தந்தையின் மடியில் தலை சாய்த்திருந்தாள் பிரமிளா. தனபாலசிங்கத்தின் கை அதுபாட்டுக்கு மகளின் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டே இருந்தது.
எந்த முடிவுக்கும் பிரமிளா வந்திருக்கவில்லை. மனது ஆறியிருக்கவுமில்லை. ஆனாலும் அந்த வருடல் மனத்தை அமைதிப்படுத்தி ஆற்றுப்படுத்தியது.
கௌசிகனை இன்னுமே மனதார மருமகனாக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் சரிதாவுக்கு இந்தமுறை அவன் சொல்வதைத்தான் பெண் செய்ய வேண்டும் என்று தோன்றிற்று.
அடிக்கடி அவள் இங்கு வந்துபோவது வழமைதான். இன்றைக்கு வீட்டுக்கு வந்தவள் நைட்டியை மாற்றிக்கொண்டதில் பயந்துபோனார்.
கட்டிக்கொடுத்த இத்தனை நாட்களில் அவளிடம் புதுப்பெண்ணுக்கான பூரிப்பை, மலர்ச்சியை, துள்ளலைக் கண்டதே இல்லை. எப்போதும்போலக் கல்லூரி, மாணவிகள், அவர்களுக்கான கற்கைகள், பயிற்சிகள் என்று மாறுபாடு இல்லாமல் நகரும் அவளின் நாட்கள் அவருக்குள் மிகுந்த கவலையை உண்டாக்கியிருந்தது.
ஆனாலும் கணவனோடு சமாளித்துப்போகிறாள் என்கிற ஆறுதல் இருந்தது. இன்றோ அதுவும் போய்விடுமோ என்று அஞ்சினார்.
கல்லூரியில் நடந்த கசப்பான விடயங்களை அவர் மறக்கவும் இல்லை, அதைச் செய்தவர்களை மன்னிக்கத் தயாராகவும் இல்லை. இருந்தாலும், கௌசிகன் கேட்டதைச் செய்துவிட்டு மகள் வாழ்க்கையை நிம்மதியாகக் கொண்டுபோவதையே சிறந்த முடிவாக எண்ணினார்.
சில நேரங்களில் இறந்தகாலத்துக்கான நியாயங்களைக் காட்டிலும் எதிர்காலத்துக்கான நலன் முக்கியம் பெற்றுவிடுகிறது. அப்படித்தான் இந்த விடயத்தைச் சரிதா நோக்கினார்.
அதையேதான் தனபாலசிங்கமும் யோசித்தார். அவரால் பெண்ணின் மனத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. கூடவே அவர் ஒன்றை எடுத்துச் சொல்லித்தான் நல்ல முடிவை எடுப்பாள் என்கிற அளவுக்கு அவள் பக்குவம் இல்லாதவள் அல்ல. எனவே, முடிவையும் அவளாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தார்.
சரிதாவுக்கு அந்தளவுக்குப் பொறுமை இல்லை.
“என்னம்மா ஒண்டும் சொல்லாம இருக்கிறாய்? கேஸ நீ தொடந்து நடத்தினாலும் அது உனக்குச் சாதகமா அமையுமா எண்டுறதே கேள்விக்குறி. பள்ளிக்கூடத்துக்கே வந்து வாபஸ் வாங்கு எண்டு சொன்ன போலீஸ், உண்மையான குற்றவாளியக் கண்டுபிடிக்கும் எண்டு நம்புறியா? அப்பிடியே பிடிச்சாலும் அதைச் செய்தவனுக்குத் தண்டனை கிடைக்கும். பின்னுக்கு இருந்து செய்ய வச்சவன் வெளில வரவே மாட்டான். காசு, பதவிய வச்சு மறைச்சிடுவாங்கள். அம்மா என்ன சொல்லுறன் எண்டு விளங்குதா உனக்கு?” என்றார் தானும் அவளின் தலையைத் தடவியபடி.
அவர் சொல்வது உண்மைதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளிடம் இருக்கும் வீடியோவில் இருப்பவர்கள் தண்டனையைப் பெறுவார்களே தவிர, அவர்களை ஏவியவர்கள் வெளியே வரப்போவதில்லை. வர அவளின் கணவன் விடப்போவதில்லை. அவன் சொன்னதை ஏற்றுக்கொள்வதுதான் சாலச்சிறந்த முடிவு.
ஆனால், இருப்பதில் சிறந்த முடிவுகள் மாத்திரமே வாழ்க்கையைக் கொண்டுபோய்விடாதே. மனம் அது ஒப்ப வேண்டும். அது ஒப்புகிற விடயங்களில் மாத்திரம்தானே மனமொத்து வாழவும் முடியும்.
அப்படி மனமொத்து வாழ்கிறபோதுதான் வாழ்ந்த திருப்தியும் நிறைவும் உண்டாகும். அவர் சொல்வதுபோல அவனிடம் சம்மதம் சொன்னால் அவளின் மனதே அவளைப் போட்டு வதைக்குமே.
அவள் நேசித்து ஆசையாசையாக ஓடிய கல்லூரியே அவளைப் பார்த்து நீ எனக்கு என்ன நியாயம் செய்தாய் என்று கேட்குமே? ஒவ்வொரு முறையும் தன்னைத் தேற்றித் தேற்றியே களைத்துப்போனாள் பிரமிளா.
“மிச்சத்தைப் பிறகு கதைக்கலாம். இப்ப பிள்ளைக்குச் சாப்பிட குடிக்க ஏதாவது குடம்மா.” ஒரு அளவுக்குமேல் அதைப் பற்றியே பேசினால் அதுவே அவளை இன்னும் நிம்மதியிழக்கச் செய்துவிடும் என்று உணர்ந்து மனைவியை ஏவினார் தனபாலசிங்கம்.
சரிதா எழுந்து வீட்டுக்குள் செல்ல, “அம்மாச்சி! நீயும் எழும்பு. நிறைய யோசிக்காத. எதையாவது சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் படுத்து எழும்பு. மனமும் உடம்பும் தெளிஞ்ச பிறகு ஒரு முடிவை எடுக்கலாம்.” என்று அவளையும் உள்ளே அனுப்பிவைத்தார்.
பெண்கள் வீட்டுக்குள் போனதும் கௌசிகனுக்கு அழைத்தார். “தம்பி, எனக்கு உங்களோட கொஞ்சம் கதைக்கோணும். உங்களுக்கு இங்க வீட்டுக்கு வர வசதிப்படும் எண்டால் வாங்கோ. இல்லாட்டி நான் எங்க வர எண்டு சொல்லுங்கோ வாறன்.” அவருக்கு அவனோடு தெளிவாகப் பேசவேண்டி இருந்தது.
கௌசிகனுக்கும் அது புரிந்தது. கூடவே அவர் பேச விளைவது எதைப் பற்றி என்றும் கணித்தான். “நாளைக்கு நான் கொழும்புக்கு போகோணும் மாமா. அதுக்கு முதல் முடியுமா தெரிய இல்ல. ஆனா கட்டாயம் நேரம் ஒதுக்கிப்போட்டுச் சொல்லுறன், கதைப்பம்.” என்றான்.
சரி என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் தனபாலசிங்கம்.
ஒருவரை மற்றவருக்குப் பிடித்துச் சம்மதம் சொல்லி மணக்கிறவர்களுக்கே மனங்கள் இணைய நாளாகிறபோது, ஏற்கனவே நிறைய முரண்களோடு வாழ்க்கையில் இணைந்த இவர்களுக்கு இன்னும் நிறைய நாளாகும் என்பதும், புரிதலுடன் கூடிய வாழ்க்கைக்குப் பல மேடு பள்ளங்களைக் கடந்து வர வேண்டும் என்பதும் அவர் கணித்ததுதான்.
கூடவே பெற்றவர்கள் எல்லாவற்றிலும் தலையிட்டுச் சின்ன சின்ன சச்சரவுகளைப் பெரிதாக்கிவிடக் கூடாது என்று அமைதியும் காத்தார். இப்போதோ ஒருமுறை அவனோடு சிலவற்றைப் பேசினால் நல்லது என்று எண்ணினார்.
அவருடன் பேசிவிட்டு வைத்த கௌசிகன் தொடர்ந்து தன் வேலைகளைப் பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தான். மனைவி மாமனாரிடம் விடயத்தைப் கொண்டுபோயிருக்கிறாள் என்று விளங்கிற்று. நடந்துகொண்டிருக்கும் சம்பவத்தின் முடிவுரையை அவன் எப்போதோ எழுதிவிட்டான்தான். அது மாறப்போவதில்லை.
ஆனால், அழுகையை அடக்கிக்கொண்டு அவள் வெளியேறிய காட்சி மீண்டும் நினைவில் வந்து அவன் நிம்மதியைப் பறித்தது.
அவர்கள் பார்த்துக்கொண்ட நாளிலிருந்து மோதிக்கொண்டதுதான் அதிகம். இதைவிடவும் மோசமாக முட்டிக்கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவள் உடைந்ததே இல்லை. இன்றைக்குத் தாங்கவே முடியாமல் போயிற்றோ. அதனால்தான் உடைந்தாளோ. அதையும் அவனிடம் காட்டப்பிடிக்காமல் எழுந்து ஓடினாளே.