நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 7

அத்தியாயம் 7

விக்ரமுக்கு ஆத்திரம்தான் வந்தது. ‘நம்புறாள் இல்லையே. நானும்தானே அவள நம்பி என்ர மகன விடப்போறன். அதையேன் அவள் யோசிக்கேல்ல.’ மனத்தாங்கலில் குமுறியது அவன் இதயம்.

அங்கிருந்து புறப்பட்ட வேகத்துக்கு எவ்வளவு தூரம் நடந்தானோ, ஒரு வெட்டவெளியில் ஆங்காங்கே பனை மரங்கள் நின்ற இடம் வந்திருந்தது. கால்கள் ஒரு பனையின் கீழே வந்து நின்றது.

நடந்த வேகத்துக்கு வியர்த்துக் கொட்டவும் முதல் இரண்டு பட்டன்களைக் கழட்டி, சட்டையைப் பின்னால் இழுத்துவிட்டான். ‘ஊப்ஸ்…’ உதட்டைக் குவித்துக் காற்றை வெளியே ஊதித் தள்ளினான். அப்போதும் மனப் புழுக்கம் அடங்க மறுத்தது. இதில் வியர்வை வேறு. பழக்கமில்லா வெயிலில் என்னவோ இவன் உடம்பு மகாவலி கங்கையின் பிறப்பிடமே என்பதுபோல் ஆறாக ஓடியது!

‘ச்சே!’ தலையை அழுத்திக் கோதினான். ‘அவ சொன்ன மாதிரி நான் இந்தப் பேச்சை ஆரம்பிக்காமையே இருந்திருக்கலாம். அவளாவது நிம்மதியா இருந்திருப்பா.’

ஆனால், அது அவன் கையிலா இருந்தது. சந்தனாதானே ஆரம்பித்து வைத்தாள். அவள்தான் முடித்தும் வைக்க வேண்டும்! அதுதான் அவளை அழ அழ விட்டுவிட்டு வந்தான்.

அங்கே அந்தச் செல்லம் கதறுமே என்று இவன் நெஞ்சு படாத பாடு பட்டது. ஆனால், அந்தக் குழந்தை காலம் பூரா சந்தோசமாக வாழவேண்டுமானால் இந்த அழுகை வேண்டும் என்றுபட, பல்லைக் கடித்து அந்த வலியைப் பொறுத்தான். அன்று முழுக்க அசோக் வீட்டுக்குக் கூடப் போகவில்லை.

அசோக் மூலம் விசயமறிந்த மரகதம் அம்மாவுக்கு மனம் கேட்கவேயில்லை. தானாகத் தேடிவரும் நல்ல வாழ்க்கையைத் தன் பிடிவாதத்தால் இழக்கிறாளே என்று அவளிடமே திரும்பவும் வந்து நின்றார்.

அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முனைந்தபடி நின்றவளைப் பார்க்க, மனம் தாளவில்லை அவருக்கு!

“இந்தக் குழந்தைய இப்பிடி அழ வச்சு அப்பிடி என்ன காணப்போறாய் நீ? அவளுக்காக வாழுற உன்னால அவள் கேக்கிற அப்பாவக் கூடக் குடுக்க ஏலாத அளவுல இருக்கா உன்ர பிடிவாதம்?”

அவளோ பதில் சொல்லவில்லை. கலங்கிவிட்ட கண்களை அவருக்கு மறைப்பதில் முழுமூச்சாக முனைந்துகொண்டிருந்தாள்.

அவளின் அமைதி அவருக்கு இன்னும் கோபத்தைக் கொடுத்தது. ஆனாலும் பொறுத்து, “உன்ர அம்மான்ர இடத்துல இருந்து நான் சொல்றன், கேளம்மா. அவன் ஒண்டும் எங்களுக்குத் தெரியாத பிள்ள இல்ல. அசோக்கின்ர நல்ல பிரெண்ட். வெளிநாட்டுல வாழ்ந்தாலும் நல்ல ஒழுக்கமா இருக்கிற பிள்ள. உன்னையும் மகளையும் கண்ணுக்க வச்சுப் பாப்பான். நான் சொல்றதக் கேட்டு அவனுக்கு ஓம் எண்டு சொல்லு.” என்றார் கெஞ்சலாக.

அப்போதும் வாயைத் திறக்கவில்லை அவள்.

“என்னவோ செய் எண்டுட்டுப் பேசாம இருக்கோணும் போலத்தான் கிடக்கு. அவ்வளவு கோபம் வருது உன்னில. ஆனா, பாழாப்போன இந்த மனம் கேக்குதில்ல. நான் பாக்க வளந்த பிள்ளை, நல்ல வாழ்க்கை காலடிக்குத் தேடி வந்தும் எட்டி உதைக்கிறாளே எண்டுற கவலைலதான் திரும்ப திரும்பக் கெஞ்சிக்கொண்டு இருக்கிறன். உன்ர வாழ்க்கை மட்டுமில்ல இந்தச் சின்னவளின்ர வாழ்க்கையும் நல்லாருக்கும். அசோக் வேற அங்க பக்கத்திலதான் இருக்கிறான். உனக்கு ஒண்டு எண்டா அவன் வருவான். ஓம் எண்டு சொல்லம்மா.”
அவள் அசையவே இல்லை. அவர் எவ்வளவு கெஞ்சியும் ஒரு வார்த்தை சொல்லவேயில்லை. மனம் விட்டே போயிற்று அவருக்கு.

“ஆனாலும் உனக்கு இவ்வளவு அழுத்தம் கூடாது யாமினி. நீ நல்லாருக்கோணும் எண்டு நினைக்கிற எல்லாருண்ட மனதையும் நோகடிக்கிறாய்.” என்று சொன்னவர் அதற்குமேலும் அங்கே நில்லாமல் வெளியேறினார்.

அதுவரை உதட்டைக் கடித்துப் பொறுத்த அழுகை விம்மலாக வெடிக்க, அழும் மகளை நெஞ்சோடு அணைத்தபடி அப்படியே நிலத்தில் தொய்ந்தாள் யாமினி.

தாயும் மகளும் தேற்றுவார் ஆற்றுவார் இன்றிக் கண்ணீரைச் சொறிந்தனர்!

குழந்தை அழும் குரல் கேட்டால் தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்து, அன்று முழுவதும் வெளியே சுற்றிவிட்டு இரவு பன்னிரண்டு தாண்டியபிறகே வீட்டுக்கு வந்தான் விக்ரம்.

ஆனாலும் நிம்மதியாக உறங்க முடியவில்லை. மூடிய கண்களுக்குள் கதறும் சந்தனாவே வந்து நின்று மனதைப் பிசைந்தாள். அதற்குமேல் முடியாமல் அதிகாலையிலேயே முழிப்பும் வந்தது.

என்ன செய்ய என்றும் தெரியவில்லை. நாட்கள் வேறு ஓடிக்கொண்டிருந்தன. அங்கே தொழிலை நிறைய நாட்களுக்கு இப்படியே விடவும் முடியாது. அசோக்கும் இல்லை. டெனிஷ் வேறு தனியாக அசோக் வீட்டில் நிற்கிறான். ஒருமுறை அங்கே போய்விட்டு வருவோமா என்கிற யோசனைகளோடு எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தபோது, பக்கத்து வீட்டுக்கு ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வேகமாக எட்டிப் பார்த்தான். இவன்தான் அவள் வீட்டுப் படலையிலேயே ஒரு காதைக் காவலுக்கு நிரந்தரமாக நிறுத்தி வைத்திருந்தானே.

யாமினி மகளோடு பதட்டத்தோடு வாசலுக்கு விரைவது தெரிய பதறியே போனான்.

‘செல்லம்மாக்கு என்ன?’ கைக்கு எட்டிய சட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு வேகமாக அவளிடம் ஓடினான்.

“என்ன? செல்லத்துக்கு என்ன?” என்று அவன் கேட்கையிலேயே நல்ல காய்ச்சல் என்று விளங்கிற்று. அந்தளவுக்கு முகம் சிவந்து, அருகில் நிற்கும் அவனுக்கே அனல் அடித்தது. அனத்திக்கொண்டும் சிணுங்கிக்கொண்டும் இருந்தாள்.

“இரவிரவாக் காய்ச்சல். என்ன மருந்து குடுத்தும் மாறேல்ல.” என்றாள் யாமினி கண்ணீரோடு.

தீப்பார்வை ஒன்றை அவளிடம் வீசிவிட்டு, “உள்ளுக்குத் தள்ளு!” என்றபடி ஆட்டோவில் தானும் ஏறிக்கொண்டான்.

“குட்டிம்மா, அப்பாட்ட வாங்க செல்லம்.” என்று அவளை வாங்கிக்கொண்டான்.

தன்னைக் கண்டதும் பச்சரிசிப் பற்களைக் காட்டித் துள்ளிக்கொண்டு வரும் குழந்தை, இன்று தான் கையில் ஏந்தி இருப்பதையே உணராமல் இருப்பதைக் கண்டவனுக்குப் பக்கத்தில் இருந்தவள் மேல் கண்மண் தெரியாத கோபம் எழுந்தது.

“இரவிரவாப் படுக்கவே இல்ல. அழுதுகொண்டே இருந்தவள்.” கண்ணீரோடு சொன்னவளை நன்றாகவே முறைத்தான்.

“இதுக்குத்தானே ஆசைப்பட்ட?” பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

மகளின் விடாத அழுகையே அவளை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டிருந்தது. காய்ச்சலில் தன்னைக் கூட உணராமல் கிடந்தவளைக் கண்டு நடுங்கியேவிட்டாள். இப்போது அவனும் கோபப்படவும் இன்னும் கண்ணீர் பெருகியது. யார் தோளிலாவது சாய்ந்து மனப்பாரம் தீர ஒருமுறை அழுதுவிட்டால் போதும் போலிருந்தது. அவளுக்குத்தான் யாருமில்லையே?

மகளையே சகலதுமாய் எண்ணி வாழ்ந்தவள் அவள்! அந்த மகள் திடீரென்று ஒரு அப்பாவுக்காக இரவு முழுவதும் அழுது, காய்ச்சலை இழுக்கும் அளவுக்குத் துடிக்கிறாள் என்பதே அவளைப் பலமாய்த் தாக்கிவிட்டது! தான் தனித்துவிட்டாற்போல், தனக்கு யாருமே இல்லைபோல் தன் நிலை பூதாகரமாகத் தெரிய, உதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு பார்வையை வெளிப்புறம் திருப்பினாள் யாமினி.

அவளைத் திரும்பிப் பார்த்தான் விக்ரம். கண்களைச் சூழும் கண்ணீரை அடக்கியபடி, பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்துவிட்டுத் தன்னைச் சமன்படுத்த பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தவளைக் கண்டு மனம் கரைந்துபோனது.

அவளின் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தான். சட்டென்று அவள் திரும்பிப் பார்க்க, “ஒண்டும் நடக்காது. எல்லாத்துக்கும் நான் இருக்கிறன். அழாத.” என்றான் இதமாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

அந்த ஆறுதலில் அவள் உடைய, அழுகையை அடக்கமாட்டாமல் நடுங்கியவளை மற்றக் கரத்தால் அணைத்துத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.

அதற்காகவே அவ்வளவு நேரமும் தவித்துக் கொண்டிருந்தவள் உடைந்து விம்மவும், “அழக் கூடாது யாமினி. அது சும்மா காய்ச்சல்தான். பெருசா ஒண்டுமிருக்காது. குழந்தைகளுக்கு வாறதுதானே. நீ அழாத.” என்று அணைத்திருந்த கரத்தாலேயே ஆறுதலாகத் தடவிக்கொடுத்தான்.

அந்த ஊர்க்காரரான ஆட்டோக்காரரின் பார்வை ஆச்சரியத்தோடு அவர்கள் மீது படிவதை உணர்ந்தாலும் அதை லட்சியம் செய்யவில்லை விக்ரம். அவளிடம் விட்டிருந்த முடிவை இப்போது அவனே எடுத்துவிட்டிருந்தான். இனி யாராலும் அதை மாற்ற முடியாது. மாற்ற விடமாட்டான்! எனவே ஆட்டோக்காரரைப் பற்றிய கவலையின்றி அவள் தலையை வருடிக்கொடுத்தான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock