அழகான மாலைப்பொழுது! கொழும்பிலிருந்து புறப்பட்ட அந்த ட்ரைன் யாழ்ப்பாணம் நோக்கி சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. முதல் வகுப்பில் அவர்களுக்கான கூபேயில் மனைவி மகளோடு அமர்ந்திருந்தான் விக்ரம்.
காணும் தூரமெங்கும் வயல்வெளிகள். அவற்றைக் காவல் காப்பன போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக வயல்வெளிகளின் இடையே வளர்ந்து நின்ற மரங்கள். இன்னும் இயற்கையோடு ஒன்றிப்போய் வாழும் சாமானியர்களின் குடில்கள் போன்ற வீடுகள். எந்தவிதமான சாயங்களுமற்ற எளிமையான மனிதர்கள் என்று கண்முன்னே ஓடிக்கொண்டிருந்த காட்சியும், சிலுசிலு என்று உள்ளே வந்து மோதிய காற்றும் சொர்க்கத்தையே சிருஷ்டிப்பது போலிருந்தது!
யாமினியை பார்த்தான். மடியில் மகளோடு அவளும் வெளிக் காட்சியைத்தான் ரசித்துக்கொண்டிருந்தாள். யாழ்ப்பாணம் போவோம் என்றதும் ட்ரைன்ல போவோமா என்று ஏன் கேட்டாள் என்று விளங்கியது.
இப்போது அவனின் ரசனை அவள் மீதாகிப்போனது! அந்த இயற்கையைக் காட்டிலும் மனதுக்கு அமைதி தரக்கூடிய சாந்தமான அழகு அவளிடம் இருப்பதாக மனம் உணர்த்தியது! வேகமாக வீசிய காற்றின் பலனாக அசைந்தாடிய கேசச் சுருள்கள் அவள் முகத்துக்கு இன்னுமே அழகு சேர்க்க அவளையே பார்த்திருந்தான்.
அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து, என்ன என்று பார்வையால் கேட்டாள் யாமினி.
இங்க வா என்று கண்களால் அழைத்தான் விக்ரம். எழுந்து வந்தவளை அருகில் அமர்த்தித் தோளை சுற்றி அணைத்துக்கொண்டான்.
ஓடும் ட்ரைன்.. மனைவி மகளோடு அவன்.. சுகந்தமான காற்று.. அழகூட்டும் இயற்கை… எனக்கொரு மகன் இருக்கிறான் என்கிற நினைப்பு.. மனம் மயங்க, “திரும்பவும் என்ர வாழ்க்கை இப்படிச் சந்தோசமா மாறும் எண்டு நான் நினைக்கவே இல்ல யாமினி.” என்றான் விக்ரம்.
இதென்ன திடீரென்று இப்படிச் சொல்கிறான் என்று அவள் அவனைப் பார்க்க, அதைத் தந்தவள் நீதான் என்றது அவனது கண்கள்!
மனதை மயக்கும் அந்தச் சூழலா, அல்லது அவன் மனதுக்குக் கிட்டியிருந்த அமைதியும் தெளிவுமா அல்லது இரண்டுமா மனதை தானாகவே திறந்தான் விக்ரம்.
“என்ர வாழ்க்கைல எல்லாமே எனக்குப் பிடிச்சுத்தான் நடந்தது யாமினி. பிடிச்ச படிப்பு.. பிடிச்ச வேல.. அதுல நான் எதிர்பார்த்த முன்னேற்றம். இப்படி எல்லாமே! அப்படித்தான் யாஸ்மினும். காதலிச்சுத்தான் கட்டினான். ஆசையா ஒரு வீடு, ஆஸ்த்திக்கு ஒரு ஆம்பிள பிள்ள, அன்பான மனைவி எண்டு என்ர வாழ்க்கைல குறை எண்டு எனக்கு எதுவுமே இல்ல எண்டு கர்வத்தோட இருக்கேக்கதான் அவள் என்ன வேண்டாம் எண்டு விட்டுட்டு போனவள்.” என்றவன் தன் வலியை காட்டிவிடாமலிருக்கக் கண்களை மூடிக்கொண்டான்.
ஒரு கண்ணில் வலிவந்தால் மறுகண்ணும் தானாகக் கலங்குமாமே! அவன் வலி கண்டு கலங்கித்தான் போனாள் யாமினி. “அப்பா..” என்று அவன் கரம் பற்ற, விழிகளைத் திறந்து அவளுக்கு ஆறுதல் தரும் விதமாகப் புன்னகைத்தான்.
“கனவுல கூட வாழ்க்கைல தோத்துப்போவன் எண்டு நினச்சு பாத்ததில்ல. அதாலையோ என்னவோ அந்த அடி எனக்கு இன்னும் சிலநேரங்கள்ல வலிக்கும் யாமினி.” என்று அவன் சொன்னபோது, இது யாஸ்மின் மீதான காதலின் வலி அல்ல.. ஆசையாசையாகப் பார்த்துப் பார்த்துக் கட்டிய குருவிக் கூடொன்று மனித காலடியில் மிதிபட்டு சுக்கு நூறாக நொறுங்கிப்போன காயத்தின் வலி என்று நன்றாகவே விளங்கிக்கொண்டாள் யாமினி.
நெஞ்சுக்குள் பாரமேற கணவனின் கையைப் பற்றி ஆறுதலாக வருடிக்கொடுத்தாள். அவள் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, பலமாக அவள் இருக்கிறாள் என்கிற தெம்பில் விக்ரமும் தொடர்ந்தான்.
“அதுக்குப் பிறகு எல்லாமே வெறுத்துப் போச்சு. பிடிச்சு செய்த வேல, வீடு வாசல் எல்லாமே! என்னையே எனக்கு வெறுத்துப் போச்சு! வாழ்க்கைல இனி என்ன இருக்கு என்று விரக்தில இருந்த நான் அதுக்குப் பிறகும் வாழக் காரணம் டெனிஷ் மட்டும் தான். அவன் இல்லாட்டி இண்டைக்கு என் நிலைமை என்ன எண்டே என்னால நினைக்க முடியேல்ல. அந்தளவுக்கு அவள் எனக்குள்ள இருந்தவள் யாமினி.”
யாமினி ஒன்றுமே சொல்லவில்லை. இருந்தவள் என்று அவன் இறந்த காலத்தில் சொன்னதில் அவன் கரத்தை இன்னும் மென்மையாக வருடிக் கொடுத்தாள். அவன் மனதில் இருப்பது எல்லாம் வரட்டும். இப்படி அசோக்கிடம் கூட மனம் விட்டுப் பேசியிருக்க மாட்டான் என்று தெரியும்! அவன் சொன்ன, சிலநேரம் வலிக்கும் என்றதில் இனி அந்த ‘சிலநேரமும்’ அவன் வாழ்வில் வரக்கூடாது என்றெண்ணி வருடிக்கொடுத்தாள்.
“அவளின்ர இடத்த இன்னொரு பெண்ணால நிரப்பமுடியும் என்ற நம்பிக்க எனக்குக் கொஞ்சமும் இல்ல. அதேமாதிரி அவளோட வாழ்ந்த வாழ்க்கைய இன்னொருத்தியோட வாழ்றத நினைக்கவே முடியேல்ல. அதாலதான் அசோக் எத்தனையோ தரம் வற்புறுத்தியும் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவே இல்ல.” என்றவன், தான் உணர்ந்த தனிமையை, அது தாங்காமல் யாஸ்மினைப் போய்ப் பார்த்ததை என்று அனைத்தையும் சொன்னான்.
“அவள் நல்லா இருக்கிறாள் எண்டு தெரிஞ்சபிறகுதான் இன்னொரு கல்யாணம் கட்டுவமா என்கிற யோசனையே எனக்குள்ள வந்தது. அப்பவும் அவள மறக்கடிக்கிற சக்தி யாருக்கும் இருக்கும் எண்டு நான் நம்பவே இல்ல. என்ர மகனுக்கு ஒரு அம்மாவா இருந்தா காணும். எனக்கும் அவளுக்குமான வாழ்க்கைய காலம் பாக்கட்டும் எண்டுதான் வந்தனான். அதாலதான் என்ன மாதிரி கல்யாணம் ஆகி குழந்தையோட இருக்கிற ஒருத்தி வேணும் என்றதில உறுதியா இருந்தனான். யாழ்பாணம் வந்து செல்லம்மாவ பாத்ததும்.. அதுக்குப் பிறகு நடந்த எல்லாத்துக்கும் காரணம் செல்லம்மா தான். நீ எனக்குக் கிடைச்சதுக்கும் அவதான் காரணம்.” என்றவன் மகளைப் பாசத்தோடு அணைத்துக்கொண்டான்.
“கல்யாணம் கட்டேக்க கூட, இனி அவள நினைக்கக் கூடாது எண்டுதான் நினச்சனானே தவிர, அவள மறந்து இருக்கேல்ல. உண்மைய சொல்லப்போனா பழைய காயத்தையெல்லாம் அந்தக் கல்யாணம் கிளறித்தான் விட்டது.” என்றான்.
அன்று அவன் இயல்பாக இல்லாமல் இருந்ததுக்குக் காரணம் இதுதானா என்று நினைக்கையிலேயே, “‘அவள மனதில வச்சிக்கொண்டு என்ர கழுத்துல தாலி கட்டி இருக்கிறார்.’ எண்டு நினைக்கிறியா?” என்று கேட்டான் வேதனையோடு.
மனதுக்கு அமைதிதரும் புன்னகையோடு மறுத்துத் தலையசைத்தாள் யாமினி.
“அப்படி ஒருநாளும் இல்லையப்பா. அதவிட உங்கட மனசு ஒண்டும் பேப்பர் இல்லையே, கல்யாணம் எண்டதும் அவவின்ர பெயர அழிச்சிட்டு என்ர பெயர எழுத. சின்ன வயசில இருந்தே காதலிச்சு அவவ கட்டினீங்க என்றதையோ ஒரு பிள்ளை இருக்கிறதையோ மறச்சு என்ன கட்டேல்ல தானே. அதவிட, எனக்கு உங்கள தெரியும். எண்டைக்கும் நான் பிழையா யோசிக்க மாட்டன். அதவிட அது இறந்தகாலம். இப்ப நான் உங்களோட இருக்கிறன். உங்கட மனதிலையும் நான்தான்.. நான் மட்டும் தான் இருக்கிறன். எனக்கு அதுவும் தெரியும்!” என்றாள் உறுதியோடு அவன் கண்களைப் பார்த்து.
தன் மனதை எவ்வளவு துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறாள் என்கிற வியப்போடு அவன் பார்க்க, “எதையோ நினச்சு தடுமாறுறீங்க எண்டு கல்யாணம் நடந்த அண்டைக்கே எனக்கு விளங்கினதுதான், அப்பகூடத் தெரியாத்தனமா இவள கட்ட முடிவ எடுத்திட்டேனோ எண்டு யோசிக்கிறீங்க போல எண்டுதான் நினச்சனானே தவிர இப்படி நினைக்கவே இல்ல.” என்று அவள் சொன்னபோது, இப்போது அவன் மறுத்துத் தலையசைத்தான்.
“இல்லம்மா. அண்டைக்கு அவள் என்ர மனத விட்டு முழுசா வெளியேறி இருக்கேல்லையே தவிர, நீயும் செல்லம்மாவும் எனக்கு வேணும் என்றதுல உறுதியாத்தான் இருந்தனான். கோயில்ல வச்சு கூட நீ அழுறத பாக்கேலாமத்தான் உனக்குப் பிடிக்காட்டி கல்யாணம் வேண்டாம் எண்டு சொன்னனான். ஆனா, உனக்குப் புருசனாகாம இந்த நாட்ட விட்டு போகமாட்டன் எண்டு அன்றைக்கே மனதில நினைச்சிட்டன்.” என்று அவன் சொல்லவும், அவள் இதழ்களில் புன்னகை அரும்பியது.
“என்ன?” அவளையே பார்த்திருந்தவன் கேட்க,
“அப்ப.. நீங்க என்ன.. இப்ப இந்த யாமினின்ர புருசனா?” தலையைச் சரித்துக் குறும்போடு கேட்டாள்.
“தைரியம் இருந்தா இல்லை எண்டு சொல்லிப்பார்!” என்றான் அவனும், அவளைத் தனக்குள் வளைத்தபடி.
“கவனம் கவனம்..! குட்டிம்மா எழும்பப் போறா!” சுகமான காற்றின் தாலாட்டில் சின்னவள் அதற்குள் உறங்கி இருந்தாள்.
கையோடு கொண்டு வந்திருந்த கிண்டர் வண்டிலை நன்றாக நீட்டிவிட்டு மகளை மெல்லத் தூக்கிக் கிடத்தினான் விக்ரம்.
பார்த்திருந்த யாமினியின் மனம் கனிந்துபோனது. அவன் ஒரு தாயுமானவன்! சந்தனாவுக்கு மட்டுமல்ல அவளுக்குமே!
கண்களை அகற்ற முடியாமல் அவனையே பார்க்க, அருகில் அமர்ந்தபடி என்ன என்று கேட்டான்.
“நீங்க கிடைச்சது எங்களுக்கு வரம்.” என்றபடி அவன் தோளில் சுகமாகச் சாய்ந்துகொண்டாள் யாமினி.
“அப்ப, நான் என்ன சொல்றது?” அவளைச் சுற்றிக் கையைப் போட்டபடி சொன்னான் விக்ரம்.
“என்ர கடந்தகாலம் நினைவுக்கு வந்தாலே ரெண்டுமூண்டு நாளைக்கு நான் நானா இருக்கமாட்டன். எதுலையுமே நாட்டமிருக்காது. உள்ளுக்க உயிரை குடையிற மாதிரி வலி இருக்கும். ஆனா இண்டைக்கு.. நடந்தத எல்லாம் உன்னட்ட சொன்னபிறகும், அதப் பற்றின கவலையோ வலியோ என்னட்ட இல்ல. அதுக்குக் காரணம் நீ! உன்ர அன்பு! யாஸ்மின்ர இடத்த யாராலையும் பிடிக்க முடியாது எண்டு நினைச்சனான், ஆனா இப்ப அவள நான் நினைக்கிறதே இல்ல. நினைக்க நீ விடுறேல்ல. உன்ர அன்புக்கு முன்னால, நீ காட்டுற பாசத்துக்கு முன்னால அவள் எல்லாம் எங்கயோ ஒரு மூலைக்குப் போய்ட்டாள். இப்பயெல்லாம் என்ர நினைவு முழுக்க நிறைஞ்சு இருக்கிறது நீதான் யாமினி. உன்னையும் பிள்ளைகளையும் தாண்டி வேற எதுவும் நினைவுக்கு வாறதே இல்ல. நீ அங்க வரோணும்.. நாங்க சந்தோசமா வாழோணும்.. பிள்ளைகள நல்லபடியா படிப்பிக்கோணும்.. அவேக்கு நல்ல எதிர்காலத்த அமைச்சுக்குடுக்கோணும். அதுக்குப் பிறகு நீயும் நானும் சந்தோசமா உலகம் முழுக்கச் சுத்தோணும்.. இப்படி நிறையக் கனவுகள்!” என்றான் கண்களில் அந்தக் கனவுகள் மின்ன.
அவன் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல.. அந்தக் கனவுக்குள் தன்னை மறந்து மூழ்கியே போனாள் யாமினி.
அவனின் பிறந்தநாளைப் போலவே அவர்களின் ரயில் பயணமும் மறக்கமுடியாத ஒரு நாளாக மாறிப் போனது அவர்களுக்கு!
மரகதம் அம்மா, அவர்கள் மூவரையும் திடீரெனக் கண்டதும் ஆனந்தமாக அதிர்ந்தே போனார். அதுவும் யாமினியின் முகத்தில் தெரிந்த பொலிவு, விக்ரமைப் பார்க்கையில் வெளிப்பட்ட நேசம், சிரிப்போ, கேலியோ, கிண்டலோ அதை வெளிப்படையாகக் காட்டி, உற்சாகமாக நின்றவளைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதே விட்டார்.
“நீ இப்படிச் சிரிப்பும் சந்தோசமுமா வாழோணும் எண்டுதானம்மா நான் ஆசைப்பட்டதே!” என்றவர், “கடவுளே நன்றி!” என்றார் அந்த ஆண்டவனிடம்.
அவளும் அவருமாகச் சேர்ந்து சமைத்து, சந்தோசமாகச் சாப்பிட்டு, அவளின் வீட்டையும் பார்த்துக்கொண்டு, அவள் எப்போதும் போகும் கோயிலுக்குப் போய்க் கடவுளுக்கு அருமையான கணவனைத் தந்ததற்கு நன்றி சொல்லி என்று சந்தோசமாக இரண்டு நாட்களை அங்குக் கழித்துவிட்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பினர்.
அப்படியே ஒருவாரம் கழித்து விக்ரமும் ஜேர்மன் வந்து சேர்ந்தான்.
இதோ.. இப்போது யாமினி.