மகள் தாய்மையுற்றதை அறிந்த நொடியில் தாமே புதிதாகப் பிறப்பெடுத்தது போன்று மகிழ்ந்துபோயினர் தனபாலசிங்கம் தம்பதியினர். உடலெங்கும் புது இரத்தம் பாய்ந்த உற்சாகம்.
குஞ்சும் குருமனுமாக அந்த வீடு மீண்டும் நிறையப்போகிறது! குவா குவா சத்தம் அடிக்கடி கேட்கும். இருந்த இடத்திலிருந்தே அவர்கள் இருவரையும் ஆட்டிவைக்கப் போகிற பெரிய மனுசனோ மனுசியோ வரப்போகிறார். அவரைச் சுற்றியே சுழலப்போகிற தம் நாட்களுக்காக இப்போதே காத்திருக்க ஆரம்பித்தனர்.
இத்தனை ஆனந்தங்கள் மனத்தைச் சூழ்ந்திருந்தாலும் மகள் தன் வீடு செல்லாமல் இங்கேயே இருப்பதில் மெல்லிய சங்கடமும் இருக்கத்தான் செய்தது. முறையாக இன்னும் அவர்களுக்குச் சொல்லவும் இல்லையே! அது தவறாயிற்றே.
இங்கேயே வைத்திருந்து கவனிக்கப் பெரும் ஆவல் இருந்தாலுமே அவள் அங்குச் செல்வதுதான் நல்லது என்று எண்ணினர். நேற்று வந்த மருமகன் ஏதாவது சொல்லுவான் என்று எதிர்பார்த்திருக்கச் சரியில்லாத முகத்தோடு புறப்பட்டிருந்தான் அவன். இன்றாவது கணவனும் மனைவியும் ஏதாவது சொல்வார்களா என்று காத்திருந்தனர். அப்படியே இல்லாவிட்டாலும் தானே பேசிவிட வேண்டும் என்கிற முடிவிலிருந்தார் தனபாலசிங்கம்.
அவருக்கு வேலை வைக்காமல் தானே புறப்பட்டு வந்தாள் பிரமிளா. கவனித்திருந்த கௌசிகனுக்கும் பெருத்த நிம்மதி.
“உடம்பப் பாத்துக்கொள்ள வேணும் செல்லம். கவனமில்லாம இருக்கிறேல்ல சரியா? பள்ளிக்கூடத்திலையும் கொஞ்ச நாளைக்குப் பாத்து இரு.” அன்னை சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டாள் பிரமிளா.
தந்தையிடமும் விடைபெற்றுக் காரில் ஏறினாள். கார் அருகிலேயே தயங்கி நின்றார் சரிதா. மருமகனாகி மாதங்கள் சில கடந்திருந்தபோதும் அவனோடு பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். மனத்தில் இருந்த வெறுப்பும் கோபமும் அவனை மகனைப் போல எண்ணி உரிமையாகப் பழக விட்டதில்லை.
காரில் ஏறப்போனவன் என்ன நினைத்தானோ திறந்த கதவை மூடிவிட்டு அவரின் முன்னால் வந்து நின்றான்.
“என்னட்ட ஏதாவது சொல்லோணுமா மாமி?”
சரிதாவின் முகம் அப்படியே மலர்ந்துபோயிற்று. “ஓம் தம்பி. அது… இப்ப பிள்ளைக்குச் சாப்பாட்டுல நாட்டமே இல்ல. எந்த நேரமும் சோந்து சோந்து படுக்கிறா. நீங்கதான் நேரா நேரத்துக்குக் கவனிச்சுச் சத்தான சாப்பாடா குடுக்கோணும். கொஞ்சம் வெளி வேலைகளைக் குறைச்சுக்கொண்டு கவனிச்சுக்கொள்ளுங்கோ. உங்கட அம்மா நல்லா பாப்பா. எனக்கு நம்பிக்கை இருக்கு. எண்டாலும் நீங்களும் கொஞ்சம் பாத்துக்கொள்ளுங்கோ. உங்கள நம்பித்தான் அனுப்புறன்.” சொல்லவேண்டியதை நயமாக இயம்பினார் சரிதா.
கூடவே, அவன் பொறுமையாக நின்று தான் சொன்னதைக் கேட்டுக்கொண்டதே பெருத்த ஆறுதலை உண்டாக்கிற்று. அது கொடுத்த தெம்போடு, தன் மனத்தையும் பகிர்ந்தார்.
“அடிக்கடி இங்கயும் வந்து போங்கோ. எங்களுக்கும் உங்கள விட்டா ஆர் இருக்கினம் சொல்லுங்கோ? வயசுபோன காலத்தில தனியா குந்திக்கொண்டு இருக்கிறம்.”
அருகிலேயே அமைதியாக நின்ற மாமனாரை ஒருமுறை நோக்கிவிட்டு கௌசிகன் கனிவோடு புன்னகைத்தான். “நீங்க ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம் மாமி. நீங்க சொன்ன மாதிரியே கவனமா பாத்துக்கொள்ளுறன். நீங்களும் எப்ப பாக்க நினைச்சாலும் அங்க வாங்கோ. நானும் கூட்டிக்கொண்டு வாறன்.” அவருக்கு ஆறுதல் கொடுக்கிற வகையில் பேசிவிட்டு மனைவியோடு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தான்.
அந்த வீட்டினுள் கால் வைக்கையில் பிரமிளாவின் முகத்தில் மெல்லிய இருள் படிந்துபோயிற்று. கவனித்தாலும் காட்டிக்கொள்ளாமல் அழைத்துச் சென்றான் கௌசிகன்.
விடயத்தை அறிந்துகொண்டபோது அவள் மீதிருந்த மனக்குறையே செல்வராணிக்கு மறந்து போயிற்று. ஆனந்த மிகுதியில் மருமகளைக் கட்டிக்கொண்டார். சந்தோசக் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. மகனையும் அணைத்துக்கொண்டு, “நல்ல சந்தோசமப்பு!” என்று தன் மனத்தை அவனிடமும் பகிர்ந்துகொண்டார்.
யாழினியைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. “நான் அத்தை ஆகிட்டேன்! நான் அத்தை ஆகிட்டேன்!” என்று பிரமிளாவைப் பிடித்துக்கொண்டு துள்ளிக்குதித்தாள். ‘எப்பிடி அண்ணி கண்டு பிடிச்சீங்க?’, ‘பேபி எப்ப பிறக்கும்’, ‘ஆணா பெண்ணா’ என்று செல்வராணியைக் காட்டிலும் மோசமான மாமியாராக மாறிப் பிரமிளாவை ஒருவழியாக்கிக்கொண்டிருந்தாள்.
“இன்னும் எவ்வளவு கேள்வி கேக்கப்போறாய்?” என்று கௌசிகன் அதட்டிய பிறகுதான் அடங்கினாள்.
சூட்டோடு சூடாகக் கணவருக்கும் சின்ன மகனுக்கும் அழைத்து விடயத்தைப் பகிர்ந்தார் செல்வராணி. அடுத்த சில நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்த ராஜநாயகத்தின் முகத்தில் மிகுந்த பூரிப்பு. மகனை ஆரத்தழுவி தோளைத் தட்டிக்கொடுத்தவரின் விழிகள் மருமகளைப் பெருமையும் சந்தோசமுமாக நோக்கிற்று.
பதிலுக்குப் புன்னகையைப் பூக்கமுடியாமல் நின்றாள் பிரமிளா.
கடந்துபோன பல நொடிகள் காயத்தை மாத்திரமே தந்திருக்க எப்படி இந்த நொடிகளில் மாத்திரம் வாழ்வது என்று அவள் கற்ற கல்வி எந்த இடத்திலாவது கற்றுத் தந்திருக்கிறதா என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
எல்லோரிடமிருந்தும் மெல்லத் தப்பித்து அறைக்குள் அடைந்துகொண்டவளுக்கு மனத்தின் அமைதி குலைந்துபோயிற்று. சேலையை மாற்ற வேண்டும்; குளிக்க வேண்டும்; நாளைக்குக் கல்லூரிக்குத் தயாராக வேண்டும் என்று அவளைத் தேங்கிநிற்க விடாமல் மூளை நகர்த்த முயன்றபோதும் முடியாமல் கடந்த காலத்தின் நினைவு மூட்டைகளுக்குள் தொலைந்துபோயிருந்தாள்.
அப்போது சுற்றும் முற்றும் பார்த்தபடி ரகசியமாகக் காலடி எடுத்துவைத்து வந்தாள் யாழினி.
“அண்ணி! ஓபன் த டோர் பிளீஸ்!”
கள்ளர் நுழைவதைப் போன்று அவள் வந்த அழகில் முறுவல் மலர்ந்தாலும் என்ன சொல்கிறாள் என்று விளங்காமல் பார்த்தாள் பிரமிளா.
“ஐயோ அண்ணி! அண்ணா வரமுதல் காரியத்தை முடிக்கோணும்!” அவளின் முன்னே முழங்காலில் நின்றவாறே சேலையை விலக்கி, வயிற்றில் முத்தமிட்டாள்.
“யாழி கூசுது!” வேகமாக விலகியவளை விடாமல் பிடித்து, “அண்ணி அசையாம நில்லுங்க! நான் என்ர மருமகப்பிள்ளைய வெல்கம் செய்றன்! சின்ன குட்டி! நான் உங்கட அத்தை. உங்கட ஒரே ஒரு அத்தை. நீங்க பிறந்தபிறகு நான்தானாம் உங்களுக்குப் பெயர் வைப்பன். நான்தான் உங்களை வளப்பன். உடுப்பெல்லாம் நான்தான் வாங்குவேனாம். என்னோடதான் நீங்க விளையாடோணும். உங்களுக்கு ஒரு சித்தியும் இருக்கிறா. எண்டாலும் அவவோட நீங்க சேரக்கூடாது சரியோ?”