நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 4 – 1

அன்று, மாலை மங்கும் நேரத்தில் மகளும் அவளும் திரும்பி வந்தனர். அன்று மட்டுமல்ல சில நேரங்களில் காலையில் போய் மதியம் வந்தாள். சில நேரங்களில் முற்பகல் போய் மாலையில் வந்தாள்.

சில நாட்களாகக் கவனித்துவிட்டு, “எங்கடா போறா ஒவ்வொரு நாளும்?” என்று அசோக்கிடம் விசாரித்தான்.

“தோட்ட வேலைக்கு மச்சான். சாப்பிட காசு வேணுமே.”

“என்னடா சொல்ற?” அதிர்ச்சியாகப் போயிற்று விக்ரமுக்கு.

“அப்ப அந்தக் குழந்த?”

“அதுக்கு என்ன? தாய்க்குப் பக்கத்திலையே விளையாடும். இந்தப் பிள்ளையும் அத வேற யாரிட்டையும் விடாது. மகளை யாரிட்டையும் விடக் கூடாது எண்டுதான் படிச்சிருந்தும் தோட்ட வேலைக்குப் போகுதாம். அங்க எண்டா குழந்தையப் பக்கத்திலையே வச்சிக்கொண்டு வேலை பாக்கலாம்தானே.”

“அது கஷ்டம் இல்லையாடா?”

“கஷ்டம் இல்லையாவா? உச்சி வெயிலுக்க, நாள் முழுக்கக் கிடந்து வேலை செய்யோணும். புல்லுப் புடுங்கோணும், பாத்தி கட்டோணும், குருவி கலைக்கோணும், சொல்ற வேலை எல்லாம் செய்யோணும். ஒரு நாள் போகாட்டியும் காசு இல்ல. நாங்க ஏதாவது உதவி செய்யவா எண்டு அம்மா கேட்டும் வேண்டாம் எண்டு சொல்லிட்டாளாம். என்ர பிள்ளைய நான் உழைச்சுப் பாப்பன் எண்டவளாம்.” என்றான் அசோக்.

மனதுக்குப் பாரமாய்ப் போயிற்று அவனுக்கு. குழந்தைக்காகவே தோட்ட வேலைக்குப் போய், தன்னையே வருத்தி உழைத்துக் குழந்தையே உலகம் என்று வாழ்கிறாள். அவள் மீது புது மரியாதையே உருவாகிற்று அவனுக்கு.

இவளும்தானே இளம் பெண். கணவன் என்கிறவனே இல்லாமல் பிள்ளைக்காக வாழவில்லையா?

கிட்டத்தட்ட ஒரு வாரம் பத்து நாட்களாகக் கவனித்தான். அவர்கள் இருவரையும் தேடி யாருமே வரவில்லை. நண்பர்கள், தெரிந்தவர்கள், பழகியவர்கள், சொந்தம் என்று யாருமே வரவில்லை.

ஜேர்மனில் இருந்த நாட்களில் ஊரில் இருந்தாலாவது கதைக்கப் பேச நாலுபேர் அயலட்டையில் இருப்பார்கள் என்று நினைத்திருக்கிறான். இங்கே பார்க்கையில் நம்மூரில், நம் அயலட்டையில் அநாதை போல் வாழ்வதை விட வெளிநாட்டில் தனியாக இருப்பது மேல் என்று தோன்றிற்று.

அவனுக்கு ஒருவிதமான தனிமை என்றால் அவளுக்கு ஒருவிதமான தனிமை போலும்.

உடனேயே அசோக்கிடம் அவளைத் திருமணத்துக்குக் கேட்கச் சொன்னான்.

“உனக்கென்ன மறை ஏதும் கழண்டு போச்சே.” என்று துள்ளிக் குதித்தான் அவன்.

“அந்தப் பிள்ளையெல்லாம் உனக்குச் சரியா வராது!”

“எனக்குப் பிடிக்கேல்ல!”

அதுவரை அமைதியாக இருந்தவன், “டேய்! நான் எனக்குத்தான் கேக்கச் சொன்னான்.” என்றான் கேலியாக.

“சிரிப்பு வரேல்ல.” என்றான் முறைத்துக்கொண்டு.

கதிரையிலிருந்து எழுந்து நண்பனின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு, “ஏன் உனக்கு இவ்வளவு கோபம்? அந்தப் பிள்ளைக்கு என்ன குறை?” என்று வினவினான் விக்ரம்.

“அவள் குழந்தைக்கு அப்பா…” என்றதுமே இப்படிப் பேசாதே என்பதுபோல் தலையைக் குறுக்காக ஆட்டினான் விக்ரம்.

“நீயும் இப்பிடிக் கதைக்காத அசோக். நாங்க வந்து மூண்டு கிழமை ஆகுது. இத்தனை நாள்ல அந்தப் பிள்ளைல ஏதாவது பிழையாத் தெரிஞ்சதா உனக்கு? இங்கால ரெண்டு ஆம்பிளையள் இருக்கிறோம். அதுவும் வெளிநாட்டுல இருந்து வந்திருக்கிறோம் எண்டு ஏதாவது எங்களக் கவரும் விதமா நடந்தவாவா? ஒரு சொக்லேட் கூடி கேட்டு வரேல்ல. தான் உண்டு தன்ர பாடு உண்டு எண்டு இருக்குது அது. அதுன்ர வாழ்க்கைல நடந்த எல்லாத்தையும் உனக்குச் சொன்னாத்தான் நீ நம்புவியா? இல்ல நீதான் உன்ர வாழ்க்கைல என்ன நடக்குது எண்டு எல்லாருக்கும் சொல்லுவியா? சும்மா ஊர் கதைக்குது எண்டு நீயும் கதைக்காத.” என்றான்.

“சரிதான்டா. அவள் நல்லவளாவேஇருக்கட்டும். ஆனா, நான் உனக்கு வேற பொம்பிள பாக்கிறன்.”

“பாக்கிறதா இருந்தா அவளைப் பார். இல்லாட்டி எனக்குக் கல்யாணமே வேணாம். வா திரும்பிப் போவம்.” ஒரேயடியாக அவன் சொல்லவும் திகைத்துப் போனான் அசோக்.

“டேய் என்னடா இது? திரும்பவும் நீ பிடிச்ச முயலுக்கு மூண்டுகால் எண்டு நிக்கிற?”

“அது அப்பிடித்தான்! கட்டினா அவளைத்தான் கட்டுவன். இல்லாட்டி வேண்டாம்!”

“என்ன லவ்வா?”

சிரித்துவிட்டான் விக்ரம். “லவ் பண்ற வயசாடா இது? அந்தப் பிள்ளையின்ர முகத்தைக்கூட நான் இன்னும் ஒழுங்கா பாக்கேல்ல.”

“பிறகு என்னத்துக்கு அவள்தான் வேணும் எண்டு நிக்கிறாய்?”

“தெரியேல மச்சான். தன்ர மகளுக்காகத் தோட்ட வேலைக்குப் போற ஒருத்தி என்ர மகனையும் பாசமாப் பாப்பாள் எண்டு ஒரு நம்பிக்கை.”

“ஒரு கல்யாணத்துக்கு இது போதாது விக்கி. மனதுக்குப் பிடிக்கோணும். அப்பதான் அது நிலைக்கும்.”

“கல்யாணத்துக்குக் காதல்தான் வேணும் எண்டு கட்டின வாழ்க்க மட்டும் நிலைச்சதா என்ன?” என்றான் விரக்தியோடு.

எண்ணங்கள் யாஸ்மினை நோக்கி மிக வேகமாகப் பாய்ந்தன!

அதை உணர்ந்த அசோக் சட்டென்று பேச்சை மாற்றினான். “அப்ப அந்தப் பிள்ளையக் கொஞ்சமாவது பிடிச்சிருக்கா உனக்கு?”

“அந்தப் பிள்ளைய நான் எங்க பாத்தன். அந்தக் குட்டியைத்தான் பாத்துப் பிடிச்சது. சாரா மாதிரியே இருக்கிறா.”

தலையில் அடித்துக்கொண்டான் அசோக். “மகளைப் பாத்து அம்மாவ செலக்ட் பண்ணினவன் இந்த உலகத்திலேயே நீயாத்தான் இருப்ப.” என்றுவிட்டுத் தாயிடம் கதைக்கப் போனான்.

வேற வழி? விக்ரமின் பிடிவாதத்தை அவனையன்றி வேறு யார் அறிவார்?

அவளிடம் கதைக்கச் சென்ற மரகதமோ, சுவரில் அடித்த பந்தாகப் போனதை விட வேகமாகத் திரும்பி வந்தார்.

“வெளிநாட்டு மாப்பிள்ள, ஒரு குறை சொல்லேலாத நல்ல பிள்ள. அவனக் கட்ட இவளுக்குக் கசக்குதாம். நானும் இனியாவது அவளின்ர வாழ்க்க நல்லாருக்கட்டும் எண்டு கெஞ்சியும் பாத்தன். ஒண்டுக்கும் மசியிறாள் இல்ல. அவளுக்கு இந்த வாழ்க்கையே போதுமாம். அதுசரி! எதுக்கும் ஒரு குடுப்பின வேணும். ஓட்டுற மண்தான் ஓட்டும்!” என்று புலம்பித்தள்ளிவிட்டார் அவர்.

அதைக் கேட்டுவிட்டு அவருக்கு மேலாகத் துள்ளினான் அசோக். “நான் சொன்னனான். கேட்டியா நீ? அவள்தான் வேணும் எண்டு ஒற்றக்கால்ல நிண்ட. இப்ப பாரு அவள் உன்னை வேணாமாம். தேவையாடா உனக்கு இது?”

நண்பனை ஒருத்தி நிராகரித்துவிட்ட கோபம் அவனுக்கு.

“டேய்! சும்மா கத்தாத! அந்தப் பிள்ளையோட நானே நேர கதைக்கிறன்.” என்றுவிட்டுப் போனவனை, இவனுக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு என்பதாகப் பார்த்தான் அசோக்.

‘இவன்ர பிடிவாதத்துக்கு மட்டும் அளவே இல்ல. அண்டைக்கும் அவள்தான் வேணும் எண்டு அந்த யாஸ்மின கட்டினான். இண்டைக்கு இவள்தான் வேணும் எண்டு நிக்கிறான்!’ என்றபடி அமர்ந்திருந்தான் அசோக்.

சமைக்க வேண்டும், மகளைக் குளிப்பாட்டி, அவளுக்கு உணவு கொடுத்து வேலைக்குப் போக வேண்டும். இதில் அழுக்கான உடைகள் வேறு தோய்க்கக் கிடந்தன. ஆனாலும் அப்படியே வராந்தைச் சுவரில் சாய்ந்து, தரையில் அமர்ந்திருந்தாள் அவள், யாமினி!

மரகதம் வந்து கேட்டதில் மனம் குழம்பியே போயிற்று.

‘என்னவோ கடவுளாப் பாத்துத் தாற அருமையான வாழ்க்கைய எட்டி உதைக்கிறேனாம் எண்டு சொல்லிப்போட்டுப் போறா. நான் கேட்டனானே எனக்கு வாழ்க்கை தாங்கோ எண்டு.’ மனம் புகைந்தது.

‘அவர் நல்லவராம், வல்லவராம், பூ மாதிரி என்னை வச்சுப் பாப்பாராம். உண்மையாவே இருக்கட்டும். எனக்கு விருப்பம் இல்லை எண்டு சொன்னா விடவேண்டியதுதானே. என்னத்துக்கு வற்புறுத்தோணும்?’ மனம் ஆறவேயில்லை அவளுக்கு.

அதைவிட இது என்ன வேதனை என்று இருந்தது. இனியும் எப்படித்தான் ஒதுங்கி இருப்பது என்றும் தெரியவில்லை.

‘யார பாத்தாலும் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்! ஒரு பொம்பிள தனியா இருந்திடக் கூடாதே! இவேக்குக் கண் பொறுக்காது!’ அங்கே சின்னதாகப் படங்களில் இருந்தவர்களைக் கண்ணீரோடு பார்த்தாள்.

‘இதே ஊருல எவ்வளவு மதிப்போட வாழ்ந்தோம். இண்டைக்கு என்ர நிலமையப் பாத்தீங்களா? நீங்க எல்லாரும் இல்லை எண்டதும் கேவலமாப் பாக்கீனம். என்னவோ எனக்கு வாழ்க்கை தாறாராம் அவர். அந்தளவு மோசமாப் போச்சாம்மா என்ர நிலைமை?’

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock