அழகென்ற சொல்லுக்கு அவளே 6 – 2

“அம்மாச்சி இளவஞ்சி. தம்பி சொல்லுறது உண்மைதானம்மா. தொழிலுக்கும் இண்டைக்கு நடந்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இன்னுமே சொல்லப்போனா எங்கட வீட்டுப் பிள்ளையா இப்பிடியெல்லாம் நடந்தான் எண்டு நம்பேலாம இருக்கு. ஒரு பொம்பிளைப் பிள்ளைய இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டுட்டானே எண்டுதான் பதறியடிச்சு ஓடி வந்திருக்கிறம். நடந்ததை ஆராலயும் மாத்தேலாது. அதால இனி என்ன செய்றது எண்டு பாப்பமே.” அவ்வளவு நேரமாக அவளை நெருங்கவே பயந்துகொண்டிருந்த சந்திரமதி, கணவரின் கண்ணசைவில் மெல்ல அவளிடம் வந்து இதமாகப் பேசினார்.

உண்மையில் அவரின் அந்த இதமான குரலுக்கு அவளிடம் பலனிருந்தது.

அதில், “இன்னுமே எனக்கு நீங்க சொல்லுறதுல நம்பிக்கை இல்ல அன்ட்ரி. ஆனாலும் மிதுனுக்கு என்ர தங்கச்சியத் தர எனக்கு விருப்பம் இல்ல. பழக்கவழக்கம் சரியில்லாத, ஷோர்ட் பிலிம் எடுக்கிறன் எண்டுற பெயர்ல ஆம்பிளை பொம்பிளை வித்தியாசமில்லாம கூத்தடிச்சுக்கொண்டு திரியிறது எல்லாம் எங்களுக்குச் சரி வராது.” என்று தணிந்த குரலில் என்றாலும் நேராகவே சொன்னாள்.

சந்திரமத்திக்குச் சுவாதியின் நிலையை எப்படி உடைத்துப் பேசுவது என்று தடுமாற்றமாயிருந்தது. அவளைப் பார்த்தார். ஜெயந்தியின் பின்னால் கூனிக் குறுக்கிக்கொண்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.

பிரபாகரனுக்கு அது மனைவி பேசினால்தான் சரியாக இருக்கும் என்று தோன்றியதில் அவராலும் பேச முடியவில்லை.

“அம்மாச்சி…” என்று மீண்டும் ஆரம்பித்தவரைத் தடுத்து, “அன்ட்ரி ப்ளீஸ். உங்கட வீட்டில உங்களில மட்டும்தான் எனக்குக் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கு. தயவு செய்து இதுக்கு மேல இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம். முதல் நீங்க போய் உங்கட மருமகனின்ர இன்ஸ்டாவ ஒருக்கா செக் பண்ணுங்க. அவனுக்கு இதுக்கு முதலே பல காதலிகள். இனியும் எத்தின வரும் எண்டு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அதில ஒருத்தியா இருந்து என்ர தங்கச்சியக் கண்ணீர் வடிக்க விட என்னால ஏலாது.” என்று உறுதியாக மறுத்தாள்.

“அதெல்லாம் தெரிஞ்சுதான் உங்கட தங்கச்சி என்னை விரும்பினவா. சும்மா சும்மா என்னவோ நான் முழுக் கெட்டவன் எண்ட மாதிரிச் சொல்லாதீங்கோ.” மாமாவும் அத்தையும் தன்னால் இன்னுமின்னும் தலைகுனிகிறார்களே என்கிற குற்றவுணர்ச்சியில் இடையிட்டுச் சொன்னான் மிதுன்.

“அதாலதான் பளார் எண்டு அவளுக்கு ஒண்டு போட்டனான். கண்ணிருந்தும் குருடா இருந்திருக்கிறாளே!” என்று இளவஞ்சியும் பட்டென்று திருப்பிக் கொடுத்தாள்.

“அக்கா ப்ளீஸ். நான் செய்தது எல்லாம் பிழைதான். அதாலதான் கலியாணத்தையும் உங்களுக்குத் தெரியாம செய்ய வேண்டாம் எண்டு நினைச்சனான். ஆனா ஆனா… எனக்கு அவரோடதான் கலியாணம் நடக்கோணும்.” என்று சொன்னவளைத் திரும்பவும் ஒருமுறை வெளுக்கலாம் போலிருந்தது இளவஞ்சிக்கு.

ஆனாலும் தன்னை அடக்கி, “அதெல்லாம் கொஞ்சக் காலம் போக எல்லாம் மாறும். நான் மாத்துவன். நீ வாய மூடிக்கொண்டு பேசாம இரு!” என்று அவளையும் அடக்கினாள்.

இதற்குமேல் யாருக்கு அவளோடு என்ன பேசுவது என்று தெரியவில்லை. எல்லோரும் குணாளனைப் பார்த்தனர்.

அவ்வளவு நேரமாக என்னென்னவோ நினைவுகள் எல்லாம் ஆட்டிப்படைக்க அதிர்ந்துபோய் இருந்த மனிதர் பேச மிகவுமே சிரமப்பட்டார்.

மனைவியிடம் கேட்டுத் தண்ணீர் வாங்கிப் பருகிவிட்டு, “குறையா நினைக்காதீங்கோ. உங்கட மகனுக்கு எங்கட மூத்தவாவ நீங்க கேட்ட நேரம் நானுமே ஓம் எண்டு சொல்லச் சொல்லி மகளோட கதைச்சனான். அது வேற. அவர் பொறுப்பும் ஒழுக்கமுமான பிள்ளை. ஆனா உங்கட மருமகன்… எங்களுக்குச் சரி வராது. விட்டுடுங்கோ.” என்றார் குணாளன்.

அப்படி விட முடியாதே. பெரியவர்கள் கையைப் பிசைய, “இந்தக் கலியாணம் நடக்கோணும் வஞ்சி.” என்றான் நிலன்.

“ஏன்?”

அவனாலும் அதை உடைத்துப் பேச முடியவில்லை. அவள் வீட்டினர் நிலையையும் கவனிக்க வேண்டுமே. சுவாதிக்கு நெஞ்சு வெடித்துவிடும் போல் அடித்துக்கொண்டது.

“சொல்லுங்க நிலன். ஏன் வாய மூடிக்கொண்டு நிக்கிறீங்க. நீங்க என்னை ட்ரை பண்ணிப் பாத்து நடக்கேல்ல எண்டதும் மச்சானை வச்சுக் காரியம் சாதிக்கப் பாக்குறீங்களா?” என்றதும் தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டான் நிலன்.

இத்தனை காலமும் அவளைப் பிடிக்கும் என்கிற நிலையில் இருந்தவன் இன்று அவள் தனக்குக் கிடைக்கவே மாட்டாள் என்று அறிந்தபோதுதான் எத்தனை தூரத்துக்கு அவளை நேசிக்கிறோம் என்பதையே உணர்ந்திருந்தான். அப்படியிருக்க அவளானால் அவன் அவளை ‘ட்ரை பண்ணினான்’ என்கிறாள்.

அதுவும் அத்தனை பேர் மத்தியிலும்.

அது கொடுத்த சினத்தில், “சொல்லுங்க சொல்லுங்க எண்டா என்னத்தச் சொல்லச் சொல்லுறாய்? உன்ர தங்கச்சி உன்ர தங்கச்சி மட்டுமில்ல. இன்னும் கொஞ்ச மாதத்தில ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகப்போறாள்.” என்று போட்டுடைத்தான் அவன்.

“என்ன?” என்று அதிர்ந்து நின்றாள் இளவஞ்சி. அவளின் சிந்திக்கும் திறனுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது அவன் தந்த அதிர்ச்சி.

கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை. திரும்பிச் சுவாதியைப் பார்த்தாள். முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள் அவள்.

அந்தக் கண்ணீர் இளவஞ்சியின் உள்ளத்தைத் தொடவேயில்லை. எல்லாம் விட்டுப்போன உணர்வு. பெரும் தவறு ஒன்று நடந்துவிடாமல் தங்கையைக் காத்துவிட வேண்டும் என்று துடித்தாளே. இங்கானால் தப்பே நடந்து முடிந்துவிட்டதாம்.

ஜெயந்தி திரும்பவும் மகளைப் போட்டு அடித்ததைக் கூட எந்த உணர்வுமே இல்லாமல் பார்த்து நின்றாள். சந்திரமதிதான் ஓடிப்போய்த் தடுத்தார்.

ஒருமுறை இறுக்கமாக விழிகளை மூடித் திறந்துவிட்டு, “உங்கட காரியம் ஆகோணும் எண்டுறதுக்காக எவ்வளவு தூரத்துக்கும் இறங்குவீங்களா நிலன்?” என்றாள் வெறுத்துப்போன குரலில்.

“லூசா நீ? இல்லை இல்லை எண்டு எத்தின தரம் சொன்னாலும் நம்பாம அதையே பிடிச்சுத் தொங்கிக்கொண்டிருக்கிறாய்.” என்றான் எரிச்சலும் சினமுமாய்.

“இன்னும் நீங்க எத்தின தரம் அப்பிடி இல்லை எண்டு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். அதே மாதிரி இதுக்காக எல்லாம் கலியாணம் கட்டி வைக்கிறதுக்கு இது ஒண்டும் அந்தக் காலம் இல்ல. நீங்க நடவுங்க!” என்றாள் முகத்திலோ குரலிலோ எந்த உணர்வையும் காட்டாமல்.

இவ்வளவுக்குப் பிறகும் அவள் அப்படிச் சொன்னதை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன் அவ்வளவு நேரமாகச் சுவாதியைப் போட்டு அடித்த ஜெயந்திக்கும் அவள் மறுப்பில் மருந்துக்கும் ஒப்புதல் இல்லை. ஒருவனின் குழந்தையைச் சுமக்கிறவளை இன்னொருவனுக்குக் கட்டிவைக்கவா முடியும்?

“அம்மாச்சி…” தவிப்புடன் மகளை அழைத்தார் குணாளன். அவருக்கு மனதே விட்டுப்போயிற்று. இனி என்ன பேசியும் பிரயோசனம் இல்லை என்று விளங்க, இந்தக் கலியாணத்தை முடித்துவிடவே நினைத்தார்.

“இல்லை அப்பா. இதுக்காகப் பாத்து அவளைக் காலம் முழுக்க அழு எண்டு விடேலாது. இதுக்கெல்லாம் என்ன செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும். நீங்க அமைதியா இருங்க.” என்று அவள் முடிக்கக் கூட இல்லை.

“சி! நீயெல்லாம் என்ன பொம்பிளை?” என்று சீறினார் ஜெயந்தி. “பெத்த பிள்ளைக்குச் சமனா உன்ன நாங்க வளத்துவிட்டா, நீ என்ர பிள்ளையின்ர வாழ்க்கையை நாசமாக்கப் பாப்பியா?” என்றதும் தலையில் இடி விழுந்தவள் போல் நின்றாள் இளவஞ்சி.

அவளுக்கு அவர் சொன்ன ஒன்றுமே விளங்கவில்லை.

“ஜெயந்தி!” என்று தன்னை மீறிக் கத்தியிருந்தார் குணாளன்.

“என்னத்துக்கு கத்துறீங்க? இத்தின வருசத்தில ஒரு நாள், ஒரு பொழுது அவளுக்கும் என்ர பிள்ளைகளுக்கும் வேற்றுமை காட்டி இருப்பனா? இந்தச் சொத்து சுகம் முழுக்க என்ர பிள்ளைகளுக்குச் சேர வேண்டியது. ஆனா ஆண்டு அனுபவிக்கிறது அவள். அதுக்குக் கூட ஒரு வார்த்த சொல்லியிருப்பேனா? சொந்தப் பிள்ளை மாதிரித்தானே வளத்தனான். ஆனா இவள் என்ன சொன்னவள் எண்டு கேட்டனீங்கதானே? சுவாதின்ர வயித்தில இருக்கிறது எங்கட பேரக்குழந்தையப்பா. நடந்தது பிழைதான். பெரிய பிழைதான். அதுக்காக இப்பிடித்தான் கதைப்பாளா?”

அந்தக் குழந்தையை அழித்துவிடுவாளோ என்று பட்டதுமே தன் சுயத்தை மொத்தமாக இழந்துவிட்ட ஜெயந்தி, இருபத்தி எட்டு வருட இரகசியத்தை அப்படியே போட்டு உடைத்தார்.

ஆனால், தையல்நாயகிக்குப் பிறகு அந்தக் குடும்பத்தைத் தாங்கி நின்ற தூண், மொத்தமாக நிலைகுலைந்து குணாளனையே வெறித்தாள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock