நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 8 – 2

‘அதானே! இதில் கல்யாணம் வரை வந்தாச்சு.’

அவள் குழம்ப, “எனக்கு முன்னால இருக்கிற நீதான் நீ. நீ இப்ப பாக்கிற நான்தான் நான். இப்போதைக்கு இது போதும். போகப் போக எல்லாம் தானாத் தெரிய வரும், சரியா. எல்லாத்துக்கும் முதல் எதைப் பற்றியும் கவலைப்படாம நீ நீயா இரு.” என்றுவிட்டுச் சென்றான் அவன்.

அப்படியே அமர்ந்திருந்தாள் யாமினி. அவன் பற்றியிருந்த கரத்தையே பார்த்திருந்தாள். மனதிலிருந்த பாரமெல்லாம் பஞ்சாகப் பறந்துவிட்ட ஒரு உணர்வு.

‘எல்லாம் இனி அவர் பாப்பார்.’ சொல்லிப்பார்க்கவே மனதில் அத்தனை இதமாய் இருந்தது.

‘இப்பிடி எனக்காக எல்லாம் பாத்து பாத்துச் செய்ய ஒரு ஆள் இருக்கிறார் எண்டுற நினைவே எவ்வளவு பெரிய தெம்பா இருக்கு.’ என்னவோ மலையையே புரட்டிவிடலாம் போல அவள் மனதிலும் உடலிலும் ஒரு பலம்.

காலையில் போட்டது போட்டபடி விட்டுவிட்டுப் போன வீடு என்னை வந்து ஒதுக்கு என்று அழைத்தாலும் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் மகள் அருகிலேயே படுத்துக்கொண்டாள். நினைவுகள் அவனிடமே சுற்றி சுற்றி நின்றது.

சற்று நேரத்திலேயே மலர்ந்த முகத்தோடு பரபரவென்று வந்தார் மரகதம் அம்மா. “கல்யாணத்துக்கு ஓம் எண்டு சொல்லீட்டியாம். எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு.” என்றவரைச் சங்கடத்தோடு பார்த்தாள் யாமினி.

அவரிடம் மறுத்துவிட்டு அவனிடம் சம்மதம் சொல்லி இருக்கிறாளே!

உறங்கிவிட்ட மகளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு, மெதுவாக எழும்பி வந்தவளையும் கூட்டிக்கொண்டு வந்து வெளி வாசலில் அமர்ந்துகொண்டார் அவர்.

“அவன் நல்ல பிள்ள. நீ ஒண்டுக்கும் யோசிக்காம கண்ணை மூடிக்கொண்டு கட்டு. உன்ன நல்லா வச்சிருப்பான்.” என்றார் தன்பாட்டுக்கு.

“உன்ர அம்மாவும் நானும் சின்னப் பிள்ளையளா இருந்த காலத்துல இருந்து பழகின பழக்கம். அதுக்குப் பிறகு நாட்டுப் பிரச்சனை அது இது எண்டு எவ்வளவோ நடந்து போச்சு. அதுக்குப் பிறகு நீயும் ஒதுங்கிட்ட. எனக்கும் யார் பக்கத்தில இருக்கீனம் சொல்லு? உன்னட்டக் கதைக்க வந்தாலும் நீ முகம் தரவே மாட்டாய். எத்தனையோ நாள் உன்னை நினச்சு நித்திரை இல்லாம இருந்திருக்கிறன். இண்டைக்குத்தான் நிம்மதியா இருக்கு!” என்று பல நாட்களாக இருந்த மனக்குமுறலை அன்று கொட்டினார்.

அவளுக்கும் அவரின் குணம் தெரியும். ஆனால், பாசம் கூடப் பல சமயங்களில் விலங்காகிவிடுமே!

“விக்ரமும் நல்ல பிள்ள. அந்த வெள்ளக்காரியக் காதலிச்சுக் கட்டி நல்ல வசதியா இருந்திருக்கிறான். அவள்தான் ஆரையோ பிடிச்சிக்கொண்டு போய்ட்டாளாம். இவன் கல்யாணமே வேணாம் எண்டு இருந்திருக்கிறான். எங்கட அசோக்தான் வலுக்கட்டாயமா இழுத்துக்கொண்டு வந்திருக்கிறான். நீ என்னைப் பற்றி என்ன நினைச்சாலும் சரிதான், ஆனா நீ எனக்குப் பெறாத மகள்தான்! நான் சொல்றன், எந்தக் கலக்கமும் இல்லாம சந்தோசமா அவனைக் கட்டு. காலம் முழுக்க நல்லா இருப்பாய்!”

மனதார வாழ்த்தியவரின் பேச்சில் உடைந்து, “சொறி ஆன்ட்டி!” என்றாள் கண்ணீரோடு.

“விடுவிடு! நல்லது நடக்கப்போற நேரத்துல அழாம கண்ணத்துடை. உன்ர மனதிலையும் என்னென்ன கவலைகளோ. அதையெல்லாம் மறந்திட்டு நடக்கப்போறத நினச்சுச் சந்தோசமா இரு.” என்றவர், அதன் பிறகு அவர்களின் கல்யாணப் பேச்சில் மிகவுமே உற்சாகமாகிப் போனார்.

அன்று யாமினி சமையலுக்குத் தயாராகிக் கொண்டிக்க, வந்தான் விக்ரம். ஒரு பையை அவளிடம் நீட்டி, “இதுல ஆட்டிறைச்சி இருக்கு. நல்ல காரசாரமா சமை! இண்டைக்கு ஒரு வெட்டு வேட்டோனும்.” என்றான் அவளிடம்!

அவன் சொன்ன விதத்தில் புன்னகை அரும்பியது அவளுக்கு. “நல்லா சமைக்காட்டி?” வேண்டுமென்றே கேட்டாள்.

“அதெல்லாம் நல்லாத்தான் சமைப்பாய். எனக்குத் தெரியும். வாசமே மூக்கைத் துளைக்கும்.” என்றான் அவனும் புன்சிரிப்புடன்.

“உறைப்புச் சாப்பிடுவீங்களா?”

வெளிநாட்டில் வாழ்ந்தவன் நம்மூர் காரம் சாப்பிடுவானோ என்றெண்ணி அவள் கேட்க, அந்தக் கேள்வி திடீரென யாஸ்மினை நினைவூட்டியது அவனுக்கு.

“அளவா போடு.” என்றவன், “செல்லம்மாவக் கூட்டிக்கொண்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வாறன்.” என்றபடி அங்கிருந்து சென்றான்.

மகளோடு காரில் ஏறியதுமே, அவளின் குதூகலத்தில் அவன் முகத்திலும் சந்தோசம். இதற்காகத்தானே அத்தனை நாட்களும் காருக்குப் பின்னால் ஓடி வந்தாள். அவள் அந்தப் பயணத்தை ஆசை தீர அனுபவிக்கும் வரையில் மிதமான வேகத்தில் காரைச் செலுத்திக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் ஜன்னலால் வந்து மோதிய காற்றுப் பாடிய தாலாட்டில் சந்தனா உறங்கிவிட்டிருந்தாள். ஒரு மரத்தின் நிழலின் கீழே கொண்டுபோய் வண்டியை நிறுத்தியவனை வந்து மீண்டும் பிடித்துக்கொண்டாள் யாஸ்மின்!

அவன் அவளைப் புரிந்துகொள்ளவில்லையா? அல்லது, அவள் அவனைப் புரிந்துகொள்ளவில்லையா? எந்த இடத்தில் தவறு நடந்தது? அவனளவில் அன்றைய நாட்களில் அவர்கள் இருவருக்குள்ளும் புரிதல் இல்லையா என்கிற கேள்வியே அபத்தமானது! அப்படியிருக்க அவள் மனம் திசை மாறிவிட்டதை அவன் எப்படி உணராமல் போனான்? மூளையையும் மனதையும் உருட்டிப் பிரட்டி யோசித்துப் பார்த்தான். விலகலைச் சற்றேனும் எந்த இடத்திலும் அவள் அவனுக்கு உணர்த்தியதாய் நினைவே இல்லை. இந்த யோசனையில், கண்டுபிடிப்பில் எந்தப் பலனும் இல்லைதான். ஆனாலும், நான் எங்கேயாவது தவறிவிட்டேனா என்கிற கேள்வி அவ்வப்போது நின்று அவனுக்குள் குடைந்தது.

அவனுடைய ‘டெனிஷ் மொபைல்’ லை இன்னுமே கொஞ்சம் விரிவாக்க எண்ணியவன், அதற்குமுதல், தானே நேரில் சென்று ஒருமுறை குறை நிறைகளைத் தெரிந்து வருவோம் என்று ஒரு மூன்று மாதம் ஐரோப்பா முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தான். அந்தப் பயணத்துக்குத் திட்டமிட்டதுமே, அவளோடும் மகனோடும் இரண்டு வாரங்களை வங்கரூகே (wnagerooge) எனும் தீவில் ஒன்றாகக் களித்தபிறகுதான் அவன் டூர் போனதே.

ஒரு மனைவி கணவனை விலகி இன்னொருவனைத் தேட அந்த மூன்று மாதப் பிரிவு போதுமா? மனம் கசந்து வழிந்தது!

‘ச்சே! வேண்டாம்! இத யோசிச்சு என்ன வரப்போகுது?’ தலையை உலுக்கி அந்த நினைவுகளிலிருந்து அவன் வெளியே வர, அவனது செல்லம்மாவும் கார் நின்றதாலோ என்னவோ மெல்லச் சிணுங்கினாள்.

“அப்பா கார நிப்பாட்டினதும் குட்டி எழும்பிட்டாங்களா?” அவன் குரல் கேட்டதுமே துள்ளித் தாவி வந்தாள் சின்னவள். அவளின் அந்தப் பாசமும் தனக்கான தேடலும் அவனுக்குள் பெரும் ஆறுதலைத் தந்தன. ஆசையாக அவள் நெற்றியில் இதழ்களைப் பதித்து எடுத்தான்.

“அம்மாட்டப் போவமா? குட்டிக்குப் பசிக்கப் போகுதே.” என்று அவன் கேட்கவும் அவளும், “ம்மா… போ… ப்பா… போ…” என்று மழலைத் தமிழ் பேசினாள்.

“சரிடா சரிடா. இப்பவே போவம். ” என்று மகளோடு வீட்டுக்குக் காரைச் செலுத்தியவன் இப்போது நிதானத்துக்கு வந்திருந்தான்!

அங்கே யாமினி சமையலை முடித்துவிட்டு இவர்களுக்காகக் காத்திருந்தாள்.

“ம்ம்! வாசமே பசியைக் கிளறுது! அதுக்கு முதல் செல்லம்மாவக் கவனி. அவவுக்கும் நல்ல பசி.” என்றபடி சந்தனாவை அவளிடம் நீட்டினான்.

அவளை வாங்கிக் கொண்டே, “நீங்களும் வாங்கோ, சாப்பாடு போடுறன். உங்களுக்கும் பசிதானே.” என்றவள், சமையல் முடித்து முகம் கழுவித் தலைவாரி இருந்தாள்.

“முதல் பிள்ளையப் பார். பிறகு நாங்க சாப்பிடுவம்.” என்றான் அவன்.

“அது… நான் குளிச்சிட்டுச் சாப்பிடுறன்.”

“அப்ப இப்ப குளிச்சிட்டு வா.” என்றவன் நினைவு வந்தவனாக, “நீ ஏன் இரவில மட்டும் குளிக்கிற?” என்று விசாரித்தான்.

“அது…” என்று அவள் தயங்கிவிட்டு, “பகல்ல குளிச்சா ஒரே சைக்கிள் திரும்ப திரும்ப இந்த ரோட்டால போய்ப் போய் வரும். ஏன் இப்படிச் சுத்துறீங்க எண்டு நான் போய்க் கேக்கவா முடியும்? அதப் பாத்திட்டு மறைப்புக் கட்டினான். எண்டாலும் மனம் வெறுத்துப்போச்சுது. அதான் இரவில குளிக்கிறது.” என்றாள் வெறுத்துப்போன குரலில்.

விக்ரமின் முகம் இறுகிப்போயிற்று! துணையற்று நிற்கும் நம் பெண்களுக்குத் துணையாக நிற்பதுதானே சக மனிதனின் மனிதாபிமானம்!

மனதில் அடைத்து வைத்திருந்ததுகளைக் கொட்டக் கிடைத்த சந்தர்ப்பமாக எண்ணினாளோ என்னவோ, “இந்த ஜன்னல்…” என்று அடைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னலைக் காட்டிவிட்டு, “ஒருநாள் இரவு திடீரெண்டு முழிப்பு வந்து பாத்தா ஆரோ எட்டிப் பாத்துக்கொண்டு நிக்கிறான். உடம்பெல்லாம் நடுங்கிப் போச்சு. அதுக்குப் பிறகு நித்திரையே வரேல்ல. அடுத்தநாள் அந்த ஜன்னல அடச்ச பிறகுதான் நிம்மதி.” என்றாள் அவள்.

“இந்த வீட்ட மரகதம் ஆன்ட்டி வீட்டுக்குப் பக்கத்தில நான் கட்டினதுக்குக் காரணமே ஒரு துணைக்குத்தான். எனக்குத் துணையா இருங்கோ எண்டு கேக்க விருப்பம் இல்ல. சின்ன வயதில என்னோட நல்ல பாசம்தான். பிறகு நானே ஒதுங்கீட்டன். ஆனா, இங்க ஏதாவது பிரச்சினை, சத்தம் எண்டா அவவுக்கு கேக்கும் எல்லோ. என்ர வீட்டுக்கு யாரும் வந்து போனாலும் அவவுக்குத் தெரியவரும். நான் ஒண்டும் ஊர் நினைக்கிற மாதிரிக் கெட்டவள் இல்லை எண்டு அவவாவது விளங்கிக்கொள்ளட்டும்.” கண்ணீரோடு சொன்னவளை வார்த்தைகளற்றுப் பாத்திருந்தான் விக்ரம்.

உதவி தானாகக் கேட்கவில்லை. யாரிடமும் எனக்குக் காவலாக இரு என்று கேட்டுக் கடமைப்படவும் விரும்பவில்லை. ஆனால், ஆபத்து என்று வந்தால் அவர்களாகவே உதவக்கூடிய வழியில் தன்னை அனைத்துச் செயல்களிலும் வைத்திருந்திருக்கிறாள். அதே நேரம் நான் நல்லவள் என்று நிரூபிக்க முனையவுமில்லை. நீயாக என் நடத்தையைப் பார்த்து உணர்ந்துகொள் என்றும் நினைத்திருக்கிறாள். ஒரு பிரச்னையை அவள் கையாண்ட விதம் அவனை ஈர்த்தது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock