நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 26 – 1

கணவனின் வருகைக்காகக் கண்மூடிச் சாய்ந்திருந்த யாமினி, கண்களைத் திறந்து பார்த்தாள்.

டெனிஷ் என்றதும், “கண்ணா!” என்றாள் ஆசையாக. மதியம் கோபத்தோடு போனவன் தன்னிடம் வந்துவிட்டதால் மலர்ந்தாலும், “உனக்கும் அம்மாட காய்ச்சல் வந்திடும், தள்ளி இரு.” என்றாள் அவசரமாக.

அவனோ அதைக் காதிலேயே விழுத்தாமல் இன்னும் அவளை இறுக்கிக் கொள்ளவும், தாய் நெஞ்சு துடித்துப்போனது.

“என்ன கண்ணா.. என்ன செய்யுது பிள்ளைக்கு?” அவனுக்கும் சந்தனா கொடுத்துவிட்டாளோ என்று அவனின் நெற்றியில் கழுத்தில் கைவைத்துப் பார்த்தவாறு அவள் கேட்க, “உங்கள கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுக்கவாம்மா?” என்றான் அவன்.

ஸ்தம்பித்துப் போனாள் யாமினி. அம்மா என்றா சொன்னான்? தெய்வமே அம்மா என்றா சொன்னான்? நம்பவே முயாமல் சட்டென்று விக்ரமைத்தான் நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் அந்த அம்மாவைக் கேட்கிறான் என்று நினைக்க இந்த அம்மாவை அல்லவோ கேட்டிருக்கிறான். இது அவனுக்கும் சற்று அதிர்ச்சிதான். ஆனந்த அதிர்ச்சி!

யாமினியிடம் பதில் வராமல் போனதில் சின்னவனின் முகம் வாடிப் போனது. “பரவால்லம்மா.. நீங்க படுங்க..” என்றபடி அவன் இறங்கப் போக,

“ஹேய் கண்ணா..! அம்மாட்ட வாடா..” எனும்போதே உடைந்து விம்மிவிட்டாள் அவள்.

“என்னம்மா?” என்று அண்ணாந்து பார்த்து அவன் கேட்க,

“என்ர செல்லம்!! அம்மாட மடில படுக்கக் கேக்கவும் வேணுமா?” என்று வாரி அணைத்துக்கொண்டாள் அவனை.

“டங்க்க மம்மா!” என்றபடி அவன் தலை சாய்த்துக்கொள்ள, வார்த்தைக்கு வார்த்தை அவன் சொன்ன அம்மாவில், பீறிட்டுக் கொண்டு வந்தது அழுகை. இதழ்களை அழுந்த மூடி அடக்கினாள் யாமினி.

அவள் கொண்ட விரதமில்லையா அது!

அவளின் நிலையை முற்றாக உணர்ந்துகொண்டான் விக்ரம்.

அழாத என்று கண்ணால் அவன் அதட்ட, முடியாமல் விழிகளை இறுக்க மூடிக்கொண்டாள். தன்னைத் தாயாகவே ஏற்றுக்கொண்டானே! இத்தனை நாட்களாக நடந்துவிடாதா என்று ஏங்கிய ஒன்றல்லவா நடந்தேறியிருக்கிறது!

தாயின் மடி தந்த சுகமோ அல்லது அவளின் விரல்கள் கேசத்தை வருடிக் கொடுத்ததால் வந்த சுகமோ, அல்லது அன்றைய நாளின் ஏக்கம் தீர்ந்துபோனதில் உண்டான சந்தோஷமோ என்னவோ.. விரைவிலேயே உறங்கிப்போனான் டெனிஷ்.

மெல்ல அவனைத் தலையணையில் கிடத்திவிட்டு எழுந்து பாசத்தோடு நெற்றியில் தன் இதழ்களைப் பதித்து மீட்டாள். பெட்ஷீட்டினை எடுத்து போர்த்திவிட்டு அவள் ஓடியது அவர்களின் விண்டர் கார்டனுக்கு.

அவளை ஏமாற்றாமல் அங்கே காத்திருந்தான் விக்ரம். இவள் வருவதைக் கண்டதும் மலர்ந்த புன்னகையோடு அவளை நோக்கிக் கைகளை விரித்தான்!

ஓடிப்போய் அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள் யாமினி.

விம்மி வெடித்துக்கொண்டு வந்தது அழுகை.

“என்னம்மா இது?” அவன் முதுகை தடவிக் கொடுக்க,

“இல்லையப்பா.. என்ர பிள்ள என்ன அம்மா எண்டு கூப்பிடவே மாட்டானோ.. கடைசி வரைக்கும் யாம்ஸா தான் இருக்கபோறேனோ எண்டு பயந்தே போனன். அவன்தான் என்ர மூத்த பிள்ளை. நான் தான் அவனுக்கு அம்மா. எண்டாலும், அம்மா எண்டு கூப்பிடோணும்.. அத நான் காதால கேட்டுடோணும்.. கடவுளே எனக்கு அந்தப் பாக்கியத்த தா எண்டுதான் ஒவ்வொரு நாளும் கும்பிட்டனான். என்ர பிள்ள என்ன ஏமாத்தேல்ல. எனக்கு இது போதும்.”
இத்தனை நாள் ஏக்கம் சற்றும் எதிர்பாரா நேரத்தில் நிறைவேறிப் போனதில், மனதில் இருந்த அழுத்தம் வெடித்துக்கொண்டு அழுகையாக வெளியேற அடக்கமாட்டாமல் அழுதாள்.

வரிக்கு வரி ‘என்ர பிள்ள என்ர பிள்ள’ என்று அவள் சொந்தம் கொண்டாடுவதிலேயே அவளின் இத்தனைநாள் தவிப்பு வெளிப்பட்டுவிட நெகிழ்ந்துபோனான் விக்ரம்.

“சரிம்மா. சந்தோசமான விசயம் தானே நடந்தது. அதுக்கேன் இப்படி அழுற? ஏற்கனவே காய்ச்சல். அழுது இன்னும் கூட்டப் போறியா?” சற்றே அழுத்தி கேட்க,

“இது, என்ர பிள்ள என்ன அம்மா எண்டு கூப்பிட்ட சந்தோசத்துல வந்தது.. ஒண்டும் நடக்காது!” என்றாள் ரோசத்தோடு கண்களைத் துடைத்தபடி.

கண்கள் மின்ன, “அவன் மட்டும் அம்மா எண்டு கூப்பிட்டா போதுமா?” என்று கேட்டான் விக்ரம்.

ஒருநொடி குழம்பி கேள்வியாக நோக்கியவள் அடுத்தக் கணமே கண்களில் குறும்பு மின்ன, “இப்படிக் கதைச்சுக்கொண்டே இருந்தீங்க எண்டா அவன் மட்டும் தான் அம்மா எண்டு கூப்பிடுவான்.” என்றவள், அவன் விழிகளில் தெறித்த வியப்பைக் கண்டு கலீர் என்று அடக்கமாட்டாமல் நகைத்தாள்.

உண்மையிலேயே இதை விக்ரம் எதிர்பார்க்கவில்லைதான்! அவள் வெட்கப்படுவாள்.. அல்ல அவன் கையில் ஒரு அடியைப் போடுவாள் என்று நினைக்கத் திருப்பி அடிக்கிறாளே.. அதுவும் அவனின் வார்த்தைகளாலேயே!

மறைமுகமாக அவள் தந்த சம்மதத்தில் சந்தோசித்து, “ஹேய் யாம்ஸ்!! உண்மையாத்தான் சொல்றியா?” என்று ஆசையும் பரபரப்புமாக அவன் கேட்க, “அச்சோ..!” என்றபடி மீண்டும் அவனுக்குள் புதைய முனைய விடவேயில்லை விக்ரம்.

அவள் முகமெங்கும் தன் சந்தோச முத்தத்ததை ஆசையாசையாகப் பதித்தான்.

அவள் முகத்தைக் கரங்களில் ஏந்தி, “வேற.. வேற குழப்பம் தயக்கம் எதுவும் இல்லையே?” என்றான் சின்ன ஆராய்ச்சிப் பார்வையோடு.

“வேற என்ன குழப்பம்? தயக்கம்?” கண்களில் குழப்பத்தோடு அவள் கேட்க, அவனிடமும் சின்னக் குழப்பம் தான்!

சட்டென்று அதை ஒதுக்கி, “ஒண்டுமில்ல எண்டா சரிதான்.” என்றான் அவன் இப்போது பளீர் சிரிப்போடு.

“என்னப்பா? சொல்றத விளங்குற மாதிரி சொல்லுங்கோவன்.” என்று அவள் சிணுங்க,

ஆசையாக அவளைத் தன் கைவளைவுக்குள் கொணர்ந்து, “இல்ல.. திடீரெண்டு என்னில என்ன பாசம்?” என்றான் அவன் சலுகையோடு.

“திடீரெண்டு எல்லாம் ஒண்டுமில்ல. தம்பிதான் காரணம். அவனுக்கு இது எங்கட குடும்பம், என்ர அப்பா, என்ர அம்மா, என்ர தங்கச்சி எண்டுற எண்ணம் வராம எப்படியப்பா நாங்க சந்தோசமா இருக்கிறது?” கன்னங்களில் நாணப்பூக்கள் பூக்கச் சொன்னாள் அவள்.

அந்தப் பூக்களின் மேலே தன் இதழ்களை ஒற்றி எடுத்து, “அவன் அம்மா எண்டு கூப்பிடாமலே விட்டிருந்தா?” என்று கேட்டான்.

“கட்டாயம் கூப்பிடுவான்! அவன் உங்கட மகனப்பா. பாசம் வைக்கத்தான் தெரியும்.” நெஞ்சம் பாசத்தில் தழும்பச் சொன்னாள் யாமினி.

“ஓ..! அதுக்காக மட்டும்தான் மேடம் என்ன தள்ளி வச்சீங்களா?” என்று அவன் மீண்டும் கேட்க,

“நான் எங்க தள்ளி வச்சனான்? நீங்கதான் கிட்ட வரவேயில்ல.” என்றாள் அவள்.

‘அடிப்பாவி..!’ பேசுவது அவளா என்று அவன் பார்க்க, கலகலவென்று சிரித்தாள் யாமினி.

“கிட்டவந்த நேரமெல்லாம் தள்ளித்தள்ளி விட்டு ஓடிட்டு.. என்னமாதிரி கதையை மாத்துற நீ?” சந்தோசத்தோடு அவளை அவன் அணைக்க,

“இல்லையப்பா.. என்ன அம்மாவா பாக்கிறான் இல்லையே எண்டுற வேதனை மனதுக்க அரிச்சுக்கொண்டே இருந்தது. நானும் நீங்களும் சேருறது மட்டும்தான் வாழ்க்கையா? அதோட, எங்கள்ல உயிரையே வச்சிருக்கிற உங்களுக்கு முழுமையான சந்தோசத்தை நான் தரோணும் எண்டுதான் ஆசைப்பட்டனான். அதுதான்..” என்றபடி சுகமாக அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள் யாமினி.

வார்த்தைகளில் வடிக்க முடியாத இதம் இருவருக்குள்ளும் பரவ அப்படியே அதை அனுபவித்தனர்.

“அப்பா, தம்பியும் பிள்ளையும் அங்க..” அவனது மார்புச் சூட்டின் சுகத்தை அனுபவித்துக்கொண்டே அவள் நினைவூட்ட,

“சரி, வா..” என்று அவள் கரம்பற்றி அழைத்துச் சென்றான் விக்ரம்.

அறைக்குச் சென்றதும் பிள்ளைகள் இருவரையும் நடுவில் போட்டு இவர்கள் இருவரும் கரையில் படுத்துக்கொண்டனர். மனம் நிறைந்து கிடந்தது இருவருக்குமே!

என்றாலும் விக்ரமின் மனதின் ஓரத்தில், ‘தம்பிக்காகத்தான் விலகியிருந்தேன்..’ என்று அவள் சொன்னது ஓடிக்கொண்டே இருந்தது. எது எப்படியானாலும் அவள் மனதில் வேறு எந்தச் சலனங்களோ, தடைகளோ இல்லை என்பதை முற்றிலுமாக உணர்ந்திருந்தான்.

அடுத்தநாள் காலை, எழுந்து குளித்துவிட்டு வந்தவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டான் விக்ரம். ஆனந்தமாய்ச் சிறைப்பட்டவள், சுகமாக அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

அவளின் உச்சியில் தன் உதடுகளைப் பதித்துவிட்டு, “ஹேய் பெண்டாட்டி! காய்ச்சல் எப்படி இருக்கு?” என்று விசாரித்தான் விக்ரம்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock