வார்த்தைக்கு வார்த்தை முத்தமிட்டபடி பேசிக்கொண்டிருந்தவளை உடல் முழுவதுமே கூசியபோதும் விலக்க மனம் வராமல் முகம் முழுக்கப் பூத்த சிரிப்புடன் பார்த்திருந்தாள் பிரமிளா.
வாசலில் நிழலாட நிமிர்ந்தவள் அங்கு நின்றவனைக் கண்டதும் அதிர்ந்தாள். யாழினியை வேகமாகத் தன்னிடமிருந்து விலக்கிவிட்டுச் சேலையை அவசரமாகச் சரி செய்துகொண்டாள்.
“அது அண்ணா… குட்டிப் பாப்பாவை… சும்மா…” என்று உளறிக்கொட்டிவிட்டு அங்கிருந்து சிட்டெனப் பறந்துபோனாள் யாழினி.
கதவைச் சாற்றிவிட்டுத் தன்னை நோக்கி வந்தவனின் விழிகளில் எதைக் கண்டாளோ வேகமாக அங்கிருந்து வெளியேற முயல, இடையோடு சேர்த்து வளைத்துப் பிடித்தான் அவன்.
அவளைத் தன்னருகில் கொண்டுவந்து, “அந்த டோர எங்களுக்கும் கொஞ்சம் திறக்கிறது.” என்று சிறு சிரிப்புடன் கேட்டவன் தங்கையின் செயலைத் தனதாக்கிக்கொண்டிருந்தான்.
தன் முன்னே மண்டியிட்டு வயிற்றினில் உதடு பதித்தவனை நம்பமாட்டாமல் இமை தட்டி விழித்தாள் பிரமிளா.
எதற்காகவும் தன் உயரம் விட்டு இறங்காத ஒருவன், அக்கிரமக்காரன், ஆணவம் நிறைந்த அகங்காரம் பிடித்தவன் என்று அவளாலேயே நாமம் சூட்டப்பட்டவன் தன் முன்னே மண்டியிட்டிருக்கிறானா?
பெரும் பாடுபட்டு அவனிடமிருந்து தப்பித்துக் கீழே ஓடியவளை, “மெல்ல நட!” என்றது அவனது சிரிக்கும் குரல்.
நேரே மாமியாரிடம் வந்து, தான் சொல்லாமல் சென்றதற்கு மன்னிப்பைக் கேட்டாள். செல்வராணியின் முகம் அப்படியே மலர்ந்து போயிற்று. “ஒரு ஃபோன போட்டுச் சொன்னாளே காணும் அம்மாச்சி. அத விட்டுப்போட்டு மன்னிப்புக் கேப்பியா?” என்றுவிட்டு, அவளுக்காக என்று தருவித்த பாதாம் பாலைக் காய்ச்சி அருந்தக் கொடுத்தார்.
அவன் வெளியே சென்ற பிறகுதான் தங்களின் அறைக்குச் சென்றாள் பிரமிளா. குளித்து, உடைமாற்றி, அடுத்த நாளுக்கான வேலைகளைக் கவனித்தபோதுதான் முக்கியமான பயிற்சிப் புத்தகத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவில் வந்தது.
யாழினியை அழைத்து எடுத்துவந்து தரமுடியுமா என்று கேட்டாள். அடுத்த நொடியே தயாராகி வந்து, “அண்ணி, வரேக்க உங்கட ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வரட்டா?” என்றாள் ஆவல் மின்னும் குரலில்.
“அதுக்கு உன்னட்ட லைசென்ஸ் இருக்கா?”
முகம் வாடிப்போயிற்று அவளுக்கு. ட்ரைவிங் பழகவா என்று கேட்டபோது சின்ன அண்ணாதான் தடுத்துவிட்டிருந்தான். “இல்லை அண்ணி. ஆனா நல்லா ஓடுவன்!” என்றவளைப் பொய்யாக முறைத்தாள் பெரியவள்.
“முதல் லைசென்ஸ் எடு. பிறகு தாராளமா ஓடு. இப்ப சைக்கிள்ல போய்ட்டுவா!” என்று துரத்திவிட்டாள்.
“உங்கட மருமகள் வச்சிருக்கிறது ஓட்ட ஸ்கூட்டி. அத ஓடுறதுக்கு லைசென்ஸ் வேற வேணுமாம்!” தாயிடம் சிடுசிடுத்தான் மோகனன்.
பதட்டத்துடன் வேகமாகப் பிரமிளாவை எங்கே என்று தேடினார் செல்வராணி. நல்ல காலம், யாழினியோடு பேசியபடி கேட் வரை போயிருந்தவள் அப்போதுதான் வீட்டுக்குள் வருவது தெரிந்தது.
“சும்மா கண்டதையும் கதைக்காத தம்பி!” என்று மெல்லிய குரலில் அதட்டினார்.
அவள் வரவும் விருட்டென்று அங்கிருந்து அகன்று போனான் மோகனன்.
அண்ணியின் வீட்டுக்குப் போகிறோம் என்றதுமே யாழினிக்கு ரஜீவன்தான் கண்களுக்குள் வந்து நின்றான். இப்போதெல்லாம் அவளின் இரவுகள் அவனின் நினைவுகளால் மாத்திரமே நிறைந்துகொண்டிருந்தது. அன்று ஏன் அவ்வளவு கோபப்பட்டான்? அவனுக்கும் அவளைப் பிடித்திருக்கிறதோ? வீடுவரை கூடவே வந்தானே. வார்த்தைகளால் அவளை ஓடவைத்தவன் செய்கைகளால் நெருக்கமாக உணரவைப்பதை உணர்ந்தானா இல்லையா?
எண்ணங்களுக்குச் சக்தி இருப்பது உண்மை என்பதை நிரூபிப்பது போன்று பிரமிளாவின் வீட்டில் நின்றிருந்தான் ரஜீவன். பார்த்தவளின் முகமும் விழிகளும் அன்றலர்ந்த மலரினைப் போன்று மலர்ந்து போயிற்று.
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு ஓடிவந்து, “மாமி! அண்ணி ஏதோ புக் மறந்து விட்டுட்டாவாம். அதை எடுத்துக்கொண்டு வரச்சொன்னவா.” என்றவளின் விழிகள் அடிக்கடி அவன் புறமாகத் தாவிக்கொண்டிருந்தன.
ரஜீவனும் அவளை எதிர்பார்க்கவில்லை. கூடவே ஆவலும் ஆசையுமாகத் தன்னை நோக்கிப் பாய்ந்த அவளின் விழிவீச்சில் மனது தடுமாற, தன்னை மீறியே சில நொடிகள் விழிகளை அவளிடம் நிலைக்க விட்டவன், அவளின் கண்கள் குறும்புடன் சிரிக்கவும் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான். ‘சும்மாவே விடமாட்டாள். இதுல நான் வேற பாத்து வச்சா…’
அதற்குள் சரிதா கொண்டுவந்து கொடுத்த பழக்கலவையை ஒரே மடக்கில் அருந்திவிட்டு, “புக்க நான் போய் எடுத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு பிரமிளாவின் அறைக்கு ஓடினாள்.
போனவள் அதே வேகத்தில் திரும்பி வந்து, “ஐயோ மாமி. அங்க நிறையப் புக்ஸ் கிடக்கு. அதுல எது எண்டு சரியா தெரியேல்ல. அண்ணிட்ட கேப்பம் எண்டா ஃபோனை விட்டுட்டு வந்திட்டன்.” என்றாள் சோகமாக.
சரிதாவுக்குச் சின்னவளின் ஒவ்வொரு செய்கையும் தீபாவை நினைவுறுத்திற்று. சிரிப்புடன், “பொறம்மா. என்ர ஃபோன் தாறன், கேள்.” என்று அவர் திரும்ப, “உங்களிட்ட அண்ணின்ர நம்பர் இல்லையா?” என்று ரஜீவனை விசாரித்தாள் யாழினி.
“இருக்கு!”
“அப்ப உங்கட ஃபோனை தாங்கோ. வேணுமெண்டா கதைக்கிறதுக்குக் காசு தாறன்.” என்றவளை முறைத்துவிட்டுக் கைப்பேசியை பொக்கட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தான் அவன்.
பிரமிளாவுக்கு அழைத்து எந்தப் புத்தகம் என்று கவனமாகக் கேட்டுவிட்டுத் திருப்பிக் கொடுத்தவளின் கண்ணில் இருந்த சிரிப்பு என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று. சரிதாவும் அங்கேயே நின்றதில் பேசாமல் நின்றான் ரஜீவன்.
புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து, “சரி மாமி, நான் போயிட்டு வாறன். பாய் ரஜீவன்!” என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டவளின் நடையில் பெரும் துள்ளல்.
ரஜீவனால் அவளிடமிருந்து விழிகளை அகற்றுவது மிகுந்த சிரமமாக இருந்தது. என்றுமில்லாமல் அன்று அவனின் கட்டுப்பாட்டையும் மீறித் தன் புறமாகக் கவர்ந்திழுத்தாள் யாழினி.
சைக்கிளின் பாஸ்கெட்டில் புத்தகத்தைப் போட்டவள், உதட்டில் வழிந்த குறுஞ்சிரிப்புடன் தன் பாவாடை பொக்கெட்டுக்குள் இருந்த ஃபோனையும் எடுத்துப் போட அடிப்பாவி என்று உதடசைத்தான் ரஜீவன்.
அவள் மறைந்ததும் தனியாகச் சென்று கைப்பேசியை எடுத்துப்பார்க்க, பிரமிளாவின் இலக்கத்துக்கு அழைக்க முதல் புது இலக்கமொன்றுக்கு அழுத்தப்பட்டிருந்தது. நிச்சயம் அது அவளுடையதுதான்.
அந்த நொடியிலிருந்து ஒரு எதிர்பார்ப்பில் மனது துடித்துக்கொண்டிருந்தது. அழைப்பாள். அல்லது ஏதாவது குறுந்தகவலாவது அனுப்புவாள். எடுக்கட்டும் நல்ல பேச்சுக் கொடுக்கிறேன் என்று பொய்யாக முனகிக்கொண்டான்.
இப்படி அவனைத் தன் நினைவினில் மூழ்கடிக்க என்றே திட்டம் போட்டுச் செய்தவள் அவனுக்கு அழைக்கவே இல்லை. ஒருவிதத் துள்ளலுடனும் சிரிப்புடனும் நடமாடிக்கொண்டிருந்தாள்.