செல்வராணிக்கு மருமகள் நடந்துகொண்ட முறையில் மிகுந்த மனவருத்தம். அதை யாரிடம் காட்ட முடியும்? அன்னை வீட்டில் அவள் தங்குவதைப் பற்றி ஒன்றுமேயில்லை. ஆனால் ஒரு வார்த்தை அவரிடமும் சொல்லியிருக்கலாம்.
மகன் அவளுக்குக் கொடுத்த நெருக்கடியை அறியாமல் எப்போதும்போலத் தனக்குள்ளேயே தன் மனக்குறையை மறைத்துக்கொண்டு நடனமாடினார்.
கொழும்பில் இருந்த கௌசிகனை வேலைகள் செய்ய விடாமல் மாம்பழ வண்டாகக் குடைந்துகொண்டே இருந்தாள் பிரமிளா.
கடந்த ஒரு மாதமாக அவர்களுக்குள் பெரிதாகச் சண்டை சச்சரவுகள் என்று எதுவும் வரவில்லை. நாட்கள் இனிமையாகக் கடந்திருக்கவில்லைதான் என்றாலும் ஒருவித லயத்துடன் நிம்மதியாகத்தான் கழிந்தன.
அது மனத்தளவில் மனைவியிடம் அவனை நெருங்க வைத்திருந்ததா, அல்லது திருமணத்தின் பின்னான முதல் பிரிவு அவளைப் பற்றியே யோசிக்க வைத்ததா, இல்லை அவளின் வார்த்தைகளில் இருந்த வலி அவனைச் சுட்டதா தெரியவில்லை. அவளைப் பார்த்துப் பேசிவிட்டு வந்திருந்தாலாவது சமாளித்திருப்பான் போலும்.
அவளின் முகம் பார்க்க ஆவல் உண்டாயிற்று. ஆனால், மனைவியின் புகைப்படம் ஒன்றுகூடவில்லை. எடுத்துக்கொள்ளவில்லை. விசித்திரமான கணவன்தான் அவன். அவளின் வாட்ஸ் அப் முகப்புக்குச் சென்று பார்த்தான். கல்லூரியின் முகப்புத்தான் இருந்தது.
அதைவிட அந்த நேரத்தில் அவள் அங்கே ஒன்லைனில் இருப்பது தெரிந்து புருவங்களை உயர்த்தினான்.
“என்ன டீச்சரம்மா படிப்பிக்கிற நேரம் ஃபோன்ல இருக்கிறாய்?” மெல்லிய உல்லாசம் மனத்தில் தொற்றிக்கொள்ள, உதட்டோரம் மின்னிய சின்ன சிரிப்போடு தட்டிவிட்டான்.
என்ன சொல்லப் போகிறாள் என்று பெரும் ஆவலோடு காத்திருந்தான். மத்தியானம் ஆயிற்று. மாலையும் வந்துபோயிற்று. இரவு சூழ்ந்தும் பதில் மட்டும் வரவேயில்லை. முகம் அப்படியே சுருங்கிவிடப் பொருளற்ற கோபம் ஒன்று அவனுக்குள் கனகனக்க ஆரம்பித்தது.
நான்காவது நாள் அதிகாலையிலேயே வேலைகளை முடித்துவிட்டு வந்தவனை வரவேற்ற வெறும் அறை இன்னுமே எரிச்சலைத் தூண்டிற்று.
‘கண்ணில படாம இருந்து விளையாட்டா காட்டுறாய். பொறு! இண்டைக்கே வந்து தூக்கிக்கொண்டு வாறன்!’ கடுப்புடன் குளித்துவிட்டு வந்து படுத்தான். அவளின் அடையாளங்களைச் சுமந்திருந்த அறை ஆழ்ந்த துயிலுக்கு அழைத்துச் சென்றது.
நன்றாக உறங்கி எழுந்து, கல்லூரிக்குச் செல்லத் தயாரானபடி தனபாலசிங்கத்துக்கு அழைத்துப் பேசினான்.
“இனி நான் ஃபிரீதான் மாமா. உங்களுக்கு நேரம் இருந்தா பின்னேரம் போல அங்க வாறன்.” அங்கே செல்வதற்கு அவனுக்கு அது ஒரு சாட்டு.
அவரோ மிகுந்த சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தார். அவன் எதற்கு வருவதாகச் சொல்கிறான் என்பதோ, அவனோடு பேச நினைத்ததோ அவரின் நினைவிலேயே இல்லை.
“தம்பி, இதென்ன சொல்லிக்கொண்டு? இதுவும் உங்கட வீடுதான். எப்ப எண்டாலும் வாங்கோ. மனம் முழுக்கச் சந்தோசமா இருக்கு. என்னவோ பத்து வயசு குறைஞ்ச மாதிரி. எப்பயடா நாள் ஓடும் எண்டு பாத்துக்கொண்டு இருக்கிறன். உங்களுக்குத்தான் நன்றி சொல்லோணும்.” என்று, வழமைக்கு மாறாகப் படபடவென்று பேசினார்.
அவர் காட்டிய அந்த அன்பும் நெருக்கமும் அவன் முகத்திலும் மலர்ச்சியைப் பரப்பிற்று. “அப்பிடி என்ன விசேசம் மாமா? சொன்னா நானும் சந்தோசப்படுவனே.” சின்ன முறுவலோடு வினவினான்.
தனபாலசிங்கத்துக்குக் குழப்பம். “என்ன தம்பி இப்பிடிக் கேக்கிறீங்க? உங்களுக்குத் தெரியாதா? பிள்ளை சொல்லேல்லையா?” எனும்போதே அவரின் குரல் இறங்கிப் போயிற்று. சொல்லச் சொல்லி அன்றே சொன்னாரே.
“இன்னும் நான் அவளோட கதைக்கேல்ல. அவள் சொல்லாட்டி என்ன நீங்க சொல்லுங்கோ!” என்று ஊக்கினான். முதலில் அவரிடம் தெரிந்த உற்சாகத் துள்ளலும் இப்போது தெரிந்த அதிர்வும் ஏதோ முக்கியமான செய்தி என்று உணர்த்தியதில் அவரைத் தூண்டினான்.
“அது தம்பி… நான் தாத்தா ஆகப்போறன். நீங்க அப்பா ஆகப்போறீங்க.” மகள் மூலம் அறிந்திருக்க வேண்டிய விடயத்தைத் தான் சொல்லவேண்டி வந்துவிட்டதால் தடுமாறினார்.
“ஓ…!” என்றவனாலும் உடனேயே எதிர்வினை ஆற்றமுடியாமல் போயிற்று. பூரிப்புடன் உணரவேண்டிய ஒன்றை மிகுந்த கோபத்துடன் அறிந்துகொண்டான்.
அவனின் இழுவையில் அவருக்குப் பதட்டமாயிற்று. மறந்திருப்பாள் என்றோ இனித்தான் சொல்வாள் என்றோ அசட்டையாக எதையாவது சொல்ல வாய் வராமல் நின்றார். அந்தளவுக்குப் பொறுப்பற்றவள் அல்லவே அவரின் மகள். ‘சொல்லம்மா’ என்று அவர் சொல்லியும் சொல்லாமல் விட்டிருக்கிறாள் என்றால் தெரிந்தேதான் செய்திருப்பாள்.
என்ன சொல்லிச் சமாளிக்க என்று அவர் தடுமாறிக்கொண்டிருக்க, “எப்ப இது தெரியவந்தது?” என்றான் ஒருமாதிரிக் குரலில்.
மிகுந்த கோபத்தில் இருக்கிறான் என்று அந்தத் தொனியே சொல்லிற்று. அது அவருக்குள் கலக்கத்தை உண்டாக்கிற்று. குழந்தை உருவான இந்த நல்ல நேரத்தில் அவர்களுக்குள் மீண்டும் ஒரு சண்டையா? கடவுளே! மனம் அதுபாட்டில் இறைவனை நாட வாய் மட்டும், “மூண்டு நாளைக்கு முதலே.” என்று பதிலிறுத்தது.
ஆக, அன்றைக்கு அவன் மெசேஜ் அனுப்பிய அன்று. அப்போது இதற்காகத்தான் வெளியே நின்றிருக்கிறாள். இல்லாமல் ஒன்லைனுக்கு அவள் வந்திருக்கப் போவதில்லை. அவன் மெசேஜ் அனுப்பியபோது கூட இதுதான் என்று சொல்லவே இல்லையே.
“உங்கட மகள் என்னட்டயும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்!” என்றான் ஒட்டாத குரலில்.
பதறிப்போனார் மனிதர். “தம்பி! தயவுசெய்து கோபப்படாதீங்கோ. இவ்வளவு காலமும் உங்களுக்க நிறையச் சண்டை சச்சரவுகள் வந்து போயிருக்கலாம். ஆனா இனி நீங்க ரெண்டு பேரும் மட்டுமில்லை. மூண்டாவதா குழந்தையும் வரப்போகுது. உங்கட பிரச்சனைகள் பிள்ளைகளையும் பாதிக்கும். பிரமியோடயும் நான் கதைக்கிறன். தயவு செய்து இனி எதையும் கொஞ்சம் நிதானமா அணுகுங்கோ.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
வேகமாகத் தயாராகிக் கல்லூரிக்குச் சென்றான் கௌசிகன்.
அங்கே அவளைப் பிடித்தான். சோர்ந்த தோற்றம் கருத்தில் பதிந்தாலும் கவனத்தில் எடுக்க முடியாமல் கோபம் கண்ணை மறைத்தது.