அதைச் சொல்வதற்குள் அவள் பட்டுவிட்ட பாட்டைக்கண்டு உல்லாசமாகச் சிரித்தான் விக்ரம். செய்வதையும் செய்துவிட்டுச் சிரிப்பு வேறா என்று அவள் முறைக்க, அவளின் காதோரமாகக் குனிந்து, “ரொம்பவே வதைக்கிறேனா?” என்றான் சின்னச் சிரிப்போடு.
வெட்கமாய்ப் போயிற்று அவளுக்கு! ஆம் என்றால் என்ன செய்வானாம்?
ஆனாலும் அவன் கேட்டதைச் சொல்லப்போவதில்லை அவள். இன்று மட்டுமல்ல என்றுமே! அதனாலேயே சொல்லு சொல்லு என்று அவனும் காலம் பூராகக் கேட்கப் போகிறான்.
அவள் சொல்லாமல் விளையாட்டுக் காட்டப்போவதும், அதன் காரணமாகவே அவன் தனக்குப் பிடித்தவிதமாய் அவளை விதம் விதமாய்த் தண்டிக்கப் போவதும் அவர்களின் வாழ்வு நீடிக்கும் காலம் வரைக்கும் தொடரத்தான் போகிறது! இருவருமே அதைத்தான் விரும்பினர்!
தன் கைகளுக்குள் அடங்கிக் கிடக்கும் தன்னவளை ஆசையோடு அணைத்துக்கொண்டான் விக்ரம்!
விரலுக்கு வாகாகப் பொருந்திக்கொண்ட மோதிரத்தை சுழற்றிப் பார்த்துவிட்டு, “அளவு எப்படிச் சரியா வந்தது?” என்று கேட்டான்.
“எழுத்து மோதிரத்துக்கு நீங்க யாழ்பாணத்தில அளவு குடுக்கேக்க பாத்தனான்.” என்றாள் அவள்.
“ஓ..!” என்று நன்றாகவே இழுத்துவிட்டு, “அந்தளவுக்குக் கவனிச்சு மோதிரம் வாங்கித்தந்த என்ர யாமினிக்கு நான் என்ன தர?” என்று கேட்டவனின் கண்கள் விஷமத்துடன் சிரித்தன.
திரும்பவும் தொடங்கப் போகிறான் என்று விளங்க, “எனக்கு ஒண்டுமே வேண்டாம். ஆள விடுங்கோ.!” என்று ஓடப் பார்த்தவளை அப்படியே தன் கையணைப்புக்குள் அடக்கிக்கொண்டான் விக்ரம்.
சொர்க்கசுகமாய்ச் சில நிமிடத்துளிகள் கடக்க, “தேத்தண்ணி போடவா?” என்று கேட்டவாறு தன் கப்பை அவள் எடுக்க, அவள் விலகுவதை விரும்பாமல்,
“அத இங்க கொண்டா!” என்று வாங்கிப் பருகினான் அவன்.
சொல்லாமல் கொள்ளாமலே இருவருக்கும் முந்தய நாள் மகள் செய்த செயல் நினைவில் வந்து சிரிப்பு மூட்டியது.
“எப்படி எங்களைக் கவனிக்கிறாள் எண்டு பாத்தியா?” என்றான் விக்ரம் மகளை எண்ணிக் கனிந்த முகத்தோடு.
“அதாலதான் சொல்றனான், அவேக்கு முன்னுக்கு நாங்க கவனமா இருக்கோணும் எண்டு.” என்றாள் யாமினி.
“ம்ம்..” என்று கேட்டுக்கொண்டவனின் விழிகள் மனைவியிடத்தில் யோசனையோடு படிந்தது.
அவள் கேள்வியாக ஏறிட, அவளைச் சுற்றிக் கையைப் போட்டு, “உனக்கு முதல் கல்யாணம் நடந்ததா யாமினி?” என்று கேட்டான் விக்ரம்.
ஒருகணம் அவன் கேட்ட கேள்வியே விளங்கவில்லை அவளுக்கு.
மெல்ல விளங்க ஆம் என்பதாகத் தலையசைத்தாள்.
“அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லன்.”
இதென்ன திடீரென்று? காரணம் விளங்காமல் குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.
அவ்வளவு நேரமும் இருந்த உல்லாசம் குறைந்திருக்க ஏதோ ஒரு தீவிரம்.. எதையோ அறிந்துகொள்ள முனைகிறவனின் ஆராய்ச்சியும் அவனிடத்தில் கலந்திருந்தது.
“முதலே சொல்லேல்ல எண்டு கோவமா?” கலக்கத்தோடு அவனை நோக்கிக் கேட்டாள்.
“இந்தப் பார்வதான் எனக்குக் கோபத்த வரவைக்குது. எதுக்குக் கலக்கம்? எனக்கு என்ர மகள் பற்றின உண்மை தெரியோணும். எனக்குத் தெரியாதது எண்டு என்ர மனுசிட்ட எதுவும் இருக்கக் கூடாது எண்டு மட்டும்தான் கேக்கிறன்” என்றான் விக்ரம், தெளிவாக அவள் விழிகளைப் பார்த்து.
அவளுக்கும் விளங்கியது. தன்னைப் பற்றியும் மகளைப் பற்றியும் அறிய நினைக்கிறான். அவ்வளவே! கலக்கமும் பயமும் நீங்க, “சந்தனா என்ர அண்ணாண்ட பிள்ள. அவே அடிபாட்டுல செத்திட்டீனம். அவே மட்டுமில்ல.. என்ர கழுத்தில தாலி கட்டினவரும்.” என்றாள் மெல்ல.
அதிர்வோடு மனைவியைப் பார்த்தான் விக்ரம்.
“அம்மா அப்பா ஆரம்ப அடிபாட்டுலேயே போய்ச் சேந்திட்டீனம். அண்ணி நிறைமாதம்.. அண்ணாவுக்கும் அண்ணிக்கும் என்ன தெரிஞ்சதோ தெரியாது அன்றைக்குத்தான் ஏற்கனவே பேசிவச்ச மாப்பிள்ளையாம் எண்டு ஒருத்தரக் காட்டி என்ர கழுத்துல தாலி கட்ட வச்சவே. இந்த நேரத்துல என்னத்துக்கு எண்டு நான் கேட்டும் விடேல்ல. எனக்குத் துணைக்கு எண்டு நினச்சீனமோ தெரியேல்ல.. அண்டைக்கே..” என்றவளின் கண்ணோரங்களில் இரண்டு நீர் மணித்துளிகள் உருண்டோட அணைத்துக்கொண்டான் விக்ரம்.
என்ன சொல்லி தேற்றுவான்? தேற்றும் வலிகளைத் தாண்டிய துயரல்லவா!
உனக்கு நானிருக்கிறேன் என்று காட்டுபவனாக அவளை அணைத்து, முதுகை இதமாக வருடிக்கொடுத்தான்.
அந்தத் தெம்பில் தொடர்ந்தாள் யாமினி. “சந்தனா வலி வந்தோ ஆபரேஷன் செய்தோ பிறந்த குழந்தை இல்லையப்பா. அண்ணிட வயித்த செல் கிழிச்சு பிறந்த குழந்தை. அண்ணாவும் அண்ணியும் கடைசியா சொன்ன வார்த்த ‘பிள்ள கவனம்’ எண்டதுதான். கொஞ்ச நேரத்திலேயே அவரும்.. அவரும் காயப்பட்டுப் போய்ட்டார்.” என்றவள், கணவனை நிமிர்ந்து பார்த்து, “உங்களுக்குத் தெரியுமா.. அந்த நேரமெல்லாம் எனக்கு அழுகை வரவே இல்ல!” என்றாள் வறண்ட சிரிப்போடு.
வாயடைத்துப்போய் விக்ரம் பார்க்க, “எதுக்கு எண்டு அழச் சொல்றீங்க? ஒண்டா ரெண்டா? அழுகையையும் தாண்டின விரக்தி. அம்மா அப்பா இல்ல, அண்ணா அண்ணி இல்ல.. இனி இவர்தான் எதிர்காலம் எண்டு நினைக்கக்கூட அவகாசமில்லாம அவரின்ர முகம் கூட எனக்கு நினைவுல இல்ல.. அவரும் போய்ட்டார். பிழைக்குமா பிழைக்காத எண்டு தெரியாத பிஞ்சு கைல. அவளுக்குப் போத்தில்பால் கூட எப்படிக் குடுக்கோணும் எண்டுகூட எனக்குத் தெரியாது. எப்படி எண்டே தெரியேல்ல ஊரோட ஒத்து ஓடி ஓடி ஒருமாதிரி நானும் அவளும் தப்பீட்டம்.” என்றவள் கணவனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
என்னவோ அன்று அனுபவித்த அத்தனை துன்பங்களையும் துயரங்களையும் அவனின் ஒற்றைத் தோள் வாங்கிக் கொண்டது போலிருந்தது அவளுக்கு!
“எப்பவும் எனக்காகவே யோசிச்ச அண்ணா அண்ணியின்ர பிள்ள அநாதை எண்ட பெயர் வாங்கக் கூடாது எண்டுதான் என்ர மகளா வளத்தனான். அதால எனக்கு என்ன கெட்டபெயர் வந்தாலும் கவலையில்லை. அவளுக்கு நான்தான் அம்மா!”
அப்படியே அமர்ந்துவிட்டான் விக்ரம்! ஏதோ இருக்கிறது என்று நினைத்தான்தான் என்றாலும் இப்படி எதிர்பார்க்கவில்லை.
அதைவிட ஒரு பெண்ணின் வைராக்கியம், அவளின் தாய்மை, சுயநலமில்லா பாசம்.. அத்தனையும் அவன் வாயை அடைத்துப்போட்டது!
அவர்கள் இருவருக்குள்ளும் நேசம் அரும்பிய பின்னரும் அவள் விலகி விலகிப் போனபோது, முதல் திருமண வாழ்வின் நினைவுகளிலிருந்து அவள் இன்னும் வெளியே வரவில்லை என்று எண்ணியவனை அவளின் வெட்கங்கள், கூச்சங்கள் அவ்வப்போது வந்து கேள்வி எழுப்பியதுதான். பெண்ணின் குணங்கள் எந்த நிலையிலும் ஒன்றுதானே என்றெண்ணி அதனைப் பெரிது படுத்தவில்லை அவன்!
ஆனால், முதல்நாள் அவள் சொன்ன ‘தம்பிக்காகக் காத்திருந்தேன்’ என்பது, அவள் திருமணமானவளா என்கிற சந்தேகத்தை உருவாக்கியதே தவிர, சந்தனாவின் தாய் இவள் தானா என்கிற எண்ணமே அவனுக்கு வரவில்லை! யாமினியை போன்ற ஒருத்திக்குத் திருமணமாகாமல் சந்தனா வர வாய்ப்பில்லை என்றாலும் கூடவே அவனுக்கு அப்படியொரு எண்ணம் வரவேயில்லை.
அந்தளவுக்குப் பெற்ற தாயாகத்தானே அவளைப் பேணினாள் யாமினி.
அதனால்தான் உன் இறந்தகாலம் எனக்குத் தேவையில்லை என்று அன்று சொன்னதையும் மீறிக் கேட்டான்.
உண்மை தெரிந்துவிட்ட இந்த நிமிடமோ, இரண்டு பிள்ளைகளையும் தான் சுமந்து பெறாத போதிலும், பெற்றவளைக் காட்டிலும் பாசம் வைத்து தாயாகவே மாறிவிட்டவளின் தூய்மையான அன்பின் முன்னே பிரமித்துப் போனான்!
அதுவரை நேரமும் தன் இறந்தகால நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தவள், பிறகுதான் உணர்ந்தாள் அவனும் அமைதியாகவே இருக்கிறான் என்பதை.
வேகமாக நிமிர்ந்து, “என்னப்பா? சந்தனா.. அவள்..” என்று அவள் தடுமாறும் போதே..
அதற்குமேல் கதைக்கவிடாமல், “இத்தனை நாள்ல என்னப்பற்றி நீ கொஞ்சமாவது விளங்கி வச்சிருப்பாய் எண்டு நம்புறன். அத பொய்யாக்கிப் போடாத.” என்றான் விக்ரம் வேகமாக.
அவள் மீண்டும் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். “நீங்க இப்படி மௌனமா இருந்தா எனக்குப் பயமா இருக்காதா?”
“அதுக்குக் கண்டதையும் யோசிப்பியா நீ? என்ன மாதிரியே கல்யாணமான ஒருத்தி.. அதுவும் குழந்தை இருக்கிறவள் தான் வேணுமெண்டு நினைச்சன். இப்ப பாத்தா இப்படி..” என்று அவன் சொல்ல,
“அதுக்கு என்ன?” என்றாள் யாமினி விளங்காமல்.
“நான் ஏற்கனவே வாழ்ந்தவன் யாமினி. ஆனா நீ..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே,
“எனக்கு அதுல ஒண்டும் வித்தியாசம் தெரியேல்ல..” என்று அவசரமாகச் சொல்லிவிட்டாள் அவள்.
“ஓ…!!!” என்று இழுத்தவனின் விழிகளில் விசமம் குடிகொண்டது.
“அப்ப.. ஒரு வித்தியாசமும் தெரியேல்ல..” என்றான் விக்ரம் அடக்கப்பட்ட நகைப்புடன்.
கடவுளே….! எப்ப பாத்தாலும் இவரிட்ட வாயக்குடுத்து மாட்டுறதே என்ர வேலையாய் போச்சு!
“நான் ஒன்றுமே சொல்லேல்ல!” என்றபடி அவன் மார்புக்குள் ஒளிந்துகொண்டாள் யாமினி!!
பொங்கிய சிரிப்போடு நினைவெங்கும் நீங்காமல் நிறைந்துபோனவளை தன் மார்புக்குள் நிறைத்துக்கொண்டான் விக்ரம்!!
முற்றும்!!