சதால வந்த தழும்புகள்.” என்று, கையில் இருந்த தழும்புகளைக் காட்டினான் வைரவன்.
அதை அவள் திரும்பியும் பார்க்கவில்லை. அத்தனை நேரம் இருந்த பயம், பதற்றம் எல்லாம் போய், அவன் சொன்ன பொய்களைக் கேட்டுச் சீற்றம் பொங்கிற்று.
இருந்தாலும் தன்னை அடக்கி, “வடிவாச் சொல்லுங்க, மரக்கொப்புகளை ஆர் முறிச்சது, ஆரெல்லாம் உங்களுக்கு அடிச்சது?” என்று வினவினாள்.
“காண்டீபனோட நிண்ட ரெண்டு பேரும்தான் முறிச்சு அடிச்சவங்கள்.”