அற்புதமான மாலைப்பொழுது. அன்றைய பகல் முழுக்க எரித்த வெயிலுக்கு இதமாக காற்று வீசிக் கொண்டிருந்தது. அதற்கு நேர்மாறாக பொறுமையை இழக்கும் நிலையில் அமர்ந்திருந்தான் செந்தூரன். அதற்குக் காரணமான அவனுடைய தங்கை சசிரூபாவோ எந்த அவசரமும் இன்றி கோவிலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
“அம்மா! இப்ப இவள் வரப்போறாளா இல்லையா?” பொறுமை இழக்கக் கேட்டான் அவன்.
ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியின் அருகே முகத்தைக் கொண்டுபோய், கண்ணுக்கு மையிட்டுக் கொண்டிருந்தவளோ, “ஒரு அஞ்சு நிமிஷம் பொறுக்க மாட்டியா நீ? ‘வள் வள்’ எண்டு கத்திக்கொண்டே நிக்கிறாய்!” என்று தானும் பதிலுக்குச் சினந்தாள்.
அந்த ‘வள்’ அவனை உண்மையிலேயே வள் என்று பாய வைத்தது.
“அப்ப ஆறுதலா வெளிக்கிட்டு நீயே போ!” என்றுவிட்டுக் கிளம்பிவிட்டான்.
“அம்மா…! அண்ணா என்ன விட்டுட்டுப் போறானாம்!” என்று கத்தினாள் சசி.
‘கடவுளே..! ரெண்டும் ஆரம்பிச்சிட்டுதுகள் திரும்ப!’
சமையலறையில் கைவேலையாக இருந்த இந்திராணிக்கு தலைவலி வரும்போலிருந்து. ஆணும் பெண்ணுமாய் இரண்டே இரண்டுபேர்தான். வளர்ந்தவர்கள். ஆனாலும் எப்போதும் பிடுங்குப்பாடு. ‘இந்தப் பிள்ளைகள் ரெண்டும் வளராமையே இருந்திருக்கலாம்!’ என்று பலமுறை நினைத்திருக்கிறார்.
இன்றும் அந்த எண்ணம் வந்தாலும் மகள் இதோடு கேட்டுவிட்டது பல ஐந்து நிமிடங்கள் என்பதை அவரும் அறிவார். இனியும் மகன் பொறுக்கமாட்டான் என்று தெரிந்து, “சசி! வெளிக்கிட்டது காணும்! நட கெதியா!” என்று அதட்டினார்.
“இந்தா நான் ரெடி. அண்ணா வாவா.. நேரமாகிட்டுது!” என்னவோ ஒன்றுமே நடவாவதவள் போன்று ஓடிவந்தாள் சசி.
அவளைக்கண்டு புருவங்களைச் சுளித்தான் செந்தூரன்.
.
“உன்னைப் பாத்தா கோயிலுக்கு போற ஆள் மாதிரி இல்லையே!” தலைவாரி பூச்சூடி மிதமான அலங்காரத்தில் நின்றிருந்தாள் சசிரூபா.
“போண்ணா! அங்க என்ர பிரெண்ட்ஸ் எல்லாரும் வடிவா வெளிக்கிட்டு வருவீனம். நான் மட்டும் லூசு மாதிரிப் போறதா?” தமையனுக்கு பதில் சொல்லியபடி தன் ஹாண்ட்பாக்கினை எடுத்துக்கொண்டவள் இன்று சாரியில் இருந்தாள்.
ஆக, இன்றைய ‘டிரஸ் கோட்’ சாரி.
ஒரு நாளைக்கு சுடிதார், இன்னோர் நாளைக்கு சேலை இன்னோர் நாள் பாவாடை சட்டை என்று கௌரி விரதம் இருக்கும் இருபத்தியொரு நாட்களும் அவர்களுக்குள் ஏதோ ஒரு டிரஸ் கோட் இருக்கும்.
“விரதம் பிடிக்கிறது உண்மையான பக்தியோட ஒரு வேண்டுதலுக்கு செய்றது. நீ என்னடா என்றா ஒவ்வொரு நாளும் விதம் விதமா வெளிக்கிட்டுக்கொண்டு போறாய்..”
“நாங்க கேள்ஸ் இப்படித்தான் போவம். அப்பதான் நல்லாருக்கும். பெட்டையள்(பெண்கள்) விஷயம் உனக்கு என்ன தெரியும்? வெளிக்கிட்டுக்கொண்டு போனா பக்தி இல்லை எண்டு அர்த்தமா? ஒண்டும் தெரியாம கதைக்காத!” என்று பதில் கொடுத்தாள் அவள்.
தங்கை அலங்கரித்துக் கொள்வதில் அவனுக்கும் ஆட்சேபனை இல்லைதான். உள்ளதை சொல்லப்போனால் அதுதான் பிடிக்கும். ஆனால், விரதம் என்று சொல்லிக்கொண்டு அதன் பெயரிலான இந்த அலங்காரம் தான் பிடிக்கவில்லை.
“ஒண்டும் தெரியாட்டியும் இது ஓவர் என்றது மட்டும் தெரியுது!” என்று அவன் சொல்ல,
அங்கே வந்த தாயிடம், “அம்மா சொல்லுங்கோ! இது ஓவராவா இருக்கு?” என்று அவர் முன் சென்று நின்றாள் சசி.
அதிகப்படி என்று இல்லாதபோதும், சற்றே விசேஷமாகத்தான் மகள் தயாராகி இருக்கிறாள் என்று விளங்கிற்று அவருக்கு.
“கோயிலுக்கு இந்தளவு தேவையில்லைதான். கௌரிவிரதம் முடியும் வரைக்கும்தான் இதெல்லாம்!” என்றார் கண்டிப்புடன்.
சசியின் முகம் சட்டென்று கூம்பிப்போனது. “என்னவோ ஒவ்வொரு நாளும் நான் மினுக்கிக்கொண்டு போறமாதிரி சொல்றீங்க. கோயிலுக்கு மட்டும்தான்! எனக்கும் தெரியும்!” என்று சொன்னவள், “இப்ப சந்தோசமா உனக்கு!” என்று தமையனை முறைத்தாள்.
உதட்டில் பூத்த சிரிப்புடன் அவன் தலையாட்ட அவள் முறைத்தாள். அதில் சற்றும் பாதிக்காது, “வாரனம்மா..” என்று விடைபெற்றான் அவன்.
“சரியம்மா, நானும் வாரன். நான் திரும்பி வாறதுக்கிடையில ரொட்டிய சுட்டு வைங்கோ.” என்று தாய்க்கு ஒரு ஆர்டரை அனுப்பிவிட்டு தமையனை தொடர்ந்தாள் சசி.
“கவனமா போயிட்டு வாங்கோ ரெண்டுபேரும். ரோட்டிலையும் அடிபடுறேல்ல!” பிள்ளைகளை அறிந்தவராய் சொல்லியவரின் இதழ்களில் புன்னகைத்தான் உறைந்து கிடந்தது.
பள்ளிக்கூடம் டியூஷன் என்று மட்டுமே சென்றுவரும் பெண்பிள்ளைகளுக்கு கோயில், குளம் என்று விசேஷம் வந்தால் கொண்டாட்டம்தானே. எனவேதான் மகளின் ஆசைக்கு அவரும் ஒன்றும் சொல்வதில்லை. இதெல்லாம் அந்தந்த வயதில் வரும் ஆசைகள். அவற்றை அனுபவிக்க விட்டுவிட்டு கவனித்துக்கொண்டால் ஆயிற்று என்று எண்ணியபடி
மகள் விரதம் முடிப்பதற்காக செய்துகொண்டிருந்த சமையலை தொடரச் சென்றார்.
அங்கே செந்தூரனின் பைக் வீட்டுக் கேட்டை தாண்டியதும் நினைவு வந்தவளாக, “ஐயோ அண்ணா நிப்பாட்டு நிப்பாட்டு!” என்று அவன் தோளில் தட்டினாள் சசி.
அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு, “இப்ப என்ன?” என்று கேட்டான் அவன்.
“கவின்நிலா தலைக்கு வைக்க பூ கட்டிக்கொண்டு வரச் சொன்னவள், கட்டி வச்சிட்டு எடுக்க மறந்துட்டன்” என்றபடி ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து, அவன் ஹாண்டிலில் அந்தப் பையை தொங்க விட்டுவிட்டு ஏறிக்கொண்டாள்.
“ஏன் அந்த படிப்ஸ்க்கு படிக்க மட்டும் தான் தெரியுமா? பூமாலை எல்லாம் கட்ட மாட்டாளா?” வண்டியை வீதியில் விட்டபடியே நக்கலாகக் கேட்டான் செந்தூரன்.
“சும்மா சும்மா அவளைக் குறை சொல்லாத. அவள் வீட்டுல இருக்கிற பூ எல்லாம் ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு போகுதண்ணா. அதான் என்னை கட்டிக்கொண்டு வரச் சொன்னவள்.”
கவின்நிலாவின் வீடு கோயிலுக்கு அருகே என்பதில், எப்போதுமே அவர்கள் வீட்டுப்பூ கோயிலுக்கே போய்விடும். சாரியை போலவே எல்லாரும் அன்று மல்லிகையை சரமாகத் தொடுத்து சூடிக்கொள்வதாக முடிவு செய்திருந்ததால், இவள் அவளுக்கு கட்டிக்கொண்டு போகிறாள்.
“கோவிலுக்கு பூ குடுத்து அவே நல்ல பெயர் வாங்குவீனம். இங்கால ஓசில உன்ன பூவ கட்டச்சொல்லி வேலையும் வாங்குவீனம். இதுதான் படிச்ச மனுசரின்ட பண்பு போல.” என்றான் நக்கலாக.