இதே அலுவலக அறையில் வைத்துத்தான், ‘உன்னை எனக்குப் பிடிக்கவே இல்லை’ என்று முகத்துக்கு நேராகவே சொன்னாள். ஆனாலும் விடாமல் அவளைச் சம்மதிக்க வைத்து விரலில் மோதிரத்தை மாட்டி மனத்தளவில் கட்டிப்போட்டான்.
அவள் அணிவித்துவிட்ட அந்த மோதிரத்தைப் பார்த்தான்.
அவசரமாக, கடையில் இருந்ததில் ஒன்றை எடுத்ததில் எழுத்து எதுவும் பொறிக்கவில்லை. மாறாக இரண்டு இதயங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடந்தன. அப்படியானவற்றைத்தான் நிச்சயத்துக்கு போட வேண்டும் என்று எடுத்தானே தவிர அப்போது அது அவனைப் பெரிதாக ஈர்க்கவில்லை.
ஆனால் இன்றைக்கு அதைப் பார்க்கையில் விரலைத் தொடாமலே அணிவித்துவிட்டவள்தான் நினைவில் வந்தாள். தன்னை மீறி அதன்மீது தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.
அவளின் குரலைக் கேட்க வேண்டும் போலிருந்தது. எப்படி இருக்கிறாள் என்று அறிய நினைத்தான். எப்படியாவது அவளைச் சமாதானம் செய்துவிடு என்று மனது உந்தியது.
இப்போது அழைத்தால் நிச்சயம் ஏற்க மாட்டாள். மாலையில் நேரத்துக்கே வீட்டுக்குப் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு பிடிவாதமாக வேலையில் கவனம் செலுத்த முயன்றான்.
ஆறு மணிபோல் வீடு வந்தவனை ஸ்கூட்டி இல்லாத முற்றம்தான் வரவேற்றது. ‘ப்ச்! இன்னும் வராம அங்க இருந்து என்ன செய்றாள்?’ அவளைப் பார்த்துவிட அவசரப்பட்டுக்கொண்டிருந்த ஆழ்மனது ஏமாற்றத்தில் சினந்தது.
நாளைக்குக் காலையிலேயே கொழும்புக்குப் போக வேண்டும். இன்றுவிட்டால் இன்னும் நான்கு நாட்கள் கழித்துத்தான் பார்க்க முடியும். விறுவிறு என்று மாடியேறி வேகமாக அறைக்குள் புகுந்தவனின் முகத்தில் வெறுமை அறைந்தது.
இதுவரை தாய் வீட்டுக்குப் போனாலும் இருட்ட முதல் வந்து விடுகிறவள் ஏழு மணியைத் தொடுகிற இந்தப் பொழுதில் இனியும் வருவாள் என்கிற நம்பிக்கை இல்லை.
குளித்துவிட்டு வந்து அவளுக்கு அழைத்தான்.
“என்ன முடிவு செய்திருக்கிறாய்?”
அவனுக்கு அவளோடு பேச வேண்டும். அவளின் குரலைக் கேட்க வேண்டும். அழுகையை அடக்கிக்கொண்டு போனாளே இப்போது தேறிக்கொண்டாளா என்று அறிய வேண்டும். இரவுக்காவது இங்கு வருவாளா என்று தெரிய வேண்டும்.
இதையெல்லாம் அகங்காரம் பிடித்த மனது வாய்விட்டுக் கேட்க விடாததில் அவளின் முடிவை அறிய மாத்திரமே அழைத்தது போன்று காட்டிக்கொண்டான்.
அதுவே பிரமிளாவின் கொதிப்பைக் கிளறிவிடப் போதுமாயிற்று. “என்னவோ என்ர விருப்பு வெறுப்பை மதிக்கிறவர் மாதிரி முடிவு என்ன எண்டு கேக்கிறீங்க? வாபஸ் வாங்க மாட்டன் எண்டு சொன்னா விடுவீங்களா?” என்று சீறினாள்.
‘இன்னும் கோபமாத்தான் இருக்கிறாள்…’ மார்பை நீவிவிட்டபடி அமைதி காத்தான்.
“கட்டி வச்சு அடிக்கிற மாதிரி மறுக்க முடியாத நிலையில என்னை நிப்பாட்டிக் காரியம் சாதிக்கிறது ஒண்டும் உங்களுக்குப் புதுசு இல்லையே. பிறகும் ஏன் நல்லவனுக்கு நடிக்கிறீங்க? இந்தப் பிரச்சினைக்கு முடிவு என்ன எண்டுறது ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். பிறகு என்ன கேள்வி?” உண்மை சுட்டதில் அவன் கை கேசத்துக்குள் அலைந்தது.
என்றுமில்லாத அன்றைய அவனின் அமைதி அவளை ஆற்றுப்படுத்தவே இல்லை. மாறாக ஆற மறுத்த கோபத்தை இன்னுமே விசிறிவிட்டது.
“கட்டின மனுசிய ஆராவது ஒருத்தன் ஒரு நிமிசம் கூர்ந்து பாத்தாலே சண்டைக்குப்போறவன்தான் புருசன். ஆனா நீங்க என்னைக் கேவலமா ஃபோட்டோ எடுத்து அதைப் பேப்பர்ல போட்டவனையே காப்பாத்தி பாதுகாக்கிற ஆள். உங்களிட்ட அந்தப் பிள்ளைகளின்ர வலிக்கு நிவாரணிய எதிர்பாத்தது என்ர பிழைதான்.” என்றவள் பேச்சில் வேகமாகக் கைப்பேசியைக் காதிலிருந்து எடுத்துவிட்டான் கௌசிகன். கண்கள் சிவந்தது. ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான். தொடர்ந்து அவள் பேசுவது கேட்க மீண்டும் காதுக்குக் கொடுத்தான்.
“எனக்கு வாபஸ் வாங்க விருப்பமில்லை. ஆனா கேஸ் நடத்தி நான் வெல்லப்போறது இல்லை. அதுக்கு நீங்க விடப்போறதும் இல்ல. உங்களிட்ட மாட்டி என்ர வாழ்க்கைதான் சிதைஞ்சு போச்சு. அந்தப் பள்ளிக்கூடமும் அங்க படிக்கிற பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும் எண்டுறதால மட்டும்தான் வாபஸ் வாங்குறன். ஆனா நான் வாபஸ் வாங்கின பிறகு திரும்பவும் செய்ய மாட்டீங்க எண்டுறதுக்கு என்ன உத்தரவாதம்?”
“நான் வாக்குத் தவறமாட்டன்!” என்றான் அவன் சுருக்கமாக.
“ஓ!” அவளின் இழுவையில் தெறித்த நக்கலைக் கவனிக்காதவன் போன்று, “அதுக்கு வீடு வரைக்கும் வந்துபோற ரஜீவனே சாட்சி.” என்று தன் நேர்மைக்குச் சான்று பகன்றான் அவன்.
“உண்மைதான். நீங்க பெரிய நியாயஸ்தன்தான்!” என்றுவிட்டு, “உங்கள கெஞ்சிக் கேக்கிறன், இனியும் என்ன இப்பிடியான நிலையில நிப்பாட்டாதீங்க. வாழ்க்கையே வெறுக்குது.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.
பால்கனியின் கம்பியினைப் பற்றியபடி அப்படியே நின்றிருந்தான் கௌசிகன். மனைவியின் குமுறல் காதுக்குள் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. வாழ்க்கையே வெறுக்குது என்றுவிட்டாளே. கண்ணை இறுக்கி மூடி அந்த வார்த்தைகளை ஜீரணிக்க முயன்று தோற்றான்.
அவள் இல்லாத அறைக்குள் போகவே பிடிக்கவில்லை. திருமணமானதிலிருந்து அவளைப் பிரிந்திராதவனுக்கு உணவும் பிடிக்கவில்லை உறக்கமும் வரவில்லை. இந்தளவுக்கு அவள் தனக்குள் ஊடுருவியிருக்கிறாள் என்பதை நம்பவும் முடியவில்லை.
இதில், ஒரு நாளேனும் அவள் அவனிடம் இன்முகம் காட்டியதுமில்லை, சிரித்துப் பேசியதுமில்லை. விலக்கி நிறுத்தி நிறுத்தியே அவனை வளைத்துப் போட்டிருக்கிறாள். உயிர்ப்பற்ற சிரிப்பொன்று அவன் உதட்டோரம் வந்து போயிற்று.
இத்தனை நாட்களும் கொழும்புக்குக் கூடத் தந்தையைத்தான் அனுப்பியிருக்கிறான். இன்று யோசிக்கையில் ஆழ்மனது அவளைப் பிரிய விரும்பாமல் அவரை அனுப்பியிருக்கிறது என்று புரிந்துகொண்டான்.
இந்த முறையும் அவரை அனுப்ப எண்ணியிருக்க, “இந்தமுறை நீ ஒருக்கா போயிட்டு வந்தா நல்லம் தம்பி.” என்று சொல்லியிருந்தார் ராஜநாயகம்.
மறுக்கமுடியாமல்தான் இந்தப் பயணத்துக்கே தயாராகியிருந்தான். அவளையும் கூட்டிக்கொண்டு போகலாம் என்றால் கல்லூரி இருந்தது. ஒரு நெடிய மூச்சுடன் அந்த இரவை உறக்கமற்று பால்கனியிலேயே கழித்தான்.