நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் 26 – 2

அவனின் கைவளைவுக்குள்ளேயே திரும்பி அவனைப் பார்த்து, “காய்ச்சலா? எனக்கு அந்த நினைப்பே இல்ல!” என்றாள் உதடு பிதுக்கி.

பட்டென்று அந்த உதட்டின் மேலே தன் உதடுகளை ஒற்றி எடுத்தான் விக்ரம்!

வெட்கிப்போய்ப் பார்வையை அவள் தாழ்த்த, “அப்ப இந்தப் புருசனை நினைச்சாளாமா என்ர பெண்டாட்டி?” என்று கிறக்கமாகக் கேட்டான் அவன்.

வெட்கம் வந்து அவளுக்குள் அலைமோதினாலும், கண்களில் குறும்பு மின்ன, “இல்லையே..!”என்றாள் அடக்கப்பட்ட சிரிப்போடு.

“உன்ன..” என்று முறைத்தான் அவன்.

“வரவர உனக்குச் சேட்டை கூடிப்போச்சு!” என்று மிக நெருக்கமாக அவளைக் கொணர்ந்து, “உண்மைய சொல்லு, என்னை நினைச்சியா இல்லையா?” என்று கோபம்போல் அவன் கேட்க, சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு.

“இல்ல இல்ல இல்..” என்று வேண்டுமென்றே சொல்லிக்கொண்டு வந்தவளின் இதழ்களை அழுத்தமாக மூடின விக்ரமின் இதழ்கள். ஒருகணம் அதிர்ந்து விரிந்த விழிகள் மெல்ல மெல்ல மயங்கி கிறங்கின!

உயிர் தீண்டலில் உருகி நின்றவள் மேனிக்குள், தன் விருப்பம்போல் விளையாடின அவன் விரல்கள். தாங்கமாட்டாமல் அவன் கைகளிலேயே அவள் துவண்டபோதுதான் சுயம் வரப்பெற்றான் விக்ரம். அவளை வம்பிழுக்க எண்ணி அவன் ஆரம்பித்த விளையாட்டில் அவனே தொலைந்து போனதை எண்ணிச் சிரித்துக்கொண்டவன், அவளை ஆசையோடு அணைத்துக்கொண்டான்.

“யாம்ஸ்..!” என்றான் மெல்ல.

“ம்..” சுகமான மயக்கத்தில் இன்னிசை அவள் பாட, அவனின் அணைப்பு மீண்டும் இறுகிப்போயிற்று! விட்டால் தன்னால் வேலைக்கே போகமுடியாமல் போகும் என்று உணர்ந்தவன், “மிச்சம் மிகுதியெல்லாம் இரவுக்கு..” என்றான் சிரிப்போடு.

வெட்கம் தாங்காமல் அங்கிருந்து ஓடியே போனாள் யாமினி!

சந்தோசமாக வேலைக்குத் தயாராகினான் விக்ரம். முதல் நாள் விட்ட வேலைகளையும் சேர்த்து முடித்தாக வேண்டும்! இதில் டெனிஷுக்கு வேறு இன்று மாலை நடக்கும் கேர்மஸ்ஸு க்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லியிருக்கிறான்.

இதழோரம் பூத்துக்கிடந்த வெட்கச் சிரிப்போடு காலை உணவை தயாரிக்கத் தொடங்கினாள் யாமினி. கணவனின் சேட்டைகளும் சீண்டல்களும் நினைவுகளில் நீங்காமல் நின்று அவளைச் சீண்டிக்கொண்டே இருந்தன.

அப்போது வெகு ஆசையாக அவளின் இடுப்பைக் கட்டிக்கொண்டது இரு இளைய கரங்கள்.

“கண்ணா!” மனம் துள்ள திரும்பித் தானும் அவனை அணைத்துக்கொண்டாள்.

“என்னய்யா?” பாசத்தில் கனிந்துபோய்க் கேட்டவளிடம், “சாரிம்மா..!” என்றான் அவன் தலைசரித்து. அந்தக் கருவண்டு விழிகளில் தெரிந்த யாசிப்பில் உருகியே போனாள் தாய்.

“என்னத்துக்காம் இந்த மன்னிப்பு?” ஆசையாசையாக அவன் கேசத்தைக் கோதிவிட்டபடி கேட்டாள்.

“அது.. நேற்று நீங்க கூப்பிட்டும் நான் கேக்காம போனேன்தானே, அதுக்கு.”

“அது பரவாயில்ல. ஆனா ஏன்?”

“அது… எனக்கு உங்கள்ள சரியான கோபம். ஒவ்வொரு நாளும் என்ன கூப்பிட வாற அம்மா நேற்று வரேல்ல எண்டு.. ”

மனம் கனிந்துபோனது அவளுக்கு.

“அம்மாக்கு காய்ச்சல் எல்லோ. அதாலதான் வரேல்ல.” என்று அவள் சமாதானம் சொல்ல,

“அது முதல் எனக்குத் தெரியாது தானேம்மா. மழையும் பெய்ய நீங்க குடையோட வருவீங்க எண்டு பாத்துக்கொண்டு நிண்டனான். நீங்க வரேல்ல என்ற கோபத்துல வரேக்க… வரேக்க அவவக் கண்டனான்.” என்றவனின் பேச்சுத் திக்கியது.

“எவவ?” என்று விசாரித்தாள் யாமினி.

“அது.. அவாதான்.. என்ர.. அது அப்பாண்ட.. அவா.. யாஸ்மின். அவா காரை நிப்பாட்டி என்னோட வந்து கதைச்சவா. நான் கதைக்காம வந்திட்டன். அவாதான் என்ர மம்மாவாம். ‘இல்ல. என்ர அம்மா வீட்டுல இருக்கிறா..’ எண்டு சொல்லீட்டு நான் ஓடி வந்திட்டன். நீங்க வந்திருந்தா நான் அவவ கண்டிருக்க மாட்டன் தானே..” என்றவனின் முகம் அப்போதும் வாடிப்போனது.

சட்டெனத் தன் பிள்ளையை அள்ளி அணைத்துக்கொண்டாள் யாமினி. என்றோ அவனுக்குத் தான் தாயாக மாறிவிட்டோம் என்கிற எண்ணமே தித்திப்பாக அவளுக்குள் இறங்கிற்று! அதை அவனாக உணர்ந்துகொள்ள இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.

ஆனால், இந்தப் பிஞ்சு வயதிலேயே பெற்றவளைக் கண்டு மனம் நொந்து அறைக்குள் முடங்கும் நிலையை என் செல்வத்துக்குக் கொடுத்துவிட்டானே அந்த ஆண்டவன் என்று நெஞ்சால் அழுதாள்.

“அவாவும் அம்மா தானப்பு..” என்று ஆறுதலுக்கு இவள் சொல்ல, “இல்ல! என்ர அம்மா நீங்க மட்டும்தான்!” என்றான் அவன் அழுத்தி! “எனக்கு அவவ விருப்பமில்லை!” என்றவனின் முகத்தில் ஒருவித வெறுப்பு.

யாமினிக்கு ஒருகணம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்தளவுக்கு வெறுப்பு உருவாக எந்தளவுக்கு அவன் நொந்திருப்பான்?அவளுக்கே அழுகை வரும்போலிருக்க, வயிற்றோடு மகனை அணைத்துக்கொண்டாள். இந்த நிலையில் இந்தப் பிஞ்சை வைத்துவிட்டாளே அந்தப் பெற்றவள்!

என்ன சொல்வது.. பிள்ளையின் மனம் சமாதானம் ஆவதுபோல், அவனுக்கு விளங்கும் வகையில் எதை எப்படிச் சொல்வாள்? தவிப்போடு நிமிர அங்கே வாசலில் விக்ரம் நின்றிருந்தான்.

அவன் கண்களிலும் வேதனை! என்னிடம் கூடச் சொல்லாமல் இத்தனை நாளாய் தனக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறானே என்கிற வலி! இதை அறியாமல் போனோமே என்கிற துயர்.

நேற்று ஏன் தன்னிடம் இதையெல்லாம் சொல்லவில்லை என்பதும் விளங்கிற்று. தன்னைப் பெற்றவளைப் பற்றிக் கதைத்து அப்பாவின் மனதை நோகடிக்கக் கூடாது என்று எண்ணியிருக்கிறான். எத்தனை அன்பான பிள்ளை. அவன் மருகுவதா? என்னவாவது செய் என்று கண்களால் அவளிடம் வேண்டினான் விக்ரம்!

நெஞ்சு தவிக்க, ‘கவலைப்படாதீங்கப்பா.. நான் இருக்கிறன்.’ என்றாள் அவளும் கண்களாலேயே!

அதை ஏற்று அங்கிருந்து ஹாலுக்கு நடந்த விக்ரமுக்கு, தன்னிடம் இல்லாத நெருக்கம் தாயிடம் டெனிஷுக்கு வந்துவிட்டதை எண்ணிச் சற்றே நிம்மதியாயிருந்தது. இனி என்னவென்றாலும் தன்னிடம் சொல்லாவிட்டாலும் அவளிடம் சொல்வானே!

எல்லா வேதனையிலிருந்தும் யாமினி மகனை மீட்டுவிடுவாள்! அவனை மீட்கவில்லையா?! அதுபோல்!

விக்ரம் அகன்றதும், “சரி கண்ணா! உங்கட அம்மா வீட்டுல இருக்கிறா எண்டு நீங்க சொல்லிட்டு வந்திட்டீங்க தானே, பிறகு எதுக்குக் கோபம்?” என்று இதமாகக் கேட்டாள்.

“அது.. எனக்கு ஏன் எண்டு தெரியா.. முந்தி அசோக் மாமா வீட்ட எல்லாம் போகேக்க எனக்கும் அம்மா வேணும் மாதிரி இருக்கும். அப்ப எல்லாம் வராதவா இப்ப அம்மா எண்டு சொல்லுறா.. எனக்குத்தான் அம்மா வந்திட்டாவே. ஆனா நான் அம்மா எண்டு சொன்னா உங்களுக்குப் பிடிக்குமா எண்டு பயமா இருந்தது. நடந்தத உங்களிட்ட சொல்லோணும் மாதிரியும் இருந்தது.. சொல்ல பயம்மாவும் இருந்தது.. அதுதான் கோவம் கோவமா வந்தது..” என்று அவன் சொல்ல, வெடித்த விம்மலை அடக்கிக்கொண்டு பிள்ளையைக் கட்டிக்கொண்டாள் யாமினி.

நான் தான் உன் தாய் என்று செயலில் உணர்த்தியும், வார்த்தைக்கு வார்த்தை சொல்லியும், அவன் மனதில் அம்மாவாக அவள் மாறிய பின்னும் கூட ‘அம்மா’ என்று கூப்பிட்டுவிட முடியாமல் தடுமாறியிருக்கிறான். கடவுளே..! இந்தப் பிஞ்சு நெஞ்சில் எத்தனை குழப்பங்கள், கேள்விகள், பயங்கள்!

தாங்கமாட்டாமல், “என்னய்யா நீ. என்னட்ட சொல்ல உனக்கு என்ன பயம்? நான் தான் உன்ர அம்மா. நான் மட்டும்தான்! விளங்குதா? அவா உன்ன பெத்தவா மட்டும் தான். சரியா. இனி என்ன எண்டாலும் என்னட்ட சொல்லோணும். ஒன்றுக்கும் யோசிக்கக் கூடாது. சொல்லுவ தானே?” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வேகத்தோடு.

“சரிம்மா! இனி நான் எல்லாம் சொல்லுவன். நீங்க அழாதீங்க. ” என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான் அவன்.

உருகிப்போனாள் யாமினி!

“அது மட்டுமில்ல, நாங்களும் அவேயும் ஒரே இடத்திலதான் இருக்கிறம். இனியும் எப்பயாவது அவவ நீ பாக்கவேண்டி வரும். அப்ப எல்லாம் இப்படித்தான் ஓடி வருவியா? கேக்கிற கேள்விக்குப் பதில சொல்லிட்டு வரோணும். சரியா? எப்பவும் உனக்குத் துணையா அம்மாவும் அப்பாவும் இருக்கிறம். அத மறக்கக்கூடாது! எங்கட ஆம்பிளைப்பிள்ள தைரியமானவன் எண்டு நாங்க நினைச்சுக்கொண்டு இருக்கிறம். அது உண்மைதானே?” என்று சிரிப்போடு அவள் தலை சரித்துக் கேட்க,

“அம்மா!” என்று சிரித்தவன், “அப்பாவை விட எனக்குத் தைரியம் கூடத் தெரியுமா?!” என்றான் அவளிடம் பெருமையாக.

“அது என்னவோ உண்மைதான்..!” என்றவள் கலகலத்துச் சிரிக்க, அவளோடு அவளின் மகனும் சேர்ந்துகொள்ள, அவர்களின் சிரிப்புச் சத்தம் சந்தோசமாய் விக்ரமின் செவிகளில் சென்று சேர்ந்தது.

அதுவரை மனதிலிருந்த அலைக்கழிப்புக்கள் அடங்க அவன் இதழ்களிலும் சந்தோசப் புன்னகை.

சந்தனா எப்படி விக்ரமின் மொத்தப் பலவீனமாக இருக்கிறாளோ அப்படி முழுப் பலமாக யாமினி இருந்தாள்!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock