நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 6 – 1

விக்ரமும் யாமினியும் கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். இருவருக்குமிடையே அமைதி. எப்போதும் போலச் சந்தனாவை தன் இடுப்பில் அடித்திருந்தாள் யாமினி. பிள்ளையைத் தா என்று கேட்டும் அவனிடம் கொடுக்கவில்லை. சின்ன விசயத்தில் கூடத் தான் அவனுக்குச் சாதகமாக நடந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தாள். அந்தக் குட்டியோ தன் சிம்மாசனமான தாயின் இடுப்பில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்து இவனைப் பார்த்துப் பச்சரிசிப் பற்களைக் காட்டிக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்க்கப் பார்க்க, அவள் சொன்ன ‘அப்பா’ காதுக்குள் நின்று ரீங்காரமிட, சந்தனாவை விட்டுவிட்டுப் போய்விட முடியும் போலில்லை அவனுக்கு. ஏதோ கண்ணுக்குத் தெரியாத பாசம் கட்டியிழுத்தது.

யாமினியைப் பார்த்தான். இவனைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்கிற முடிவோடு நேர் பார்வையோடு நடந்துகொண்டிருந்தாள். மெலிந்த மேனிக்குள் நிறைந்து கிடக்கும் அந்த நிமிர்வு அவன் மனதை அப்படியே கவர்ந்தது.

கோவிலில் அவள் கலங்கிப்போய் அமர்ந்திருந்ததைக் கண்டதும் என்னென்னவோ சொன்னான்தான். அது அப்போதைக்கு அவளின் ஆறுதலுக்கு மட்டுமே! ஆனால், இதோ இப்போது கூடக் குழந்தையை அவள் சுமப்பதைப் பார்க்கையில் என்னிடம் தா என்று கேட்டு வாங்கிக்கொள்ளத்தான் ஆசை. அவள்தான் மறுத்துவிட்டாளே!

‘பிடிவாதம் தான்.’ மனதில் சொல்லிக்கொண்டான்.

‘நானும் விடமாட்டன்!’

சலனப்படாமல், தடுமாறாமல் தன் பிடியில் நிற்பவளைத் தன்னிடம் கொண்டுவரச் சொல்லி ஒரு குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்தது.

‘ஆனா, ஏன் மறுக்கிறா? என்ன நம்பேல்லையா? இல்ல. அதையும் தாண்டி என்னவோ இருக்கு!’ மனம் அடித்துச் சொல்ல, மெல்லப் பேச்சுக் குடுத்தான்.

“ஏன் உனக்கு இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்ல?”

‘திரும்பவுமா?’ என்று கலக்கமாகப் பார்த்தாள்.

“முதல் கண்ணால கதைக்கிற வேலைய விட்டுட்டு வாயால சொல்லு. நீ என்னைக் கட்டுறியோ இல்லையோ இனி சந்தனாவுக்கு நான்தான் அப்பா. அவளின்ர கடமைய யார் தடுத்தாலும் செய்வன். அது நீயா இருந்தாலும் சரிதான்.” கூடவே பிறந்த பிடிவாதம் தலைதூக்கச் சொன்னான் அவன்.

‘என்ன இது இப்படி மிரட்டுறானே. இவ்வளவு நேரமும் நல்லாக் கதைச்சான். நல்ல மனுசன்போல எண்டு நினச்சு முடிக்கேல்ல அதுக்குள்ள மிரட்டுறான்.’ மீண்டும் கலங்கிப்போய்ப் பார்த்தாள்.

“சொல்லு!” என்றான் மீண்டும் தன் பிடியிலேயே நின்று.

“தெரியேல்ல. ஆனா பயமாயிருக்கு.”

“என்ன பயம்?”

“இருக்கிற நிம்மதியும் போயிடுமோ எண்டு.”

“இந்தப் பயம் என்னட்ட மட்டும்தானா? இல்ல, யார் கேட்டாலுமா.”

“இந்தளவு தூரத்துக்கு விளக்கமா சொன்னதே உங்களுக்கு மட்டும்தான்.”

அந்தப் பதிலில் மனம் ஓரளவுக்குச் சமன்பட்டது.

“ஊர்ல ஒருத்தரோட கதைக்கிறேல்ல. உனக்கெண்டு ஒரு பிரெண்ட்ஸ் இல்ல. ஒரு வீடு இல்ல. கதைக்கப் பேசக்கூட ஆக்கள் இல்ல. பேச்சுல பார்வைல கூட இறுக்கமா இருக்கிறதும், யாருக்கும் இடம் குடுத்தா ஆபத்தில முடிஞ்சிடுமோ எண்டு உனக்குள்ளேயே இறுகி இறுகி இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருப்பாய்?” என்று அவன் கேட்டபோது,

‘இதென்ன என்ர மனதுக்குள்ள நுழைஞ்சு பாத்த மாதிரியே சொல்றானே.’ என்று அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள் யாமினி.

“உன்ன விடு. இவள் குழந்தை. இப்ப ஒண்டும் தெரியாது. வளந்த பிறகு? அவளுக்கு ஒரு பள்ளிக்கூடம், அங்க நாலு பிரெண்ட்ஸ், அவேன்ர வீடு எண்டு வரேக்க என்ன செய்வ? அங்கயும் நாலு ஆம்பிளையள் நாலு விதமாப் பாக்கத்தான் செய்வீனம். அப்பவும் உன்ன மாதிரியே இவளையும் எங்கயும் விடாம வச்சிருக்கப் போறீயா? உன்ன மிரட்டச் சொல்லேல்ல நான். அந்தளவு தூரத்துக்கு இனிமேல் உன்னையும் அவளையும் நானும் விட மாட்டன். நீ என்னைக் கட்டினாலும் கட்டாட்டியும் உங்க ரெண்டு பேருக்கும் துணையா இருப்பன். ஆனா, நான் அங்கயும் நீயும் இவளும் இங்கயும் எண்டு ஏன் இருக்கோணும்? வளந்த பிறகு அப்பா எண்டு அவள் என்னைக் காட்ட, நான் உனக்கு யார் எண்டு நீ சொல்லுவ?” என்று கேள்விகளால் அவளைத் துளைத்து எடுத்துவிட்டான் விக்ரம்.

அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள் யாமினி. இதெல்லாம் அவள் யோசிக்காததோ அவளுக்குத் தெரியாததோ இல்லை. அவன் வாயால் கேட்கையில் மிகவும் பயங்கரமாகத் தோன்றியது. இதில், இனிக் குழந்தையை விடமாட்டேன் என்று முதலில் சொன்னவன், இப்போது அவளையும் விடமாட்டேன் என்கிறானே. அதுவேறு அடுத்த அதிர்வாக இருந்தது.

“இந்த விசயத்த விடு எண்டு சொன்னீங்களே…” மெலிந்த குரலில் சொன்னாள். மனச்சுமை மீண்டும் ஏறிவிட்டதில் அந்தக் கண்களில் அத்தனை கலவரம்!

மனதைப் பிசைந்தது விக்ரமுக்கு. ஆனால், பேசாமல் நிரந்தரத் தீர்வு கிட்டாதே!

“விடச் சொல்லித்தான் சொன்னனான். ஆனா ஏன் விடவேணும்? இவ்வளவு பிடிவாதமா நிண்டு நீ ஏன் மறுக்கிறாய்? அது தெரியோணும் எனக்கு!” என்றான் அழுத்தமாக.

‘இதென்ன இப்படி ஒரே பிடியாய் நிண்டு கேக்கிறார்?’ என்று யாமினி மிரண்டுபோய் அவனைப் பார்த்தாள்.

“எனக்கு அம்மா அப்பா கிடையாது. அண்ணா தங்கை எண்டும் யாரும் இல்ல. உன்னக் கட்டினா என்ர சொந்தம் முழுக்க நீயும் ரெண்டு பிள்ளைகளும் மட்டும்தான். உன்னத் தாண்டிப் போகமாட்டன். விளங்கிக்கொள்ளு! இப்ப இந்த நிமிசம் உன்ன உயிரா நேசிக்கிறன், அது இது எண்டு பொய்சொல்ல விருப்பம் இல்ல. ஆனா, நீதான் வேணுமெண்டு உள் மனசு அழுத்தமாச் சொல்லுது. எனக்கு ஒரு மனுசி மட்டும் வேணுமெண்டா யார வேணுமெண்டாலும் கட்டிப்போட்டுப் போவன். எனக்குத் தேவை சந்தனா. அவள கண்ணுக்குள்ள பொத்திவச்சு வளக்கிற நீ!” என்றான் அவன் தெளிவாக.

இதற்கிடையில் அவளின் வீட்டருகே வந்திருந்தனர். படலையைத் திறந்து, அவளுக்கு வழியை விட்டு நின்று, “போ! போய் நல்லா யோசி. யோசிச்சு நல்ல பதிலாச் சொல்லு. நீ என்ன பதிலச் சொன்னாலும் நான் சொன்னது மாறாது.” என்றுவிட்டு அசோக்கின் வீட்டுக்கு நடந்தான் அவன்.

பொம்மையென உள்ளே சென்றவள், ஒரு பாயை விரித்துத் தலையணையைப் போட, சந்தனா அவளின் சேலை ஒன்றைத் தரையில் தேயத் தேய இழுத்துக்கொண்டு வந்தாள். அதை அவளுக்காக இவள் விரித்துவிட, தாயும் மகளுமாகப் படுத்துக்கொண்டனர். கை தன்பாட்டுக்கு மகளின் நெஞ்சை வருடிக் கொடுத்தாலும் யாமினியின் நினைவுகள் அவள் வசமில்லை. விக்ரம் சொன்ன திசையிலும் சிந்திக்கவில்லை. உண்மையிலேயே மனதில் ஏறிய பாரத்தில் எதையும் சிந்திக்கும் சக்தி அற்றவளாக அப்படியே கிடந்தாள்.

வீட்டுக்குச் சென்ற விக்ரமும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்துகொண்டான்.

முதலில் குழந்தையைத்தான் பிடித்தது. அவளைப் பற்றி அசோக்கின் பேச்சு ஒருவிதமான பரிதாபத்தை அவள் மீது உருவாக்கியதுதான். ஆனால் அது ஈர்ர்ப்போ வேறு எதுவுமோ அன்று. அவளும் தானும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றுபோலத் தோன்றவும் பெண் கேட்கச் சொன்னான்.

அவளுடன் கதைக்கக் கதைக்க, அவளின் மறுப்பும் தயக்கமும் மணந்தால் அவளைத்தான் மணக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தை அவனுக்குள் விதைத்துக் கொண்டிருந்தது. சொன்னது போலவே இனிமேல் அவர்கள் இருவரையும் அவனால் விட முடியாது.

அவளுடைய அச்சத்தில் இருக்கும் நியாயம், மறுக்கும் பாங்கு, கத்திக் கூச்சல் போடாமல் ஒதுங்கிப் போகும் குணம் எல்லாமே அவள்தான் வேண்டும் என்று நினைக்க வைத்தது.

நன்றாக யோசிக்கட்டும் என்று அவளைத் தொந்தரவு செய்யாமல் இருந்தான். ஆனால், காலையிலிருந்து உறங்கும் வரை அவளும் மகளும் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தான்.

எப்போதும் உண்டுவிட்டுச் சும்மாவே இருக்கிறோம் என்று அன்று மாலை அசோக்கையும் இழுத்துக்கொண்டு நடக்கப் போனான்.

“என்னவாமடா அந்தப் பிள்ள?” விசாரித்தான் அசோக்.

“பயப்படுறாள் மச்சான். குழந்தையக் கை விட்டுடுவேனோ எண்டு.”

“ம்ம்…” விக்ரமின் பேச்சை உள்வாங்கியபடி நடந்தான் அசோக்.

“நீ நல்லவன் எண்டு உனக்குத் தெரியும், எனக்குத் தெரியும். அந்தப் பிள்ளைக்குத் தெரியாதுதானே. அது பயப்படுறதுலயும் நியாயம் இருக்குத்தானேடா. அப்பிடித்தானே ஊர் உலகத்துலயும் நடக்குது.” என்றான் தனக்குத்தானே விளக்கம்போல.

“உண்மைதான். ஆனா, நானும் அவளைக் கட்டாம இங்க இருந்து போகமாட்டன்.”

“டேய் என்னடா?” அதிர்ந்துபோனான் அசோக்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock