“அம்மா சொன்னனான் எல்லோ, இப்ப பிள்ளைக்குச் சளி பிடிச்சிருக்கு நெடுக இனிப்புச் சாப்பிட்டா செமிக்காது எண்டு? சொன்னது கேக்காதபடியா இனி ஒண்டும் தரமாட்டன்.” என்று சற்றே கண்டிப்பான தொனியில் அவள் சொல்ல, சின்னவளின் பூ முகம் வாடிப்போனது.
அது தாங்காமல், “அவள் கேக்கேல்ல, நான்தான் வாங்கிக் குடுத்தனான். அதுவும் ஒன்றுதான்.” என்று பெண்ணை வாங்கி இறக்கிவிட்டான் விக்ரம்.
வாடிய முகத்தை மீண்டும் மலர வைக்க, “இந்தாங்கோ குட்டிக்கு அப்பாண்ட திறப்பு. செல்லம்மா இப்ப காரோட போறாவாம்.” என்று நீட்ட, அவளும் சட்டென மலர்ந்த முகத்தோடு வாங்கிக்கொண்டு அங்கிருந்து, “ப்பிர்ர்” என்று வாயால் சத்தமிட்டபடி காரோடிக்கொண்டு ஓடினாள்.
“ஐயோ அப்பா.. திரும்பவும் அவள் திறப்பை உடைக்கப் போறாள். சந்து நில்லு!”
வந்த அடுத்தநாளே இதேபோல் விளையாடுவதற்கு என்று கார் திறப்பை அவனிடமிருந்து வாங்கிக் கீழேபோட்டு உடைத்திருந்தாள்.
அந்த நினைவில் யாமினி மகள் பின்னால் ஓட முயல, “டேய் யாம்ஸ்! நில்லுடா!” என்று அவள் இடையில் ஒரு கையைப் போட்டுத் தடுத்தான் விக்ரம்.
தேகம் சிலிர்க்க அப்படியே நின்றாள் யாமினி.
பற்றிய இடையைக் கொண்டே அவளைத் திருப்பித் தன்னருகே கொண்டுவந்தான் அவன்.
கண்களைக் கண்கள் காந்தமாய்க் கவர்ந்துகொள்ள, அந்தக் காந்த விசையில் கட்டுண்டு அவளும் அவனருகே வர, “இங்க நான் எல்லா வேலையையும் விட்டுட்டு வந்திருக்கிறன், நீ என்னைக் கவனிக்கிறதை விட்டுட்டு மகளுக்குப் பின்னால ஓடப் பாக்கிற?” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
“திறப்பப்பா…” வரமாட்டேன் என்ற வார்த்தைகளை வரவைக்க அவள் முயல,
“இப்ப அதா முக்கியம். கட்டின புருசனைக் கவனிக்காம நிண்டவளுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்?” மூக்கோடு மூக்கை உரசிக்கொண்டே கிசுகிசுப்பாகக் கேட்டான்.
அந்தச் சின்ன உரசலை விடவும் கிசுகிசுத்த குரல் என்னென்னவோ செய்யவும் மனம் மயங்கிக் கிறங்கத் தொடங்கிற்று அவளுக்கு.
‘என்னவோ செய்யப் போறான்..’ அதுவேறு அவளைத் தடுமாற வைக்க, அவனோ அவளின் கரத்தை மெல்லப் பற்றினான். விரல்களோடு விரல்களைக் கோர்த்தான். விரல்களின் பிணைப்பு இறுக, இடையை வளைத்திருந்த கரம் அவளை அவனருகே இன்னும் கொண்டுவர, தேகமும் தேகமும் உரசிக்கொள்ள ஆரம்பிக்கும் நிலை..
அவன் விழிகளில் என்றுமில்லாத ஒன்று இன்று மின்னியது!
‘இதென்ன.. ஒருநாளும் இல்லாம..’ என்று இவளுக்குள் படபடப்பு ஆரம்பிக்கையிலேயே தன் இதழ்களை அவள் இதழ்களில் மிக மென்மையாக ஒற்றிவிட்டு எடுத்தான் விக்ரம். விழிகள் விரிய ஆனந்தமாய் அதிர்ந்து நின்றாள் யாமினி.
முதல் முத்தம்! இதழோடு இதழ் நனையாமல் ஒன்றை ஒன்று தொட்டு மட்டுமே சென்று அவள் இதயத்தைத் தாறுமாறாகக் துடிக்க வைத்தது!
அவனுக்கோ தன் உதடுகள் பட்டதும் துடிக்கும் இதழ்களையும் அதைத் தடுக்கும் வகைத் தெரியாமல் தவிக்கும் அவளையும் காணக்காண மோகம் மொட்டுவிடத் தொடங்கிற்று! அவளை இன்னும் தன்னோடு இறுக்கினான். பிணைந்திருந்த விரல்கள் அவள் விரல்கள் மீது இன்னும் அழுந்தின!
யாமினியோ தவித்துப்போனாள். அவனது ஆசை அவளுக்குள்ளும் பேரலையாய்ப் பொங்க, கண்கள் தன் மனதைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று வெட்கி, விழிகளைத் தாழ்த்தியவள் அவன் மார்புக்குள் சட்டென்று ஒளிந்துகொண்டாள்.
நெஞ்சம் இனிமையாகப் படபடவென்று அடித்துக்கொண்டது. உடலில் நடுக்கம்! அதை அவனும் உணர்ந்தான். மெல்ல அவள் முதுகை வருடிக் கொடுத்தவன் மனதில் அத்தனை பரவசம்.
அவளைத் தன்னிடமிருந்து மெல்ல பிரித்து, “இந்தளவு வேகமா உன்ர இதயம் துடிக்குதே, அந்தளவுக்கு அதிர்ச்சியா ஆனந்தமா?” என்று வம்புக்கு இழுத்தான்.
அவளை முற்றிலுமாக அறிந்திருந்த கண்கள் சிரித்தன!
‘கள்ளன்! இப்படிப் போட்டு வதைக்கிறாரே!!’ என்று அவள் வெட்க, “சொல்லு?” என்று நின்றான் அவன்.
என்ன சொல்வாள்.. ஆனந்தமாய்ச் சுகித்த மனம் இன்னுமின்னும் வேண்டும் என்று கேட்கிறதே என்றா? மீண்டும் அவனுக்குள் மறையப்போக அவனோ அவளை விட மறுத்தான்.
அவன் முகம் பார்க்கக் கூச்சப்பட்டு அவள் முகம் தாழ்த்த, “பிடிச்சிருக்கா?” என்று கண்ணைச் சிமிட்டிக் கேட்டான் அவன்.
சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு. ‘பிடிக்கவில்லை என்றால் திருப்பி வாங்குவானாமா?’ கேட்கத் துடித்த மனதை அடக்கினாள்.
அதைத் திருப்பி வாங்குகிறேன் என்கிற பெயரில் பெரிய அழிச்சாட்டியம் செய்துவிடுவான்! நினைவுகள் இப்படி ஓடினாலும் கள்ளம் புகுந்துவிட்ட மனமோ பிடிக்கவில்லை என்று சொல்லிப்பார் என்று வெட்கமின்றித் தூண்டியது!
தன் எண்ணங்கள் ஓடும் திசையில் வெட்கிப்போனவள் அவன் முன் நிற்கமுடியாமல் ஓட முயல, தடுத்து நிறுத்தி, “பசிக்குதும்மா.. சாப்பாடு எப்ப தரப்போறாய்?” என்றான் கண்களால் அவளை விழுங்கிக்கொண்டே.
“போங்க! உங்களுக்கு இண்டைக்குச் சாப்பாடு இல்ல. நான் சொன்னனான் எல்லோ அவளுக்குக் கேட்டதை எல்லாம் வாங்கிக் குடுக்காதீங்கோ எண்டு. செல்லம் குடுத்து குடுத்து கெடுக்கிறீங்கப்பா..” என்று அவள் படபடக்க,
“விடுடா. செல்லம்மா ஆசையா கேட்டா என்னெண்டு மாட்டான் எண்டு சொல்றது?” என்றான் அவன்.
“அப்ப அவள் என்ன கேட்டாலும் வாங்கிக் குடுப்பீங்களா?” என்று இவள் முறைக்க.
அவளை ஆசையோடு தழுவி, “என்ர வாழ்க்கையையே எனக்குத் தேடித் தந்த செல்லம் அவள். அவள் ஒண்டு கேட்டு இல்லை எண்டு சொல்ற தைரியம் எனக்கில்லை” என்றான் உதட்டைப் பிதுக்கி.
“அப்ப நான் கேட்டா?” தலையைச் சரித்து அவள் கேட்க,
“நானே உனக்குத்தான். இன்னும் என்ன வேணும் உனக்கு?” என்றான் அவன் மயக்கும் புன்னகையோடு.
“என்ன, என்னைத் தரவா உனக்கு?” கொடுப்புக்குள் சிரித்தபடி அவன் கேட்க,
“ஐயோ.. போதும்! வாங்க சாப்பிட..” என்று ஓடினாள் அவள்.
இப்போதெல்லாம் தன் விருப்பத்தை அவன் வெளிப்படையாகவே காட்டுவதை அவள் அறிவாள்.
கண்களே போதும் அவன் மனதைச் சொல்ல. உள்ளதை சொல்லப்போனால் அந்த நாளுக்காக அவள் மனமும் ஆவலும் ஆசையுமாக ஏங்காமலில்லை! ஆனாலும் ஏதோ ஒன்று.. முழு மனதோடு அவன் கையில் தன்னைக் கொடுத்துவிட முடியாமல் அவளைத் தடுத்தது.
மனத்துக்கினியவனோடான அந்த அழகான உறவு எந்தவிதமான நெருடல்களும் இல்லாமல் அமையவே அவள் மனம் ஆசைகொண்டது! அவன் கைகளில் அவள் தன்னை மறந்து கரைய வேண்டாமா?
“செல்லம்மா சாப்பிட்டாவா?” கையைக் கழுவிக்கொண்டு வந்தவன் மேசையில் அமர்ந்துகொண்டு கேட்டான்.
“ஓ..! அவா சாப்பிட்டு ஒரு குட்டி நித்திரையும் போட்டுட்டா.” என்றபடி தனக்கும் அவனுக்கும் உணவை தட்டுக்களில் இட்டாள் யாமினி.
கணவன் வந்தால் செல்லம் கொஞ்சிக்கொண்டு அவளும் சாப்பிடாமல் அவனையும் சாப்பிட விடமாட்டாள் என்று அவன் வரமுதலே உணவு கொடுத்து மதிய உறக்கத்தையும் அவளுக்கு முடித்துவிடுவாள் யாமினி.
ஜேர்மன் வந்ததில், நேரமாற்றம் அவளுக்கு நன்றாகவே உதவியது என்றுதான் சொல்லவேண்டும். இப்போதெல்லாம் காலையில் எழுந்துவிடும் சந்தனா மதியம் தகப்பன் வரமுதல் ஒரு குட்டி நித்திரை போடுவதும் அல்லாமல், இரவு எட்டு மணிக்கு உறங்கியும் விடுவாள். தமையனும் கூடவே இருப்பதில் இருவருமாக விளையாடுவதில் களைத்துப்போவதும் ஒருகாரணம்.
வயிறார உண்டான் விக்ரம். அவனது பசியறிந்து பார்த்துப் பார்த்து பரிமாறினாள் யாமினி. “போதும் போதும்! போற போக்குல தொப்பையைக் குறைக்க ஓடவேண்டி வரும்போல..” என்றான் சற்றே கவலையாகத் தன் வயிற்றைப் பார்த்து.
“சோம்பி இருக்கிறவேக்குத்தான் தொப்பை வரும். உங்களுக்கெல்லாம் வராது. வடிவா சாப்பிடுங்கோ.” என்று பரிமாறினாள் யாமினி.