யாரோ தன் தலையைத் தடவிவிடவும் மெல்ல மெல்ல உறக்கம் கலைந்தாள் பிரமிளா. ‘அப்பா…’ அவளுக்குப் பிடிக்கும் என்று அவர்தானே இப்படி வருடுவது. இதழினில் பூத்த மென் புன்னகையுடன் விழிகளைத் திறந்தவள் தன்னருகில் அமர்ந்திருந்த கணவனைக் கண்டதும் ஒருகணம் ஒன்றும் விளங்காமல் விழித்துவிட்டு வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
கழற்றிய மேல் சட்டை அருகில் இருக்க, வெள்ளை பெனியனும் ஜீன்சுமாகக் கால்களை நீட்டி அமர்ந்திருந்து, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். இமைக்க மறந்து அவனையே பார்த்தாள் பிரமிளா.
“கல்யாணம் நடந்து இத்தனை மாதத்துக்க இப்பதான் இப்பிடி என்ர முகத்தை ஆசையா பாக்கிறாய்.” சிறுநகையுடன் இயம்பியவனை முறைத்துவிட்டுக் கட்டிலை விட்டு இறங்கினாள்.
வீட்டுக்குள்ளேயே வராதவனை அறைக்குள் பார்த்தால் அதிர்ச்சியாக இராதா? இதில் அவனை ஆசையாகப் பார்த்தாளாம்!
வெளியே சென்று கிணற்றடியில் முகம் கழுவி, கொடியில் தொங்கிக்கொண்டிருந்த வெண்பஞ்சுத் துவாலையில் முகம் புதைத்தாள். அப்போதுதான் தான் தாய்மை உற்றிருப்பதும், அதை அவனிடம் சொல்லாமல் விட்டதும், கல்லூரியில் வைத்து அவன் கோபப்பட்டதும் நினைவில் வந்தன. உறங்கி எழுந்ததில் கிடைத்திருந்த மன அமைதி திரும்பவும் பறிபோயிற்று.
மீண்டும் அவனிடம் போகவே தயக்கம். போகாமல் இருக்க முடியாதே. பின்னிய கால்களை இழுத்துக்கொண்டு மெதுவாக அறைக்குள் நுழைந்தாள்.
அங்கே, முதுகுக்குத் தலையணையைக் கொடுத்துவிட்டுக் கைகள் இரண்டையும் தலைக்குக் கொடுத்துக் கண்களை மூடி அமர்ந்திருந்தான் கௌசிகன்.
அவளின் அரவம் உணர்ந்து விழிகளைத் திறந்தான். ஒரு சாதாரணப் பாவாடை சட்டை. காலையில் போட்டுக்கொண்ட கொண்டை கழன்றிருக்காத போதும் முடி கலைந்திருந்தது. கழுவித் துடைத்திருந்த முகம் பளிங்குபோல் மனத்தையும் கண்களையும் ஈர்த்தன.
‘இங்க வா’ என்று தலையசைத்தான் அவன்.
நான்கடி எடுத்துவைத்து இருவருக்குமான தூரத்தைக் குறைத்தாளே தவிர அவனிடம் செல்லவில்லை.
“இது வீடு. நீ என்ர மனுசி. இங்க நான் உன்ர கையைப் பிடிச்சு இழுக்கலாம்தானே. பிறகு, ‘என்ன கையப் பிடிச்சு இழுத்தியாம்’ எண்டு கேள்வி வரக் கூடாது.” என்றான் சிரிக்காமல் கொள்ளாமல்.
அவளுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருக்க முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
முகம் கனிய, “இங்க வா பிரமி.” என்றான் இதமாக.
அப்போதும் அவள் அசையவில்லை. ஒருவிதக் குழப்பத்தில் இருந்தாள். கோபப்படுவான், சண்டை பிடிப்பான் என்றுதான் நினைத்தாள். அவனோ இதுநாள் வரையில் அவள் பார்த்திராத புதிய முகத்தைக் காட்டுகிறான்.
கௌசிகனுக்கும் புரிந்தது. அவள் சொல்லாமல் விட்ட கோபம் இன்னுமே உண்டுதான். அதைக் காட்டிலும் நடந்த பிரச்சனையில் இங்கு வந்து தங்கியிருப்பவளை எப்படியாவது கடத்திக்கொண்டு போவது முக்கியமாகப் பட்டது.
“என்ன டீச்சரம்மா நீ? இது பள்ளிக்கூடம் இல்ல. பள்ளியறை. அங்க நான் பக்கத்தில வாறது எவ்வளவு பெரிய பிழையோ அவ்வளவு பிழை இஞ்ச நீ பக்கத்தில வராம இருக்கிறது. சோ பிளீஸ் கிட்டவா, கட்டிப்பிடி, முத்தமிடு, என்னக் கொஞ்சு.” என்றான் மீண்டும்.
அவளுக்கு இனியும் இங்கிருந்தால் சிரித்துவிடுவோம் என்று தெரிந்து போயிற்று. வேகமாக வெளியே செல்லப்போக, “பிரமி நீ போகக் கூடாது!” என்றான் இளங்குரலில்.
அந்தக் குரலை அவளால் தாண்டிப் போக முடியவில்லை. ஆனாலும் அவனிடம் செல்லாமல் அங்கேயே நின்றாள்.
“வீட்டுக்கு வந்தவனோட கதைக்கமாட்டியா?” என்றான் மீண்டும்.
அவளின் கால்கள் தானாக அவனை நோக்கி நகர்ந்தன. சற்றே தள்ளி அமர்ந்து, “இரு” என்றான். அவளும் அமர்ந்துகொள்ள, அவளின் விரல்களைப் பற்றி வருடிக்கொடுத்தான்.
இருவரிடமும் மௌனம். அவனின் தொடுகை என்றுமில்லாமல் இன்று அவளின் மனத்தைத் தொட்டது. அவனையே பார்த்திருந்தாள். அதுவரை கருத்தைக் கவராதவன் இன்று கண்களை நிறைத்தான்.
என்ன இருந்தாலும் குழந்தையைப் பற்றி அவனிடம் சொல்லியிருக்கவேண்டுமோ? பிடிக்காத கணவனேயானாலும் அவனால் தானடைந்த தாய்மையை எண்ணி, இந்த மூன்று நாட்களாகவே பூரிப்புடன் தானே நடமாடிக்கொண்டிருக்கிறாள்.
வைத்தியப் பெண்மணி, ‘நீங்கள் தாய்மை உற்றிருக்கிறீர்கள்’ என்று சொன்ன கணம் சொல்லில் வடிக்கமுடியாத சந்தோசத்தில் மிதந்தாளே. அதை அவனுக்கும் கொடுக்கத் தவறிவிட்டாளோ? அதற்கு அவள் மட்டுமே காரணமல்ல என்று விளங்கினாலும், “சொறி…” என்று, மெல்லிய தயக்கத்துடன் சொன்னாள்.
பற்றியிருந்த விரல்களை, ‘விடு’ என்பதுபோல் அழுத்திக் கொடுத்துவிட்டு அவளுடைய முகம் பார்த்தான்.
“எத்தின மாதமாம்?”
“அஞ்சு கிழமை.”
“வடிவா செக் பண்ணினவையா?”
“ம்… ஓம்.”
“இனி எப்ப போகோணும்?”
“ரெண்டு கிழமை கழிச்சு வரச் சொன்னவே.”
“எப்ப?”
அவள் திகதியைச் சொன்னாள்.
“அண்டைக்கு நானும் வாறன்.” என்றான் அவன்.
“ம்ம்.”
மீண்டும் மெல்லிய மௌனம். பற்றியிருந்த விரல்களை வருடிக்கொடுப்பதை மாத்திரம் விடவில்லை. அவன் நெற்றிப் பரப்பில் சிந்தனை ரேகைகள் பரவிக்கிடந்தன.
அப்படி என்ன யோசிக்கிறான்?
“உண்மையாவே என்னட்டச் சொல்லோணும் மாதிரி இருக்கேல்லையா உனக்கு?” அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்துக் கேட்டான்.
பதில் இன்றிப் பார்வையைத் தழைத்தாள் பிரமிளா. அவனுக்கு அது போதுமாயிருந்தது. மெல்ல அவளைத் தன் மார்பில் சேர்த்துக்கொண்டான்.
பிரமிளா இதனை எதிர்பார்க்கவில்லை. அவனோ தன் உதடுகளை அவளின் நெற்றியில் அழுத்தமாக ஒற்றி எடுத்தான். தலையைத் தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தான்.
அவளுக்கும் விழிகள் தானாக மூடிக்கொண்டன. முதுகை வருடிக்கொடுத்தான். அணைப்பை மெதுவாக இறுக்கினான். உச்சியில் உதடுகளைப் பதித்தபடி, அவர்கள் அம்மா அப்பா ஆகிவிட்ட அந்த நொடியினை அனுபவித்தான்.
உடலைத் தாக்கிக்கொண்டிருந்த சோர்வுக்கு அவனுடைய செய்கைகள் மிகுந்த இதம் சேர்த்தன. சுகமயக்கம் ஒன்று அவளைச் சூழ அவனுக்குள் அடங்கிப்போனாள்.
நொடிகள் சில கழிந்தபின் பேசினான் அவன்.
“கேள்விப்பட்ட அந்த நிமிசத்தில இருந்து எனக்கு உன்னப் பாக்கோணும் மாதிரியே இருந்தது. உன்னில நிறையக் கோவம் வந்தது. என்ர மனுசிக்கு நான் அந்தளவுக்கு முக்கியமில்லையா எண்டுற கவலை ஒரு பக்கம், ‘எடேய் தடியா நீ அப்பா ஆகிட்டாயடா’ எண்டுற துள்ளல் ஒரு பக்கம் எண்டு… எனக்குச் சொல்லத் தெரியேல்ல பிரமி. இப்பிடியே உன்னக் கைக்க வச்சுக்கொண்டு இருக்கோணும் மாதிரி இருக்கு.” கரகரத்த குரலில் தன் மனத்தை உரைத்தான் அவன்.
அதுவரையிலும் அவளுக்கு அப்படித் தோன்றியிருக்கவில்லை. ஆனால், அவனின் அணைப்புக்குள் சுகமாக அடங்கியிருக்கும் இந்த நொடியில் அவளுக்கும் அப்படித்தான் தோன்றிற்று. மனம் இளகியிருந்தது. இறுக்கம் தளர்ந்திருந்தது. அவனிடமிருந்து விலகப் பிடிக்காமல் இன்னுமே அவனோடு ஒன்றிக்கொண்டாள். மனைவியின் மனத்தை உணர்ந்தவனாக அவளின் வயிற்றை மெல்ல வருடிக்கொடுத்தான் கௌசிகன்.
அதில் அவளின் தேகம் சிலிர்ப்பதை உணர்ந்து முறுவல் விரிய, “என்ன?” என்றான்.
ஒன்றுமில்லை என்று அவள் தலையசைக்க, “உருவம் இன்னும் வந்திருக்காது என்ன?” என்றான் கனிந்த குரலில்.
“இப்பதானே அஞ்சு கிழமை. இனிமேல்தான் கைகால் எல்லாம் வடிவா வரும்.”
“ம்ம்…” கேட்டுக்கொண்டவன் அதற்குப் பிறகு ஒன்றும் கதைக்கவில்லை. அவளைக் கைகளுக்குள் வைத்திருந்தபடி அமைதியாக இருந்தான்.
இவனுக்கு உண்மையிலேயே கோபம் இல்லையா? பிரமிளாவுக்கு அதை இன்னுமே நம்ப முடியவில்லை. மெல்ல விழிகளை மாத்திரம் உயர்த்தி அவன் முகம் பார்த்தாள். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனின் முகத்தில் மிகுந்த களைப்புத் தெரிந்தது. “சாப்பிட்டீங்களா?” என்று மெல்ல வினவினாள்.
மெல்லிய வியப்புடன் அவளை நோக்கி, “ம்ம்…” என்றான் அவன்.
“பொய்! நீங்க இன்னும் சாப்பிடேல்ல. முகத்தில பசிக்களை தெரியுது.” பார்வை அவனிடமே இருக்க அடித்துச் சொன்னாள் அவள்.