ஏனடா தேவை இல்லாத உத்தியோகம் பார்த்தோம் என்று யோசிக்க வைத்து, இனி இப்படியான வேலைகளைச் செய்யவே கூடாது என்கிற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதற்கு, அவளைத் தொடர்புகொண்டுவிட முடியாமல் தவிக்கும் இந்த இடைப்பட்ட நாள்கள் அவளுக்குத் தேவையாய் இருந்தன.
அவர்கள் அவளை இங்கே நேரில் கண்டு மட்டுமே பேச வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். கடைசியில் அவள் திட்டமிட்டபடியே அவர்களும் வந்து பேசிவிட்டுப் போகிறார்கள்.
சீற்றத்துடன் தனக்குள் சிரித்துக்கொண்டாள் இளவஞ்சி. பெண், அதுவும் இளம் பெண் எப்படியும் விளையாடலாம் என்று நினைத்துவிட்டார்கள் போலும். தரம் மிகுந்த பொருள் அவள் கையில் இருக்கையில் அவள் எதற்கு யோசிக்க? அதுதான் இறங்கி அடித்தாள்.
இத்தனையையும் அங்கே சற்றுத் தள்ளி மற்றவர்களோடு பேசிக்கொண்டிருந்த பிரபாகரன் கவனிக்காததுபோல் கவனித்துக்கொண்டு இருப்பதை அவள் கவனிக்காமல் இல்லை. கவனித்தால் கவனிக்கட்டுமே!
அவள் உண்டு முடியும் தறுவாயில் தனக்கான உணவோடு அவள் முன்னே வந்து அமர்ந்தான் நிலன். இனி இவனா என்று சினம் பொங்க, “உங்கட கடை திறப்புவிழாக்கு என்னைத் தவிர வேற ஆரையும் நீங்க கூப்பிடவே இல்லையா?” என்றாள் எரிச்சலை மறையாமல்.
சிறிதாக முறுவலித்து, “அவே எல்லாரையும் கவனிக்க அப்பா, அம்மா, அத்தை, மாமா எண்டு எல்லாரும் இருக்கினம். உன்ன நான்தானே கவனிக்கோணும்.” என்றான் அவன்.
இந்தப் பேச்சிற்கெல்லாம் மயங்க அவள் என்ன பச்சைக் குழந்தையா? “என்ன ட்ரை பண்ணுறீங்க நிலன்?” என்றாள் அவனை நேராகப் பார்த்து.
“பெருசா என்ன? உன்னோட கதைச்சு, எங்கட கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்ல வைக்க ட்ரை பண்ணுறன்.”
“இதுக்கு உங்கட குடும்பத்து மொத்த உருப்படியும் ஓம் எண்டு சொன்னவையா என்ன?” இதழோரம் இலேசாக வளைய வினவினாள்.
“நீ என்ன என்ர மொத்தக் குடும்பத்தையுமா கட்டப்போறாய்? என்னத்தானே? எனக்கு உன்னைப் பிடிச்சா காணாதா?”
“ஓ! அப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்கும்?” அவள் கேட்ட விதமே நடிக்கிறாயா என்று அவனைக் கேட்டது.
அவனும், “ஏன் பிடிக்காமப் போக? வடிவான, அறிவான, புத்திசாலியான உன்னை எப்பிடிப் பிடிக்காம இருக்கும்?” என்று இளஞ்சிரிப்புடன் இலகுவாக வினவினான்.
அதற்கு ஒன்றும் சொல்லாது அவனையே பார்த்தாள் அவள்.
அந்தப் பார்வை அடி நெஞ்சையே சென்று துளைப்பது போலிருக்க, “வஞ்சி, என்ன பார்வை இது?” என்றான் உணவில் கவனம்போல் காட்டி.
“திரும்பவும் கேக்கிறன். என்ன ட்ரை பண்ணுறீங்க நிலன்?”
“எனக்கு உண்மையாவே உன்னக் கட்ட விருப்பம் இருக்கு வஞ்சி.” அவள் முகம் பார்த்துச் சொன்னான் அவன்.
“ஆனா எனக்கு இல்லையே!”
“அப்பிடி எப்பிடி இல்லாமப் போகும்? கம்பஸ்ல சீனியர் சீனியர் எண்டு எனக்குப் பின்னால சுத்தினவளுக்கு என்னைப் பிடிக்காதா? என்னை உனக்குப் பிடிக்கும் எண்டு அந்த நேரமே எனக்குத் தெரியும்.” என்ற அவனின் பதிலில் உள்ளே சுருக்கென்று தைத்தது.
கூடவே, இதை நிச்சயம் சொல்லிக்காட்டுவான் என்று அவள் கணித்து வைத்தது போலவே பேசுகிறவன் மீது கடுஞ்சினம் பொங்கிற்று.
“என்ன, இப்பிடி நீங்க கேட்டதும் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு அப்பிடியெல்லாம் இல்லை எண்டு சொல்லுவன் எண்டு நினைச்சீங்களா? அந்த வயதில வாட்டசாட்டமா, கண்ணைக் கவருற மாதிரி, கம்பஸே ஹீரோவா கொண்டாடின ஒருத்தரை நான் பாத்தது உண்மைதான். அவருக்குப் பின்னால சுத்தினதும் உண்மைதான். அதெல்லாம் அந்த வயதில வந்த சின்ன ஈர்ப்பு. ஆனா வெளித்தோற்றம் அழகா இருந்தா மனதும் அழகாவே இருக்கும் எண்டு நினைக்க நான் என்ன இன்னும் இருவது வயசுப் பிள்ளையா?” என்றாள் சின்ன முறுவலோடு.
அவ்வளவு நேரமாக இருந்த இலகு பாவம் மறைய ஒரு கணம் அவளையே இமைக்காது பார்த்துவிட்டு, “மனம் அழுக்கா இருந்திருந்தா என்னைச் சுத்தினை உன்னை அந்த நேரம் நான் என்னவும் செய்திருக்கலாம் வஞ்சி.” என்றான் அவன் அழுத்தமாய்.
“ஓ! அப்பிடிச் செய்யாததாலேயே நீங்க நல்லவன். அப்பிடியா?” எள்ளலாக அவள் கேட்க, இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று பார்த்தான் நிலன்.
“இன்னொரு விசயம். என்னதான் உங்களுக்குப் பின்னால சுத்தினாலும் நீங்க சொல்லுற அளவுக்கெல்லாம் உங்களுக்கு இடம் குடுத்திருக்க மாட்டன் நிலன். நீங்க ஆர் எண்டு தெரிஞ்ச நிமிசத்தில இருந்து உங்களத் திரும்பியே பாக்காம இருந்தவள் நான்.” என்றாள் நிமிர்வாக.
“நான் ஆர் எண்டு தெரியாமயே இருந்திருந்தாலோ, இல்ல உண்மையாவே நான் சக்திவேல் வாரிசா இல்லாம இருந்திருந்தாலோ அந்த ஈர்ப்புக்கு என்ன நடந்திருக்கும் வஞ்சி?” என்று கேட்டவனையே இமைக்காது பார்த்தாள் இளவஞ்சி.
இன்று அதையெல்லாம் தாண்டி வந்த பக்குவப்பட்ட பெண் அவள். காதல் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கிற இடத்தில் அவள் இல்லை. வாழ்வின் ஒரு பகுதிதான் காதல் என்கிற தெளிவும் உண்டு. அதே போன்று, முழு மனத்தோடுதான் தனக்கான துணை சரியான ஒருவனாக இருக்க வேண்டும் என்று தேட ஆரம்பித்திருக்கிறாள்.
ஆனால் அன்று, அந்த ஈர்ப்பு நீடித்திருந்தால் நிச்சயம் காதலில்தான் முடிந்திருக்கும். அத்தனை ஆழமாயும் தீவிரமாயும் அவன் மீதான பிடிப்பு அவளுக்குள் விழுந்திருந்தது. அவன் வேண்டாம் என்று முடிவு செய்த நாள்களில் அவனைக் கடந்து வருவதற்கு அவள் பட்ட பாடுகள் அவள் மட்டுமே அறிவாள்.
யாழ்ப்பாணம், வவுனியா என்று எங்கு அவளைப் படிக்க அனுப்பினாலும் இவர்கள் பார்வையில் பட்டுவிடச் சாத்தியம் உண்டு என்றுதான், அவளைப் பிரிந்திருப்பது நெஞ்சை அறுக்கும் வாதையைத் தந்தபோதும், மட்டக்களப்புப் பல்கலையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டிருந்தார் தையல்நாயகி.
அவரின் கெட்ட காலமா, இல்லை இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமா தெரியாது. அங்கே இளவஞ்சி முதலாமாண்டு மாணவியாகச் சென்று சேர்ந்தபோது நிலன் கடைசி வருட மாணவனாக இருந்தான்.
என்னதான் அந்த வயதிலேயே தொழிலில் ஆர்வம் வந்துவிட்டிருந்தபோதிலும் அந்த வயதிற்கே உரிய ஆசாபாசங்களும் அவளுக்குள் இருந்திருக்கின்றன. அது அவரோடு இருந்தவரை நடந்ததில்லை.
அதுவே மட்டக்களப்பில் தனியாகத் தங்கியிருந்து படிக்க ஆரம்பித்தபோது, அதுவரை காலமும் வெளியே தெரியாமல் இருந்த அவளின் குறும்புத்தனங்களும் விளையாட்டுக் குணங்களும் முழுமையாக வெளியே வர ஆரம்பித்திருந்தன.
அதனால் அவனிடம் அவள் விட்ட சேட்டைகளுக்கு அளவேயில்லை.
அவனைப் பார்த்த முதல் நிமிடத்தில் இருந்தே அவளுக்குள் பாதிப்புத்தான். அவனையே சுற்றி சுற்றி வருவது, வலியப் போய்ப் பேச்சுக்கொடுப்பது, கேண்டீனில் அவனுக்குப் பிடித்த உணவை வாங்கிக்கொடுப்பது, தன்னைக் கவனித்து அலங்கரித்துக்கொண்டு வந்து அவனைக் கவர முயல்வது, அவன் கிரவுண்டில் விளையாடினால் போயிருந்து பார்த்துக் கை தட்டி ஊக்கப்படுத்துவது என்று அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் தாராளமாகச் செய்திருக்கிறாள்.
அவனுக்கு அவளிடம் அப்படியான ஈடுபாடு எதுவும் இல்லை என்று அன்றைய இளவஞ்சிக்கே தெரியும். ஆனாலும் அவன் மனத்தில் இடம் பிடித்துக் காட்டுகிறேன் என்று அவனை விடாமல் சுற்றியிருக்கிறாள்.
ஒருமுறை எதற்கோ அவனை அழைத்துச் செல்லச் சக்திவேல் நேரிலேயே வந்தபோதுதான் முகத்தில் சுடுநீரை அடித்தது போன்று அதிர்ந்து நின்றுவிட்டாள்.
தையல்நாயகி மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்தவர். அதனாலேயே அத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தபோதிலும் பல்கலைக்கு வருகிற வரையில் அவளிடம் கைப்பேசியோ, கணணியோ இருந்ததில்லை.
தேவைக்கு அதுவும் அலுவலகத்தில் அவர் முன்னால் இருக்கும் கணணியை அவள் பயன்படுத்தலாம். அவ்வளவே. அதனாலேயே அப்பம்மாவின் தொழில் எதிரியான சக்திவேலை அறிந்து வைத்திருந்த இளவஞ்சிக்கு நிலனைப் பற்றித் தெரியாமல் போனது.
சக்திவேலின் முன்னேயே சென்று நின்று ‘யார் இவர்?’ என்று அவனிடம் கோபமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, “மறச்சிட்டீங்க என்ன?” என்று சீறிவிட்டு வந்தவள் அதன் பிறகு அவன் புறம் திரும்பவே இல்லை.