நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 5

அத்தியாயம் 5

அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி. சற்று நேரத்துக்கு எதையும் சிந்திக்கவே முடியவில்லை. அவன் வந்தது, கேட்டது, போனது எல்லாம் உண்மையா பொய்யா என்றே தெரியாமல் இருந்தது.

பொய்யாக இருக்கக் கூடாதா என்றெண்ணினாள். அப்படிப் பொய்யாக இருப்பின் இந்த மனப் பாரம் இருக்காதே. எப்போதும்போல அவள் நாட்கள் போயிருக்குமே. தெளிந்திருந்த நீரோடையில் கல்லை எறிந்துவிட்டிருந்தான் விக்ரம்.

மகளைப் பார்த்தாள். அவன் கொடுத்துவிட்டுப் போன சொக்லேட்டோடு அவள் மடியில் வந்து அமர்ந்திருந்தாள்.

அவன் தூக்கி வைத்திருந்தபோது பார்க்க எவ்வளவு பாந்தமாக இருந்தது. அப்படி ஒரு காட்சியை அவள் கண்டதே இல்லை. கண்கள் பனித்தன.

குழந்தையைக் குனிந்து பார்த்து அவளைச் செல்லமாகத் தடவிக்கொடுத்தாள்.

என்ன விளங்கியதோ, கையிலிருந்த சொக்லேட்டை காட்டி, “ப்பா…” என்றாள் அவள்.

விக்கித்துப்போனாள் யாமினி. அப்பாவா?

‘இதென்ன அடுத்த கலவரம்?’ ஒருகணம் இதயம் துடிப்பதை நிறுத்தியது.

அடுத்தகணமே டமார் டமார் என்று அடித்துக்கொள்ளத் தொடங்கிற்று.

கை கால்கள் நடுங்க, மகள் சொன்னதில் நம்பிக்கையற்று, “என்னம்மா?” என்று நடுங்கும் குரலில் கேட்டாள்.

‘ஐயோ திரும்பவும் சொல்லிவிடாதே!’ என்று மனம் பதறிற்று!

“ப்பா…” என்று அழகாக மீண்டும் சொக்லேட்டை காட்டிச் சொன்னாள் அவள்.

மகளை அணைத்துக்கொண்டு விம்மிவிட்டாள் யாமினி.

யார் இந்த உறவை அவளுக்குக் கற்றுக் கொடுத்தது? வேலைக்குப் போகையில் மற்ற குழந்தைகளின் வாயிலிருந்து வந்த அப்பாவையும், வீட்டில் முதன் முதலாகக் கண்ட ஆணையும் ஒன்றாக இணைத்துவிட்டிருந்தாள் குழந்தை.

தனக்கான முடிவை மகளே எடுத்துவிட்டது போலிருந்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துத் தடுமாறிப்போனாள். தற்போது கிடைக்கிற சொற்ப நிம்மதியைக் கூட இழந்துவிடுவேனோ என்று பயந்தாள்.

மறுத்துவிட்டால் இந்த அலைப்புருதல் அத்தனையும் முடிந்துவிடுமே! மீண்டும் சலனமற்ற வாழ்க்கை வாழலாம் என்றால் மகள் சொன்ன அப்பா வந்து நின்று நெஞ்சைப் பிழிந்தது.

என்ன செய்வாள்?

இதை நான் செய்யவா, வேண்டாமா, எனக்கு ஒரு வழி சொல்லித்தாருங்களேன், இதன் சாதக பாதகம் என்ன என்று அறிவுரை கேட்கக் கூட ஆளில்லா நிலையில் வைத்துவிட்ட இறைவனை மனதால் நொந்தாள்.

யாரிடம் அறிவுரை கேட்பாள்? யாரிடம் சொல்லி ஆறுவாள்? பலர் அவளை ஒதுக்கினார்கள் என்றால் சிலரிடமிருந்து அவளே விலகிக்கொண்டாள்.

இப்படியே இரண்டு நாட்கள் ஓடின. அவளின் பார்வையில் படும் விதத்தில் நின்றோ, குழந்தையோடு பாசம் வளர்க்கிறேன் என்று வந்தோ வேதனையைப் பெருக்காமல் அவன் விலகி இருந்ததில் மனதுக்குக் கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தாள். ஆனாலும் இந்த நிமிடம் வரையிலுமே சம்மதம் சொல்ல வாய் வரவில்லை. மறுக்கவும் தெம்பில்லை.

மனப்பாரம் தாங்கமாட்டாமல் குழந்தையோடு சென்று கோயிலில் அமர்ந்துகொண்டாள்.

சம்மதிப்பதா மறுப்பதா?

சம்மதிக்க மனம் மறுத்தது. மறுக்கக் குழந்தையின் ‘அப்பா’ தடுத்தது.

‘கடவுளே! இவன் ஏன் என்னிடம் வந்து இந்தக் கேள்வியைக் கேட்டான்? என்னை என் பாட்டுக்கே விட்டிருக்கக் கூடாதா?’ தனக்குள்ளேயே கிடந்து மருகினாள்.

இப்போதெல்லாம் அவன் கார் சத்தம் கேட்டாலே குழந்தை வேறு, “ப்பா… ப்பா” என்று சிணுங்கத் தொடங்கியிருந்தாள்.

“இல்லடா செல்லம். அவர் உன்ர அப்பா இல்ல.” என்று சொல்லியும் பார்த்தாள்.

குழந்தை அல்லவா! அவளுக்கு இவள் சொல்வது விளங்கவே இல்லை!

எல்லாவற்றையும் நினைக்க நினைக்கக் கண்ணோரம் மெல்லிய நீர் கசிவு நிரந்தரமாகப் பெருகிக் கொண்டே இருந்தது. மனதோடு போராடிப் போராடியே ஓய்ந்துபோய் அமர்ந்திருந்தாள்.

அப்போது அவளருகில் வந்து அமர்ந்தான் விக்ரம்.

திடுக்கிட்டுப்போய்த் திரும்பிப் பார்த்தாள்.

அவனைக் கண்டதும், ‘ஐயோ திரும்பவும் கேட்கப் போகிறானே…’ என்று கலங்கிப்போனாள்.

சற்று நேரம் அந்தக் கண்களையே பார்த்தான் விக்ரம். அவளின் கண்ணோரக் கசிவும் கலக்கமும் மனதைப் பிசைந்தது.

“உனக்குப் பிடிக்கேல்லை எண்டா விடு. அதுக்கு ஏன் உன்ன நீயே கஷ்டப்படுத்திற?” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, “ப்பா…” என்றபடி அவன் மடிக்குத் தாவினாள் சின்னவள்.

இனிமையாய் அதிர்ந்துபோனான் விக்ரம்!

கைகள் தானாகக் குழந்தையை அணைக்க, அவளைத்தான் நிமிர்ந்து பார்த்தான்.

மளுக்கென்று கண்களில் நிறைந்து, கன்னத்தில் வழிந்துவிட்ட கண்ணீரை அவனுக்குக் காட்டப் பிடிக்காது முகத்தைத் திருப்பிக்கொண்டாள் யாமினி.

அந்தக் கண்ணீருக்கான காரணத்தை விக்ரம் புரிந்துகொண்டான்.

மெல்ல அவள் கையைப் பற்றினான். பற்றியது மெல்லத்தான். அந்தப் பற்றல் மட்டும் பலமாக இருந்தது. இனி விடமாட்டேன் என்பதுபோல்!

யாமினியோ பதறிப்போனாள்.

வேகமாக விடுவிக்கப் பார்த்து முடியாமல், “ப்ளீஸ் விடுங்கோ.” என்றாள் அழுகையை அடக்கிக்கொண்டு. மற்றக் கையால் ஏற்கனவே வழிந்து விட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்தாள்.

அந்தக் கண்ணீர் அவனை என்னவோ செய்தது.

“சரி விடுறன். ஆனா நீ அழாத.” ஆறுதலாகச் சொன்னான் விக்ரம்.

“இப்ப என்ன உனக்கு? குழந்தை என்னை அப்பாவா நினச்சிட்டாள். அதால மறுக்க முடியேல்ல. ஆனா சம்மதிக்க உனக்கு விருப்பமும் இல்ல. அவ்வளவுதானே. சரி விடு! நான் அவளுக்கு அப்பாவா மட்டும் இருந்திட்டுப் போறன்.” இலகுவாகச் சொல்லிவிட்டவனைத் திகைத்துப்போய்ப் பார்த்தாள்.

ஆனால், ‘இலங்கைய விட்டுப் போகேக்க இவளின்ர புருசனாத்தான் போவன்’ என்று விக்ரமின் மனம் பிடிவாதமாகச் சொன்னது!

மகள் சொல்லிவிட்ட ஒரு அப்பாவுக்காக மறுக்க முடியாமல் இந்தத் தவி தவிக்கும் அற்புதமான பெண்ணை அவன் இழக்கத் தயாராயில்லை!

“அது எப்பிடி?” கொஞ்சம் நிம்மதியாகவும் கொஞ்சம் கலக்கமாகவும் கேட்டாள்.

“நான் இங்க இருக்கிற வரைக்கும்தானே இவள் அப்பா எண்டு வருவாள். நான் போனதும் அப்பா வெளிநாட்டுக்குப் போய்ட்டார் எண்டு சொல்லு. அங்க இருந்து நான் அப்பப்ப எடுப்பன். அப்ப மட்டும் அவளக் கதைக்க விடு. முடிஞ்சுது பிரச்சனை.” இலகுவாகச் சொன்னான்.

‘உண்மையாவே பிரச்சனை முடிஞ்சுதா? அவளை அழுத்தும் இந்தப் பாரம் கரைந்து காணாமல் போய்விடுமா?’ நம்ப முடியாம அவள் பார்க்க, அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“அதுதான் பிரச்சினை முடிஞ்சுது எண்டு சொல்லீட்டன் தானே. பிறகும் இப்பிடிப் பாத்தா என்ன அர்த்தம்? இதெல்லாம் ஜுஜுபி மேட்டர். இதுக்குப்போய்…” என்றான் அவன் சிரித்துக்கொண்டு.

‘இவனுக்கு எல்லாமே ஜுஜுபிதான் போல. கல்யாணத்தையும் ஜுஜுபி மாதிரித்தான் சொன்னான். இப்ப இதையும்.’

அவன் இலகுவாகக் கதைத்தது அவளுக்கும் மனதுக்குச் சற்று நன்றாக இருந்தது.

“சரி போவமா?” என்று கேட்டான்.

“ம்ம்…” என்றபடி அவள் எழுந்துகொள்ள, அவனோ அப்படியே இருந்து அவளையே அண்ணாந்து பார்த்தான்.

என்ன என்பதாக விழிகளால் கேள்வி எழுப்பினாள் யாமினி.

‘கண் ரெண்டும் நல்லாத்தான் கதைக்குது…’ மனதுக்குள் நினைத்துக்கொண்டவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க, குழந்தை மடியில் இருப்பதால்தான் போலும் என்று எண்ணி, “குட்டி வாங்க, வீட்ட போவம்.” என்றதும் அவளும் எழுந்துகொண்டாள்.

பின்னரும் அவன் அப்படியே இருக்க, திரும்பவும் விழிகளால் கேள்வி எழுப்பினாள்.

அழகான புன்முறுவலோடு, “இப்பிடி நிலத்துல இருந்து பழக்கமில்ல. உன்னக் கண்டதும் ஒரு வேகத்துல நானும் இருந்திட்டன். இப்ப எழும்புவன் போலத் தெரியேல்ல. முடிஞ்சா ஏதும் ஒரு கிரேன் இருந்தா கொண்டுவா. தூக்கிவிடச் சொல்லுவம்.” என்றான்.

அவன் சொன்ன விதத்தில் அவள் முகத்தில் அழகான புன்னகை ஒன்று மலர்ந்தது.

அந்தப் புன்னகையை உள்வாங்கிக் கொண்டே, “ஒரு கை குடு.” என்று அவளிடம் தன் கையை நீட்டினான்.

புன்னகை விரிந்தது அவளிடம். ஆனாலும், ‘இவன் உண்மையாத்தான் சொல்றானா?’ என்று சந்தேகமாகப் பார்த்தாள்.

“உன்னால முடியாட்டி வேற யாரையாவது கூட்டிக்கொண்டு வா.”

‘உண்மையாத்தான் சொல்றான் போல…’ என்று நினைத்தபடி தயக்கத்தோடு கையை நீட்டினாள். அந்தக் கரத்தை இறுக்கப் பற்றிக்கொண்டு ஒரே ஜம்பில் அவன் எழும்பிவிட இவள்தான் அவன் பாரம் தாங்கமாட்டாமல் தடுமாறி விழப்போனாள்.

கடைசியில், “ஏய் பாத்து பாத்து.” என்று அவளின் தோள்களைப் பற்றி விக்ரம் நிறுத்தும்படி ஆயிற்று.

வெட்கமாகப் போயிற்று அவளுக்கு. அவனுக்கு உதவப்போய்க் கடைசியில் அவன் அவளுக்கு உதவும் படியாகிற்றே.

அந்த வெட்கத்தைக் கண்டவனின் மனதோ, ‘இவளுக்கு நான்தான் புருசன்!’ என்று கங்கணம் கட்டிக்கொண்டது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock