“அப்ப நீங்க சொல்லுங்க, அண்டைக்குக் காலையில சிறையில அடைக்கப்பட்ட காண்டீபனிட்டத் துவக்கு எப்பிடி வந்தது?”
“அது எனக்கு எப்பிடித் தெரியும் ஆதினி? அவர் வந்து சொன்னாத்தான் தெரியும்.” எள்ளலாகச் சொன்னார் அவர்.
“அவர் வரமாட்டார் எண்டுற தைரியத்தில் சொல்லுறீங்க போல. ஆனா கவலைப்படாதீங்க, அதையும் கண்டுபிடிக்கலாம்!” என்று இலகுவாகச் சொன்னவள், அடுத்ததாக எல்லாளனை விசாரணைக்கு அழைத்தாள்.
காண்டீபனைக் கைது செய்ததிலிருந்து சிஐடியினரிடம் அவனை ஒப்படைத்தது வரை அப்படியே சொன்னான் அவன்.
“ஆக, அண்டைக்குக் காண்டீபனைக் கைது செய்யப்போறன் எண்டுற விசயம் எல்லாளனைத் தவிர வேற ஆருக்கும் தெரியாது. அப்பிடியிருக்க அதைக் காண்டீபனும் எதிர்பாத்திருந்திருக்க மாட்டார். அதோட, காவல் நிலையத்தில தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காண்டீபன், சிஐடியினரால் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சம்பவம், ஏஎஸ்பிக்கே சொல்லப்படாமல் அதிரடி நடவடிக்கையா நடந்த ஒண்டு. அப்பிடியிருக்க, காவல் நிலையத்தில இருந்து, தான் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவோம் என்பதோ, அங்கு இந்த வைரவன் இருப்பார் என்பதோ காண்டீபனால் கணிக்கக் கூட முடிந்திராது. இங்கானால், முழுமையாகப் பரிசோதனை செய்து, சிறைக்குள் விடப்பட்ட காண்டீபன், மாய மந்திரங்கள் மூலம் வைரவன் இருப்பதை அறிந்திருக்கிறார். உடனேயே ஒரு துப்பாக்கியை வேறு வரவழைத்திருக்கிறார், அடுத்த நாளே கொலையும் செய்ய முயற்சி செய்திருக்கிறார். இதில ஏதாவது நம்புகிற மாதிரி இருக்கா உங்களுக்கு?” என்று நீதிபதியையே கேட்டாள் ஆதினி.
அவள் வாதத்தில் இருக்கும் நியாயத்தைக் குறித்துக்கொண்டார் நீதிபதி.
“இது எல்லாத்தையும் விட, சிறையில் இருந்த சீசீடிவி கமராக்கள் ஒண்டு கூட வேலை செய்யேல்ல. அது எப்பிடி? அவ்வளவு கவனமில்லாமத்தான் ஒரு சிறையும் சிறைக்காவல் அதிகாரியும் இயங்குகிறார்களா?” என்றவள் கேள்வியை உள்வாங்கி, “இதுக்கு என்ன சொல்லுறீங்க கஜேந்திரன்?” என்று, சிறைக்காவல் அதிகாரியை நேரடியாகவே வினவினார் நீதிபதி.
“சேர், அது… எலக்ட்ரிக் காரன் வரேல்ல…” என்று தடுமாறினார் அவர்.
“ஒரு பொறுப்புள்ள அதிகாரி சொல்லுற பதிலா இது கஜேந்திரன்?” என்ற நீதிபதிக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றார் அவர்.
அடுத்ததாகக் காண்டீபனின் உடலில் உடற்கூறு ஆய்வு நடத்திய வைத்தியரைக் கூண்டில் ஏற்றினாள் ஆதினி.
“சொல்லுங்க டொக்டர், காண்டீபன்ர உடலை ஆய்வு செய்ததில உங்களுக்குத் தெரிஞ்சது என்ன?”
“முதல் விசயம், நெற்றியில உறைஞ்சிருந்த ரெத்தத்தையும் நெஞ்சில உறஞ்சிருந்த ரெத்தத்தையும் பரிசோதனை செய்து பாத்ததில, நெற்றியக் குண்டு துளைச்ச பிறகுதான் நெஞ்சில காயம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேணும். ரெண்டாவது, அடிவாங்கின காயங்களோ, கன்டல்களோ உடம்பில பெருசா இல்ல. மரக்கொப்பு ஆழமா நெஞ்சில இறங்கினதும், துப்பாக்கிக் குண்டு துளைச்சதும் மட்டும்தான் பெரிய காயம்.”
“நன்றி டொக்டர்!” என்றவள், அவர் தந்த அறிக்கையின் நகலின் ஒரு பகுதியை, தனியாகத் தெரியும் அளவிற்கு மார்க் செய்து, அதை நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு, “காண்டீபன்ர நெற்றியைத் துளைச்ச குண்டு, சரி நேரா பின் மண்டையால வெளியேறி இருக்கு எண்டு அறிக்கை சொல்லுது. ஒரு கலவரத்தில, அல்லது இழுபறில தவறுதலாப் பாஞ்ச குண்டு, இப்பிடி சரி நேராப் போக சான்ஸே இல்ல. அவரை நேரா நிக்க வச்சு, அவருக்கு முன்னால நிண்டு, நிதானமாச் சுட்டா மட்டும்தான் இப்பிடிப் போகும். இன்னுமே சரியாச் சொல்லப்போனா, தலையை ஆசைக்கக் கூட முடியாத நிலையில வச்சுத்தான் சுடப்பட்டிருக்கிறார்.” என்று நீதிபதியிடம் சொல்லிவிட்டு, “நான் சொன்னதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க டொக்டர்?” என்று கூண்டில் நின்றவரிடம் வினவினாள்.
“நிச்சயமா அதுக்குத்தான் சாத்தியங்கள் அதிகம்.” என்றார் அவரும். “அவரைச் சுடோணும் எண்டுற நோக்கத்தோடேயே சுட்ட குண்டுதான் அது!”
“அடுத்ததா, ஒரு போராட்டம் நடக்கும்போதோ, ஆராவது எங்களத் தாக்க வரும்போதோ இயல்பா எங்கட கைகள்தான் முதலில எதிர்க்கும். ஆனா இஞ்ச காண்டீபன்ர கைகள்ல பெருசாக் காயம் எதுவுமே இல்ல. அவ்வளவு பெரிய மரக்கொப்பு இவ்வளவு பெருசா நெஞ்சில இறங்கிற வரைக்கும் அவரின்ர ரெண்டு கையும் எங்க இருந்தது? தனிய மணிக்கட்டு ரெரண்டிலயும்தான் மெல்லிய கன்றல் அடையாளம் இருக்கு. அது கயிறால அவரின்ர கையைக் கட்டின அடையாளமா இருக்கும். இல்லையா இறுக்கமாப் பிடிச்ச அடையாளமா இருக்கோணும். என்ன டொக்டர், நான் சொல்லுறது சரியா?”
“நிச்சயமாச் சரி!” என்றார் அவரும் தெளிவாகவே.
அடுத்ததாக, இன்னுமொரு பேப்பரையும் சமர்ப்பித்தாள். அதில், தண்ணீர் டாங்க் இருக்கும் இடமும், காண்டீபன் இறந்து விழுந்து கிடந்த இடமும் ஒரே புகைப்படத்தில் தெளிவாக இருந்தன. கூடவே, அந்த இடங்கள் இரண்டுக்குமிடையிலான தூரம் அளந்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைக்காட்டி, “கலவரம் நடந்த பிறகு, தடயங்கள் எல்லாம் கலைக்கப்பட முதல் எடுத்த போட்டோ இது. தண்ணீர் டாங்க்குக்கும் காண்டீபனுக்குக் குண்டு பாஞ்ச இடத்துக்கும் இடையில கிட்டத்தட்ட அம்பது மீற்றர் இடைவெளி இருக்கு. வைரவனும் மற்றைய சாட்சிகளும் சொன்ன மாதிரி, தண்ணீர் டாங்க்கடில வச்சு, மரக்கொப்பால அடிச்சது உண்மையா இருந்தால், அங்க இருந்து காண்டீபன் இறந்த இடம் வரைக்குமான இந்த அம்பது மீற்றர் தூரத்தில, பல இடங்களில காண்டீபன்ர இரத்தத் துளிகள் கட்டாயம் சிதறி இருக்கோணும். காரணம், நெஞ்சையே பிளந்த மாதிரிக் காயம் அவ்வளவு பெருசு. ஆனா இங்க, அப்பிடி எந்தத் தடயத்தையும் தடயவியலாளர்கள் சமர்ப்பிக்கவே இல்லை. தண்ணீர் டாங்க்ல இருந்த தண்ணிலயோ, தண்ணீர் டாங்க்லயோ, அதன் சுற்று வட்டாரத்திலயோ எங்கேயுமே இரத்தத் திட்டுகள் கிடைக்கவே இல்ல. இது எப்பிடிச் சாத்தியம்?” என்றதும்,
“என்ன சொல்லுறீங்க ஆதினி. நடந்தது கலவரம். கைதிகள் எல்லாரும் திசைக்கு ஒண்டா ஓடுப்பட்டுத் திரிஞ்சிருப்பினம். அதில, ரெத்தம் சிந்தினாலும் எப்பிடித் தெரியும்? எல்லாம் கலஞ்சு மண்ணோட மண்ணாக் கலந்திருக்கும்.” என்றார் எதிர்த்தரப்பு வக்கீல்.
“எப்பிடிக் கலந்தாலும் ஈரம் இருந்திருக்கும் சேர். இரத்த அடையாளம் நிச்சயம் தெரிஞ்சிருக்கும். தடயவியலாளர்கள் அந்தளவுக்கு மேலோட்டமா செக் பண்ணியிருப்பினம் எண்டு சொல்லுறீங்களா?” என்றவள், தடயவியலாளர்களையும் அழைத்து விசாரித்தாள்.
அப்படி, எந்த இடத்திலும் இரத்தத் திட்டுகளைப் பெறவே இல்லை என்றார்கள் அவர்கள்.
அதன் பிறகு நடந்தவை அனைத்தும் குறுக்கு விசாரணையும் அணல் பறக்கும் விவாதமும் மட்டுமே! தன் கேள்விகளாலும் வாதத் திறமையாலும் அனுபவம் மிக்க எதிர்த்தரப்பு வக்கீலைத் திணறடித்தாள் ஆதினி.
உண்மையில் அங்கு நடந்தது, ‘ஒன் வுமன் ஆர்மி ஷோ!’ சதுரங்க மேடையில் ஒற்றை ராணியாக நின்று, சுழன்று சுழன்று ஆடினாள் ஆதினி. இளந்திரையன் தன் கவனம் வழக்கிலிருந்து மகள் புறமாகச் சரிந்து விடாமல் இருக்கப் பெரும் பாடுபட்டார். இதைவிட வேறென்ன வேண்டும் என்று மனம் விம்மிற்று.
கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டு, எதிராளியை திணறடிக்கும் வல்லமை அவளுக்கு இயல்பாகவே அமைந்தது. இங்கே, எதிராளி சொல்வது பொய் என்று தெரிந்த பிறகு விடுவாளா? அவளின் அறிவோடு சேர்ந்து பாசம் எனும் உணர்வும் போராடியது.
அவள் காசுக்காக வாதாடவில்லை! தன் கட்சிக்காரனுக்காகவும் வாதாடவில்லை! அவளின் அண்ணனுக்காக, அன்னையின் இடத்தைப் பிடித்தவனுக்காக வாதாடினாள். அவளிடம் இருந்தது நியாயமான கோபம்; தெளிவான சாட்சிகள்; வலுவான வாதங்கள். ஏனடா இவளிடம் சிக்கினோம் என்று நினைக்க வைத்தாள்.
புதியவள், அனுபவமில்லாதவள், அப்பா நீதிபதி, அண்ணா காவல்துறை என்றதும் தானும் ஒரு கறுப்பு அங்கியை மாட்டிக்கொண்டு வந்துவிட்டாள் என்று எண்ணியிருந்த எதிர்த்தரப்பு வக்கீலால் வாதமே செய்ய முடியாமல் போனது. இத்தனை ஓட்டை உடைசல்களோடு காரியம் செய்தவர்களை எண்ணிப் பல்லைக் கடித்தார்.
கடைசியாக, “இது எல்லாத்தையும் சேர்த்துப் பாத்தா, அண்டைக்கு அந்த நேரத்தில கலவரம் எண்டுற ஒண்டு நடக்கவே இல்லை யுவர் ஓனர்! என் கட்சிக்காரர் திட்டமிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு உடந்தையாகச் சிறைக்காவல் அதிகாரியும், அன்று கடமையில் இருந்த போலீசாரும் இருந்திருக்கிறார்கள். காண்டீபனின் ஆட்கள் என்று சொல்லப்பட்ட இருவரும் சொன்ன சாட்சியங்களும் கூடப் பொய்தான்! இவர்கள் எல்லோரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தி, உண்மையை வெளிக்கொணர்ந்து, என் கட்சிக்காரருக்கு நீதி கிடைக்க ஆவண செய்ய வேணும் எண்டு கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஓனர்!” என்று, தன் வாதத்தை அவள் முடித்துக் கொண்ட போது, இருதரப்பு வாத விவாதங்களையும் தாண்டி, நாடே போற்றும் நீதிபதி குழந்தைவேலு இளந்திரையனின் மகள், தன் தந்தையின் முன்னிலையிலேயே, தன் முதல் வழக்கை, எந்தப் பயமும் பதட்டமும் இல்லாமல், இத்தனை தெளிவாகவும் நிதானமாகவும் புத்தி சாதுர்யமாகவும் வாதாடியதைப் பார்த்து, மொத்த நீதிமன்றமும் ஸ்தம்பித்து நின்றது.
கடைசியில் கொலையாளி முதற்கொண்டு சாட்சிகளின் வாக்குமூலங்கள் எதுவும் நம்பும் படியாக இல்லை என்று ஆதினி நிரூபித்தத்தின் அடிப்படையில், மேலதிக விசாரணைக்குக் காவல்துறைக்குக் கட்டளையிட்டு, வழக்கைத் தள்ளிவைத்தார் நீதிபதி.
முத்தாய்ப்பாக, இளம் சட்டத்தரணியாக ஆரணி இளந்திரையன் அவர்கள் தன் முதல் வழக்கை வெகு சிறப்பாக வாதாடியதற்காக, நீதிபதி குழந்தைவேல் இளந்திரையன் தன் வாழ்த்தினையும் தெரிவிக்க, கண்ணீரும் புன்னகையும் அரும்ப அவரையே பார்த்து நின்றிருந்தாள் ஆதினி.
கோர்ட் கலைந்ததுதான் தாமதம், ஓடி வந்து தங்கையை வாரி அணைத்துக்கொண்ட அகரனின் விழிகளின் ஓரம் பெருமிதக் கண்ணீர்! சியாமளாவுமே வார்த்தைகளற்று நின்றாள்.
“உங்கட அப்பாக்கும் எனக்கும் பெரிய பெருமையைத் தேடி தந்திட்டீங்கம்மா!” மனம் நிறையச் சொன்னார் குணசேகரன்.
பொது இடம். நீதிமன்று வேறு! கறுப்பு அங்கியில் அவள் சட்டத்தரணியாகவும் காக்கிச் சட்டையில் அவன் காவல் அதிகாரியாகவும் நின்றதில் எதுவும் செய்ய முடியாமல், பார்வையாலேயே அவளை அள்ளியணைத்துப் பாராட்டினான் எல்லாளன்.
அதற்கு மேல் அவனுக்கு நிற்க நேரமில்லை. குற்றவாளியையும் சாட்சிகளையும் மீண்டும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் புறப்பட்டிருந்தான்.
ஆதினி மிதிலாவிடம்தான் முதல் வேலையாக வந்து நின்றாள். கணவனை யாரோ வலுக்கட்டாயமாகக் கொன்றிருக்கிறார்கள் என்று அறிந்து துடிதுடித்துக்கொண்டிருந்தாள் அவள்.
கையை இருபுறமும் கட்டிவைத்துவிட்டு மரக்கொப்பினால் நெஞ்சு பிளக்கும் அளவுக்கு அடித்திருக்கிறார்கள் என்றால் எப்படி வலித்திருக்கும் அவனுக்கு? உயிர்போகும் வலியில் புழுவாகத் துடித்திருக்க மாட்டானா?
ஆதினியின் கைகளிலேயே முகம் புதைத்து விம்மினாள்.
“அக்கா ப்ளீஸ்! அவர் என்ர அண்ணா. அவருக்காக நான் வாதாடாட்டி, பிறகு என்னத்துக்கு இந்த கோர்ட்டை நான் மாட்ட?” என்றவள் விழிகளும் பெருகி வழிந்தன.
“எப்பிடிச் சொல்ல எண்டே தெரியேல்ல ஆச்சி. ஆனா, நிறைய நாளைக்குப் பிறகு மனத்துக்குக் கொஞ்சம் நிறைவா இருக்கு. கடைசி வரைக்கும் அவனை விட்டுடாதீங்கோ! இந்தச் சந்தோசமாவது எங்களுக்கு வேணும்.” அவள் தலையை வருடிச் சொன்னார் சம்மந்தன்.
“இதுக்கெல்லாம் முழுக்காரணம் வைரவன் இல்ல அங்கிள். அவன் ஒரு அம்பு மட்டும்தான். ஆனாலும் அவனை நான் விடவும் மாட்டன், அந்தச் சத்தியநாதன எல்லாளன் விடவும் மாட்டார். நீங்க கவலைப்படாதீங்க! சட்டமும் நீதியும் சும்மா இருக்காது.” என்று, அவர் கரம் பற்றி நம்பிக்கை கொடுத்தாள் அவள்.