அடுத்ததாகச் சிறைக்காவல் அதிகாரியை விசாரிக்க அழைப்பாள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவளோ காண்டீபனின் ஆட்கள் என்று சொல்லப்பட்ட அந்த இருவரையும் அழைத்தாள்.
“காண்டீபன்ர முழுப்பெயர் என்ன?”
என்ன நடந்தது, எப்படிக் கொலை நடந்தது, என்ன செய்தீர்கள் என்றெல்லாம் கேட்பாள் என்று, அதற்குத் தக்க தயாராக வந்தவர்கள் அவள் கேட்ட சாதாரணக் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தனர்.
ஆனாலும் வேகமாகச் சமாளித்து, “நாங்க தல எண்டுதான் கூப்பிடுவம்.” என்று சொன்னான் ஒருவன்.
“ஓ! அவருக்கு எத்தின பிள்ளைகள்? அவரின்ர வீடு எங்க இருக்கு எண்டு ஏதும் தெரியுமா?”
“எங்கட தொழிலில தனிப்பட்ட விசயங்களைக் கதைக்கிறேல்ல.”
“நல்ல பொலிசி! எவ்வளவு காலமா உங்களுக்க பழக்கம்?”
“நிறைய வருசமா.”
“அவரின்ர வீட்டுக்கு எல்லாம் போய் இருக்கிறீங்களா?”
“இல்ல. வெளிலதான் சந்திச்சு இருக்கிறம்.”
“எத்தின முறை?”
“எண்ணிக்கை தெரியாது. ஆனா நிறையத் தரம்.”
“அப்ப, அவர் எந்தப் பள்ளிக்கூடத்தில படிப்பிச்சார் எண்டு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கோணுமே? இதுல மறைக்கிறதுக்கோ, தனிப்பட்ட விசயம் எண்டு சொல்லுறதுக்கோ எதுவும் இல்ல. உங்களுக்கு வேற நிறைய வருசமாப் பழக்கம் இருந்திருக்கு.” என்று, தன் சாதுர்யத்தால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற நிலையில் அவர்களை நிறுத்தினாள் ஆதினி.
அவர்களும் விரிக்கப்பட்டது வலை என்று தெரியாமல், “அது… யாழ்ப்பாணம் மத்திய மகாவித்தியாலம்.” என்றார் இருவரில் ஒருவர்.
“ஓ! யாழ்ப்பாணம் மத்திய மகாவித்தியாலத்திலதான் படிப்பிச்சவரா?”
“ஓம்.”
எதிர்த்தரப்பு வக்கீலின் முகம் கறுத்தது. வேகமாக எழுந்து, “இந்தத் துறைக்குப் புதியவர் எண்டுறதால இந்த கேஸுக்கு சம்மந்தமே இல்லாத கேள்விகளாக் கேட்டு, கோர்ட்டையும் மதிப்புக்குரிய நீதிபதி அவர்களின் நேரத்தையும் ஆதினி வீணாக்கிறார் யுவர் ஓனர்!” என்றார் அவர்.
“எல்லாத்துக்கும் இப்பிடியே சொன்னா எப்பிடி சேர்? காண்டீபன் எந்தப் பள்ளிக்கூடத்தில படிப்பிச்சார் எண்டு அவே சரியாச் சொன்னதிலேயே உங்களுக்கு விளங்கேல்லையா, இந்தக் கேள்வி எல்லாம் எவ்வளவு முக்கியம் எண்டு?” இதழோரம் வளைய வினவியவளுக்குப் பதில் சொல்ல முடியாமல், மீண்டும் அமர்ந்துகொண்டார் அவர்.
அதிலேயே தாம் ஏதோ தவறாக உளறிவிட்டோம் என்று விளங்கி நடுங்கினர் இருவரும்.
“சரி, என்னத்துக்குக் கலவரம் நடந்தது?”
“தலதான் ஒருத்தனப் போட்டுத் தள்ளோணும். துணைக்கு வாங்க எண்டு கூப்பிட்டவர்.”
“எப்ப?”
“அண்டைக்கு மத்தியானம்.”
“நீங்க உள்ளுக்க இருக்கிறீங்க எண்டு அவருக்கு எப்பிடித் தெரியும்?”
“நாங்க பிடிபட்டது அவருக்கு முதலே தெரியும்.”
“ஓகே! நல்ல பதில். அவர் கூப்பிடுறார் எண்டு உங்களுக்கு ஆர் வந்து சொன்னது?”
“அது… அது…” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.
“சொல்லுங்க! உங்களுக்கு ஆர் வந்து சொன்னது?”
“…”
தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அவர்கள் இருவரையும் முறைத்தார், எதிர்த்தரப்பு வக்கீல்.
“மறந்திட்டீங்க போல. சரி சொல்லுங்க, எப்பிடிப் போட்டுத் தள்ளுறது எண்டு அவர் சொன்னவரா?”
“சொன்னவர். நான் அவனைச் சண்டைக்கு இழுப்பன். அப்ப அவனுக்கு சப்போர்ட்டா ஆரும் வந்தா அவேயே நீங்க பாருங்க. அவனை நான் பாக்கிறன் எண்டு சொன்னவர்.”
“அவரிட்ட துவக்கு இருந்த விசயம் உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியாது. அவனைக் கொல்லுற வேலைய நான் பாக்கிறன் எண்டுதான் சொன்னவர்.”
“இதெல்லாம் எங்க வச்சுக் கதச்சீங்க?”
“சிறையில வச்சு.” புத்திசாலித்தனமாகச் சொல்வதாக எண்ணிச் சொன்னான் ஒருவன்.
“சிறையில எங்க?”
“வெளில.”
எதிர்த்தரப்பு வக்கீலைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், “ஓகே, நீங்க போகலாம்.” என்றாள்.
அவ்வளவுதானா என்று திகைத்தனர் இருவரும். ஆனாலும் விட்டவரைக்கும் போதும் என்று ஓடினர்.
அடுத்ததாகச் சிறைக்காவல் அதிகாரியையும், அன்று பணியில் இருந்தவர்களையும் கூண்டில் ஏற்றினாள். அவர்களும் வைரவன் சொன்னதையேதான் சொன்னார்கள்.
கூடுதல் தகவலாக இது இரு குழுக்களுக்கிடையில் நடந்த கலவரம் என்றும், மிருகத்தனமாகவும் மிகவும் மூர்க்கத்தனமாகவும் நடந்துகொண்டார்கள் என்றும், தடுக்கப்போன தாமும் காயப்பட்டதாகத் தெரிவித்தார் சிறைக்காவல் அதிகாரி.
“காண்டீபன் தனிச் சிறையில இருந்தாரா, இல்ல, அவரோட வேற ஆக்களும் இருந்தவையா?”
“தனிச்சிறை.”
“அண்டைக்கு அவர் ஆரோடயாவது கதைச்சவரா?”
“இல்ல.”
“அவரைச் சந்திக்க ஆராவது வந்தவையா?”
“இல்ல.”
“அவரை வெளில விட்டீங்களா?”
“அவரின்ர விபரங்களைப் பதியிறதுக்கு மட்டும் கூட்டிக்கொண்டு போனனாங்க.”
“அப்ப அவர் ஆரோடயும் கதைச்சவரா?”
“இல்ல.”
“நல்லா யோசிச்சுச் சொல்லுங்க. அதெப்பிடி கதைக்காம இருப்பார். சிறைல ஆக்கள் இருப்பினம்தானே?”
“இல்ல மேம். சாமந்தி கொலை கேசிலயும் அவர் சம்மந்தப் பட்டிருக்கலாம் எண்டுற சந்தேகம் இருந்ததால, வலு கவனமாத்தான் இருந்தனாங்க. அண்டைக்கு அவர் எங்களைத் தவிர வேற ஆரோடயும் கதைக்கேல்ல.”
“அவரைச் சிறைக்குள்ள அனுமதிக்கும் போது அவரையும் அவரின்ர உடமைகளையும் முழுமையா செக் செய்துதானே உள்ளுக்கு எடுத்தீங்க?”
“ஓம்.”
“அப்ப அவரிட்ட துவக்கு இருந்ததா?”
“இது என்ன கேள்வி மேம்? இருந்தாலும் எப்பிடி நாங்க அனுமதிப்பம்? ஆனா, அவரிட்ட இருக்கேல்ல.” என்றார் அவர், நான் என் கடமையில் சரியாகத்தான் இருந்தேன் என்று காட்டும் விதமாக.
“பிறகு எப்பிடி அவரிட்டத் துவக்கு வந்தது?”
“அதுதான் எங்களுக்கும் தெரியேல்ல.”
“அது எப்பிடி உங்களுக்குத் தெரியாம இருக்கும்? ஒண்டில் உங்களுக்குத் தெரிஞ்சு அவரிட்டத் துவக்குப் போயிருக்க வேணும். இல்லை, நீங்க சொல்லுறது எல்லாம் பொய்!” என்று அடித்துச் சொன்னவள், நீதிபதி புறம் திரும்பினாள்.
“சோ யுவர் ஓனர், காண்டீபன் சிறையிலே இருந்தது ஒரேயொரு நாள்தான். அதுவும் தனிச் சிறையில அடைக்கப்பட்டிருக்கிறார். அண்டைக்கு அவர் ஆரையும் சந்திக்கவோ, ஆரோடயும் கதைக்கவோ அனுமதிக்கப்பட இல்ல. அதோட, அவரின்ர உடைமைகள் எல்லாம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் சிறைக்குள்ள அடைக்கப்பட்டிருக்கிறார். அதுதான் சிறையின் நடைமுறையும் கூட. பிறகு எப்பிடி அந்த ரெண்டு பேரோடயும் கதைச்சு, ஆரைக் கொல்ல வேணும் எண்டு காட்டி இருப்பார்? இதில அந்த ஒரு நாளிலேயே அவரின்ர கைக்குத் துவக்கும் வந்து சேர்ந்திருக்கு. ஆக அத்தனையும் பொய்! சாட்சிகளும் பொய். இது திட்டமிட்டுக் காண்டீபனைக் கொன்ற பிறகு சோடிக்கப்பட்ட வழக்கு எண்டு இதிலேயே தெளிவாகுது. அதுக்கு உடந்தையா நிச்சயம் சிறைக்காவல் அதிகாரியும், அண்டைக்கு கடமையில் இருந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.” என்று அடித்துச் சொன்னாள், ஆதினி.
“நிச்சயமாக இல்லை!” என்று மேசையில் அடித்துச் சொன்னார் எதிர்த்தரப்பு வக்கீல். “அனுபவமற்ற வழக்கறிஞர் தனக்குப் பிடித்தபடி வழக்கைச் சோடிக்கிறார் யுவர் ஓனர்.”
“உண்மை என்ர பக்கம் இருக்கேக்க சோடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?” அவரிடமே திருப்பிக் கேட்டாள் ஆதினி.
“கொலை செய்யப்பட்டது உங்கட கூடப்பிறக்காத அண்ணா. உங்களுக்கும் அவருக்கும் இடையில நிறைய வருசப் பழக்கம் இருந்திருக்கு. அப்பிடியிருக்க அவருக்காக நீங்க இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுறீங்க எண்டு நான் சொல்லுறதில என்ன பிழை?”