“அப்ப காண்டீபன் என்ன செய்தவர்?”
“என்னை அடிச்சு உதைச்சவர்.”
“அதுக்கு நீங்க என்ன செய்தனீங்க?”
“முதல், என்னைக் காப்பாத்த நினச்சு தண்ணி டாங்க சுத்தி சுத்தி ஓடினனான். ஒரு கட்டத்துக்கு மேல விடமாட்டாங்கள் எண்டு விளங்கீற்றுது. அதுக்குப் பிறகுதான் அவங்களிட்ட இருந்த மரக்கொப்பப் பறிச்சு, காண்டீபனுக்கு அடிச்சனான்.”
“அதுதான் அவரின்ர நெஞ்சில இருக்கிற அந்தக் காயமா?”
“ஓம்மா. ஆனா, நான் வேணும் எண்டு செய்யேல்ல. என்னைக் காப்பாத்தத்தான்…” என்றவரை முழுமையாகச் சொல்ல விடாமல், “இவ்வளவும் எங்க வச்சு நடந்தது? சரியா அந்த இடத்தைச் சொல்லுங்க!” என்றாள்.
முகம் கன்ற, “தண்ணி டாங்குக்குப் பக்கத்திலேயே.” என்றான் வைரவன்.
“வடிவாத் தெரியுமா?”
“ஓம்மா. எனக்கு நல்லா நினைவு இருக்கு. அடி வாங்கேலாம தண்ணி டாங்க்க சுத்தி சுத்தி ஓட, அவேயும் எங்களைச் சுத்தி சுத்தி வந்து அடிச்சவே. அப்பிடி ஆளாளுக்கு அடிபட்டுத் தள்ளுப்பட்டுக்கொண்டு இருக்கேக்க திடீர் எண்டு, ‘உன்ன உயிரோட விட மாட்டனடா’ எண்டு சொல்லிக்கொண்டு, முதுகுப் பக்கமா ஜீன்சுக்க செருகி இருந்த துவக்கக் காண்டீபன் எடுத்தவன். நான் பயந்திட்டன். ஓடித் தப்ப வழி இல்ல எண்டுதான் பறிக்கப் பாத்தனான். அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு எனக்கே தெரியாது. அவன்ர நெற்றில குண்டு பாஞ்சதும்தான் தெரிஞ்சது, துவக்கில இருந்து குண்டு பாஞ்சிருக்கு எண்டு.” அப்பாவியாகச் சொன்னான் வைரவன்.
அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சத்தியநாதன்ல இருக்கிற கோபத்தை உங்களிட்ட ஏன் காட்டோணும்? அதுவும் சுட வாற அளவுக்கு?” என்று வினவினாள்.
“அதைத்தானம்மா நானும் யோசிச்சனான். முதல் சத்தியநாதன் தம்பி நல்லவர். அவராலதான் என்ர பிள்ளைகள் படிக்கிறதே. அவர்ல கோபப்படுறதே பிழை. அப்பிடியிருக்க, அவர்ல இருக்கிற கோபத்தால என்னைச் சுட வந்தது ஏன் எண்டு எனக்கும் இப்ப வரைக்கும் விளங்கவே இல்ல.”
அவனுடைய நடிப்பில் ஆதினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. இதில் சத்தியநாதன் நல்லவனாமே!
“இதெல்லாம் எங்க வச்சு நடந்தது?” என்றாள் எரிச்சலை அடக்கி.
அவள் கேள்வியின் சரியான பொருள் புரியாமல் குழப்பமாகப் பார்த்தான் வைரவன்.
“சரியா எந்த இடத்தில வச்சுக் காண்டீபனைச் சுட்டீங்க?”
“டாங்க் இருக்கிற இடத்தில இருந்து கொஞ்சம் தள்ளி.”
“கொஞ்சம் தள்ளி எண்டா எங்க? காண்டீபன் இறந்து கிடந்தாரே, அந்த இடத்திலையா?”
“ஓம் மா.”
“தண்ணி டாங்க்கடில இருந்து அந்த இடம் வரைக்கும் எப்பிடி வந்தனீங்க?”
“அடிபட்டுத் தள்ளுப்பட்டு எங்களுக்கே தெரியாம வந்திட்டம்மா.”
“இவ்வளவும் நடக்கும் வரைக்கும் போலீஸ் ஒருத்தர் கூட வரவேயில்லையா?”
“உடனேயே ஓடி வந்தவே. அவேக்கும் அடிச்சவங்கள். அவே தடுத்து நிப்பாட்டுறதுக்கிடையில எல்லாம் நடந்து முடிஞ்சுது.”
“ஆனா வைரவன், துவக்கைப் பறிக்கேக்கத் தவறுதலா கைல குண்டு பாயலாம், கால்ல பாயலாம், உடம்பில ஏதோ பாகத்தில பாயலாம். அது எப்பிடிச் சரியா நெத்தில பாஞ்சது?”
“என்ன கேள்வி இது? காண்டீபன் வைரவனுக்கு நெற்றில குறி பாத்திருப்பான். அப்பதான் வைரவன் பறிக்கப் பாத்திருப்பார். அது அப்பிடியே திரும்பிக் காண்டீபன்ர நெத்தில பாஞ்சிருக்கும்.” என்று இடையிட்டுச் சொன்னார், எதிர்த்தரப்பு வக்கீல்.
“அப்பிடியா வைரவன்?”
அவள் கேட்ட விதமே அடிவயிற்றைக் கலக்க வைக்க, “ஓம் மா.” என்றான் அவன்.
“உங்களுக்கு அவரைச் சுடுற ஐடியா இருந்ததா?
“ஐயோ இல்லையம்மா!”
“முன்னப்பின்னத் துவக்குப் பிடிச்சு இருக்கிறீங்களா?”
“இல்ல, இதுதான் முதல் தரம்.”
“ஆனா, துவக்குச் சுடும் எண்டு தெரியும்தானே?” என்றவள் கேள்வியில் பெரும் எள்ளல்.
“ஓம்மா.” என்ன வரப்போகிறதோ என்கிற பயத்தில் பதில் சொல்லிக்கொண்டிருந்தான் வைரவன்.
“பிறகு எப்பிடி, சரி நேரா அவரின்ர நெத்திக்குப் பிடிச்சீங்க?”
“அது…”
“ஒருத்தரின்ர கைல இருக்கிற ஒரு பொருளைப் பறிக்க இன்னொருத்தர் முயற்சி செய்தா, அவர் பறிக்க விடமாட்டார். மற்றவர் விடாமப் பறிக்கப் பாப்பார். அதுவும் அந்தப் பொருள் துவக்கு எண்டேக்க சுட்டுடுமோ எண்டுற பயம் கட்டாயம் இருக்கும். அப்பிடி இருக்கேக்க, அதத் தட்டி விடத்தான் பாப்பம். இல்லையோ, மேல நோக்கியோ கீழ நோக்கியோ தள்ளத்தான் நினைப்பம். அதுவும் காண்டீபனைச் சுடுற ஐடியா இல்லாத நீங்க, நிச்சயமா அப்பிடித்தான் பறிக்கப் பாத்து இருப்பீங்க. பிறகும் எப்பிடி, குண்டு சரியா காண்டீபன்ர நெத்தியத் துளைச்சது?”
“அது அதம்மா….” அவருக்கு வியர்க்க ஆரம்பித்தது.
“துவக்கு வச்சிருந்த காண்டீபனுக்குத் தெரியாதா, அது தன்ர பக்கம் திரும்பினா தன்னைச் சுடும் எண்டு. அப்பிடி இருந்தும் அவ்வளவு ஈஸியா திரும்ப விட்டவரா?”
“அது அவர்…”
அவள் விடவேயில்லை. அவர் சிந்திப்பதற்கான அவகாசத்தைக் கூடக் கொடுக்க மறுத்தாள். “சொல்லுங்க! அது அது எண்டா என்ன அர்த்தம்? கையில துவக்க வச்சிருக்கிற ஒருத்தர், உங்களைச் சுட எண்டே வந்தவர், அடுத்த செக்கண்டே போலீஸ் வரும் எண்டு தெரிஞ்சும், கிடைக்கிற ஒரு நிமிசத்தில காரியத்தை முடிக்க நினைப்பாரா, இல்ல, உங்களோட சண்டை பிடிச்சுக்கொண்டு இருப்பாரா?” என்றதும் என்ன சொல்வது என்று தெரியாது தடுமாறி நின்றவரின் பார்வை, தன் தரப்பு வக்கீலிடம் சென்று வந்தது.
“இதையெல்லாம் நீங்க கேக்க வேண்டியது காண்டீபனிட்ட. என்ர கட்சிக்காரர் தான் பாத்ததையும் நடந்ததையும்தான் சொல்லுறார். அது ஏன் அப்பிடி நடந்தது எண்டு கேட்டா அவரால என்ன சொல்லேலும்?” என்றார் எதிர்த்தரப்பு வக்கீல்.
“சிம்பிள்! அவர் உண்மையச் சொல்லலாம்!” என்றாள் அவள் பட்டென்று.
“வசதியா முதுகு காட்டிக்கொண்டு நிண்டவரச் சுடாம, சண்டை பிடிச்சிட்டுக் கடைசியாத் துவக்கை எடுத்துச் சுட இதென்ன படமா? திடீரெண்டு ஒருத்தன் எங்களுக்கு முன்னால கன்ன நீட்டினா, பயத்தில படக்கெண்டு கையத் தூக்கி சரண்டர் ஆவோமே தவிர, பாஞ்சு பறிக்க எல்லாம் போக மாட்டம். காவல்துறைல எவ்வளவு பெரிய பதவில இருக்கிற ஒருத்தரா இருந்தாக் கூட முதல் அதைத்தான் செய்வார். அதுதான் புத்திசாலித்தனமும் கூட! ஏன் எண்டால் அது கன். எதிர்ல நிக்கிறவன் அழுத்தினா எங்கட உயிர் சரி. அப்பிடியிருக்க, இவர் பறிக்கப் பாஞ்சன் எண்டு சொல்லுறது நம்புற மாதிரியா இருக்கு?” என்றவள் கேள்விக்கு அவரிடம் கூடப் பதில் இல்லை.
நேற்றுப் பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் அப்படி என்ன வாதாடி விடப் போகிறாள் என்று எண்ணியிருந்தவர், வியர்த்துப் போய் நின்றிருந்தார்.
ஆனால், அவர் யோசிக்க மறந்தது புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை! அவளுடைய ஆசான் மிகப் பிரபல்யமான குற்றவியல் வழக்கறிஞ்சர் குணசேகரன் என்பதை.
அவள் மீது பற்றிக்கொண்ட இயல்பான பாசமும், தன் உயிர் நண்பனின் மகள் என்பதும் சேர்ந்து கொண்டதில், பயிற்சி என்பதைத் தாண்டி, அவளுக்கான அனுபவத்தைப் போதும் போதும் எனும் அளவுக்குக் கொடுத்திருந்தார் அவர். அது இன்றைக்குப் பலனைக் கொடுத்துக்கொண்டிருந்தது.
எல்லாளனுக்கு ஓடிப்போய் அவளை அணைத்துக்கொள்ள கைகள் இரண்டும் பரபரத்தன. அத்தனை சந்தோசத்தில் மிதந்தான். ஆரம்பித்ததுமே அவள் தடுமாறியதைக் கண்டு மிகவுமே பயந்து போயிருந்தான். அவளானால் விட்டதற்கும் சேர்த்து ஒரு வாங்கு வாங்கியிருந்தாள்.